புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

வீசாரைண

வீசாரைண

தனது இடது கையை வளைத்து பிடரியில் வைத்த வண்ணம் முன்றாவது முறையாகவும் சுழல் நாட்காலியில் சுற்றி வந்த அதிபர் அன்வர்தீன், வலது கையால் காபன் பேனாவை விரல் இடுக்கில் வைத்து ஆட்டிய படியே தனது பிரச்சினைக்கு விடைகாண முடியாமல் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

எதிரே பெளசியா டீச்சர் நின்று கொண்டிருந்தார். வழமைக்கு மாறாக அவர் அன்று சின்னப் பூப்போட்ட சேலை அணிந்திருந்ததால் அவரது சிவந்த மேனிக்கு அது எடுப்பாகவே இருந்தது. அதே நிறத்தில் அணிந்திருந்த இறுக்கமான பிளவுசும் அவரது அழகை இன்னும் அதிகரித்துக் காட்டியது.

“டீச்சர் நீங்க இன்னும் போகெல்லியா?”

“ஸார் நீங்க...?”

“வரச் சொன்னீங்க ஒன்றும் சொல்லேலியே!?”

“ஓ... ஐம்... சொரி...”

“மறந்தே போயிட்டேன்”

“... ? டீச்சர்”

“டீச்சர் பத்தாம் ஆண்டுக்கு டீச்சர் வர இல்லயாம் நீங்க போய் பாடம் எடுங்க அதுக்குத்தான் உங்கள வரச் சொன்னேன்”

“சரி ஸார்”

டீச்சர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அதிபர் அன்வர்தீன், மீண்டும் பிரச்சினைக்கு உரிய விடையத்துக்கு முடிவு காண்பதில் மூழ்கலானார்.

அதிபர் அன்வர்தீன் அவ்வளவு பிரபலமான தேசிய பாடசாலை ஒன்றுக்கு அதிபராக வரலாம் என்று கனவுகூட கண்டிருக்க மாட்டார். அதிபருக்குரிய தகுதி இல்லாவிட்டாலும் தரமான ஆசிரியருக்குரிய ஆளுமை அவரிடம் இருந்தது. அதே பாடசாலையில் கல்வி கற்பித்து வந்தவர். ஏனைய ஆசிரியர்களைவிடவும் அலாதியான கற்பித்தல் தன்மையைப் பெற்றிருந்தார். இதனால் சக ஆசிரியர் மத்தியிலும், மாணவர்களுக்கிடையிலும் அவருக்கென ஒரு தனியான மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது.

அந்தப் பாடசாலையில் திறமையாக செயற்பட்டு வந்த அதிபர் அஸனாரின் திடீர் மரணத்தை அடுத்து அவ்வூர் அரசியல் பிரமுகர்களின் வேண்டுகோளினைத் தட்டிக் கழிக்க வழியின்றி அந்த இடத்துக்கு அதிபராக வந்தமர்ந்தார். எனினும் அதிபர் தரத்திலான அதிபர் பதவியல்லா விட்டாலும் கூட அதிபருக்குரிய ஆளுமையை அவர் பெற்றிருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊரார் நியமித்த சாதாரண ஆசிரிய அதிபர்தானே! என எவரும் மதிக்க மாட்டார்கள். அவர் தனது அதிபர் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் அதிபர் தரத்திலான முதல்தர பரீட்சைக்குத் தோற்றி தகுதி காண வேண்டும், அல்லது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு முன்போல் சாதாரண ஆசிரியராகவே இருந்து விட வேண்டும். இவை இரண்டையும் செய்யக்கூடிய நிலையில் அவர் இல்லை. தன்னைத் தேடி வந்த அதிபர் பதவியை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கவும் அவர் தயாரில்லை.

