புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
தீர்வு வருவதை விரும்பாதோரே கூட்டமைப்பை சிதைக்க முயற்சி

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்

தீர்வு வருவதை விரும்பாதோரே கூட்டமைப்பை சிதைக்க முயற்சி

பிரிவினையை ஏற்படுத்திவரும் குழுவினரே சமரச முயற்சியிலும் ஈடுபடும் வேடிக்கை 

புத்திஜீவிகள் குற்றச்சாட்டு  

 சில உள்ளூர் மற்றும் சர்வதேசத் தரப்புக்களின் தேவைகளுக்காக தமிழ் மக்களின் பலமான அரசியல் சக்தியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பலவும் முயற்சித்து வருவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இந்தப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள், உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே நற்பெயரைப் பெறுவதற்காக, தமிழரதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்கள் போலப் பாசாங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்பட புலம் பெயர் தமிழர் அமைப்புகளே பிரதான காரணமாக இருந்து வருவதாகக் குறிப்பிடும் தமிழ்ப் புத்திஜீவிகள், இதே அமைப்புகள் கூட்டமைப்பிற்குள் தம்மால் ஏற்படுத்தப்பட்டுவரும் பிரிவினைக்குச் சமரசம் பேசவும் தலைப்பட்டுள்ளன எனவும் குற்றஞ் சாட்டியுள்ளனர். இது பிள்ளையைக் கிள்ளிவிட்டுப் பின்னர் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு நிலைக்கு பலமான பின்புலங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இதில்  உள்ளுர் மற்றும் சர்வதேச நாடுகள் சிலவற்றின் பங்களிப்பும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சூழ்ச்சி வலைப் பின்னல் உள்ளுர் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தலைவர்கள் சிலரை வைத்தே இயக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பல புலம்பெயர் அமைப்புகள் அக்கறையாக இருந்து வருகின்றன. காரணம் இங்குப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் வெளிநாடுகளில் பெறப்படும் சலுகைகள், வசதி வாய்ப்புகள் இல்லாது போய்விடுவதுடன், அங்கு வதியும் அநேகமானவர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படலாம் என்பது இவர்களது கவலையாகும்.

அதற்காகவே இந்தப் புதிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ள இவ்வேளையில் தமிழ்க் கட்சிகளிடையே குழப்பத்தையும், ஒற்றுமையின்மை நிலையையும் தோற்றுவிக்க இவர்கள் முனைகிறார்கள்.

இவர்களைச் சூழ்ச்சிக்காரர்கள் நன்கு பயன்படுத்துகின்றனர் எனப் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை உள்ளுரில் வாழும் தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதிலும் இந்தப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கவனமாக உள்ளன.

தம்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக கூட்டமைப்பிற்குள் தம்மால் ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைக்கு சமரசம் பேசுவது போன்று நாடகமாடியும் வருகின்றனர் எனவும் புத்திஜீவிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.  

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.