புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.
சங்கார் 'சினிமா மொழியில்' ஓர் உள்மன யாத்திரை

சங்கார் 'சினிமா மொழியில்' ஓர் உள்மன யாத்திரை

 நல்ல சினமாவுக்கான ஒரு தேடல்

பசிய வனாந்திரத்திற்கும் கரும்புத் தோட்டங்களுக்குமிடையே அருமையான இயற்கைச் சூழலின் மத்தியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த அழகியதொரு சிறிய விகாரை.

வசதிகுன்றிய கிராமமொன்றின் உட்பகுதி சந்தடிகளோ மற்றும் ஆரவாரங்களோ எவையும் தீண்டாத ஒரு ஒதுக்குப்புறம். விகாரையைச் சூழ ஒருசில குடியிருப்புக்கள் மாத்திரமே. இந்த விகாரையின் பொறுப்பாளர்.

ஒரு முதிய பெளத்த துறவி. அவரே விகாரையைப் பராமரித்தும் வருகிறார். பழமைவாய்ந்த இந்த விகாரையின் உட்புறச் சுவர்களிலே நூறாண்டுகளுக்கு முற்பட்ட கால பெளத்த ஓவியங்கள் வரையப்பட்டிருகின்றன. இவை காரை பெயர்ந்தும் மங்கியும் சில இடங்களில் சிதைவடைந்தும் இருக்கின்றன.

பெளத்தசார கதையொன்றினை நுணுக்கமான விபரங்களுடன் இந்தத் தொடர் ஓவியங்கள் சித்தரிக்கின்றன. இவற்றைப் பேணி பாதுகாப்பதில் அதீத பற்றுக்கொண்டவராக முதிய பெளத்த துறவியிருக்கிறார்.

ஓவியங்களை சீரமைத்துப் புதுப்பித்து மெருகேற்றும் பணிகளுக்கு இளம் ஓவியரும் பெளத்த துறவியுமான ஆனந்த என்பவரது சேவையைக் கோரி அவருக்கு அழைப்பு விடுக்கிறார் முதிய பெளத்த துறவி.

சங்கார பிரசன்ன ஜெயக்கொடியின் முதலாவது திரைப்படமாகும். இத்திரைப் படம் முற்றிலும் வேறுபட்டதான பிராந்தியமொன்றின் மீது ஆழமானதொரு பார்வையைச் செலுத்தி இருக்கிறது. இந்த வகையில் இளம் துறவியொருவரின் மனவுலகே இந்தப் புதிய பிராந்தியமாகும். ஆசைகள், இச்சைகள் எவ்வளவு தூரம் இளம் துறவியொருவரது மனவுலகை வியாபித்து அவரை அலைக்கழித்து இம்சைப்படுத்துகிறது என்பதை நுண்ணுணர்வுடன் மிகத்துல்லியமாக வெளிக்கொணருகிறார் பிரசன்ன ஜெயக்கொடி. ஒருவகையில் இது துணிகரமான முயற்சி.

திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் மூன்றுக்கு மேற்படவில்லை. கதை கூறல் கட்டமைப்பு எதுவுமில்லாதவகையில், திரைப்படத்தில் இடம்பெறும் உரையாடல்கள் மிகச் சிக்கனமானவை. பத்து அல்லது பதினைந்து வசனங்களுக்குள் இவற்றை அடக்கிவிடலாம். ஆனந்தவில் மனதில் எழும் சலனங்கள், போராட்டங்கள், எழுச்சிகள் மற்றும் விடுபடல்கள் போன்றனவே திரையூடகத்தின் மையக் கூறுகள்.