ஒரு கணம், இந்தப் பாடசாலையை கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் தரத்துக்குக் கொண்டு வர பாடுபட்டுழைத்த காலஞ்சென்ற அதிபர் அஸனாரைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அவ்வளவு அழகியல் வேலைகளையும் அவர் செய்து பார்ப்போர் வியப்புறும் வண்ணம் பாடசாலையை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தார். பாடசாலையின் முன் வளைவுக் கோபுரம், பாடசாலையின் பெயர்ப் பலகை வர்ணம் தீட்டப்பட்டு செப்பனிடப்பட்ட கட்டடங்கள், பாடசாலையின் உள்நுழைவுடனே எதிர்ப்படும் புதிய அலுவலக அறைபள்ளிவாயல் என அவரது சேவைகள் நீண்டு கொண்டே போனது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளும் அப்படித்தான் 22 மாணவர்களை பல்கலைக்கழகம் உள்வாங்கிக் கொண்டது. விளையாட்டுத் துறையில் பெற்ற வெற்றி கிண்ணங்கள் பாடசாலை அலுமாரிகளை அலங்கரித்தன.

பாடசாலைக்கெனவே அயராது உழைத்தவர், பாடசாலை முக்கிய அலுவல் ஒன்றை முன் வைத்து கொழும்புக்குச் செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென எவரும் எதிர்பார்த்திராத வேளையில் காலமாகிவிட்டார். மரணம் சொல்லிக் கொண்டா வரும்? அவருடனே காரில் பிரயாணம் செய்த எமன் ஆஸ்பத்திரி வரையில் காத்திருந்தது உயிரைக் கைப்பற்றிக் கொண்டதை யார்தான் தடுக்க முடியும்? பின்னர் என்ன அவரது பிறந்த ஊரான அக்கரைப்பற்றுக்கு கொண்டு சென்று ஜனாஸாவை நல்லடக்கம் செய்து விட்டு வந்தவர்கள் கூடவே அவரது வெற்றிடத்துக்கு மேற்சொன்ன அன்வர்தீன் ஆசிரியரைப் பதவியில் அமர்த்தினர்.

பாடசாலைக்கு முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படும் காலமாதலால் வந்து குவிந்த விண்ணப்பங்களில் ஒன்றையேனும் ஒதுக்கி விடாமல் சகல வற்றுக்குமான நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்களை அனுப்புவதற்கான ஒரு கமிட்டியைப் போட்டு விட்டு தான் ஒதுங்கிக் கொண்டார். பாடசாலையில் அனுபவமிக்க தலைமை ஆசிரியர் ஒருவரின் தலைமையின் கீழ் உப அதிபர்கள், சக ஆசிரியர், பள்ளி பரிபாலன சபை அங்கத்தர் ஒருவர் என சகல தரத்திலுமானவர்கள் நேர்முகப் பரீட்சைக் குழுவில் அடங்கும் வண்ணம் கமிட்டியில் இடம்பெறச் செய்ததோடு அவரது கடமை முடிந்துவிட்டது.

தெரிவுக் கமிட்டி கூடியது வந்திருந்த விண்ணப்பங்களை தரம் பிரித்து ஊர்ப்பதிவாளர்கள், பழைய மாணவர்கள், படை வீரர்களின் பிள்ளைகள், யுத்தத்தில் இடம்பெயர்ந்தோர்களின் பிள்ளைகள் என கல்வித் திணைக்களம் பணித்திருக்கும் விகிதாசாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து கொண்டு ஓரிரு இடைவெளிகளையும் தம் வசம் வைத்துக் கொண்டனர்.

மாணவர் சேர்ப்புக் கமிட்டி பெரும்பாலும் நேர்முகப் பரீட்சை நடத்தி தேவையான விண்ணப்பதாரிகளை உள்வாங்கிக் கொண்டு மிகுதி விண்ணப்பங்களை காரணங்கள் பல காட்டி நிராகரித்து விட்டது.

