புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
நாம் முன்னேறிச் செல்வதாக இருந்தால் நிச்சயம் மாற்றங்கள் செய்ய வேண்டும்

நாம் முன்னேறிச் செல்வதாக இருந்தால்

நிச்சயம் மாற்றங்கள் செய்ய வேண்டும்

 வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 

நாட்டின் அரசியல் எதிர்காலம் மற்றும் அது தொடர்பிலான அரசாங்கத்தின் நோக்கு எவ்வாறுள்ளது என்பன தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலினை இங்கு தருகின்றோம்.

கேள்வி - தற்போது நாட்டில் என்ன நடக்கின்றது?

பதில் - உண்மையிலேயே நாடு நல்ல திசையினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது அரசாங்கத்தின் ஒரு வருடம் ஜனவரி 8ம் திகதி பூர்த்தியடைகின்றது. இந்தப் புரட்சிக்கு இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. இணக்கப்பாட்டு அரசியல் ஏற்படுத்தப்பட்டு நான்கு மாதங்களே ஆகின்றது. எனினும் இந்தக் குறுகிய காலத்தினுள் நாடு என்ற வகையில் நாட்டில் நிலவிய சர்வாதிகாரப் பயணத்தை முழுவதுமாகத் திசைதிருப்பி இன்று உலகில் மிகச் சிறந்த ஜனநாயக நாடாக எமது நாடு மிளிர்கின்றது. அண்மையில் எமது நாட்டிற்கு வருகை தந்த சமந்தா பவர் என்பவர் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அமைச்சரைவையின் ஒரு உறுப்பினர்.

அவரும் சொன்ன விடயம் என்னவெனில் ஜனாதிபதி ஒபாமா கூட இன்று இலங்கையைப் பற்றி கூறும் போது “குட் நிவ்ஸ் கன்ட்ரி” என்று கூறுகிறாராம். உண்மையிலேயே பாரிய குழப்பங்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் உள்ளாகிக் கொண்டிருக்கும் இன்றைய இந்த யுகத்தில் இலங்கையும், பர்மாவும் மாத்திரமே உலகிற்கு நல்ல கொள்கைகளை வழங்கும் நாடுகளாக இன்று சர்வதேசம் இனம் கண்டிருக்கின்றது.

கேள்வி - சர்வதேசத்தைச் சந்தோசப்படுத்தி வைத்துக் கொண்டாலும் நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் - உண்மையிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்படும் போது அந்த மாற்றங்களின் ஆரம்ப காலப்பகுதியில் அனைத்து தரப்பினரையும் சந்தோசப்படுத்த முடியாது. ஆரம்ப காலத்தில் மாத்திரமல்ல, எந்த ஓர் அரசாங்கத்தாலும் அனைத்து மக்களையும் சந்தோசப்படுத்திவிட முடியாது. என்றாலும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக முன்னர் இருந்த நிலையைவிட தற்போதைய நிலையில் நாட்டின் அதிகமான மக்கள் சந்தேஷமடைவார்கள்.

கேள்வி - அவ்வாறெனில் ஒரு பிரச்சினையும் இல்லை. அப்படித்தானே?

பதில் - பிரச்சினை இருக்கின்றது. குறைபாடுகள் இருக்கின்றன. அவ்வாறான குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டு முன்னேறிச் செல்வதற்கு எமக்கு அவகாசம் இருக்கின்றது.

கேள்வி - நீங்கள் அடையாளம் கண்டுள்ள அந்த குறைபாடுகள் என்ன?

பதில் - பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. ஒருபுறத்தில் நல்லவைகள் அனைத்தையும் நாம் அறிவோம்தானே. குறைபாடுகள் என்று நான் காண்பது விஷேடமாக மக்களின் புறத்தில் அவர்கள் கூறுகின்றார்கள்... நாங்கள் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள், களவு, வீண்விரயம் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்டவர்களை விஷேடமாக அவ்விடயங்களுக்கு அடித்தாளமிட்டவர்களை நாம் கூறிய பிரகாரம் விரைவாகவே கைது செய்யவில்லை. அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அவ்வாறனவர்களுடன் “டீல்” வைத்துக் கொண்டிருப்பதாக பெரியளவில் கதைக்கப்படுகின்றதுதானே.

கேள்வி - உண்மையிலேயே “டீல்” உள்ளதா?

