புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

தமிழரசி

தமிழரசி

சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த சரஸ்வதி, வாசலில் மோட்டர் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டு பரபரத்தாள். மகளின் கல்யாண விசயமாக தரகர் கணபதிப்பிள்ளையரிடம் காலையிலே அவள் கணவர் கந்தவனம் சென்றிருந்தார். அவர்தான் வந்துவிட்டார் என்ற பதட்டம் அவளுக்கு உள்ளூர ஏற்பட்டது. நறுக்கிய முருங்கைக்காய்களை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஆனால் அவளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்தது, சரஸ்வதியின் தம்பி தம்பிராசு.

"அட தம்பி நீயாடா..வா.வா." என்று வரவேற்றாள் "ஏனக்கா வேறு யாரையும் எதிர்பாத்து இருக்கிறியா?"

"ஓமடா, உன்ர அத்தார் தரகர் கணபதிபிள்ளையரை சந்திக்கப் போனவர்.

அவர்தான் வந்திட்டாரோ என்று பார்த்தன்" என்று சொல்லி சலித்துக்கொண்டாள்.

"என்னக்கா, ஏதும் நல்ல சம்பந்தம் ஏதும் இருக்கிறதாமோ, இப்பெல்லாம் டாக்டர்,எஞ்சினியர்தானே எல்லோரும் தேடித்திரியிறாங்க.போனகிழமையும் ஒரு கல்யாணம் நடந்தது. டாக்டர்தானாம் மாப்பிள்ளை. நம்மட கடைக்கார ராசலிங்கதின் தம்பி பொண்ணு. அவள் ஒரு டீச்சர். ஆனா ராசலிங்கதின் தம்பி நிறைய சீதனம் கொடுத்து அந்த மாப்பிள்ளையை எடுத்துவிட்டார்"

" எந்த இடத்து மாப்பிள்ளையாம்,என்ன சீதனம் கொடுத்தவங்களாம்.ஏதும் விபரம் அறிஞ்சயோ தம்பி" சரஸ்வதி ஆர்வத்துடன் கேட்டாள்.

"அக்கா சீதனத்தைக் கேட்டால் நீ தலை சுற்றி விழுந்திடுவாய்"

'நிறைய சீதனம் கொடுத்தவங்களாமோ"

"பின்ன, காசு ரொக்கம் அம்பது லட்சம், மாடிவீடு புதிதாக கட்டி அனைத்து

தளபாடங்களுடனும், டிவி,இன்டர்நெட், என்று அசத்தலாக கொடுத்து இருக்கிறார்கள்."

"அட,அப்படியே" ஆச்சரியப்படாள் சரஸ்வதி.

"ம்..இதற்கே நீ இப்படி வாயைப் பிளந்தையெண்டால் எப்படி? மிச்சத்தையும் கேளு."

" வேறு என்னடா தம்பி சொல்லன்"

"மாப்பிள்ளை டாக்டர் என்றபடியால் அவருக்கு புதுக் கார் ஒன்றும் கொடுக்கவேண்டும்

என்று மாப்பிள்ளைத்தரத்தார் கேட்டிருக்காங்க.கடைக்கார ராசலிங்கத்தின் தம்பி

சுந்தரவேல் அதற்கும் ஓம் என்று சொல்லி எழுபது லட்சத்துக்கு ஒரு காரும் எல்லோ

சீதனமா கொடுத்திருக்கிறார்." என்று தங்கராசு சொன்னதும் சரஸ்வதி மூச்சுவிட சற்று

ஆசுவாசப் பட்டாள்.

"என்னக்கா ஒரு மாதிரி இருகிறாய்?"

"இல்லடா தம்பி இவ்வளவு சீதனம் கொடுத்து ஒரு மாப்பிள்ளை எடுக்க வேண்டி இருக்குதே!"