ஓரிரு இடைவெளிகள் என்று சொல்லப்படுவதன் மூலம்தான் பாடசாலைக்கென வசூலிக்கப்படக் கூடிய பணவரவின் முக்கிய அம்சமாகும். கல்லூரியின் தேவைகளுக்கும், முன்னேற்றத்துக்கும் அது பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையோ பொய்யோ வசூல் நடக்கத்தான் செய்கிறது. தமது பிள்ளையை அதே பாடசாலையில் சேர்க்க வேண்டும் என்ற வேணவா கொண்டவர்கள், எத்தனை ஆயிரம் என்றாலும் கொடுக்கத் தயார் நிலையில் உள்ளனர். “முதலாம் ஆண்டு பிள்ளைகள் அனுமதிக்கு பாடசாலைக்கு பணம் அறவிடப்படக்கூடாது, அது சட்டத்துக்கு முரணானது அதை மீறி நடக்கும் பாடசாலைகளுக்கு எதிராக அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு சுற்று நிருபங்களை அனுப்பி வைத்தாலும் அது வழமையான நடைமுறைதான் என எண்ணும் பாடசாலை நிருவாகங்களும் இல்லாமல் இல்லை.

மனித உடம்பின் பிரதான பகுதி இதயமாக இருப்பது போல அப்பாடசாலையின் மறைமுக வருமான இதயம் இடைவெளிகளை நிரப்பும் விண்ணப்பங்கள் தான். எவரும் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குச் சொல்லப் போவதுமில்லை என்பது உறுதி என்பதால் எதுவும் செய்யும் அதிகாரம் சுயேச்சையாகவே வந்து விடுகிறது. இடைவெளி நிரப்பும் விண்ணப்பங்கள் பல ‘பெண்டிங்’ என்ற பெயரில் வரிசையில் நின்றன.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின் படி எடுக்கப்படக் கூடிய விண்ணப்பங்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஓரிரு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. வெளியூர் பதிவு, வேறு பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய மாணவர்களை அந்த குறிப்பட்ட பாடசாலைக்கே சேர்க்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்ற பெற்றோர்களின் விண்ணப்பங்கள், வெளியூர்களில் இருந்து வந்து தற்காலிகமாக அந்த ஊரில் குடியிருக்கும் பெற்றோர்களின் விண்ணப்பங்கள் என பல தரத்தில் அவை காணப்பட்டன.

இடைவெளி நிரப்பும் விண்ணப்பங்களுடன் தான் ரோஷானின் விண்ணப்பமும் சிக்கிக் கொண்டது. அவரது கணவன் வெளிநாட்டில் இருப்பதால் எல்லாவற்றையும் தானே முன்னின்று செய்ய வேண்டிய கட்டாயம். அவளுக்கு, தனது தமக்கையில் வீட்டில் இருந்தவாரே அதே முகவரிக்கு விண்ணப்பம் போடப்பட்டதால் நேர்முகப்பரீட்சையின் போது ஓரளவு கவனயீர்ப்பு செய்யப்பட்டாலும் “கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்தால் பிள்ளையைச் சேர்த்துக் கொள்கிறோம்” என்று நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே பாடசாலை அபிவிருத்திக்கு ஒரு தொகைப் பணத்தை தீனி போட ஒப்புக் கொண்டதால் எப்படியும் தனது பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

நிராகரிப்புக் கடிதத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட ஆசிரியரைச் சந்தித்தாள் ரோஷான்.

ரோஷானைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்துதான் போனார் அவர். வாக்குறுதியை மீறக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு மனதை மீறிய கவலை அவரைக் கெளவிக் கொண்டது” எப்படியும் தங்களது பிள்ளையைச் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறிக் கடைசி வரையில் நம்பிக்கை நட்சத்திரத்தை கையில் எடுத்துக் காட்டியவர் கள்ளத்தனமாக தனது நண்பர் ஒருவரின் பிள்ளையை அந்த இடத்தை நிரப்ப சிபார்சு செய்து விட்டு தற்பொழுது என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடினார். வந்தவரை அமரச் சொல்லிக் கூட இயலாமல் வார்த்தைகள் கதவடைப்புச் செய்தன.

“ஓ... வாங்க வாங்க... இப்படி உட்காருங்கள்” என்று தன்னை ஒருவாறு சமளித்துக் கொண்டு தனக்கு எதிரே இருந்த ஆசனத்தைக் காட்டினார் அவர்.