பதில் - அவ்வாறு “டீல்” எதுவுமில்லை. ஆனால் காரணங்கள் இருக்கின்றன. அடுத்ததாக இந்த வரவு செலவுத் திட்டத்துடன் முன்வைக்கப்பட்ட சில சில விடயங்கள் மக்களுக்கு திரிபு படுத்தி காட்டப்பட்டதன் காரணமாக அவ்வாறான விடயங்கள் தொடர்பில் சில பிரச்சினையான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கேள்வி - நாட்டின் அனைத்து தரப்பினரும் எதிர்க்கக் கூடியதான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளமை கின்னஸ் சாதனை என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதே?

பதில் - யார் அவ்வாறு கூறியது? யார் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பது? ராஜபக் ஷ காலத்தில் இந்நாட்டின் வளங்களைக் கொள்ளையிட்டு தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருந்த அந்த ராஜபக் ஷ கூட்டம் மாத்திரமே. பாராளுமன்றத்தில் நாம் சாதனை ஒன்றை நிகழ்த்தி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கின்றோம்.

கேள்வி - வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்த பின்னர் அதிகளவிலான திருத்தங்களைச் செய்த ஒரு வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றதே?

பதில் - அதுதான் சொல்றது ஜனநாயக அரசாங்கத்தினுள் வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு கல்லால் குத்திய ஒன்றல்லவே. அரசர் மக்களுக்கு விடுக்கும் உத்தரவல்ல வரவு செலவுத் திட்டம் என்பது. அந்த வாக்கியத்திற்கு ஏற்பவே நாம் அதனை முன்வைத்திருக்கின்றோம்.

கேள்வி - எனினும் வரவு செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தமையால்தானே திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியேற்பட்டது?

பதில் - ஒரு மாத காலத்திற்கு விவாதங்கள் ஏன் இடம்பெறுகின்றது? வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஒரு மாதம் விவாதங்களை நடாத்துவது வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகத்தான். அவ்வாறில்லாவிட்டால் ராஜபக் ஷக்கள் செய்ததைப் போன்று வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து தத்தமது ஆட்களுக்கு சலுகைகளை வழங்கியிருக்கலாம். லம்போகினி கார்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கியிருக்கலாம். மென்மேலும் அதிசொகுசு வேலைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கியிருக்கலாம். பருப்புக்கும் ஏனையவற்றுக்கும் விதிக்கப்பட்ட வரிகளை அதிகரித்திருக்கலாம்.

அவர்களின் காலத்தில் இவ்வாறுதானே அவர்கள் செய்தார்கள். நாம் அவைகளைச் சுட்டிக் காட்டிய போதும் அவர்கள் அவற்றை மாற்றிக் கொள்ளவில்லை. எனினும் நாம் நவீன ஜனநாயகவாதிகள். உண்மையிலேயே நல்ல திருத்தங்கள் வந்தால், பாராளுமன்ற கலந்துரையாடல்களின் போது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை என எமக்கும் தெரிந்தால் நாம் அவற்றை ஏற்றுக் கொள்வோம்.

கேள்வி - மருந்துகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் போது தரகப் பணம் பெறப்படுகின்றது என்பதற்காக நோயாளிகளுக்கு மருந்து கொடுக்காமல் அதற்கு பதிலாக பணத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்ற தர்க்கத்தை கொண்டு வருகின்றார்களே?

பதில் - அது தர்க்கம்தான். இது விரிவான விடயம். இந்த கொழும்பு 7இல் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படுகின்றது. ஏனைய மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. கொழும்பு 7இல் வசிக்கும் மாணவர்கள் தமக்குக் கிடைக்கும் சீருடையினைக் கொண்டு போய் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களுக்கு வழங்கிவிடுகின்றார்கள்.

இவை உண்மையிலேயே கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாம் எப்போதும் நாட்டில் வாழும் வறிய மக்களையே பார்க்க வேண்டும். இதுதான் எந்த ஒரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். வறிய மக்களுக்கு விஷேடமாக சமூகப் பாதுகாப்பு வேலி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதே எமது பொறுப்பாகும். எனினும் ஏழை எளிய மக்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறிக் கொண்டு பணக்காரர்களுக்காகவும் அரசாங்கம் பணத்தினைச் செலவு செய்யும் நிலையினை நாம் நிறுத்த வேண்டும்.

கேள்வி - கொண்டு வரப்படவுள்ளது நலன் நோக்கிலான நீக்குதல் நடவடிக்கையா?

