புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

மின்சாரம் தாக்கி படுத்த படுக்கையாக கிடக்கும் தொழிலாளி மரியசீஸ்

மின்சாரம் தாக்கி படுத்த படுக்கையாக கிடக்கும் தொழிலாளி மரியசீஸ்

கைகொடுக்குமா கருணை உள்ளங்கள்

தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது குளவிக் கொட்டு, மின் தாக்கம் போன்ற அனர்த்தங்களுக்குள்ளாகும் போது அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டிய நட்டஈடு, காப்புறுதி என்பன முறையாகப் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை. இது போன்ற அனர்த்தங்களுக்குள்ளாகும் போதும் மற்றும் தொழிலாளரின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு நியாயத்தையும், நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் தொழிற்சங்கங்கள் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று தொழிலாளர்கள் தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களுக்காக குரல் எழுப்பி நியாயம் பெற்றுக்கொடுக்க எவரும் முன்வராமையினால் குறிப்பாக களுத்துறை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று விரக்தியும், கவலையும் அடைந்துள்ளனர். பாரிய அனர்த்தங்களுக்குள்ளாகும் பலர் படுத்த படுக்கையில் காலம் பூராவும் கஷ்டப்படும் துயரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இங்கிரிய, ஹல்வத்துறை, தோட்டம் கீழ் பிரிவைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகவும் துயரமான நெஞ்சை உருக்கும் ஒரு சோக நிகழ்வாகும்.

இராசையா மரியசீஸ் இவருக்கு வயது 26. இவரது மனைவி வாடா மலர் வயது 30 இவ்விருவரும் தோட்டத் தொழிலா ளர்கள். இவர்களு க்கு ஏழு வயது மக னும், மூன்று வயது மகளும், ஒன்றரை வயது மகனுமாக மூன்று குழந்தைகள்.

தோட்டத் தொழி லாளர்களாக இருந்த போதிலும் கூட குடியிருப்பதற்கு ஒரு லயன் அதை கூட இல்லாமை கவலைக்குரியதாகும்.

மரியசீஸ் வழமைபோல் கடந்த 27.07.2010 அன்று வேலைக்குச் செல்ல தோட்ட வேலை மேற்பார்வையாளர் பிரதான வீதி ஓரத்தில் பட்ட நிலையி லிருந்த மரம் ஒன்றை வெட்டிக் சாய் க்குமாறு பணித்துள்ளார். அம்மரத்தின் அருகே அதி சக்தி வாய்ந்த மின் கம்பி இருப்பது குறித்து அச்சமடைந்த மரி யசீஸ் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் உனக்கு வேலை இல்லை நீ வீட்டுக்குப் போ” என்று வேலை மேற்பார்வையாளர் கட்டளைக்கு மறுக்காமல் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதா என மீண்டும் ஒரு தடவை மரியசீஸ் கேட்க அதை நாங்கள் பார்த்துக்கொள்கின் றோம் எனக்கூறி அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்.

வேலையில்லாமல் போனால் ஒரு நாள் உழைப்பு இல்லாமல் போய்விடுமே என மனதுக்குள் எண்ணிய மரியசீஸ் மரத்தில் ஏறி கிளையொன்றை தறித்த போது அது அதிசக்தி வாய்ந்த மின் கம்பியில் வீழ்ந்து தீப்பற்றிக் கொண்டது. ஒரு சில வினாடிக்குள் சுமார் 40 அடி தூரத்தில் மரியசீஸ் தூக்கி எறியப்பட்டு குற்றுயிராகக் கிடந்தார். மின் தாக்குலுக்குள்ளான இவரை உடனடியாக இங்கிரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து ஹொரணை ஆஸ்பத் திரிக்குக் கொண்டு சென்று சிகிச்சை பலனளிக்காமல் போகவே அங்கிருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு “அன்றைய தினமே மீண்டும் ஹொரணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.