கலவரமடைந்த முகத்தோடு காணப்பட்ட ரோஷான்,

“ஸார்... என்ன ஸார் இப்படிச் செய்து போட்டீர்கள்? பிள்ளையைச் சேர்ந்துக் கொள்வதாகச் சொல்லிச் சொல்லியே நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு இப்படி கடைசியில் காலை வாரி விட்டீங்களே!”

“இல்ல நீங்கள் அப்படி ஒன்றும் என்னைப் பற்றி தவறாக நினைக்க வேண்டாம்; இது எனது தனிப்பட்ட முடிவல்ல, கமிட்டியின் தீர்மானம்.”

“கமிட்டி என்றால் நீங்கதானே ஸார் அதிலே செக்கரட்டரியா இருக்கீங்க உங்களுக்குத் தெரியாம ஒன்றும் நடக்க முடியாது” ரோஷான் கேட்டாள்.

“என்றாலும் எனக்கு தனி முடிவு எடுக்க முடியாது அவங்க சொல்லுறதத்தான் நானும் கேட்க வேண்டும்” குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சமாளிப்புக்களைச் செய்தார் அவர்.

தனது குற்றம் குன்றேறுவதற்கு முன்னதாக குறுக்கு யோசனை ஒன்றை முன்வைத்தார்.

“இங்க பாருங்க மிஸஸ் ரோஷான், உங்கட பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று பெட்டிஷன் ஒன்று வந்திருக்கிறது அதை மீறி நாங்கள் உங்கள் பிள்ளையை சேர்த்துக் கொண்டால் எங்கட “ஜொப்பை”யும் இழக்க வேண்டியதுதான்”

“நீங்க இப்பதான் இதச் சொல்லுaங்க, முன்னரே சொல்லியிருக்கலாமில்லே? எங்களுக்கு விரோதமாக பெட்டிஷன் போடுமளவுக்கு எங்களிடம் எந்த விதத் தவறுமில்லே;

நாங்கள் ஒரு குற்றமும் செய்யல்ல நீங்க பொய் சொல்லுaங்க”

“பொய்யல்ல இப்ப வேண்டுமானாலும் அந்த பெட்டிஷனக் காட்ட முடியும், அதக் காட்டினால் எங்களுக்கு நிருவாகம் செய்ய முடியாம போயிடும் சிக்கல் உருவாகும்” என்று சோகமே இழையோடியிருக்கும் ரோஷானின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

“இப்ப என்ன செய்யிறது ஸார்? பிள்ளைய பாடசாலைக்கு சேர்க்கிற காலமும் முடிந்துட்டுது வேறு பாடசாலைகளுக்கு சேர்க்கவும் முடியாது நான் என் பிள்ளைய எங்கென்று கொண்டு சேக்குறது ஒரு வழி சொல்லுங்க” என அழாக் குறையாக நின்றாள் ரோஷான்.

“இப்ப நீங்க ஒரு வேல செய்யுங்க, அந்தியில பிரின்ஸிபல் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்து உங்கட பிரச்சினையை சொல்லுங்க. அவர் ஓம் என்றால் நான் சேத்துக் கொள்றேன் எனக்கு அதில ஒரு பிரச்சினையும் இல்லே” என்று தன்னை பிரச்சினையில் இருந்து விடுவித்துக் கொள்ள ஒரு முற்றுப் புள்ளியைத் தேடினார் அவர்.

நிருவாகத்துக்குள் நடந்திருக்கக் கூடிய பிரச்சினைகள் எதுவும் புதிய பிரின்ஸிபலுக்குத் தெரியாது. முத்தெடுக்க கடலுக்குள் மூழ்கியவனுக்குத்தான் கடலின் ஆழத்தில் உள்ள ஆபத்துக்கள் தெரிய வரும். அதேபோல தெரிவுக் கமிட்டிக்குள் என்ன என்ன தில்லு முல்லுகள் நடந்திருக்கின்றன என்பதையும் அறியாதவராக இருந்தார் அதிபர்.

