புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
நல்ல பாம்பே!

 

(சென்றவார தொடர்)

வழமைபோல அவர்கள் இம்முறையும் என்னைக் கேலி பேசினர்.

பக்கத்து வீட்டிலிருந்து வந்த மலர் ஆசையம்மா,

'டேய் அது பாம்புகள் பிணையுது,

நீங்கள் பேசாம அங்கால போங்கடா' என்று,

வலு இயல்பாகச் சொன்னார்.

'பிணையிறது என்றா என்ன ஆசையம்மா' என்றேன் நான்.

அவர் மற்றவர்களைப் பார்த்து வாய்க்குள் சிரித்தபடி,

'இப்ப உதுகள்தான் இவருக்குத் தேவைபோல' என்று சொன்னபடி,

தன் வேலையைப் பார்க்கப்போனார்.

***

நான் அப்பவும் விளங்காமல் விழிக்க,

அந்த ஊரிலேயே வாழ்ந்த என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன் சுமன்,

என் காதுக்குள் 'டேய் ஜெயா என்ன ஆசையம்மா சொன்னது விளங்கேலையோ,

பிணையிறது எண்டா அதுகள் 'செக்ஸ்' வைக்குதுகள் என்று அர்த்தம்,

இண்டைக்கு அதுகளுக்கு 'பெ(F)ஸ்ற் நைற்றாம்' என்டவன் பிறகு திருப்பி,

சீச்சீ 'பெ(F)ஸ்ற் மோனிங்காம்" என்று சொல்லி வம்பாய்ச் சிரித்தான்.

***

தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த தவநாயகம் அப்பு,

அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு சற்று வியந்தபடி,

'எட பெடியள் உது அபூர்வமான விஷயம்,

ஆராவது ஓடிப்போய் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொண்டு வந்து,

கவனமா அதுகள்ள போடுங்கோ அதில ஏதாவது ஈரம் பிரண்டா,

பிறகு அத எடுத்துக்கொண்டு போய் சாமி அறையில வையுங்கோ,

வீட்டுக்கு அது நல்ல லட்சுமிகரம்'என்று சொல்லிவிட்டு இயல்பாய்ப் போனார்.

***

அவருக்கு ஊரிலிருக்கிற எறும்பு முதல்,

எல்லா உயிர்கள் பற்றிய விபரங்களும் நல்லாய்த் தெரியும்.

இந்தச் செய்திகள் எல்லாம் எங்களுக்குப் புதிதாய் இருந்தன.

யார் எதைச் சொன்னாலும் எங்களுக்கு,

பாம்புகள் பற்றிய பயம் மட்டும் நீங்கியபாடாயில்லை.

எல்லோரும் போனதும் நானும் அண்ணனுமாய்ச் சேர்ந்து,

மெல்ல உள்ளே சென்று,

கொஞ்சம் மண்ணெண்ணெய் கொண்டு வந்து அவற்றிற்கு எத்தினோம்.

இந்தக் கொஞ்சநாள் அனுபவத்தில்,

மண்ணெண்ணெய் என்றால் பாம்புக்கு ஆகாது என்பது,

எங்களுக்குத் தெரிந்திருந்தது.

எண்ணெய் வாசம் பட்டதுமே பாம்புகள் தலைதெறிக்க ஓடிவிடும்.

நாம் மண்ணெண்ணெய்யை எற்றியதும்,

பிணைந்த பாம்புகள் பிரிந்து தனித்தனியாய் ஓடின.

என்ன ஆச்சரியம்!

ஒரு சில நிமிடங்கள் கூட ஆகியிராது.

முதல் இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி மீண்டும்,

அவை முன்பு போல் பிணைந்து நின்றன.

***

பிற்காலத்தில் சிலப்பதிகாரம் படிக்கிற பொழுது,

கண்ணகியும், கோவலனும்,

கலந்து இன்பம் அனுபவிக்கிற செய்தியைச் சொல்லும்போது,

துறவியாகிய இளங்கோவடிகள்,

'தூமப்பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென்ன' (பணி-பாம்பு) என்று,

பாம்புகள் பிணைவதை அதற்கு உதாரணமாய்,

பாடியிருந்ததைப் பார்த்த பொழுது,

அவரது இயற்கை அறிவைக்கண்டு வியந்திருக்கிறேன்.