"அக்கா உனக்குத் தெரியாது இப்பெல்லாம் ஒவ்வொருதரத்தில்தான் மாப்பிள்ளைகள்

இருக்கிறாங்களாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரேட் இருக்குதாம். டாக்டர் என்றால் இவ்வளவு,எஞ்சினியர் என்றால் இவ்வளவு, ஏன், டீச்சர்,கிளரிக்கல் என்றாலும் அவற்றுக்கும் ஒரு ரேட் இருக்குதாம்" என்று நடைமுறை மாப்பிள்ளைகளின் ரேட்டுகளைச் சொன்னான் தங்கராசு.

"என்னமோடா தம்பி நம்மட தமிழரசிக்கும் ஏதும் நல்ல சம்பந்தம் ஒன்று வந்தா அந்த கதிரமலையானுக்கு நேர்த்தி வைச்சு நிறைவேற்றுவன். நேற்று நம்மட கணபதிப்பிள்ளை தரகர் போன் பண்ணி, ஒரு நல்ல சாதகம் இருக்கிறதாம். வந்து பாருங்கோ என்றார்.அதுதான் உங்க அத்தான் காலையில தேத்தண்ணியக் குடிச்சுப்போட்டு போனவர். சாப்பிடவும் இல்ல. புட்டும்,சம்பலும்,சொதியும் வச்சனான். அதை பரிமாறுவதற்கு இடையில கிளம்பிட்டார்" என்றாள் சரஸ்வதி.

அத்தோடு, நில்லாமல் தன் தம்பிக்கு தான் செய்து வைத்திருந்த காலை உணவையும் கொஞ்சம் போட்டுக்கொடுத்தாள். தங்கராசு, அக்காவின் சாப்பாடு என்றால்,தன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் ஒரு பிடி பிடிப்பான். ஏனென்றால் சரஸ்வதியின் கைச் சமையல் அப்படி.

அவன் சாப்பிட்டு கை கழுவும்போதே வீட்டு வாசலில் ஸ்கூட்டி ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து தமிழரசி இறங்கி வந்தாள். தங்கராசுவைக் கண்டதும் ,

"வாங்க மாமா. எப்படி இருக்கீங்க. உங்க அக்காவின் சமையல் உங்க வீட்டுக்கு மணத்திட்டாக்கும் என்ன..இல்லையா வழமைபோல் கலாய்த்தாள் தமிழரசி "தமிழ் நீயும் ஒருநாள் கல்யாணம் பண்ணிக்கொண்டு போனால் சமைக்கத்தானே வேண்டும்.

அப்போதும் நான் வந்து என் மருமகளின் கைப்பக்குவத்தை பார்ப்பன்" என்று ஒரு பொடி வைத்து பேசினான் தங்கராசு.

"மாமா நான் எனக்குப் பிடித்தமாதிரித்தான் சமைப்பன். அம்மா மாதிரி ஒரு தேங்காய் பால் புளிந்து சொதி,குழம்பு,பால்கறி என்றெல்லாம் வைக்கமாட்டன். இப்பெல்லாம் இன்ரநெற்றில் நல்ல சமையல் குறிப்புகள், சமையல் செய்யும் முறைகள், என்பனவற்றை பார்க்கமுடிகிறது.

அதெல்லாம் நான் பார்த்து,படித்து எனக்குப் பிடித்ததை நானே செய்துகொள்வேன். அம்மாவின் சமையல் பழங்காலத்து சமையல். அது எனக்கு பிடிக்காது" என்று அம்மாவை வம்புக்கு இழுத்தாள்.

"சொல்லுவாடி, இப்ப சொல்லுவாய். இறால் பால்பொரியல் , வெட்டுமீன் குழம்பு, மான் இறைச்சிக் கறி, முருங்கை இலை சுண்டல்,

குப்பைக்கீரை கடையல் என்று நல்லா இச்சிக்கொட்டி சாப்பிடும்போது, அம்மாட சாப்பாடு சுப்பர் சுப்பர் என்று சொல்லுவாய். இப்பதான் இந்த டிவில, அதில, இதில வாற கன்றாவிகளை பார்த்துப்போட்டு வந்து அடுப்படியில ஏதோ செய்யிறாய்" சரஸ்வதியும், மகளுக்கு ஏட்டிக்குப் போட்டியாக பேசினாள்.