நான்கு மாதங்களுக்கு மேலாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் எவ்வித பயனும் அளிக்காது மரியசீஸ் தற்பொழுது வாய் திறந்து பேச முடி யாது. கை, கால் அசைக்க முடியாது. படுத்த படுக்கையிலேயே கிடக்கின்றார். கணவனுக்கு உணவு ஊட்டுவது முதல் அனைத்து தேவைகளையும் அவரது மனைவி வாடாமலர் அருகிலிருந்து கவனித்து வருகின்றார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த மின்சார சபையினர் இது போன்ற வேலைக ளைச் செய்யும் முன் மின்சார சபை க்கு அறிவித்து மின்சாரம் துண்டிக் கப்பட்ட பின்னரே மரத்தை தறித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது தவறான வழியைப் பின்பற்றியுள்ளதால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மரியசீசின் மனைவி வாடாமலர் தெரிவிக்கையில், நாங்கள் இ.தொ.கா. சங்கத்தில் தான் இருந்து வருகின்றோம். எனது கணவருக்கு ஏற்பட்ட அனர்த்தம் குறித்து யாருமே வந்து பார்க்கவோ என்ன நடந்தது என்று கேட்கவோ இல்லை. மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டப் பிரதிநிதி எஸ். தியாகராஜா ஆகியோரிடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித் திருக்கிறோம் என்றனர். இதுவரையில் எதுவுமே நடக்க வில்லை.

ம.ம.மு. மாவட்டப் பிரதிநிதி எம். எஸ். பெருமாளிடம் முறையிட்டோம். அவர் எங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையில் தோட்ட அதிகாரிகளிடம் பேசி பண உதவியும் மற்றும் உதவிகளும் பெற்றுக்கொடுத்தார்.

எங்களுக்கு குடியிருக்க லயன் கூட கிடையாது. எனது அக்காவின் வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம். படுத்த படுக்கையாகக் கிடக்கும் கணவனைப் பராமரிப்பது மட்டுமன்றி மூன்று குழந்தைகளுடன் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றேன்.

எனது கணவரின் வாழ்க்கை சூனியமயமாகிவிட்டது. எங்களுக்கு கைகொடுத்துதவ யாருமே இதுவரையில் முன்வரவில்லை. எனது கணவருக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டிய நட்டஈடு, காப்புறுதி இவற்றைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். ஆனால் இதை யார் செய்து கொடுப்பார்கள் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்டப் பிரதிநிதி எஸ். தியாகராஜாவிடம் கேட்டபோது, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிக்கு பூரண சுகம் என்றார்.

ம.ம.மு. மாவட்டப் பிரதிநிதி எம். எஸ். பெருமாளிடம் கேட்டபோது,

பதிப்புக்குள்ளான மரியசீசின் மனைவி எமது தொழிற்சங்கத்தின் உறுப்பினராக இல்லாத போதிலும் மனிதாபிமான அடிப்படையில் தோட்ட அதிகாரியுடன் பேசி அவருக்குப் பெற்றுக்கொடுக்கக்கூடிய உதவிகளைப் பெற்றுக்கொடுத்ததுடன் காப்புறுதி நட்டஈடு என்பனவற்றைப் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றேன் என்றார்.

தொழிலாளர்களுக்கு ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் போது உடன் அங்கு சென்று நிலைமையை அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய கட மைகளை மேற்கொள்ளாது சாக்குப் போக்குச் சொல்லி ஏமாற்றி நட் டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்காது பின்னடித்து வருபவர்களின் போக்கு மிகவும் வெறுக்கத்தக்க தாகும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரியசீஸ் இனி எழும்பி நடக்கப் போவதில்லை. ஆனால் அவர் மனைவி மூன்று குழந்தைகள் இவர்கள் நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இவருக்கு கருணை உள்ளம் படைத்தவர்கள் முன்வந்து கைகொடுத்துதவ வேண்டும்.

ஒருநாள் உழை ப்பு இல்லாமல் போகுமே என எண்ணி மரத்தில் ஏறிய மரியசீ ஸருக்கு இப்படி யானதொரு துரதிர்ஷ்டம் ஏற் பட்டு காலமெ ல்லாம் உழைப்பு மட்டுமின்றி நடைப்பிணமாய் கிடக்கும் ஒரு நிலையேற்பட்டிருக்கவே கூடாது.

இவ்வாறானதொரு துரதிஷ்டமான சம்பவம் இடம்பெற்ற இவரது வீட்டில் சுமார் 15 லட்சம் பெறுமதியான தட்டு, முட்டுச் சாமான்கள் கொள்ளையிடப் பட்டு இரும்புக் கடையொன்றில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாக மரியசீசின் மனைவி புத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் புகார் செய் துள்ளார். இது பனையால் விழுந் தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்கிறது.

இங்கிரிய மூர்த்தி

படங்கள்

இங்கிரிய தினகரன் நிருபர்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.