புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.
அடகுக் கடை கொள்ளை வெற்றிகரமாக முறியடிப்பு

மஹரகமவில் சம்பவம்

அடகுக் கடை கொள்ளை வெற்றிகரமாக முறியடிப்பு

அன்று ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 9.30 மணியளவிலிருக்கும். சனத்திரள் மிக்க மஹரகமை நகரம் அன்றும் வழமைபோல் மக்கள் முண்டியடித்துக் கொண்டு தமது விடுமுறை நாளின் பகல் போசனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

தூர இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் ஒன்றையொன்று முந்திக் கொண்டு செல்ல முற்பட்டதனால் ஹைலெவல் வீதியும் பரபரப்பாகவே காணப்பட்டது.

சந்தைக்கும், கடைகளுக்கும் தமது சொந்த வாகனங்களில் வருபவர்களும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் தமது வாகனங்களை நிறத்துவதற்காக இடம் தேடிக் கொண்டு அலைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று நகை அடகு வைக்கும் கடைக்கு முன்னால் வந்தது மோட்டார் சைக்கிளொன்று. அவசரமாக அதனை நிறுத்திவிட்டு அதிலிருந்து மூவர் இறங்கினர்.

அதில் ஒருவன் வெளியில் காத்து நிற்க அடுத்தவர் கைத்துப்பாக்கி, மற்றும் ‘ரம்போ’ ரக கத்தியுடன் பிரஸ்தாப நகை ஈடுவைக்கும் கடைக்குள் நுழைந்தனர். இதில் மூன்றாம் நபர் சில வாரங்களுக்கு முன்னால் இதே கடையில் தங்க மோதிரம் ஒன்றை அடகு வைத்துள்ளான்.

கடைக்குள் ஆயுதத்துடன் நுழைந்தவன் பிரதான இரும்பு பெட்டி திறக்கும் வரையில் காத்திருந்தான். கடையின் பிரதான இரும்புப் பெட்டியை திறக்கும் தருணம் பார்த்து பயங்கர ஆயுதத்துடன் ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து தங்க நகைகளை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளான்.

இத்தருணம் பார்த்து ஏற்கனவே அதுபற்றிய தகவலறிந்து பிரஸ்தாப கடையை முற்றுகையிட்டிருந்த பொலிஸார் திடீரென தோன்றி இவர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர். உள்ளே வந்த இருவரில் ஒருவர் பொலிஸாரை நோக்கி சுட முற்பட்டுள்ளார். உடன் செயற்பட்ட பொலிஸார் அவனை நோக்கிச் சுட்டனர். அவன் ஸ்தலத்திலேயே பலியானான்.

“கொள்ளைக் கோஷ்டியொன்று மஹரகம நகரின் மத்தியிலுள்ள நகை அடகுவைக்கும் மத்திய நிலையமொன்றை கொள்ளையிட வருவதாக” பொலிஸாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாலேயே பொலிஸாரால் இவ்வாறு செயல்பட முடிந்ததாகவும் இதற்கென பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இக்கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் ஸ்தலத்திலேயே கைது செய்ததுடன் அடுத்தவர் தப்பியோடி தலைமறைவாகினார். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் காரணமாக உயிரிழந்த கொள்ளைக் கோஷ்டி உறுப்பினர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இக்கொள்கை கோஷ்டியின் தலைவரெனவும் இவர் மொறட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது இக் கொள்ளை கோஷ்டி அண்மைக் காலத்தில் மேற்கொண்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களைப் பற்றிய துப்புக்கிடைக்கும் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹரகமை, நுகேகொட பொலிஸ் பிரிவின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். இக்கடையை கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர் பலியானதுடன் மற்றையவர் (தலைவர்) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கைத்துப்பாக்கி, ‘ரம்போ’ ரக கத்தி, உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இக்கொள்ளை கோஷ்டி ஏற்கனவே மேற்கொண்ட கொள்ளைகள் பற்றிய கோஷ்டித் தலைவனின் வாக்குமூலத்திற்கு அமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாக மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அனுராத மஹிந்தசிறி தெரிவித்தார்.

பொது மக்களுடன் பொலிஸார் அன்பாக பழகுவதன் மூலம் பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பொலிஸ் மா அதிபர் கூறுவதைப் போல் பொதுமக்களுடன் பொலிஸார் நல்ல உறவை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற பாரிய குற்றச் செயல்களை தடுக்க முடியும் என்பதற்கு இச்சம்பவம் எல்லோருக்கும் ஒரு உதாரணம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.