கலையுணர்வுடன் ஆனந்த சித்திரங்களை மீளுருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் போது ஒருநாள் இளம் பெண் ஒருத்தியின் கூந்தலுக்குப் பயன்படுத்தப்படும் ‘கிளிப்’ ஒன்றினைக் கண்டெடுக்கிறார். ‘கிளிப் பின்’ சொந்தக்காரியாள அப்பெண் விகாரைக்கு அடிக்கடி வருபவர். இத்தகையதொரு பின்னணியில் ஆனந்தவின் உள்ளடக்கப்பட்ட உணர்வுகள் கிளர்ந்தெழுகின்றன. பெண்ணின் அருகாமையில் அவளது முன்னிலையில் பல்வேறு சலனங்களுக்கு அவர் ஆட்படுகிறார். அவர் பெளதீக நிலையில் வெளிப்படையான மாற்றங்களை மறைத்து வாழுகின்ற போதிலும் உள் மனநிலை மறைத்து வாழுகிற போதிலும் உள் மன நிலை ஆட்டங்கண்டு அவரது ஆன்மிக உலகு கொந்தளிப்பானதொரு சூழலுக்குள் அகப்பட்டு விடுகிறது. ஓவியன் என்ற நிலையிலும் இளம் துறவியென்ற நிலையிலும் வேறுபட்ட சவால்களை அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது. உலகியல் சூழலுக்குள் வீழ்ந்து விடாது தமது ஆன்மிக உலகை மெல்ல, மெல்ல அண்மிக்கும் ஆனந்த, அதனைப் பற்றிக்கொள்கிறார்.

இளந்துறவியென்ற நிலையில் ஆனந்த இவ்வுலகத் தளைகளைக் கடந்து ஆன்மிக உலகுக்குள் பிரவேசிப்பதை அவரது படிப்படியான விடுபடல் களைகராறாக இருந்து விடாமல் நெகிழ்ச்சியானதொரு விழிப்பு நிலையிலிருந்து பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது நெறியாளரின் வெற்றியெனவே நான் கருதுகிறேன். இந்தவகையில் திரைப்படம், கலையூடகம் என்ற சாத்தியப் பாட்டினை எய்தியிருக்கின்றது. இருப்பினும், இளந்துறவி ஆனந்தவின் உள்மனம் அலைந்து திரிவதை வெளிப்படுத்த அதற்காக இன்னுமொரு நடிகரிடம், தஞ்சம் புகுந்து அவர் மூலம் வெளிப்படுத்தியிருப்பதும் (அந்தவகையில்) துறவியின் மஞ்சள் அங்கியின் புனிதத்திறகு ‘பங்கம்’ நேர்ந்துவிடாது பாதுகாத்திருப்பதும் சிருஷ்டியின் கூறுகளான கலையாக்கம், கருத்தாக்கம் என்ற இரு தளங்களிலும் நெறியாளர் சறுக்கியிருப்பதையே எடுத்துக் காட்டுவதாயுள்ளது.

சங்கார திரைப்படத்தின் கதை கூறல் பாணியும் அதன் களமும் சற்றுப் புதுமை வாய்ந்தது. புதிரானதும் கூட மனித மனத்தின் உள்ளார்ந்த இயக்கத்தையும் அதன் தன்மைக் கூறுகளையும் வசனங்களில் மாத்திரமே வெளிப்படுத்தி விடமுடியாது. ஆசைகள், இச்சைகள், சலனங்கள், போராட்டங்கள், விடுபடல்கள் போன்றவற்றை மிக ஆழமாக வெளிப்படுத்த இயற்கையான ஒலிகள், மெளனங்கள் போன்றவற்றை நல்ல முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் நெறியாளர் பிரசன்ன ஜெயக்கொடி. இந்த வகையில் அவருடன் ஆற்றல்மிக்க ஒரு குழுவாக இயங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பாலித பெரேரா, இசை வழங்கிய நதீகா குருகே ஆகியோர். இசையில் இயற்கையாக சுற்றாடலில் இயல்பாயிருக்கும் ஓசைகளை காட்சிகளின் தன்மைகளுக்கு ஏற்ப கூட்டியும் குறைத்தும் செயற்கை ஒலிகளையும் கலந்து பயன்படுத்தியிருப்பது திரைப்படத்திற்கு செறிவானதொரு அர்த்தத்தையும் புதிய பரிமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் கலையகத்தில் புதியதொரு அனுபவத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

