வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 

தோட்டப்பகுதிகளில் நடமாடும் நூலக சேவை பெரும் நன்மதிப்பு பெற்று வருகிறத

தோட்டப்பகுதிகளில் நடமாடும் நூலக சேவை பெரும் நன்மதிப்பு பெற்று வருகிறது

மனித அபிவிருத்தின் தாபன தலைவர் பி.பி. சிவப்பிரகாசம்

மலையக தோட்ட பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும், உலக அறிவை பெற்றுக்கொள்வதற்கும், தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் நூல் நிலையங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. ஒரு சில தோட்டங்களை தவிர ஏனைய தோட்டங்களில் நூல் நிலையங்களே இல்லை.

இன்றைய சிறுவர்களின் அறிவை விருத்தி செய்துகொள்வதற்கு வாசிப்பு மிக முக்கியமாகும். வாசிப்பே மனிதனை பூரணப்படுத்தும் என அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே மனித அபிவிருத்தி தாபனம் பிள்ளைகளின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்த தோட்டப் பகுதிகளில் நடமாடும் நூலகச் சேவையை ஆரம்பித்து வருகின்றது. தோட்டப்பகுதிகளில் நூலகக்கட்டிடங்கள் மற்றும் நூல்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இல்லாமையாலேயே நடமாடும் நூலக சேவையை நடாத்தி வருகின்றோம்.

இது சிறுவர்களிடேயேயும் மக்களிடையேயும் பெரும் நன்மதிப்பு பெற்று வருவதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கண்டி, கலஹா கித்துல்முள்ள தோட்டத்தில் நடமாடும் நூலக சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று பிள்ளைகள் புத்தகங்களை வாசிப்பதைவிட தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர். அதனால் வாசிப்புத்திறன் குறைந்து செல்கின்றது. அதேவேளை அறிவை தேடிப் பெற்றுகொள்ளும் ஆற்றலும் குறைந்து வருகின்றது. எதிர்கால சவால்களுக்கும், கல்வியில் காணப்படுகின்ற போட்டிகளுக்கும் முகங்கொடுகின்ற இயலுமை என்பன குறைந்து செல்கின்றன. இதனால் மலையக சமூகம் ஏனைய சமூகங்களுடன் ஓப்பிடும்போது ஒரு பின்தள்ளப்பட்ட சமூகமாக காணப்படுகின்றது. அதேவேளை பெற்றோருக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன. அதேநேரம் நகரங்களிலே காணப்படுகின்ற நூலகங்களை தேடிச்சென்று அறிவை விருத்தி செய்துக்கொள்ளும் வாய்ப்புகளும் மலையக மாணவர்களுக்கு குறைவாகவே காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நூலகத்தை அமைத்தல் அவற்றை பயன்ப்படுத்ததுதல்,அவற்றை விருத்தி செய்தல் போன்ற கலாசாரம் மலையக மக்களிடையே பெரும்பாலும் விருத்தியடையவில்லை.

எனவேதான் மனித அபிவிருத்தி தாபனம் நடமாடும் நூலகசேவையை தோட்டங்கள் தோறும் அபிவிருத்தி செய்து வருகின்றது. இதன் மூலம் தோட்டங்களிலுள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தை வாசிப்பதன் மூலம் பிரயோசனம் அடையலாம். இத்திட்டத்தை கித்துல்முள்ள போன்ற தோட்டங்களில் செயற்படுத்துவதற்கு இத்தோட்டத்தின் கோயில் பிரதம குருக்கள் நவநீதப்பிள்ளை சர்மா முழு பங்களிப்பையும் வழங்கி வருகின்றார். அதாவது சயமப்பணி என்பது சமூக பணி என்ற அடிப்படையில் இத்தோட்டத்தின் அறிவு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்நடமாடும் நூலகச்சேவையை ஆரம்பிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார். எனவே இத்தோட்டத்தில் அல்லது அருகிலுள்ள தோட்ட சிறுவர்கள், இளைஞர் யுவதிகள், பெரியவர்கள் நூல்களை பெற்று வாசித்து பூரணத்துவம் அடையவேண்டும். குறிப்பாக சிறுமிகளும், பெண்களும் வாசிப்பது மிக முக்கியமாகும்.

தோட்டதுறையில் மற்றும் வேறுத்துறைகளில் தொழில் செய்யும் பெண்களுக்கு வாசிப்பதற்கான நேரம் மிக குறைவாகவே கிடைக்கின்றது. எனினும் அவர்கள் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வாசித்து, அறிவை விருத்தி செய்துகொள்ள தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மனித அபிருத்தி தாபனம் மலையக மக்களின் கல்வி மற்றும் அறிவுசார் விருத்திக்கும், விழிப்புணர்வைப் பெறுவதற்கும், மனித உரிமையை நிலைநிறுத்திகொள்ளவும், அபிவிருத்தியை செயற்படுத்துவதற்கும் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்ற ஒரு மக்கள் இயக்கமாகும். இந்நிறுவனம் மக்களுட்னிருந்து மக்களுக்காக செயற்படும் ஒரு நிறுவனமாகத் திகழும் என அவர் மேலும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.