ஆனால், மகளின் புதிய சமையல் முறைகளை சரஸ்வதி ஆர்வத்தோடு பார்ப்பாள். தன் மகளில் அதீத பாசம் வைத்திருப்பவள். மகளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டும். ஊரில் உள்ள பலரும் தங்கள் மகள்மாருக்கு நல்ல மாப்பிள்ளைகள் தேடிக்கட்டிக் கொடுத்து விட்டார்கள்.தானும்,தன் மகளுக்கு தேடியதையெல்லாம் , மகள் தட்டிக் கழித்துக்கொண்டு தனக்கு இப்போது திருமணம் வேண்டாம். சீதனம் கொடுத்து பார்க்கும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாம்

என்றல்லோ சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் பெற்ற பிள்ளைக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துச் செய்வது, அதுவும் அந்தஸ்துக்கு தக்கபடி செய்வது தங்கள் கடமை அல்லோ என்று நினைப்பவள்தான் சரஸ்வதி.தனது சொந்தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்திருக்கின்றன, தன் மகளுக்கும் அப்படி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதில் தப்பிலையே என்று தான் எண்ணுவதில் தவறில்லையே

ஆனால் தமிழரசி வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாளே. என்ற கவலை சரஸ்வதிக்கு இருக்கிறது. பல சம்பந்தங்கள் வந்தன. அதையெல்லாம் தமிழரசி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.அவளுக்கு இந்த டாக்டர் ,எஞ்சினியர், என்று அலைவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்களின் பெற்றோர்கள் சீதனம் வாங்க வேண்டும் என்றே இருப்பவர்கள்.ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம் என்ற கருத்துக் கொண்டவள்.

ஓர் அரசு ஊழியர், அல்லது ஒரு கணக்காளர், அல்லது ஒரு பொதுநல சேவையில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்,இவர்களும் நல்ல மாப்பிள்ளைகள்தானே என்று எண்ணுபவள் தமிழரசி. அவள் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவள். நன்றாக படித்துப் பட்டம் பெற்று வலயக் கல்வி பணியகத்தில் உதவிப் பணிப்பாளராக இருக்கிறாள். மாணவ சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவள்.முற்போக்கு சிந்தனை உடையவள். நிறைய வாசிப்பவள்.

நேரம்கிடைக்கும்போது பெண்ணியம் பற்றி கட்டுரை,கவிதை எழுதுபவள். யாருடனும் எதையும் நேருக்கு நேராக பேசக் கூடிய சுபாவம் கொண்டவள்.

"அக்கா நான் புறப்படுறன்..தமிழ் நான் போயிட்டு வாறன்" தம்பிராசு கிளம்பத் தயாரானான்.

"ஏன் , மாமா அவசரம். இன்று சனிக்கிழமைதானே, இருந்து மத்தியானம் சாப்பிட்டுவிட்டு போங்களன்"

"இல்ல தமிழ், ஒரு வேலை இருக்கு நான் கல்லுக்குவாரி வரைக்கும் போயிட்டு வரணும்,நான் வாறன்"

சொல்லிவிட்டு புறப்பட்டு போயிட்டான் தங்கராசு. அவனும்போக கந்தவனத்தாரின் மோட்டார் சைக்கிளும் வந்து நின்றது.

குசினிக்குள் இருந்த சரஸ்வதி வாசலுக்கு வந்து கணவனை கேள்விக் குறியோடு பார்த்தாள். கந்தவனத்தாரும் ஆறஅமர வந்து ஆசுவாசமாகத் தன் சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொண்டு, "சரசு கொஞ்சம் தண்ணீ கொண்டாவன் குடிக்க" கேட்டார்.

"நீங்க காலையில சாப்பிட இல்லத்தானே வாங்களன் சாப்பிட"

"சாப்பிடத்தான் போறன்.முதல்ல கொஞ்சம் தண்ணீ தா குடிக்க"

செம்பில தண்ணீர் கொண்டு கொடுத்துவிட்டு,அவர் பக்கத்திலேயே நின்றாள்.

