புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

'விதூ'

'விதூ'

கடற்கரை ஓரத்தில் ஒரு குடிசை. அதில் வசிக்கும் விபசாரத்தையும், ஜிiணீk ஜிoணீkலீt அடிப்பதையும் வயிற்றுப் பிழைப்பாக கொண்ட ஒரு பெண். பாடசாலை பருவத்தை எட்டி நிற்கும் அவளின் மகன். கடற்கரைக்கு வந்து போகும் வெள்ளையர்களுடன் பேசிப் பழகியதால் கிடைத்த ஆங்கில மொழித் திறனும், ஆழமான சமூக அறிவும் அச்சிறுவனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

செய்யும் தொழில் கேவலமாக இருப்பினும் தம்மையும் தம் மகனையும் எவரும் கேவலப்படுத்திவிடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள். கடந்துபோன காலத்தில் அவளுடன் கள்ளத்தொடர்பை வைத்திருந்த ஒரு அரசியல்வாதியின் கைக்கூலி இந்தத் தாயையும், மகனையும் விலைபேச முயல்கின்றான். இவர்களுக்கிடையே நடக்கும் மோதல் எங்கு போய் முடிகின்றது என்பதை மிகுந்த விறு விறுப்புடன் படமாக்கியிருக்கிறார் அசோக ஹந்தகம.

படத்தின் பெயர் ‘விதூ’ ‘Vidhu’ தற்போது வட கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் தமிழ் வடிவம் விரைவில் வெளிவர இருக்கின்றது.

உங்கள் கலைப் பயணம் எங்கிருந்து ஆரம்பமானது?

பாடசாலை மாணவனாக இருந்த போதே மேடை நாடகம் ஒன்றை இயக்கி அதனை மேடையேற்றிய நான், அதன் பின்பே ரசிகன் என்ற வகையில் முதல் முறையாக ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கச் சென்றேன். அதுவரை வேறு ஒருவரின் நாடகத்தினை நான் பார்த்திருக்கவில்லை. ஆனால் பொழுது போக்கு என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தது. அந்த முதல் நாடகத்தின் அனுபவம் என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையினை மேலும் வலுவூட்டியது.

பல்கலைக்கழகத்திற்கு வந்த பின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் இன ரீதியான விடயங்கள் தொடர்பான ஆர்வம் அதிகரித்ததால் எனது கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் ஊடகமாக மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்படங்கள் ஆகிய துறைகளை உபயோகப்படுத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். கலையை ரசிப்பதுடன் நின்றுவிடாது. அதையே எனது எண்ணங்களை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு, சமூக செயற்பாடுகள் தொடர்பான எனது ஆதங்கம் நோக்கு ஆகியவையினாலேயே ஏற்பட்டது என நினைக்கிறேன்.

சமூக உணர்வு என்ற விடயம் படைப்பாற்றலுடன் எப்படி தொடர்புபட்டது?

நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போதே கல்விச் சீர்திருத்தம். தனியார் வைத்தியக் கல்லூரி, இந்தியப் படைகளின் வருகை ஆகிய விடயங்கள் சமூகத்தில் பாரிய நிகழ்வுகளாக தலைதூக்கின. அவற்றோடு சேர்ந்தால்போல் சமூகத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் எமது சிந்தனையைத் தூண்டி விட்டதுடன் அது தொடர்பான எனது சொந்த கருத்துக்களையும், நோக்கையும் சமூகத்துடன் பரிந்து கொள்ளக்கூடிய ஊடகமாக ஆரம்பத்தில் நான் மேடை நாடகத்தினை உபயோகப்படுத்திக் கொண்டேன். அந்த வகையில் கலைப்படைப்புகள் எனது சுய அரசியல் சிந்தனையின் வெளிப்பாடு என்று கூறுவதில் தவறேதும் கிடையாது.

ஒரு படைப்பாளியாக வருவதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பிரத்தியேக முயற்சிகள் எவ்வாறானவை?