***

எங்கள் ஊர் வயல்களுக்குள் பல கிணறுகள் இருந்தன.

அக்காலத்தில் தோட்ட வேலைகள்,

மெல்லக் குறைந்து கொண்டிருந்ததால்,

அக்கிணறுகளை யாரும் பெரிதாய்ப் பராமரிப்பதில்லை.

கிணற்றின் சுற்றுக்கட்டுக்கள் கூட,

சில இடங்களில் இடிந்து போய்க்கிடக்கும்.

மாரியில் கிணறு நிரம்பினால் கால் எட்டாத அந்தத் தண்ணீருக்குள்,

ஊர்ப்பெடியள் பாய்ந்து நீந்தும் அழகே அழகு!

நான் ஒருநாளும் அதற்குள் இறங்கியதேயில்லை.

என் அண்ணன் தயங்கித்தயங்கி இடுப்பில் கயிறு கட்டி இறங்குவார்.

அந்தக் கயிற்றைப் பிடிக்கும் வேலைதான் எனக்கு.

தம்பியுள்ளான் தண்ணிக்கும் அஞ்சான்.

***

ஒருநாள் வயல் கிணற்றைச் சுற்றி பெரும் கூட்டம்.

நானும் ஓடிப்போய் எட்டிப்பார்த்தேன்.

கிணற்றுக்குள் ஆறடி நீளமான ஒரு நாகபாம்பு விழுந்துகிடந்தது.

இரவு விழுந்திருக்கும் போல,

பெடியள் சிறிய கற்களால் அதற்கு எறிவதும்,

அது சீறிப்படமெடுக்க, கூக்குரலிடுவதுமாய் இருந்தார்கள்.

அது சீறுவதையும், படம் எடுப்பதையும் பார்க்கவே பயமாக இருந்தது.

அந்தப் பக்கமாக வந்த தவநாயகம் அப்பு,

பெடியளை விலத்தி எட்டிப் பார்த்தார்.

பார்த்தவர், முகத்தில் வியப்புக் காட்டி,

'எட பெடியள் இது செட்டிநாகமடா பொல்லாத சாமான்,

எல்லாரும் விலத்துங்கோ' என்று சொல்லிவிட்டு,

ஒரு பழைய மண் பானையை எடுப்பித்தார்.

நாங்கள் அவர் என்ன செய்யப்போகிறார் என்று,

தூரநின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

***

எப்போதும் அவரது கழுத்திலிருக்கும் கொக்கச்சத்தகத்தின் நுனியில்,

பனை நாரொன்றை எடுத்துச் சுருகுதடம் போட்டார்.

பிறகு அதை மெல்ல கிணற்றுக்குள் விட்டார்.

தனக்கு அருகில் வந்த தடியைக் கண்டதும்.

பாம்பு சங்கு சக்கரம் தெரிய சீறிப்படம் எடுத்து நின்றது.

அப்பு வெகு லாவகமாய் சுருகுதடத்தை,

அதன் கழுத்துக்குள் மாட்டி இறுக்கினார்.

பிறகு அவர் மெல்ல பாம்பை வெளியில் தூக்க,

பெடியள் எல்லாம் கூ...கூ...... என்று குழறினார்கள்.

***

அப்பு அட்டாவதானமாய் 'டக்'கென்று பாம்பை பானைக்குள் போட்டு,

நாரை வெட்டி பானையின் வாயை,

ஒரு 'நெற்றால்' மூடிக்கட்டி பெடியளைப் பார்த்து,

'எடேய் இது நாகபாம்பு விளையாடப்படாது,

பார்த்த ஆக்களைப் பழிவாங்காமல் அது விடாது கவனம்,

இத எங்கேயும் தூரக் காட்டுக்குள்ள கொண்டே விடவேணும்.

இண்டைக்கு நேரமில்ல, நாளைக்குப் பாப்பம்' என்றவர்

'இதோட மட்டும் சேட்டை விடாதைங்கோ' என்று சொல்லிவிட்டு,

ஒரு நீளக்கயிறு எடுப்பித்து பானையைக் கட்டி,

ஊரின் வெறும் வளவிற்குள் கிடந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள்,

அந்தப் பாம்புப் பானையைத் தொங்கவிட்டார்.