தனக்கு நடந்த அவலங்களை நயமாக எடுத்துச் சொன்னாள் ரோஷான். அதிபரோ கலவரமடையாமல் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கை என்ன என்பதை எடுத்துக் கூறினார்.

“மிஸஸ் ரோஷான், தனக்கு நடந்த அசாதாரணங்களை எழுத்து மூலமாக எனக்கு விபரமாக எழுதி நாளைக்கு கொண்டு வந்து தாருங்கள் பிள்ளையைச் சேர்த்துக் கொள்வதற்கு வழி பண்ணுகிறேன் நீங்கள் கவலைப்படாமல் போய்வாருங்கள்” என்று நம்பிக்கை எனும் நற்கனியை ஊட்டி அனுப்பி வைத்தார்.

ரோஷானுக்கு அப்பொழுதுதான் போன உயர் திரும்பி வந்தது போல இருந்தது. நிம்மதிச் சுமையைச் சுமந்தவளாக வழமைக்கு மாறான சந்தோஷத்துடன் அவள் காணப்பட்டாள்.

தனக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை கடிதத்தில் வடித்தவள், மறுநாள் பாடசாலை அதிபரின் ஆபீஸ்வாசலில் தஞ்சம் +(!{.

ஆபீஸ் பையன் வந்து

“பிரின்ஸிபல் உங்களை வரச் சொல்லுகிறார்” என்றதும் தனக்கு நியாயம் கிடைக்கப் போகிறது எண்ணி மகிழ்ந்தவளாக அதிபரின் மேசையின் முன்னால் போய் நின்று கொண்டாள் அவள்.

ஒரு முறை ரோஷானை ஏற இறங்கப் பார்த்தவர், ‘எங்கே நான் சொன்னபடி கடிதம் கொண்டு வந்தீர்களா?’ என்று கேட்டபடியே ‘எங்கே கொடுங்கள் பார்ப்போம்’ என்று கைகளை நீட்டினார். கடிதத்தைப் பெற.

ரோஷானிடம் இருந்து கடிதத்தைப் பெற்றவர் ஓர் எழுத்துவிடாமல் ஊன்றிப் படித்தார், பின்கேட்டார்

“நான்கு மாதங்களாகியும் பிள்ளைக்கு இன்னும் பாடசாலையில் இடம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிaர்கள் இல்லையா?”

“ஆமாம் ஸார், ஏனைய பிள்ளைகள் எல்லோருக்கும் பாடசாலையில் இடம் கிடைத்து விட்டது எனது பிள்ளைக்கு மாத்திரம்தான் இன்றைக்கு நாளைக்கு என தாக்கல் சொல்லிச் சொல்லியே நாட்கள் பிந்தி நாலுமாதங்கள் ஆகிவிட்டது” என்றாள் தைரியமாக.

“நீங்கள் இப்படி எழுதினது சரியில்லை ஏனென்றால் நாலு மாதங்களாகியும் ஒரு பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு சேர்க்காதது கல்விக் கொள்ளையின்படி மன்னிக்க முடியாத குற்றம். இந்தப் பாடசாலையில் இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஒரு பாடசாலையில் பிள்ளையைச் சேர்த்தே ஆக வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பு இல்லாவிட்டால் அவர்கள் குற்றவாளிகள் புரிகிறதா?” என்றார் புருவத்தை மேலே உயர்த்தியவராக.

“அதற்குத்தானே ஸார் ஆறு மாதத்துக்கு முன்பே அப்ளிகேஷன் போட்டேன் நீங்கள் பிள்ளையைச் சேர்த்துக் கொள்ளவில்லையே!” என்றவளை, அதிபரின் பேச்சு வேறு பக்கம் கவனயீர்ப்புச் செய்தது.

