புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

கவிதை மஞ்சரி

என்னை மீட்க வருவாயா?

அன்பின் உயர்த்துணையே அள்ளியிடாக்கற்பகமே

இன்ப இள ஊற்றே இனிமைதரு பொக்கிஷமே

பொன்னிலவுப் பூங்கனவே பொங்கிவிரும் தண்மதியே

என்னகத்தை எழிலுருவால் ஏற்றிவிட்ட ஏந்தலரே

நட்டநடுக் கடலதனில் நலிதுரும்பாய் ஆகிநிற்கும்

சிட்டுக்குருவியும் நான் சிறகொடிந்து கூண்டுள்

இட்ட அனல் மெழுகதுபோல இதயமுறு வேதனையால்

கொட்டும் விழிநீரால் குறுமடலொன் றெழுதுகிறேன்

வட்டநிலவே வடிவான பொற்சிலையே

கட்டிக்கரும்பே கனியமுதே தேனே

கொட்டும் ஒளியே குயிலே கோலமயிலே கிளியே என

தொட்டு அணைத்தீர் தொடர் கதையைத்தான் படைத்தீர்

விட்டுப்பிரியேன் விருப்பமுள்ள காதலியே

பட்டு இதழ்த்தேனைப் பருகிடத்தா கண்மணியே நினை

மட்டும் நினைப்பின்றி வேறு நினைப்பேதுமில்லை

சுட்டும் விழியுயர்த்திச் சுந்தரியே எனைப்பாராயென

ஆற்றங்கரையதனில் அழகு மலர்ப்பூவனத்தில்

காற்றுக்கலகலக்கக் கருவண்டு இசைபாட

நேற்றுவரை கூடிநம் நெஞ்சறிந்த இன்பமெல்லாம்

காற்றிலெறிப்பட்ட கான் சருகாய்ப்போயினவோ

வேதனைப் பட்டன்னை வெதும்பியெனைச் சாடுகிறாள்

காதலாம் காதலெனக் கழுத்தறுக்கவென் தந்தை

காத்திரக் கூவிக் கத்தியுடன் குதிக்கின்றார்

ஏதாலும் வழி செய்து என்னை ஏற்றிட நீர் வராதுவிடின்

நாளை இது வேளைதனில் நானிருக்க மாட்டேன்

தோளை யொருகாளை இனித் தொட்டிடவு மிடமளியேன்

ஏழையெனை மீட்கவர என்னவரேயியா தென்றால்

வேளை வரவில்லை யெனும் வேதனையில் நான் சாவேன் 


 

புனிதத் திருநாள்

- மனித குலத்தின் குமாரன்

மானிடர் வாழ்வின் வழிகாட்டி

நல்லதைச் சொன்ன நாயகன்

உலகம் போற்றும் பிதாமகன்

அறியாமை நிறைந்த

மக்கள் மனதில்

அறிவொளியூட்டிய

பரலோக ஒளிச்சுடர்

ஒரு கன்னத்தில் அடித்தால்

இன்னொரு கன்னம் காட்டு

அன்புக்கட்டளையிட்ட

தவமகன் இயேசு

கொடுநோய் தீர்த்துவைத்து

அற்புதங்கள் நிகழ்த்திக்காட்டிய

அநியாயம் விலக்கி வைத்த

அருட் பெருந்தந்தை

தீவினை செய்தோரை மன்னித்து

நல்வினை செய்தோரை ஆசிர்வதித்து

தேவன் பாதம் பூஜிக்க

அழைப்பு விடுத்த தேவமைந்தன்

இறைமுடி தரித்து

இறை வேதம் போதித்த

இறைமகன் இயேசு

முள்முடி தரித்து

ஆவி துறந்த கோமகன்

இறை கட்டளை ஏற்று

மனித உருவில்

பூமி தொட்ட

அற்புத நாள்

உலக கிறிஸ்தவ பெருமக்கள்

உவப்புடன் கொண்டாடும்

நத்தார் திருநாள்

நற்செயல் பெருகி

வையகம் செழிப்புற

தேவகுமாரன்

நல்லாசி வழங்கட்டும் 

 


 

எம்மைக் காக்கும்

அழுக்கடை நாற்றம் மூக்கினைத்துளைக்க

அகப்பட்டவுணவை விழுங்கிக்கரைந்து

குழுக்களாயுண்ணத் தனதினத்தாரைக்

கூவியழைக்கும் காக்கையைப் பாரீர்

பருத்த உணவைப் பலபேரொன்றாய்ப்

பற்றுடன் தூக்கி ஒற்றுமை காட்டி

இருப்பிடம் நோக்கி அணியுடன் செல்லும்

எறும்பதனொற்றுமை எமக்கதுவுண்டோ?

