வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
புனர்வாழ்வில் ஒரு வெற்றிப் பயணம் வெளிச்சத்தில் ஒளியைத் தேடும் ராதிகா!

புனர்வாழ்வில் ஒரு வெற்றிப் பயணம் வெளிச்சத்தில் ஒளியைத் தேடும் ராதிகா!

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது மனித தர்மம். ஒருவருக்கு ஆபத்து வரும்போது இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம் எதனையும்பாரது ஓடிச்சென்று உதவுவான் மனிதன். இதுவே மனித தர்மம். அதேபோல ஒருவருடன் நட்புகொள்வதற்கும் அன்பு பாராட்டுவதற்கும் மொழி ஒரு தடையே இல்லை.

தமிழினிக்குப் பின்னர் மற்றுமொரு படைப்பாளி வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவர்தான் ராதிகா பத்மநாதன். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளி. அவர் எழுதிய “என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் எனும் இருளில்” கன்னிப் படைப்பு. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் ஒபிஏ கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்தப் புத்தகம் கவிதை, விவரணக் கதைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தப் புத்தகம் யுத்தத்தின் போதும் அதன்பின்னருமான என்னுடைய உணர்வுகளினதும் சிந்தனைகளினதும் வடுக்களினதும் உண்மையான வெளிப்பாடாகும். யுத்த காலத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்களை பதிவு செய்வதற்கான ஒரு வே​ைலத்திட்டமாகும், என்கிறார் ராதிகா பத்மநாதன்.

ஒரு சிங்கள வார்த்தை கூட பேசத்தெரியாத ராதிகா இன்று பலர் முன் சிங்களத்தில் சரளமாக உரையாற்றுகிறார். பலர் முன் சிங்களத்தில் உரையாற்ற நான் பெற்றுக்கொண்ட தைரியத்தையிட்டு நான் ஆச்சரியமடைகிறேன். சில வருடங்களுக்கு முன்னர் “கவுத” அதாவது நீங்கள் யார் என்று சிங்களத்தில் கேட்டாலும் அதற்கு பதிலளிக்கத் தெரியாது. நான் கொழும்பு மருத்துவமனையில் இருந்தபோது என்னுடன் பேச யாரும் இருக்கவில்லை. காரணம் மொழி தெரியாது. இதனால் நான் சோர்வுற்றிருந்தேன். அப்போதுதான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை எழுதுவது எனக்கு நிம்மதியையும் மனத்துணிச்சலையும் தந்தது. ஆகவே, நான் தொடர்ந்து எழுதினேன். எழுத்துக்கள் என்னைச் சாந்தப்படுத்தியது. இப்புத்தகம் என்னை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவந்தது. எவ்வாறு நல்லதொரு வாழ்க்கையை வாழ்வது என்று கற்றுத்தந்தது என்கிறார் ராதிகா பத்மநாதன்.

எல்.ரி.ரி.ஈ மகளிர் அணியில் ஒரு போராளியாக இருந்த ராதிகாவின் கால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கண்ணிவெடியில் சிக்குண்டு கால் மிக மோசமாக காயமடைந்ததுடன் யுத்தத்தின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராதிகா உள்ளிட்ட 100 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட காலினை சீர்செய்ய பல சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றதோடு கிட்டத்தட்ட ஒரு வருடமளவில் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். டொக்டர்களின் கனிவான உபசரிப்பு மற்றும் வேலையாட்களின் நெருக்குதல்களுக்கு மத்தியில் காலத்தை கடத்திக்கொண்டிருந்தேன் என்கிறார் ராதிகா பத்மநாதன்.

ராதிகாவின் மாற்றத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் அதேவேளை ஆச்சரியமடைகிறேன். ஆரம்பத்தில் ஒரு சிங்கள வார்த்தை கூடபேசத்தெரியாத ராதிகா இன்று புத்தகம் எழுதியுள்ளார், சிங்களத்தில் சரளமாக உரையாடுகிறார் என்கிறார் ராதிகாவுக்கு சிகிச்சையளித்த டொக்டர் விமலா ரவீந்திரன்.