“இப்ப பாருங்கள் மிஸிஸ் ரோஷான், நீங்கள் செய்திருக்கிற வேலையால் நாங்களுமில்ல குற்றவாளியாக வேண்டி வரும். நான்கு மாதங்கள் பாடசாலைக்குப் போகவில்லை என்றால் ஏன் அந்தப் பிள்ளையை பாடசாலைக்குச் சேர்க்கல்ல என்ற ஒரு குற்றச் சாட்டும் எம் மீது சுமத்தப்படும், இந்தக் கடிதத்தை நான் சிபாரிசு செய்தால் நான் குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டதா ஆகிய விடும் அதனால என்னாலையென்றால் சிபார்சு செய்ய ஏலாது”

“அப்ப ஏன் சார் நேற்று அந்தியில் அப்படிச் சொன்னீர்கள் பாடசாலைக்கு பிள்ளையைச் சேர்த்துக் கொள்கிறேன் கடிதம் ஒன்று எழுதிக் கொண்டு வாருங்கள் என்று.” ரோஷான் சற்று அழுத்தமாகவே கேட்டாள்.

“அது நேற்று” பதில் சொன்னார் அதிபர்

“அப்போ இன்று...?”

“இன்று இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தையும், உங்களது எழுத்து மூலக் கடிதத்தையும் கொண்டு போய் பத்தரமுல்லையில் உள்ள கல்வித் திணைக்களத்தில் கொடுத்து செயலாளரின் அனுமதியைப் பெற்று வாருங்கள் இல்லாவிட்டால் எக்காரணம் கொண்டும் உங்கள் பிள்ளையை இந்தப் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ள முடியாது” என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

ரோஷானின் வேண்டுகோள் யாவும் பாலைவனத்து மழையானது. இருண்ட மேகத்தின் கருமை அவளது உள்ளத்தை ஆட்கொண்டது, கண்கள் மழை பொழிவதை எப்படியோ தவிர்த்துக் கொண்டன.

ரோஷானுக்கு ஒன்றுமே விளங்க வில்லை” யாரிடம் சென்றாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அங்க போங்க இங்க போங்க என்று ஒருவர் பின் ஒருவராக கட்டளை இடுகிறார்களே தவிர உருப்படியாக எதையும் சொல்லுகிறார்கள் இல்லையே!” என மனதுக்குள் எரிமலையைச் சுமந்து கொண்டு வேதனைப்பட்டாள்.

இந்த விண்ணப்பம் போட்ட நாளில் இருந்து அவள் போகாத இடம் இல்லை. பார்க்காத ஆளில்லை. கிராம சேவகரா, அரச அதிபராக கல்வி அதிகாரியாக, தெரிவுக் கமிட்டி அங்கத்தவர்களா? அப்பப்பா இது விடயமாக எத்தனை பிரமுகர்களைச் சந்தித்து விட்டாள் எல்லாம் கானல் நீராய்ப் பூச்சாண்டி காட்டுகிறதே தவிர காரியம் கை கூடுவதாக இல்லை ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் இப்படி என்று முன்னரே தெரிந்திருந்தால் அவள் பிள்ளையே பெற்றுக் கொண்டிருக்கமாட்டாள்.

முடிவாக, “தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்துக் கொண்டு கொழும்பு கல்வித் திணைக்களத்துக்கே போவது” என்ற முடிவோடு முன்னே நடந்தாள் அவள்.

“டிங்... டிங்...” அதிபரின் மேசையில் மேல் இருந்த அழைப்பு மணியை ஆள்காட்டி விரலால் இரண்டு முறை தட்டினார் அதிபர்.

அரசனின் ஆணையை தலைமேற்கொண்டு செய்து முடிக்கும் அடிமையைப் போல ஓடிவந்தான் ஆபீஸ் பையன்.

“ஸார்...?’”

“போய் அந்த நிஸாம் ஸாரை வரச் சொல்லும்” கடுமையான கட்டளை பறந்தது அதிபரின் வாயிலிருந்து

மறுகணம் தெரிவுக் கமிட்டியின் செயலாளர் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

“என்ன ஸார்...?” பதற்றம், தடுமாற்றம் நிலவியது.

