வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 

தலவாக்கலை பெயர்வெல் தோட்ட லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயத்தில்

தலவாக்கலை பெயர்வெல் தோட்ட லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயத்தில்

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அரசாங்கத்தின் உதவியுடன் மலையகத்தில் அன்று தொட்டு இன்று வரை பல அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அதன் பின்னரும் மண் சரிவு அபாயம் நிலவும் பகுதிகளுக்கு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட அதிகாரிகளின் சென்று நிலைமைகளை ஆராய்வதில் அக்கறை செலுத்துவதில்லை. அனர்த்தங்கள் ஏற்பட்ட வேளைகளில் மட்டும் அது பற்றி பேசப்படுவதும் அதன் பின்னர் எதுவித செயற்பாட்டையும் காண முடிவதில்லை.

பெயர்வெல் தோட்டத்தின் 2ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 பேர் தினமும் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் லயன் குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் உட்பட பல உயர் அதிகாரிகளுக்கும் பல தடவை தெரிவித்த போதிலும் இதுவரை இம்மக்களின் பாதுகாப்பு கருதி எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பெயர்வெல் தோட்ட முகாமையாளர் இவர்களின் நிலை தொடர்பில் அலட்சிய போக்கை கடைபிடிப்பதோடு அவர்களின் வேண்டுகோள்களையும் உதாசீனப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது இப்பகுதியில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் இம்மக்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகவுள்ளது.

எனவே பாதிப்பு ஏற்பட்ட பின்னர் நிவாரணங்கள் வழங்குவதை விட பெயர்வெல் தோட்ட 2 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் வாழும் 20 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.