வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
நிஜங்களின் முனகல் வலியாய் மனவெளியின் பிரதி

நிஜங்களின் முனகல் வலியாய் மனவெளியின் பிரதி

எந்தவொரு படைப்பாளியும் சமூகத்திலிருந்துதான் உருவாகின்றான், உருவாக்கப்படுகின்றான். அதனால்தான் ஒவ்வொரு படைப்பாளியினதும் படைப்பில் சமூகப் பின்புலம் தென்படுகின்றது. படைப்பு ஒன்றில் சமூகப்பிரதிபலிப்பு தென்படும் போதுதான் அப்படைப்பு கற்பனைவாதத்திலிருந்து யதார்த்தவாதத்திற்குள் நுழைகின்றது. அதாவது, படைப்பாளியின் மனவெளிப்பிரதி சமூகப்பிரதியாக அமைகின்றது. அந்த வகையில், இக்கவிதை நூலின் படைப்பாளி நாச்சியாதீவு பர்வீன் தனது மனநிலையில் நின்று தான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது.

பொதுவாக, ஈழத்து இலக்கியக் கவிதை மரபிலே நவீன கவிதை என்பது கவிதையின் உருவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுமுறை என்பவற்றில் எளிமையையும் பொதுமையையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய நவீன கவிதையின் ஊற்றுக் கண்ணை தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் 'தத்தை விடு தூது' என்ற கவிதை மூலம் கண்டுகொள்ளலாம். பெண்கள் நிலை, பொருந்தாமணம் என்று பெண்கள் சமூகத்தின் விடுதலை பற்றிச் சிந்தித்துள்ளார். நவீன கவிதையின் பண்புகளில் ஒன்றுதான் படைப்பாளி தன்னிலைமயப்பட்டு நிற்காமல் சமூகச்சிந்தனைகளின் பின்புலத்திலே நின்று தான்வாழும் சமூகத்தினைப் படைப்புகளினூடாகப் பிரதிபலிக்கவேண்டும். அப்போது படைப்பாளியின் அகவெளி அகலமாகின்றது.

ஒரு படைப்பாளி சுதந்திரமாகத் தான் அனுபவித்தவற்றை எழுத்தில் வெளிப்படுத்தும் போதுதான் அது மனவெளியின் பிரதியாகின்றது. பர்வீனின் இக்கவிதைத் தொகுதியின் தலைப்புத்தான் 'மனவெளியின் பிரதி'. இத்தலைப்பே கவிதையை வாசிப்பவர்களுக்கு, மனவெளியின் பிரதி என்றால் என்ன? பர்வீனின் மனவெளிப்பாட்டின் பிரதிபலிப்பு என்ன? அவர் என்ன சொல்லப்போகின்றார்? என்ற பல கேள்விகளை எம்முள் எழுப்புகின்றது. 'சிரட்டையும் மண்ணும்' என்ற கவிதைத் தொகுப்புடன் 1990 இற்குப் பின்னர் ஈழத்துத் தமிழ்க்கவிதையுலகிற்குள் பிரவேசித்த நாச்சியாதீவு பர்வீன் சமூகத்தின் யதார்த்த நிலையைத் தன் மனவெளியினூடாகத் திறந்து காட்டுகின்றார்.

பர்வீனின் 'மனவெளியின் பிரதி' என்ற இக்கவிதைத் தொகுதியிலுள்ள அவரது கவிதைகள் மூலம் தனது மனவெளியைத் திறக்கும் போது ஏற்படும் உள்ளக்குமுறலினால் வழிந்தோடும் கண்ணீரைத் தான் பிரதியாக்குகின்றார்.

நினைத்து நினைத்து ஏங்கித் தவிக்கும் உணர்வு, யாருக்குச் சொல்வேன் என்ற தவிப்பும் தேடலும் கண்ணீராக வெளிப்பட்டு எழுத்துருப் பெறுகின்றது. அதுதான் பர்வினின் கவிதையாகின்றது. உள்ளக்குமுறலின் எழுத்து வரிவடிவம் பெற்று எம்மை வாசிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றது. மனவெளியைத் திறந்து... என்ற முன்னுரையில் பர்வீன், 'நிஜங்களின் வலி பற்றிய என் சிந்தனைவாசல் எப்போதும் திறந்தே காணப்படுகின்றது' என்று கூறுகின்றார். இதிலிருந்து இப்படைப்பாளி யதார்த்தமான சிந்தனைப்போக்குடையவர். இவரது கவிதைகளும் யதார்த்தரீதியானவை என்பதைப் புலப்படுத்துகின்றது.