“இங்க பாருங்கள் நிஸாம் ஸார், நான் உங்கட மூப்புக்கும் முதிர்வுக்கும் மதிப்பு வைத்து இது நாள் வரையிலும் ஒன்றும் சொல்லவில்லை நீங்க தெரிவுக் கமிட்டி செக்ரட்டரியாக நின்று ஒழுங்காக எல்லாவற்றையும் செய்வீங்க என்று எதிர்பார்த்தேன்”.

“என்ன ஸார் சொல்லுaங்க?”

“இப்ப வந்துட்டுப் போராவே பொம்பள, ரொம்பப் பாவம் இல்லியா? அவட பிள்ளையை ஏன் சேர்த்துக் கொள்ள இல்ல”?

“ஸார் அது வந்து...!”

கமிட்டின் மற்றவங்களையும் கூப்பிடுங்க ம்... ம்... குவிக் குவிக் உடனடியாக இதுக்கு முடிவு கண்டா வேண்டும்” அதிபர் அவசரப்பட்டார்.

“ஏதோ நடந்திருக்க வேண்டும்” என்று ஊகித்துக் கொண்ட நிஸாம் ஆசிரியர், ஏனையவர்களைக் கூப்பிட அடுத்த கட்டடத்தை நோக்கி நடந்தார்.

மறுகணம் கமிட்டி அங்கத்தவர்கள் மந்திராலோசனை நடத்துவதற்கு அவசரமாய் அதிபரின் அறையில் கூடினர்.

“இப்ப பாருங்க நான் உங்கள எல்லோர் மேலேயும் வைத்திருக்கிற நம்பிக்கையிலதான் உங்கட விஷயங்களில் தலையிட வில்லை எல்லாவற்றையும் சரியாகச் செய்வீர்கள் என்று நினைத்தேன் ஆனால்...?”

“ஆனால் என்ன ஸார்...?”

“மிஸஸ் ரோஷானுடைய விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்”

“டொனேஷன் விஷயமாகப் பேசுகிறாரோ?” என ஒரு கணம் யோசித்த நிஸாம் ஆசிரியர், “அது வந்து ஸார்...!”

“எப்படி இருந்தாலும் அவ ஒரு பொம்பள உதவிக்கு ஒருத்தரும் இல்ல, கணவன் வேற வெளி நாட்டில் இருக்கிறாராம் கொஞ்சம் யோசித்துப் பார்த்து இருக்க வேண்டும் இல்லையா?” அவரது கருணை மனது திறந்து கொடுத்தது.

“சரிதான் ஸார்; அவங்க பதிவு இங்க இல்ல. பக்கத்து ஊர் பதிவாக இருப்பதனால மினிஸ்டிரியுடைய சுற்று நிருபத்தின் படி சேர்த்துக் கொள்ள முடியாது”

“அவங்க கொண்டு வந்திருந்த கடிதத்தைப் பார்த்தேன் அதனை எனக்கு சிபார்சு செய்ய முடியாது. சிபார்சு செய்தால் நாம எல்லோரும் வீட்டுக்குப் போக வேண்டியது தான் அதனால அவங்களை மினிஸ்டிரிக்கே போய் எண்டோஸ்மன் எடுத்து வரச் சொல்லி திருப்பி அனுப்பிட்டேன். அந்தக் கடிதத்தைப் படித்ததும் மினிஸ்டரியால எங்களிடம் எக்ஸ்பிளேனேஷன் கேட்பாங்க அதற்கு நாங்க தயாராக வேண்டும் அதற்குத் தான் நான் உங்கள் எல்லோரையும் வரச் சொன்னேன். இப்ப நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாம அகப்படாத வகையில் காரண காரியங்களைப் போட்டு அறிக்கை ஒன்றைத் தயாரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இது வரையில் விடை காண முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த அதிபருக்கு பொருத்தமான ஒரு விடை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்.

ஆனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரியோ தனக்கு இழைக்கப்பட்ட அசாதாரணங்களை எல்லாம் வகைப்படுத்தி ஆதாரங்களுடன் கல்வி அமைச்சின் மேலதிகாரிக்கு முறைப்பாடு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அந்த முறைப்பாடு விசாரிக்கப்படுமா?

(யாவும் கற்பனை)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.