***

அடுத்தநாள் காலையில்,

பள்ளிக்கூடத்திற்குப் போகிறபொழுது பார்த்தால்,

எல்லாப் பெடியளும் கிணற்றைச் சுற்றி நின்றார்கள்.

நானும் போய்ப் பார்த்தேன்.

பானைக்குள் இருந்த பாம்பு இடைக்கிடை சீற,

அந்தச்சத்தம் ஒலிபெருக்கியில் கேட்பது போல,

ஓங்காரமாய் வெளிவந்தது.

பஞ்சபுலன்களையும் ஒடுங்க வைக்கும் சத்தம் அது.

மாலை பாடசாலை முடிந்து வரும் போது,

வழக்கமாக பெடியள் விளையாடும் வெறும் வளவுக்குள்,

பெரிய அல்லோலகல்லோலம்.

யாரோ துணிந்து பானையை வெளியில் எடுத்து,

மீண்டும் அதற்கு சுருகுதடம் போட்டுக்கட்டி,

பானையை உடைத்து வெளியில் விட்டிருந்தார்கள்.

***

பாம்பு இப்போது களைத்துப் போயிருந்தது.

வயல் தவளைகளைப் பிடித்துக் கொண்டுவந்து,

அதற்குச் சாப்பிடப் போட்டார்கள்.

அது அவற்றைத் தொடக்கூட இல்லை.

தவளையின் மேலேயே தலையை வைத்து சோர்ந்து கிடந்தது.

பெடியள் செய்த அட்டூழியத்தில்,

கொஞ்சநேரத்தில் அந்தப் பாம்பு செத்தே போய்விட்டது.

தவநாயகம் அப்பு பெடியளைப் பார்த்து,

'எடேய் அதோட தேவையில்லாமல் விளையாடிப் போட்டியள்,

எக்கணம் சோடிப்பாம்பு வந்து அதிட கண்ணைப்பார்த்து,

ஆரார் அதுக்குத் தீமை செய்தவையள் எண்டு கண்டு பிடிச்சு,

பழிவாங்காமல் விடாது' என்று சொல்ல,

பெடியள் அத்தனை பேர் கண்ணிலும் பாம்புப்பயம் தொற்றிக் கொண்டது.

***

பிறகு அப்புவின் ஆலோசனைப்படி அதை,

குளத்தடிக்குக் கொண்டுபோய் முறையாக,

ஈமக்கிரியைகள் செய்தார்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை.

பாம்போடு சேட்டை விட்டவர்கள் அத்தனை பேர் வீட்டிலிருந்தும்,

ஐயனார் கோயில் நாகதம்பிரானுக்குப் பொங்கல் நடந்தது.

எனக்கு ஓரிரு வாரங்கள் கனவிலும் நனவிலும், (தொடரும்)

அந்தப் பாம்பின் நினைவுதான்.

'நான் ஒண்டும் செய்யவில்லை சும்மா எட்டிப்பார்த்தது தான்' என்று,

அடிக்கடி பாம்பின் ஆவியை நினைந்து சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

***

இப்படியே பாம்புக்கதையை இன்னும் நிறையச் சொல்லலாம்.

பிறகு கிராமத்தை விட்டு நாங்கள் நல்லூருக்கு வந்த பிறகு,

பாம்பின் தொடர்பு சற்றுக் குறைந்தது.

ஆனாலும் முற்றாய் விடவில்லை.

நல்லூரிலிருந்த எங்கள் கம்பன்கோட்டத்தின் மேல்மாடியில்,

எங்கிருந்தோ வந்த ஒரு பெரியசாரைப்பாம்பு குடிபுகுந்தது.

அதைத் துரத்தலாம் என்றால் ஊர்க்காரர்கள் விடவில்லை.

'சாரைப்பாம்பு வீட்டில இராத்தங்கினால்,

பெரிய அதிர்ஷ்டம் வரும்' என்று சொல்லி,

அம்முயற்சியைத் தடுத்து விட்டார்கள்.

அந்தக் காலத்தில் தொடர்ந்து சொற்பொழிவும், பட்டிமண்டபமுமாய்,

ஊர் முழுக்கச் சென்று நான் கைநிறைய உழைத்தது உண்மை.