சமூக அவலங்களைக் கவிதையாக்கவேண்டும் என்ற உணர்வுகளின் அடிப்படையில் இவர் முயன்றுள்ளார். ஆனால் அதற்கு ஒரு யதார்த்தமான வலியும் இருக்கும் போது, அனுபவிக்கும் போது அது உண்மையான கவிதையாகின்றது. எனது சமூகப் பிரச்சினைகளை நான் கவிதை வடிவில் எடுத்துக்கூறப் போகின்றேன் என்று கவிதை எழுததத் தொடங்கினால் அது கவிதையாகிவிடுமா? கவிதைக்குரிய அம்சங்களுடன் அந்த உணர்வும் படைப்பாளியின் உள்ளத்தில் இயல்பாகவே எழவேண்டும். அப்போதுதான் வலியும் சேர்ந்து கவிதையுடன் நீர்வீழ்ச்சியில் நீரும் நுரையும் போல பிரவாகிக்கின்றது. இங்கு இன்னொரு விடயம் என்னவெனில், கவிஞனைப் பாதித்த கவிதைகளும், கவிஞர்களும், அவர்களின் வாழ்க்கை முறையும்கூட இன்னொரு எழுத்தாளனைப் பாதிப்பது வழமையாது.

அந்த வழமைக்குப் பர்வீனும் விதிவிலக்கானவரல்லர். ஈழத்து இலக்கியவாதிகளுள் குறிப்பிட்டுப் பேசக்கூடியவர்களில் ஒருவர்தான் எம்.எச்.எம் ஷம்ஸ். முற்போக்குச் சிந்தனை கொண்ட ஷம்ஸால் செம்மமையாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கியவர்களில் ஒருவர்தான் இந்த நூலின் ஆசிரியர். ஷம்ஸின்பாதையில் பர்வீன் உருவாக்கப்பட்டிருந்தாலும் சில சில காலகட்டங்களில் அவர் அந்தப்பாதையிலிருந்து தள்ளாடியும் நடந்துள்ளார். அது தவறில்லை.

ஓர் குறிப்பிட்ட படைப்பாளியினால் ஏதோ ஒரு விதத்தில் கவரப்பட்டிருந்தாலும் பின் காலப்போக்கில் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கெனத் தனித்துவமான பாணியில் நின்று படைப்புக்களைத் தடம் பதிப்பது கால் ஊன்றுவது அவர்களுடைய பண்பாகும்.

ஈழத்து இலக்கிய ஆய்வாளர்கள் பலரும் அறிந்தது போன்று எண்பதுகள் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாகக் கவிதை வளர்ச்சியில் மிகமுக்கியமானதொரு காலப்பகுதியாகின்றது. ஈழத்துக் கவிதையில் எதிர்ப்புக்குரல்கள் என்று நோக்கும் போது அத்தகைய முக்கியத்துவம் முதன்மைபெற்றுக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அரசியல், இன ஒடுக்குமுறை, பெண்கள் சார்ந்த எதிர்ப்புக்குரல்கள் இவ்வாறு ஒலித்தன.

இந்தவகையில், இக்காலகட்டப்பகுதிக்குள் நுழைந்த பர்வீனும் சமூகத்தினுடைய போலி வேசத்தினைக் களைந்தெறிவதற்குக் பகீரதப்பிரயத்தனம் செய்தார், செய்துகொண்டிருக்கின்றார் என்பது அவருடைய கவிதைகள் மூலம் தெளிவாகின்றது. ஆனால், அவர்களை உரத்துக் கூச்சலிட்டுக் கலைப்பதற்குப் பர்வீனின் பேனாவின் முனைக்கு வலிமையில்லை போலும். வலிமையைவிட மென்மை வலிமையாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் இவர் நன்கு அறிந்திருக்கின்றாரோ என்னவோ அவர் அமைதியானதொரு சமூக மாற்றத்தினை, புரட்சியைத் தான் எதிர்பார்க்கின்றார். இவரது எழுத்துகளில் சமூக எதிர்ப்பு மாற்றம் பற்றிய அதிர்வு, ஆவேசத்தொனி இல்லை, விரைவுத்தன்மையில்லை. சமூகப்பிரச்சினை தொடர்பான சொல்லாடல்களைக் கையாளாது சத்தமற்ற நிலையில் பிரச்சினைகளைக் காட்டுதல் அவருடைய கவித்துவப் பண்பாகும். தன்னிலையுடனும் இயற்கையுடனும் இணைத்து குறியீட்டு முறைமையில் பல கவிதைகள் எழுதியுள்ளார்.

இருப்பினும் பர்வினின் காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டுள்ள சமூகத்தின் சில பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லத்தவறிவிட்டார் போலத் தென்படுகின்றது. பெண்கள் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் இவரது கவிதையில் இடம்பெறவில்லை என்பது அவதானிக்கக்கூடியதொன்று.

