புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

சிலரது சுயதேவைகளுக்காக இரையாகும் தமிழர் அரசியல்

சிலரது சுயதேவைகளுக்காக

இரையாகும் தமிழர் அரசியல்

கடந்த பொதுத்தேர்தலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது வெளியுலகிற்குத் தெரியும் வகையில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பேசி சமரசமாகத் தீர்த்துவிடலாம் என நினைத்திருந்த சாணக்கியம் மிக்க தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பையும் மீறிச் சில சம்பவங்கள் இடம்பெற்றுவிட்டது.

கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் மிகவும் இரகசியமாக நடத்திய ஒரு சந்திப்பு பரகசியமாகியதால் அதில் கலந்து கொண்டவர்களையும், அவர்களது நோக்கங்களையும் மக்கள் நன்கு அறியக் கூடியதாக இருந்துள்ளது. இதன் பிரதிபலிப்பை எதிர்வரும் தேர்தல்களில் மக்களிடம் எதிர்பார்க்கலாம்.

விடுதலைப் புலிகளின் மறைவிற்குப் பின்னர் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமது தலைமையாக எண்ணி வருகின்றனர். அதனை அவர்கள் கடந்து வந்த பல தேர்தல்களில் உணர்த்தியுமிருந்தனர். இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பைச் சிதைக்கவும், தமிழ் மக்களிடமிருந்து அக்கட்சியை அந்நியப்படுத்தவும் பல்வேறான முயற்சிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டதை அனைவரும் நன்கறிவர். ஆனால் மக்களது ஒற்றுமையும், கூட்டமைப்பில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் நேர்மையான அரசியலும் இதற்கு துளியளவும் இடமளிக்கவில்லை.

கடந்த ஆட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு அரசியல்வாதிகளைப் பிரித்தெடுக்க அவர்களிடம் தனிப்பட முறையில் பல டீல்கள் அதாவது பேரங்கள் பேசப்பட்டன. ஆனால் அவற்றைப் பெற்றால் அவை பெறுபவர்களை மக்கள் முன்பாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பதால் சிலர் ஆசையிருந்தும் அடக்கி வைத்திருக்கும் நிலையில் இருந்தனர். ஆனால் அவர்களில் சிலரால் இப்போதும்; அவ்வாறு இருக்க முடியாதுள்ளது. கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் இரண்டு கோடி ரூபா சொகுசு வாகனங்களில் பயணித்துக் கொண்டிருப்பதுடன், அவர்களது பிள்ளைகள் அரசாங்க புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளில் உயர் கல்வி கற்றுக் கொண்டுமிருக்கையில் நாம் மட்டும் இனியும் இங்கே இரண்டு சில்லு மோட்டார் சைக்கிள்களில் அலைந்து திரிந்து அரசியல் செய்ய வேண்டுமா என இச்சிலர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுக்கு அரசியலில் சுய தேவைகள் கொண்ட சில அனுபவ அரசியல் தலைமைகள் ஆசை வார்த்தைகளை ஊட்டி வருகின்றன. ஊரில் எவ்விதமான தகுதியுமில்லாது வெறும் சனசமூக நிலையத்தின் தலைவராகவும், ஆசிரியராகவும், கச்சேரியில் எழுதுவினைஞராகவும், விதானையாராகவும் இருந்தவர்கள் இன்று தமிழ் மக்கள் முன்பாக அரசியல்வாதிகள் எனும் அந்தஸ்துடன் இருக்கிறார்கள். ஆனால் பலகோடி ரூபாக்களைச் சொத்துக்களாக வைத்து அதில் சில கோடிகளை பல தேர்தல்களில் செலவழித்தும் பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியவில்லையே எனும் ஏக்கத்தில் இருக்கும் சிலரே இன்றைய கட்சிப் பிளவுகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலர் தமது பெயர், முன்னாள் உயர் பதவி, கல்வித் தகைமை, பரம்பரைச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முயற்சிக்கின்றனர். இன்னும் சிலர் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமது சொகுசு வாழ்விற்குத் தமிழர் அரசியலைப் பயன்படுத்த முனைகின்றனர். இன்னும் சிலர் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட அவப் பெயர் நிலையைச் சீர்செய்ய அதாவது மக்கள் தவறிழைத்துவிட்டதாகச் சித்தரிக்க முனைகின்றனர். இதற்காக இவர்கள் தமிழ்க் கூட்டமைப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