பறிப்பதுவொன்றே தறிகெட்ட தொழிலாய்

பண்பதுமின்றி உண்மையைக் கொன்று

நெறியற்ற வாழ்வை நிலைத்திட அலையும்

நீசனாய்ச் செல்வோர் கண்டதுயென்ன

அடுத்தவன் குடியை அடுத்துக் கெடுத்து

அகப்பட்டயின்பம் கொள்முதலதுவாய்

மடுப்பதே தொழிலாய்க் கழிந்தன வாழ்வாய்

மண்ணில் விளைந்த அறுவடைத் தீதாய்

போட்டிப் பொறாமை காட்டிய பெருமை

போக்கிரித் தனத்தால் மனிதம் தொலைந்து

மூட்டிய பகையால் ஒற்றுமை நீங்கி

முயன்றிங்குழைத்ததன் பெறுபேறென்ன

அன்பு பண்பு ஐக்கியம் நேசம்

அவனியிற்திகழ ஆக்கி நற்பணியால்

என்றும் மனிதவுள்ளம் வாழ்வோம்

என்ற இலக்கே எம்மைக் காக்கும் 


 

சுனாமி புகட்டிய பாடம்தான் என்ன?

 உலகை உலுக்கி...

சுடுகாடாக்கிய சோகத்தை

ஒவ்வொருவர் நெஞ்சப்

பதிவேட்டிலும் பதித்து...

முத்திரை குத்தி முகாரி மீட்டிய

துயர் நாள் தான்...

எம்மால் என்றுமே

மறக்க முடியாத

26-12-2004ம் தேதி

ஆண்டு தோறும் அந்நாளில்

சிலர் ஒன்றுகூடி

இறந்தவர்களின் பேரால்

இரு நிமிடமௌனாஞ்சலி

பிரார்த்தனை மௌலீது

நினைவூட்டல் கருத்தரங்கு

இத்தோடுமுற்றுப்பெறும்

இந்த இருண்டயுகத்தின்

இதிகாசப் பல்லவி

ஏன்? எதற்கு யாரால்

இப்படியெல்லாம்

நடைபெறுகிறதென்ற சிந்தனை

மானுடனின் மந்த புத்திக்குள்

மழுங்கடிக்கப்பட்டதால்

மீண்டும்.. எழுகிறது

எச்சரிக்கை மணி

சுனாமி பூகம்பம் எரிமலை

அது, இதென்ற...

அதிர்வேட்டு அனர்த்தங்களாக

கொலை, கொள்ளை வன்மம்

அபகரிப்பு, அத்துமீறல்

அனாச்சார அட்டூழியங்கள்

நாளுக்கு நாள்...

கடிவாளம் இடப்படாத

காட்டேரியாக எம்மை

சுற்றிச் சுழல்கையில்

சுனாமியில் புதையுண்டோர்களுக்காக

வெறும் இருநிமிடமௌனாஞ்சலி

புரையோடி... கசிந்து...

புழுவாகிப்போன புண்ணுக்கு

இது நாம் போடும்போலி

ஒத்தடமா? வேண்டாம்

விட்டு விடுங்கள்! 


 

வளைவில்லா வானவில்லே

நெஞ்சுக்குழிக்குள்

வைரக்கற்கள்

விளையாடுகின்றன

நிலாச்சோறு

தின்னுகிறது

இதயம்

கண்களில் பனி வீழ்ந்து

அடிவயிறு குளிர்கிறது

இரத்த மணிகள்

நாடிகளையும்

துளையிடுகின்றன

தனிமைகளில் துணிவுகளின்

கலப்புகள்

மேகத்தில் துயில்வதாய் சில

மிதப்புகள்

இடையிலே

முளைத்த

ரோஜா என

இதழ்களால்

இறுக்கி அணைக்க

முட்களாலும் சில

முத்தங்கள்

அசாதாரணம்

விழுங்கிய

மேனியாய்

இடையிடையே

தீப்பந்தங்கள்

இடையிடையே

பூப்பந்தல்கள்

கட்டியணைப்பின்றி

கன்னங்கள்

கொஞ்சுகிறாய்

கண்கள் பாராமல்

கதைகள் பேசாமல்

காதல் செய்ய

என்னிலேயே

உயிரானாயோ

என் காதலே..?