இதைவிட்டுவிலகிச் சற்றுநின்று பார்ப்போமானால், இக்கவிதைத் தொகுதியில் 39 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகளை சமூகம்சார்பான கவிதைகளை என்றும் தன்னிலைமயப்பட்ட கவிதைகள் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். படைப்பாளி யதார்த்த வாதத்திற்கும் கற்பனாவாதத்திற்குமிடையில் வேறுபாட்டை காண்கின்றது. இவற்றுள் சமூகத்தின் கொடூரச் செயல்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும் கவிதைகள் தான் அதிகமாக உள்ளன. இவருடைய 'நாளை' என்ற கவிதை எதுவும் நிச்சயமற்றது. நேற்று என்பது வரலாறு, இன்று என்பது வழங்கப்பட்ட பரிசு, நாளை என்பது புதிர். 'நாளை' என்ற வார்த்தை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சந்தேகம், சந்தோஷம், கவலை, நம்பிக்கை, கேள்விக்குறி என்ற எல்லாவற்றையும் கொண்டுள்ளது. 'எவரும் வாசிக்காத புதிய பக்கம், நாளைக்கே தெரியாது நாளைக்கு என்ன நடக்குமென்று...' என்று அந்தக் கவிதை முடிவடைகின்றது. ஏழை மக்களின் எதிர்பார்ப்பு விடியலைத்தேடிய நாளை... ஆகின்றது. இன்னொரு கவிதை நிலவு இராச்சியம். நிலவு குளிர்மையானது, தண்மையானது, மென்மை மாதிரியான ஒரு காட்சிப்பிம்பத்தையும் எமக்குத் தருகின்றது. அது தாரகை நடுவண் தண்மதியாக நின்று ஆட்சி நடத்துகின்றது. ஆன்மீகத்தலைவர்களின் அராஜகத்தன்மையை நிலவைக் குறியீடாக வைத்து வெளிப்படுத்துகின்றார். பர்வின் தன்னிலைமயப்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார் என்பது அவரது மகள் மரியத்தின் பிறப்புப் பற்றி ஒரு தந்தை என்ற வகையில் அவரது உள்ளத்தின் பிரதிபலிப்புத் தெளிவாகின்றது. மரியம் என்ற என் மகளுக்கு, மகளின் டயறி, மழலை மொழி ஆகிய கவிதைகள் ஒரு தந்தையின் அகவெளியைத் திறக்கின்றது. காதல் பற்றிய சில கவிதைகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. நீ பற்றிய நினைவுகள், நீ இல்லாத சாயங்காலம் என்ற கவிதைகளில் காதல் வலி அனுபவங்களும் பேசப்படுகின்றன.

'பட்டாம் பூச்சியின் பறத்தல் பற்றி' என்ற கவிதையை உடனே படிக்கும் போது பெண்விடுதலை பற்றி ஏதோ பேசுகின்றார் போல முதலில் தென்பட்டாலும் அது உண்மையில் எந்தவிதமான குற்றமும் செய்யாமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் சிறைக்கைதிகள் பற்றியது என்பது அவருடைய குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றது. 'சித்திரங்கள் சுமந்த என் சிறகினை இரசிப்பதற்கும், என் பறத்தலின் மீதான உத்தரவாதத்தை நிரூபிப்பதற்கும் காலத்திடமே கையளித்துவிட்டேன் எனதான மீதமுள்ள நாட்களை...' என்று அக்கவிதை முடிவடைகின்றது.

பர்வீன் வாழ்க்கை பற்றிய பல்வேறு கோணங்களைக் கண்டு தரிசித்துள்ளார். வாழ்க்கை பற்றிய சோகப்பாடல், வாழ்க்கைக்குறிப்புக்கள், நிஜங்களின் வலி, ஒரு மயானவெளி விலாசம் இல்லாத வாழ்க்கை ஆகிய கவிதைகள் அத்தகையன. மேலும், இன ஒடுக்குமுறை, யுத்தம் பற்றிய கவிதைகளையும் எழுதியுள்ளார். மழை கொறித்த பூமி என்ற அவரது கவிதை யுத்தத்தின் அகோரத்தையும் முடிவையும் காட்டுகின்றது.

இவ்வாறு பர்வீன் சமூகத்தின் பிரச்சினைகளை தன்னிலைமயப்பட்டும் சமூகம் சார்ந்தும் யதார்த்தத்தின் வலியில் நின்று கவிதை எழுதியுள்ளார். பர்வீனின் மனவெளியில் நிஜங்களின் முனகல் வலியைத்தான் தரிசிக்க முடிகின்றது. ஈழத்து நவீன கவிதைத்துறையின் பாதையில் பர்வீனின் காலடி பதிக்கப்பட்டுவிட்டது. அவர் தொடர்ந்து களைக்காமல் சலிக்காமல் நடந்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான் நம் அனைவரினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.