கந்தவனத்தாரும் அண்ணாந்து தண்ணீர் குடித்துவிட்டு, ஏவறை விட்டுக்கொண்டே

சாய்மனைக் கதிரையில் மீண்டும் சாய்ந்துகொண்டார். சிறிது நேரத்தில் எழுந்துகொண்டார்.

"என்னங்க சாப்பிட வாங்க..காலையில குடிச்ச தேத்தண்ணியோட இருக்கிறீங்க"

"சரி சாப்பாட்ட எடு... இவள் பிள்ளைய எங்க காணயில்ல.. வெளியில ஸ்கூட்டி நிற்குது"

"அவள் குளிக்கிறாளாக்கும். சனிக்கிழமையில அவள்ர மரக்கறித் தோட்டத்துக்கு போயிட்டு வாறவள்தானே.அங்கு சும்மாவே இருந்திருப்பாள்.கொச்சிமரங்கள்,வெண்டி மரங்கள், கத்தரி மரங்கள் என்று பார்த்து.... பேசி,தோட்டக்காரன் சிவலிங்கத்துடன் சேர்ந்து தண்ணீயுமல்ல பாச்சிப்போட்டு வந்திருப்பாள்.அதுதான் வந்ததும் வராததுமாக போய் குளிக்கிறாள்"

"சரி,அவள் குளிக்கட்டும் நீ வா சாப்பாட்டை எடு"

தட்டை எடுத்து வைத்து சாப்பாட்டைப் போட்டுக்கொண்டே கேட்கத் தொடங்கினாள்.

"என்னங்க கணபதிப்பிள்ளையர் ஏதும் நல்ல செய்தி சொன்னவரா"

"ம்..ம்ம். சொன்னவர்தான்..ஆனா..." என்று இழுத்தார்..

"என்னங்க...சொன்னவர்" பதட்டத்துடன் கேட்டாள்.

"மாப்பிள்ளை நீ தேடினமாதிரி டாக்டர்தான். முனைக்காட்டை சேர்ந்தவராம்.குடும்பத்தார் போர்காலங்களில் சிரமப்பட்டு,பின்னர் புளியந்தீவுக்கு வந்து இருந்தவங்களாம். மாப்பிள்ளைக்கு ஒரு தமக்கையும், இரண்டு தங்கச்சிமார்களுமாம். தமக்கை கலியாணம் கட்டிட்டாவாம்.தங்கச்சிமார் படிக்கிறாங்களாம். மாப்பிள்ளைக்கு நல்ல பொண்ணு, நல்ல சீதனத்துடன் பார்க்கிறாங்களாம்.

பொண்ணு எந்த ஊர் என்றாலும் பிரச்சினை இல்லையாம் வீடு மட்டக்களப்புல கொடுக்க

வேணுமாம். இதைத்தான் சொன்னவர் கணபதிப்பிள்ளையர்.

"என்ன சீதனம் கேட்கிறாங்களாம்..கனக்கவே" தயக்கத்துடன் கேட்டாள் சரஸ்வதி.

"ம்ம்.ம். பதில் சொல்லாமலே புட்டை மென்றுகொண்டு இருந்தார் கந்தவனம்.

சாப்பிட்டுவிட்டு எழுந்த கந்தவனம், மீண்டும் தன் சாய்மனைக் கதிரைக்கு வந்து சாய்ந்து கொண்டார்.

சரஸ்வதி சமையல் அறைக்குச் சென்று தான் நறுக்கிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு மண்டபத்துக்குள் வந்து கந்தவனத்தாரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.

கந்தவனத்தாரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆனால் அவர் சரஸ்வதியின்நடவடிக்கைகளை கவனிக்கத் தவறவில்லை. அவளின் மனசு அவருக்கு தெரியாதா என்ன?.

காய்களை நறுக்கிக்கொண்டே சரஸ்வதி கேட்டாள்.