பாடசாலையில் படிக்கும் போது நடிப்பு மற்றும் மேடை நாடகம் தொடர்பான விடயங்களை கற்றதைத் தவிர, அன்று முதல் இன்று வரை பிரத்தியேகமாக யாரிடமும் கலை தொடர்பான கல்வியை நான் பெற்றதில்லை. அதேபோன்று திரைப்படம் மற்றும் மேடை நாடகம் ஆகியன தொடர்பாக நடத்தப்படுகின்ற எந்த ஒரு பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று கற்றுதுமில்லை. அப்படி இருந்தும் பாடசாலையில் நடிப்பு சம்பந்தமாக பெற்ற அறிவு ஒருவரை எப்படி நடிக்க வைக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை எப்படி இயக்க வேண்டும் என்ற உத்தியினை எனக்கு நன்றாக உணர்த்தியிருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

ஒருவரை நடிக்கவைப்பது என்பதை நீங்கள் எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

நான் கூறுவதை உணரக்கூடிய அறிவு உள்ளவராக இருப்பின், அது சிறுபிள்ளையாக இருந்தாலும் சரி, முதியவராக இருந்தாலும் சரி என்னால் அவர்களை நடிக்க வைக்க முடியும். ஒருபோதும் கெமரா முன் தோன்றாதவரை கூட என்னால் நேர்த்தியாக நடிக்கவைக்க முடிவதன் இரகசியத்தை நான் முன்பு கூறிய எனது பாடசாலை ஆசிரியர்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால் அவரும் தாமாகவே உணர்ந்து கொண்ட விடயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தாரே தவிர அவரும் அதை முறையாக அதாவது நடிப்பை ஒரு பாடமாக கற்றவர் அல்ல. ஆனால் ஒரு நாடகத்தின் ஆரம்ப காட்சி எப்படி அமைய வேண்டும், ஆரம்ப வசனங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் மிகத் தெளிவான சரியான அறிவை அவர் பெற்றிருந்ததுடன் அதனை (ஒளிவு மறைவின்றி) எமக்கு கற்றுக்கொடுத்ததால்தான் என்னாலும் அதை சரியாக செய்ய முடிகின்றது. அந்தத் திறமையினை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை சொல்வது கஷ்டமான காரியம்.

அப்படியாயின் நடிப்பை கற்பது, கற்றுக்கொடுப்பது என்ற வகையில் நடைபெறும் பயிற்சிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதுதான் நடிப்பு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற விஷயத்தை யாராலும் கற்றுக்கொடுக்க முடியும் என நான் நம்பவில்லை. அவ்வாறான பயிற்சிகள் மூலம் நடிக்க விரும்பும் ஒருவரின் குரல், உடல், முகபாவம் போன்ற விடையங்களை கற்றுக்கொடுக்க முடியும். ஆனால் அதுதான் நடிப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், அவ்வாறான பயிற்சிகளில் கலந்து கொண்டு நடிக நடிகைகளாக வரவேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வாய்புக்கேட்டு வந்தவர்களிடம் அபூர்வ நடிப்பாற்றல் இருந்ததாக நான் உணரவில்லை. சுருங்கச் சொன்னால் எனது நாடகம் அல்லது திரைப்படங்கள் ஆகியவற்றிற்காக எதெச்சையாக தேர்ந்தெடுத்தவர்களுக்கும், மேல் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கும் இடையே பாரிய வித்தியாசத்தினை நான் காணவில்லை.

இதை உங்கள் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்கிaர்களா?