உணர்வு வலைகளை

நிபுணத்துவம் செய்கிறாய்

ஆயிரமாண்டுக்கனியென

அணுக்களெல்லாம்

இனிக்கின்றாய்

உன்னால்தான்

உடலில் ஓர்

மாற்றம் புகுந்து

எடையேற்றம் செய்கிறது

நித்தங்கள் புதிதாகி

புதுமைகளை

புசிக்கிறது

பொழுதுகளை

இழுத்து வைத்து

சிரிக்கவைத்து

இரசிக்கிறது

நிலவையழைத்து

மையிரவு

பால் தருகிறது

நான் குடிக்க

நீ குளிக்கிறாய்...

பகலவனையழைத்து

பகல் வெளிச்சம்

பழங்கள் தருகிறது

நான் உண்ண

நீ வளர்கிறாய்...

இறைக்கு

இணையில்லை என்பேனே...!

வண்ண சிறகுகளின்

சின்ன தடவல்கள்

முதுகு வெளிக்குள்...

நதியலைகளின்

கரைமுட்டல்கள்

வயிற்றுக்குழிக்குள்...

வருடல்களால்

வனக்கிறது வதனம்

உன் திருவிளையாடல்களால்

நரம்புக்கணுக்களை

மின்னல்கள்

அணைப்பதுமுண்டு

எலும்புகளில் வெப்பம் பரவி

தண்ணீர் குடிப்பதுமுண்டு

தசைகளுக்குள்

தண்மை சுருண்டு

புல்லரித்து குமட்டுவதுமுண்டு

என்

பருவத்தில்

பாசம் நிறைய

என் பெண்மைக்கு

பெருமை சேர்க்க

முளைவிட்ட

விளை நிலமே

வளைவில்லா

வானவில்லே

மலர்களின் அமுதமெடுத்து

பொன்

மலைகளால் வேலியமைத்து

பால்வெளிகளில்

பட்டுச்சேலைகள்

நெய்கின்றன நட்சத்திரங்கள்

நம்

இருவரினதும்

பிரசவத்திற்கு

பந்தலமைக்க

கருப்பையினுள்

கனமாக

ஊன்றிவிட்ட

என் தாய்மையின்

பிறப்பிடமே...

உன்னாலே

உணர்கின்றேன்

உண்மையென

உலகினிலே

வரங்களெல்லாம்

வழங்கப்படுவதனை....?? 


 

அவளுக்கு நிகர் அவளே!

உன் விழிகள்

என் கனவை களவாடியபோது

தூர தேசத்து மலர்த் தோட்டத்தில்

பனியாக விண்மீன்கள் பொழிந்திருக்கக்கூடும்

இரட்டை ஜடை கட்டி

கண்களுக்கு மை பூசி

அவள் புன்னகைத்தால்

ரோஜாக்களும் என்னவள்

இதழில் சாயமாகும் அதை

திருடி உண்ணும் பட்டாம் பூச்சி நான்

உன் கால் கொலுசின்

மணியாக இருக்க ஆசைப்படுகிறேன்

மஞ்சள் பூசி குளிக்கும் போது

என்னையும் நீ தொடுவாய் என்பதால்

என் வீட்டு முயல் குட்டியும்

உன்னிடம் செல்லமாக ஆசைப்படுகிறது

நான் உன்னையே

கேட்கிறேன் மொத்தமாக

துப்பட்டா விலகும் நேரம்

காற்றாய் உன்னுள் நுழைகிறேன்

வெட்கம் எனும் கதவை எப்போது

திறந்து விடுவாய்,

உன் இதழில் நிலவின் திரு்ஷ்ட்டி

பட்டுத்தான் கருமச்சம்

பூத்திருக்கிறது

என் காதலி அழகை கவிபாட

உலகத்தின் பரப்பும்

காகிதமாய் போதாது

ஒற்றைச் சொல்லில்

பாடுகிறேன்

அவளுக்கு நிகர்

அவளே! 


 

வலி

என் வலிகளைப்பற்றி

சொல்லி அழ

நினைக்கிறேன்

முடியவில்லை!

எப்படி

முடியும் அது

எனக்குள்ளிருந்துதானே

வலிகளின்

நதியே

ஊற்றெடுக்கிறது

வலிகளைக்

குறைக்கத்தான்

விருப்பம் எனக்கு!

ஆனால்

வலியினைக் கொடுத்தவன்

வலிமையாய் இருக்கிறான்

வாடிப்போவதைத்

தவிர

என்னால் வேறொன்றும்

செய்ய முடியவில்லை! 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.