"என்னங்க எவ்வளவு சீதனம்.என்னென்ன கேட்கிறாங்களாம்"

கந்தவனத்தார் ஒரு செருமலுடன் சொன்னார்,

"காசாக ஐம்பது லட்சம் தரணுமாம். மட்டக்களப்பில புது வீடு தரணுமாம். பொண்ணுக்கு நகைகள்,குறைஞ்சது முப்பது பவுண்கள் போடணுமாம். இனி மாப்பிளைக்கு புதிதாக வந்திருக்கிற கார் வாங்கி கொடுக்கணுமாம். கல்யாணத்தை கோவிலில செய்யாமல் மண்டபத்தில மணவறை போட்டுப் பெரிய அளவில செய்யணுமாம்" என்று சொல்லி முடித்ததும் அவருக்கு மூச்சு வாங்கியது.

"அப்பாடா இவ்வளவு கேட்கிறாங்களா போன கிழமையும் ஒரு கல்யாணம் நடந்ததாம்.

நமது கடைக்கார, ராசலிங்கதின் தம்பி பொண்ணுக்கு. இப்படிதான் சீதனம் கொடுத்து தடபுடலாக செய்தாங்களாம். தம்பி தங்கராசு சொன்னான். என்னங்க நீங்க என்ன சொல்லிட்டு வந்திருக்கீங்க"

"நான் என்னத்த சொல்ல. வீட்ல பேசிட்டு முடிவு சொல்லுறன் என்று வந்தன்"

"என்னங்க நாம டவுன்ல கட்டின வீடும் முடிஞ்சுதானே.. பிறகு, என்ர நகைகளை அழிச்சு புதிய நகைகள் செய்யலாம். காசி ஐம்பது லட்சத்தையும், எப்படியும் கொடுத்திடலாம்.

கல்யாணத்தையும் மண்டபத்தில சிறப்பா செய்திடலாம் என்னங்க.."

"ம்ம் ..ம்..."

"அந்தக் காருக்கு எவ்வளவுங்க முடியும்"

"ஆ, அதற்கு தொண்ணூறு லட்சம் முடியும். அதையும் உங்கட பதினைந்து ஏக்கர்

நெற் காணியை விற்றுப் போட்டு வாங்கி கொடுத்திடலாம் இல்லையா.."

அறைக்குள் இருந்து வெளியே வந்துகொண்டே சற்று உரத்த குரலில் சொன்னாள் தமிழரசி சாய்மனைக் கதிரையில் படுத்திருந்த கந்தவனத்தார் எழும்பி இருந்துகொண்டே,

"தமிழ், நாங்க பேசினதெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தியா மகள்"

"ஓமோம் நான் கேட்டனான்.நான் குளித்து வெளிக்கிடும்போது உங்க பேச்சு எனக்கு கேட்டது.

நான் ஒட்டுக் கேட்கவில்ல" சற்று எரிச்சலுடன் சொன்னாள்.

"பிள்ள, அம்மாவின் விருப்பம்தான் இது. உனக்கு தெரியும்தானே அவ எப்படியும்

உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க வேணும் என்ற குறியாக இருக்கிறா. என் விருப்பமும் அதுதான். அது தான் நான் கலையில் தரகர் வீட்டுக்கு போய் வந்தனான்" கனகசபையின் குரல் தளுதளுத்தது.

"அப்பா நான் உங்களுக்கு பல தடவைகள் சொல்லி விட்டேன். எனக்கு டாக்டரோ,எஞ்சினியரோ தேடத் தேவையில்லை என்று.நானும் படித்து பட்டம் வாங்கி அரசாங்கத்தில் ஒரு நல்ல பதவியில இருக்கிறன். எனக்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கு. முன் பின் தெரியாத ஒருவரை நான் கல்யாணம் கட்டிப்போட்டு என்னால அவஸ்தைபட்ட முடியாது. கஷ்டப்பட்டு மனசு பாதிக்கப்பட்டு பின் பிரியும் நிலை எனக்கு வேண்டாம் அப்பா"""தமிழ் நமது சொந்தங்கள் எல்லோரும் அவர்கள் பொண்ணுகளுக்கு இப்படி நல்ல மாப்பிள்ளை தானே மகள் பார்த்து செய்து வைக்கிறாங்க. நாங்களும்

உனக்கு அப்படி செய்ய வேணாமா" சரஸ்வதி கண்கலங்க கேட்டாள்.