ஆம், எனது ‘விதூ’ திரைப்படத்தின் பிரதான பாத்திரம் ஏற்று நடிக்கும் சிறுவனை எடுத்துக்கொண்டால் அச் சிறுவன் நடிப்பு என்றால் என்ன என்பதை அறிந்திருந்தவன் அல்ல. அச் சிறுவனின் தாய் அவன் கூச்சமுள்ள பையன் என்பதால் எந்த ஒரு வேலைக்கும் முன்வருவதில்லை. முடிந்தால் உங்கள் கலை வேலைகளில் இணைத்துக்கொண்டு அவனை சற்று சரி செய்து{கொடுங்கள். என்று கேட்டு என்னிடம் ஒப்படைத்தாள். ஆரம்பத்தில் ‘விதூ’ திரைப்படத்திற்கான சிறுவர் பாத்திரங்களைத் தெரிவு செய்யும் பணியில் உதவி செய்வதற்காகவே அச் சிறுவனை உபயோகப்படுத்திக் கொண்டேன். அந்த தேர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை மீண்டும் பார்த்தபோது சிறுவர் நடிகர்களாக ஒத்திகைப் பார்த்தவர்களைவிட அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இணைத்துக்கொண்ட இச் சிறுவனே அந்தப் பாத்திரத்திற்கு சாலப் பொருத்தமானவன் என்பதை உணர்ந்தே அவனை விதூ திரைப்படத்தின் பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்தேன். எனது சில படைப்புகளில் அவ்வப்போது எதெச்சையாக தேர்ந்தெடுத்த நபர்களை நான் நடிக்க வைத்திருக்கிறேன். அவ்வாறு தேர்ந்தெடுத்தவர்களில் குறிப்பாக வட கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் ஆற்றல் சற்று அதிகமாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

ஒரு ஊடகம் என்ற வகையில் சினிமாவை நீங்கள் எவ்வாறு நோக்குகிaர்கள்?

சினிமா என்ற ஊடகம் ஒரு படைப்பாளியின் உணர்வுகளை மிகத் துணிச்சலாகவும், ஆக்கபூர்வமாகவும் வெளிக்கொண்டுவர மிகவும் சிறந்த ஊடகமாகவே தோன்றுகின்றது.

அதில் காணப்படுகின்ற எல்லையற்ற சுதந்திரத்தினை நான் மிகவும் விரும்புகின்றேன். சினிமா சார்ந்த இந்த சுதந்திரத்தினை சமூகத்தில் உபயோகப்படுத்த முனையும் போது பலவிதமான சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது உண்மைதான். சினிமாவிற்கு உகந்தது எது என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப ரீதியிலும், படைப்பாற்றல் ரீதியிலும் சினிமா ஒரு உன்னதமான ஊடகம் என்பதே எனது கணிப்பு.

சினிமாவின் வளர்ச்சிக்கு ‘சினிமா கலாசாரம்’ எந்த அளவிற்கு துணை போகின்றது?

சினிமா ஒரு பல்துறை பொழுதுபோக்கு சாதனம். ஆகையால் ஆடல், பாடல் நடிப்பு, ஓவியம், இசை என்று பல துறைகளை அதனுள் உள்வாங்கி இருக்கிறது. இதனால் எந்த ஒரு துறையைச் சார்ந்த ரசிகனுக்கும் சினிமா ஒரு பொது சாதனமாக அமைகின்றது. இந்த யதார்த்தத்தை நாம் மறந்துவிட்டோம் என்றே நான் நினைக்கின்றேன். அயல் நாடான இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலானோர் எத்தனை பொழுதுபோக்கு சாதனங்கள் வந்தாலும் இன்னும் சினிமாவை அதிகமாக நேசிக்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு தொலைக்காட்சி வந்தது தொட்டு நாம் மிகத் தீவிரமாக அதற்கு அடிமையாகி விட்டோம். தொலைக்காட்சியின் வருகையை தாங்கிக்கொள்ள முடியாது எமது சமூகம் அதன் அடிமைகளாகி விட்டது. அதன் அடுத்த கட்டமாக தொலைக்காட்சியும், அதன் விளம்பர ஆதிக்கமும் எம்மை சினிமாவில் இருந்து கழட்டி தொலைக்காட்சியின் அடிமைகளாக்கிவிட்டது. அதன் நேரடித் தாக்கம் எமது திரைப்பட ரசிகர்களை திசை திருப்பிவிட்டுள்ளது. இதனால் எமது நாட்டில் ஆரம்ப காலத்தில் இருந்த சினிமா கலாசாரம், அல்லது ஒட்டுமொத்த சமூகமும் சினிமாவை ரசிப்பது என்ற நிலை இன்று மாறிவிட்டது.