பதில் - இல்லை. நாடு என்ற ரீதியில் நாம் முன்னேறிச் செல்வதாக இருந்தால் மாற்றங்கள் செய்ய வேண்டும். பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமானால் எமக்கும் நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் தேவை. ஏனெனில் இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடு. இதனால் எமது நாட்டுக்கு நன்கொடைகள் கிடைப்பதில்லை. அப்படியெனில் எம்மைப் போன்ற நாட்டின் பொருளாதாரம் உடனடியாக முன்னேற வேண்டுமெனில் எமது நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். உலகில் செல்ல வேண்டிய ஏராளமான நாடுகள் இருக்கின்ற போதும் ஏன் அவர்கள் எமது நாட்டுக்கு வர வேண்டும்? ஏனெனில் ஏனைய நாடுகளை விட எமது நாட்டில் சுட்டிக் காட்டக் கூடிய சில சில சலுகைகளை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கேள்வி - ஆனால் பெக்கர் வந்த போது இந்தக் கதைகளைச் சொல்லவில்லையே?

பதில் - பெக்கர் வந்த போது நாம் எதிர்த்தது அவருக்கு இங்கு சலுகைகள் வழங்குவதற்காக அல்ல. நாம் அவரின் கெசினோ வர்த்தகத்தினையே எதிர்த்தோம். இப்போதும் நாம் கூறுகின்றோம். இங்கு கெசினோ விளையாட்டுக்கு இடமளிக்க மாட்டோம்.

கேள்வி - நீங்கள் அவ்வாறு கூறினாலும் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் கெசினோவுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதே?

பதில் - அது தற்போது உள்ளவைக்கே. நாம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டது இந்நாட்டில் புதிய கொசினோ நிலையங்களை ஆரம்பிக்க இடமளிக்கப் போவதில்லை என்று.

கேள்வி - அந்த முடிவில்தான் இன்றும் இருக்கின்றீர்களா?

பதில் - ஆம். அந்த முடிவில்தான் இப்போதும் இருக்கின்றோம்.

கேள்வி: -வரவு செலவுத் திட்டத்துடன் நாடு யுத்தகளமாக மாறியிருக்கின்றது. நான்கு மாதங்கள் கூட நிறைவேறாத நிலையில் இந்தளவு மக்கள் எதிர்ப்பு ஏன்?

பதில்: - எந்த ஒரு நாட்டிலும் நாட்டை யுத்தகளமாக மாற்றக் கூடியவர்கள் இருப்பார்கள்தானே? பிரதமர் பாராளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தை வழங்கினார். இந்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டால் விஷேடமாக கடந்த காலத்தில் ராஜபக் ஷக்கள் படுகொலைகளைச் செய்த போது, ராஜபக்ஷக்கள் வெள்ளை வேன்களில் ஆட்களைக் கடத்திய போது, ராஜபக்‌ஷக்கள் தண்ணீர் கேட்ட பிள்ளைகளைத் துப்பாக்கியால் சுட்ட போது, மௌனமாக இருந்த இந்த வைத்தியர்கள்தான் இவ்வாறான பிரச்சினையை ஏற்படுத்த முயலுகின்றார்கள்.

இவ்வாறானவர்களையும் இருக்க விடுவோம். நாம் ஜனநாயக ரீதியில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வோம். அவர்கள் இவ்வாறான வேலைகளை நாட்டுக்காகச் செய்யவில்லையே? அவர்கள் ராஜபக்‌ஷ அணியில் உள்ள முக்கியமானவர்கள் என்பதை முழு நாடும் அறியும்.

மறுபக்கத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் இலாபம் பெறுவதற்காக சில சில விடயங்களைச் செய்ய அனுமதிக்கின்றார்கள். அந்தக் காலத்தில் எதனைச் செய்தாலும் மக்கள் விடுதலை முன்னணி பெரிதாகச் சத்தம் போடவில்லை.

இருந்துட்டு இருந்து நல்ல பிள்ளைகளைப் போல சின்னச் சின்ன எதிர்ப்புக்களைக் காட்டினார்கள்தான். எனினும் இன்று அவர்களுக்கு போராட்டங்களைச் செய்ய முடியும். எனினும் யார் எதனைச் சொன்னாலும் எமது இந்த இணக்கப்பாட்டு புதிய அரசாங்கம் முன்னர் இருந்ததை விட மக்களிடம் சென்றிருக்கின்றது என்றே நான் சொல்கின்றேன். இதன் பிரதிபலிப்பை அடுத்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது கண்டு கொள்ள முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.