மொத்தத்தில் சகலருமே ஒருவிதமான தமது சுய தேவைகளுக்காக தமிழர் அரசியலைப் பயன்படுத்த முனைகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தினால் தமிழர் அரசியல் பலவீனப்படும் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. அல்லது புரிந்து கொண்டுதான் வேறு சிலரது நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுகிறார்களோ தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது எல்லாமே சரியானது, தமிழ் மக்களது நன்மை சார்ந்தது என நியாயப்படுத்துவது எமது நோக்கமே அல்ல. கொழும்புடன் மிக நெருங்கிய தொடர்பகளைப் பேணிவரும் தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலர் கடந்த ஆட்சியில் மக்களால் புறக்கணிக்கப்பட்டும் உள்ளனர்.

தமிழ் மக்களுக்குப் பல தேவைகள் நிறைவேற்றப்படவுள்ள இன்றைய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் பிரதான தமிழ் கட்சி ஒன்றினுள் இதுபோன்றதொரு பிரிவுநிலை தேவைதானா என்பதே எமது கேள்வியாகும். இது பிரிவும் இல்லை, பிளவும் இல்லை, இது அரசியல் கட்சி இல்லை வெறும் அமைப்பு எனக் கூறினாலும் இப்போது இதற்கு என்ன அவசியம்? கட்சிகளுக்குள் பிரச்சினைகள் எழுவது சகஜம். அவை பேசித் தீர்க்கப்பட வேண்டும். அதிலும் வடக்கு கிழக்கு வாழ் தமிழருக்கு என இருக்கும் ஒரேயொரு பலமான கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. அதனை உள்ளேயிருந்து கொண்டே சிதைக்க நினைப்பது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் செய்யும் பாரிய துரோகமாகவே அமையும்.

சில வெளிநாடுகளும், தென்னிலங்கையிலுள்ள சில இனவாத அரசியல் தலைமைகளும் தமிழ்க் கூட்டமைப்பின் பிளவிற்காகக் காத்துக் கிடக்கின்றன.

அதற்குக் களமமைத்துக் கொடுக்கும் முயற்சிகளை விடுத்து உட்கட்சிப் பிரச்சினைகளை தலைமையுடன் கலந்து பேசி தீர்வினைக் காண முயற்சிக்க வேண்டும். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரகசியமாக ஒன்றுகூடிய சில அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் ஏற்படுத்திய அமைப்புக் குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளில் சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இன்னும் சிலர் மக்களது பெருமளவிலான வாக்குகளைப் பெற்றவர்கள். இன்னும் சிலர் புத்திஜீவிகள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒற்றுமை எனும் ஒரே காரணத்திற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியையே தமது பலமாகக் கருதுகிறார்கள். அதற்கு தற்போது சிறந்த தலைமை இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். அத்தலைமையில் அதீத நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கட்சித் தலைமை தேர்தலில் எவரை நிறுத்தினாலும் அவரை ஆதரிக்கிறார்கள். இதுவே உண்மை. அங்கு கட்சி தவிர்த்து எவருக்கும் தனிப்பட்ட முறையிலான ஆதரவு கிடையாது என்பதே அங்கு காணப்படும் பொதுவான நிலைப்பாடாக உள்ளது. இந்த உண்மையை தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தேர்தலில் தனித்து நின்று படுதோல்வி கண்டவர்களை வைத்து நன்கு அறிந்து கொள்ளலாம்.

எனவே, சுய அரசியல் தேவைகளுக்காக தமிழ்க் கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழர் அரசியலை அதற்கு இரையாக்கி விடாதீர்கள் என்பதே எமது கருத்தாகும். எல்லோரும் தமிழ்க் கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழருக்கோ தலைவராக ஆசைப்படக் கூடாது. ஏனெனில் எல்லோராலும் தலைவராக முடியாது. தலைவராக முடியவில்லை என்பதற்காக தலைமையைக் குழப்ப முயலக் கூடாது. அது தற்போது இருக்கும் உங்களது இருப்பையே இல்லாமற் செய்துவிடுவதுடன் தமிழரது எதிர்கால வாழ்விலும் பல கேள்விகளைத் தோற்றுவித்துவிடும்.  

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.