புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
நத்தார் கொண்டாட யாழ். வந்தவரிடம் எம்மைப் பற்றி மூச்சும் விடவில்லை

ஜனாதிபதியுடன் படமெடுத்து முகநூலில் போடுவதில் அக்கறை:

நத்தார் கொண்டாட யாழ். வந்தவரிடம் எம்மைப் பற்றி மூச்சும் விடவில்லை

 ------தமிழ் அரசியல் கைதிகள் கவலை தெரிவிப்பு 

நத்தார் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட வைபவங்களில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் தலைவர்கள் எதுவிதமான கலந்துரையாடலையும் நடத்தாமை குறித்து தமிழ் அரசியல் கைதிகள் தமது அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் ஜனாதிபதி அவர்கள் முழு நாட்டு மக்களையும் அரவணைத்து சகல பிரதேசங்களுக்கும் பாகுபாடின்றிச் சென்று சகல இன, மத மக்களுடனும் மக்களாக இணைந்து ஒரு தலைவராக செயற்பட்டு வருகிறார். அத்தகைய தலைவருக்குத் தமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு அம்மக்களின் பிரதிநிதிகளையே சாரும். 

இவ்விடயத்தில் தமிழ் அரசியல் கைதிகளான தமது விடயத்தை அவரது கவனத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைவர்களையே சாரும். ஆனால் இப்பொறுப்பிலிருந்து தமிழ்த் தலைவர்கள் தவறிவிட்டனர் எனக் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்களில் அறிக்கைகளை மட்டும் விடுவதால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனத் தெரிவிக்கும் கைதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியுடன் இணைந்து நின்று புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துத் தமது முகநூல்களையும், டுவிட்டர் தளங்களையும் நிரப்பியுள்ள சில அரசியல்வாதிகள் தம்மைப் பற்றி மூச்சும் விடாமை தமக்குப் பெரும் கவலை அளிப்பதாகத் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.