"எதம்மா நல்ல மாப்பிள்ளை. நீங்க பேசினமாதிரி, ரொக்கமும், காரும், வீடும், நகையும் வாங்கிக்கொண்டு தனது சுகத்துக்காக ஒரு பெண்ணையும்

வாங்க ஆசைப்படுபவன் நல்ல மாப்பிள்ளையா? சொந்தக்காலில் நிற்பவன்,

சுயமரியாதை கொண்டவன், பேரம் பேசாமல் நல்ல வாழ்க்கை துணை கிடைத்தால் அதை வரமாக நினைத்து பேணுபவன். திருமணதிற்குப் பின் தன் மனைவியுடன்

கருத்துகளைப் பகிர்ந்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டு பின்னர் வாழ்க்கையை இருவரும் சேர்ந்து கட்டி எழுப்பவேண்டும் என்று நினைப்பவன் தான் என்னைப் பொறுத்தவரையில் நல்ல மாப்பிள்ளை. வெறுமனே காசுக்கும்,காருக்கும்,வீடுக்கும் கட்டிலில் படுப்பதற்கும் காத்துக் கிடப்பவன் நல்ல மாப்பிள்ளை இல்லை. புரிஞ்சு கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஏன் செய்ய வேண்டும். டவுன்ல அப்பா கஷ்டப்பட்டு வீடு கட்டி இருப்பது, நாம் எல்லோரும் சந்தோசமாக வாழத்தான். அதில வந்து

இன்னொருத்தர் ராஜ வாழ்க்கை வாழவோ, அதிகாரம் செய்வதற்கோ அல்ல.

அந்த வீட்டில உள்ள ஒவ்வொரு கல்லும், தூணும், கதவும், யன்னலும் அப்பாவின் இரத்தத்தில, வியர்வையில உருவானது. அவர் ரசித்து ரசித்து கட்டிய வீட்டில என்னோடு நீங்களும் அப்பாவும் கடைசி வரை வாழணும். எனக்கு முன்பின் தெரியாதவனுக்கு, என்னைக் கொடுத்துவிட்டு நீங்கள் போவதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். எனக்கு கல்யாண வயசு வந்து விட்டது என்பதை நான் உணர்கிறேன். பெற்றவர்களுக்கும் தன் மகளை ஒரு நல்ல மனிதரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதும் இயல்புதான். ஆனால் அந்த நல்ல மனிதர் தங்கள் மகளுக்கு பிடிக்குதா என்று பார்க்கவேண்டும். வெறுமனே வரட்டுக் கௌரவத்துக்கும், மற்றவர்களுக்காகவும்,சொந்தங்கள் சுற்றங்கள் செய்கிறார்களே என்பதற்காக செய்வது என்னை கல்லைக் கட்டி கிணத்தில் தள்ளுவதற்கு சமன். அம்மா எனக்கு பிடித்தமான துணையை நானே சொல்லுறன். அவரை எனக்கு கட்டி வையுங்க. அங்கே பேரம் பேசவோ சீதனம் கேட்கவோ ஆட்கள் இல்லை. ஆனால் உங்க மகளின் விருப்பும், சந்தோசமும் அங்கு இருக்கும்.

அம்மா டாக்டர், எஞ்சினியர் என்று தேடி உங்க நேரத்தை வீணாக்கி அப்பாவையும் அலைய வைக்க வேண்டாம்.

நான் சொல்வது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறன். ஒன்றும் யோசிக்க வேண்டாம்.உங்க பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்.

நான் ஒரு அலுவலா வெளியில்போகிறேன். மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்திடுவன்" என்ற தமிழரசி தன் ஸ்கூட்டியை ஸ்டாட் செய்து கொண்டு கிளம்பினாள்.

அவள் போவதையே இருவரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

சரஸ்வதியின் முகத்தில் ஒருவித சோகம் இருந்தது.

கந்தவனத்தரின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.