ஒருநாள் கட்டிடத்திற்குப் 'பெயின்ற்' அடிக்க வந்த ஒரு வேலையாள்,

அந்தப் பாம்பைக் கண்டு அடித்துக் கொன்றுவிட்டான்.

அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லாவற்றையும் விட்டு,

கொழும்புக்கு அகதியாய் வந்தோம்.

இந்தச் சம்பவங்களால் இன்றைக்கும் பாம்பு பற்றிய அதிர்ஷ்டக் குறிப்பை,

என்னால் நிராகரிக்க முடியவில்லை.

***

நிறைவாக,

கொழும்புக்கு வந்து பதினைந்து வருடம் முடிந்த நிலையில்,

மீண்டும் யாழ் போகும் வாய்ப்புக் கிடைத்தது.

ஓரிரு தினங்களின் முன் தான்,

என் ஜாதகத்தைப் பார்த்த ஒரு சாத்திரியார்,

'உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்கியிருக்கு,

அதோட ராகு புத்தியும் நடக்கிற படியால்,

ஏதாவது விஷங்களால,

கரைச்சல் வரப்பாக்கும் கவனம்' என்று சொல்லியிருந்தார்.

கொழும்புக்கு வந்த பின் நீண்ட நாட்களாக,

பாம்புத் தொடர்பே இல்லாதிருந்ததால்,

பாம்புகள் பற்றிய பயம் அதிகரித்திருந்தது.

சாத்திரியார் சொன்னதைக் கேட்டபிறகு,

அந்தப்பயம் இன்னும் அதிகரித்தது.

***

அந்தப்பயம் மனதில் நின்றதால்,

யாழ்ப்பாணம் சென்றதும்,

கம்பன் கோட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் தேடினேன்.

அதன் பின்னர் கூட,

கோட்டத்திற்குள் நடமாடும் போது,

நிறைமாத பிள்ளைத்தாச்சியைப் போல,

அடிமேல் அடி எடுத்து வைத்து,

அவதானமாய் நடந்தே வந்தேன்.

ஒருநாள் வெளியில் போய்,

வேலைகள் பார்த்துவிட்டு உள்ளே வந்ததும்,

'பாத்றூம்' அவசரமாக அழைத்தது.

அந்த அவசரத்தில் பாம்பை மறந்து போனேன்.

ஓடிப்போய் நான் அவசரமாய்க் கதவைத் திறக்க,

உள்ளே ஒரு சாரைப்பாம்பு.

அது என்னைப் பார்த்துத் துள்ளிப்பாய,

நான் அதைப்பார்த்துத் துள்ளிப்பாய்ந்து,

'தொப்'பென்று கீழே விழுந்தேன்.

அன்று என் தொண்டையிலிருந்து எழுந்த சத்தம்,

எந்தப் பாஷையைச் சேர்ந்தது என்று,

இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

என் கால் பிரண்டு நான் சரியாய் நடக்க மூன்று வாரமாயிற்று.

***

நிறைவாக அந்தக்காலத்தில் வந்த வாரியார் சுவாமிகள்,

எங்கள் ஊர் பாம்புகள் பற்றிய தன் அனுபவத்தை,

மேடையில் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

வாரியார் ஒருமுறை திருக்கேதீச்சரம் சென்றாராம்.

அங்கு ஓர் மடத்தில் அவரைத் தங்க வைத்தார்களாம்.

கட்டிலில் படுத்து அண்ணாந்து பார்த்தால்,

கூரையில் ஒரு நாகபாம்பு நின்றதாம்.

பயந்து போன வாரியார்,

நிர்வாகிகளைக் கூப்பிட்டு,

பாம்பைக் காட்டினாராம்.

வந்த நிர்வாகி எட்டிப்பார்த்துவிட்டு,

'இது அந்தக் குட்டிப்பாம்பு,

நான் தாய்ப்பாம்பெல்லோ நிற்குதெண்டு பயந்திட்டன்' என்று,

சொல்லிவிட்டு சாதாரணமாய்ப் போய்விட்டாராம்.

மேடையில் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி,

வாரியார் சொல்ல சபை 'கொல்'லென்று சிரித்த காட்சி,

இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.