பீஇந்தவகையில் காட்சிகளும் இசையும் பரஸ்பரம் ஒன்றையொன்று அர்த்தப்படுத்தியும் ஆழப்படுத்தியும் கவித்துவமான சேர்க்கையாக மிக இயல்பாக இணைந்துள்ளன. மழை, காற்று, புயல், சுடர், நெருப்பு, சலசலப்புடன் ஓடும் நீர், சலனமின்றியிருக்கும் நீர்ப்பரப்பு, ஜிவராசிகளின் ஓசைகள், பறைவைகளது நிசப்தம் அல்லது மெளனம், இறக்கைகளின் சடசடப்பு ஆகியன அர்த்தச் செறிவுடன் கூடியவை.

முதிய பெளத்த துறவி ஆழமானதொரு கதாபாத்திரமாகும். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் முழுமையும் ஆழ்ந்த தியானமும் வெளிப்படுகின்றன. பற்று, பற்றின்மை பெளத்த சாரத்தின் வெளிப்பாடுகளாக மிக அருமையாக வெளிப்படுகின்றன. உள்ளடக்கத்திலும் பெளத்த தத்துவார்த்த சாரம். உட்பொதிந்திருப்பது ஆழமான பார்வைக்கு புலப்படும். உண்மையில் செயல்களிலல்ல, நோக்கத்திலேயே ஒரு காரியத்தின் முழுமையும் புனிதமும் அடங்கியுள்ளது போன்ற பெளத்த தத்துவங்கள் வெளிப்படுகின்றன. மேலும் செறிவுடன் கூடிய பெளத்த சாரகருத்துக்கள் உள்Zடுகளாக உறைந்திருப்பது ஆழமான பார்வைக்கு அகப்படும்.

மூன்றாவது பாத்திரமான கிராமத்து இளம் பெண் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அர்த்தத் தளங்களை நன்கு விரிவுபடுத்துவதற்கு இப்பெண் கதாபாத்திரத்தின் இயக்கமும் செயற்பாடுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு பங்கினை வகிக்கின்றது. இளம் பெளத்த துறவிக்கும் முதிய பெளத்த துறவிக்கு மிருக்கும் பாரியஇடைவெளி, பக்குவவேறுபாடுகள், பற்று- பற்றின்மை ஆகியன எத்தகைய திணிப்புமின்றி, வெகு இயல்பாக காட்சிகள் மூலம் வெளிக்கொணரப்படுகின்றன.

இளந்துறவி ஆனந்த படிப்படியாக ஆத்மீகத் தளத்தில் உள்ளொளி பெற்று வருகிறாரென்பதை அர்த்தப்படுத்துவதற்கு வெட்டுக்கிளி குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. மரகிளை, தண்டு, கொடிகள் போன்றவற்றில் காணப்பட்ட வெட்டுக்கிளி திரைப்படம் இறுதியை அண்மிக்கையில், விகாரையின் மணிக்கூண்டுக் கோபுரக் கயிற்றின் இடைநடுவில் காணப்படுகின்றது. சிற்றுயிரான வெட்டுக்கிளியின் அசைவின் மூலம் பேருண்மைபுலப்படுத்தப்படுகின்றது. ஆனந்தவின் ஆன்மீகப் பயணம் ஆரம்பப்புள்ளியிலிருந்து முன்னேறிவிட்ட போதிலும்/ இன்னும் முடிவடைந்து விடவில்லை. திரைமொழியின் கூறுகளில் மிக ஆழமான விசாரணைகளுடன் கூடிய பெளத்தசார உட்கருத்தை எளிமையாகவும் கவித்துவ அழகுடனும் வெளிப்படுத்த முடியுமென்பதற்கு இத்திரைப்படம் சான்றாக உள்ளது. கலையாக்கத்திற்குரிய உயர்ந்த தளத்தில் நெறியாளர், ஒளிப்பதிவாளர், இசைவழங்கியவர் ஆகியோரின் உச்சபட்ச கூட்டு முயற்சி இதனைச் சினிமா மொழியில் சாத்தியமாக்கியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.