புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.
இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் திருப்பம்

இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் திருப்பம்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அடுத்த வாரம் நேரடிப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக் கின்றன.

அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்து வதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் அமைச்சர்கள் குழுவுடன் இரா. சம்பந்தன் எம்.பி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக ஏற்கனவே இருதரப்பும் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன் அரசியல் தீர்வு தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரமே ஆரம்பிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

“அரசியல் தீர்வு காண்பதைப் பற்றிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றி ஏற்கனவே அரசுடன் கலந்துரையாடியுள்ளோம். அதன்படி, அடுத்தவாரம் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையை அரசுடன் கூட்டமைப்பு ஆரம்பிக்கின்றது” என்று குறிப்பிட்ட சுமந்திரன், புதிய தீர்வு யோசனையொன்றை கூட்டமைப்பு முன்வைக்கு மென்றும் கூறினார்.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களுடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அரசியல் தீர்வின் ஆரம்பக் கட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளதாகவும் 13 ஆவது திருத்தச் சட்டக் கட்டமைப்புக்குள் ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பின் அவற்றைக் களைவதற்கான சட்டங்கள் வகுக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைப்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.