இதனால் ஒரு நாட்டின் சினிமா வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் தீவிர ரசிகர் கூட்டம் எமக்கு இல்லாது போய்விட்டது. இந்த நிலையும் எமது சினிமா துறையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

‘விதூ’ சிறுவருக்கான திரைப்படம் என்றே அழைக்கப்படுகின்றது. உங்களைப் பொருத்தவரை சிறுவர் திரைப்படம் என்றால் என்ன?

சிறுவர்களின் விருப்பு வெறுப்பு பற்றிய ஆழமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்ற அதேவேளை அவர்களின் சிந்தனைக்கு விருந்து படைப்பதே சிறுவர் சினிமா. சிறுவர் சினிமா மூலம் சிறுவனுக்கு அவர்களைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை நாம் வழங்க வேண்டும். சிறுவர்களை சினிமா அரங்கிற்கு அழைத்து வரும் பெரியோரையும் சிந்திக்க வைப்பது சினிமாக்காரர்களின் பொறுப்பு என்றே நான் நினைக்கின்றேன்.

உங்களின் ‘விதூ’ சிறுவர்களுக்கு எதை எடுத்துக் கூறுகின்றது?

ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட சிறுவர் தினத்தன்று எனது ‘விதூ’ திரைப்படத்தை வசதி குறைந்த சிறுவர்களுக்காக கட்டணம் அறவிடப்படாத விசேட காட்சியாக காண்பிக்க ஏற்பாடு செய்தேன். அந்த அனுபவத்தை வைத்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லலாம் என நினைக்கின்றேன். பின்தங்கிய பாடசாலைகளைச் சேர்ந்த வசதி குறைந்த சமூகப் பின்னணியை கொண்டிருந்த அந்த மாணவர்கள் அநேகமாக உற்சாகம், சுய நம்பிக்கை ஆகியவற்றை இழந்தவர்களாகவே ‘விதூ’வை பார்க்க வந்தார்கள். ஆனால் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களின் கண்களிலும் வார்த்தைகளிலும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டிருப்பதை என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய சிறுவர்கள் அவர்களால் ஒரு போதும் நெருங்க முடியாத. ஹரி போட்டர், ஸ்பைடர் மேன், பெட்மேன் போன்ற கனவு வீரர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த ஒவ்வொரு சிறுவனுக்குள்ளும் உண்மையான ஒரு வீரன் ஒளிந்து கிடப்பதை நான் எனது விதூ கதாநாயகன் மூலம் காட்டி இருப்பதே ஆகும்.

முயற்சி செய்தால் நாம் பிற வீரர்கள் மீது தங்கி இருப்பதற்கு பதிலாக நம்மையும் நமது பூமியில் கால் பதித்து நிற்கக்கூடிய ஒரு வீரனாக்க முடியும் என்பதே எனது ‘விதூ’ திரைப்படம். என்னைப் பொறுத்தவரை சிறுவர் சினிமாவிலும் வளர்ந்தவர்,

பெரியவர் ஆகியோருக்கும் எடுத்துக் கொள்ளத் தற்க உருப்படியான ஏதேனும் இருக்க வேண்டும். உடல் ரீதியான வளர்ச்சியுடன் உள ரீதியாகவும் சிறுவர்கள் வளர வேண்டும். அப்படி வளர்ந்து தன்னுள் இருக்கும் திறமையினை அறியும்போதுதான் அந்த சிறுவன் நாளை நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரையோசனமானவனாக வருவான் என்பது எனது நம்பிக்கை.

இந்த நம்பிக்கையும் ‘விதூ’ உருவாவதற்கான முக்கிய காரணம் எனலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.