ராதிகாவின் புத்தகம் உண்மையிலேயே நேர்மையானது. அவர் வளர்ந்த சூழ்நிலையை இவரது புத்தகம் தத்ரூபமாக சொல்லிக்காட்டுகிறது. இராணுவத்தின் கரங்களில் அழிவுக் கதைகள், எல்.ரி.ரி.ஈ போராளியாக இருக்கின்ற ஆசை, கடைசி யுத்தத்தின் பின்னான பெரும் ஏமாற்றம் அதன்பின்னர் ஏற்பட்ட மறுமலர்ச்சி, புதிய வாழ்க்கை ஆரம்பம் என்பனபற்றி புத்தகத்தில் குறிப்பிடுகிறார் என டொக்டர் விமலா உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

ராதிகா பத்மநாதன்

“கேணல்” தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்பிரமணியம் சிவகாமிக்குப் பின்னர் புத்தகம் எழுதிய இரண்டாவது எல்.ரி.ரி.ஈ. போராளி.

இந்தப் புத்தகத்தில் தமிழ் மற்றும் சிங்கள தரப்பில் உள்ள சிலரை சாடுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் என புத்தகத்தை மொழிபெயர்த்த எஸ். சிவகுருநாதன் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் அடிக்கடி தமிழ் சிங்கள சமூகங்கள் அவர்களது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரம்புக்கு வெளியே செல்வதை விரும்புவதில்லை., சமரசம் மற்றும் புனர்வாழ்வு போன்றவற்றுக்கான வெளிப்படையானதும் துடிப்பான உரையாடலின் ஆரம்பமே இந்தப் புத்தகமாகும்.

ஒரு சிங்கள தந்தை

கடந்த காலங்களில் ராதிகாவில் ஏற்பட்ட மாற்றத்தினை கண்டு ராதிகா பத்மநாதனின் வளர்ப்புத் தந்தை உபாலி சந்திரசூரிய பெருமிதமடைகிறார். புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 எல்.ரி.ரி.ஈ போராளிகளைவிட ராதிகா சாதித்துள்ளார் என்கிறார் அவர். தனது மகளை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோதே சந்திரசூரிய முதல் தடவையாக ராதிகாவை சத்திக்கிறார். ஒருவரது மொழியை மற்றவர் அறியாமலேயே இரண்டு பிள்ளைகளுக்குமிடையில் நட்பு மலர்கிறது. மருத்துவமனையிலிருந்து வெளியான பின்னர் கிளிநொச்சியிலுள்ள தனது சகோதரியை பார்க்கச் செல்கிறார் ராதிகா. அங்கு சகோதரி ராதிகாவை பராமரிக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. அப்போது ராதிகா கொழும்பில் வசிக்கும் சந்திரசூரியவிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்பு விடுக்கின்றார். அவரது வீட்டுக்கு அழைத்து அன்று தொடக்கம் இன்றுவரை ராதிகாவை தனது பிள்ளையைப்போல பராமரித்து வருகிறார்.

சந்திரசூரிய தனது சொந்த பணத்திலிருந்து ராதிகாவின் “என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் எனும் இருளில்” நூலின் 3000 பிரதிகளை அச்சிட 300,000 ரூபாவினை வழங்கியுள்ளார். சிலர் பெற்ற பிள்ளைகளையே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்ற இந்தக் காலத்தில், பெறா மகள் அதுவும் தங்களுடன் காலாகாலமாக போராடிய குழுவில் இருந்து வந்த யுவதியை தத்தெடுத்து அவரது வளமான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற சந்திரசூரிய உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய சிறந்த மானுடப் பிறவியாவார் என்று குறிப்பிடுவது சாலச் சிறந்ததே.

சுயாதீன காப்புறுதி ஆலோசகரான சந்திரசூரிய பத்மநாதனுக்கு உதவியதால் பல விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளானதாக குறிப்பிடுகின்றார்.

எனது மகள், ராதிகாவை வீட்டுக்கு அழைத்து வந்த போது எனக்கு ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டியிருந்தது. இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் என்னை விசாரணை செய்துகொண்டிருந்தனர். பெற்றோர் இல்லாத ஒரு பெண் பிள்ளையை பராமரிப்பதனால் சமூக நிந்தைக்கு உட்படவேண்டிவருமோ என அஞ்சிக்கொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது மனைவி இறந்துவிட்டார். இச்சந்தர்ப்பத்தில் தந்தை மாத்திரம் ஒரு பிள்ளையை தத்தெடுக்க சமூகம் விரும்பாது. அவ்வாறான சூழ்நிலையில்தான் நான் ராதிகாவை தத்தெடுத்தேன் என்கிறார் சந்திரசூரிய.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.