புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
கடை நிலையிலுள்ள மட்டக்களப்பு கல்வி

கடை நிலையிலுள்ள மட்டக்களப்பு கல்வி

இலங்கையில் ஆகக் கடைசி நிலையில் உள்ள மட்டக்களப்பின் கல்வி ‘அகர முகர எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’. அப்பேற்பட்ட எழுத்தறிவுக்கு சான்றோர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எழுத்தைக் கற்பிக்கும் தொழிலுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போருக்குப் பின்னால் மட்டக்களப்பின் எழுத்தறிவு வீதத்தினை இலங்கையில் கடைசி நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள்.

சென்ற கிழமை சர்வதேச எழுத்தறிவு தினம் மட்டக்களப்பில் சில இடங்களில் கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறுபட்ட உயர்மட்ட நடுத்தர மட்ட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் போன்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இது வரவேற்கத்தக்கது ஏனெனில் மட்டக்களப்பு கல்வி அதிகாரிகளுக்கு இவ்வாறான சர்வதேச முக்கியத்துவம் மிக்க தினங்கள் அவசியமாகும். ஏனெனில் இவர்கள் இப்படியான கொண்டாட்டங்களையெல்லாம் வைத்துவிட்டு உடனடியாக மறந்துவிடுவார்கள். பின்னர் அடுத்த வருடம் இத் தினம் வரும் போதுதான் மீண்டும் நினைப்புவந்து இவ்விழாக்களைக் கொண்டாடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த சர்வதேச விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ தெரியாது.

இதன் காரணத்தினால்தான் மட்டக்களப்பின் எழுத்தறிவு வீதம் 81 வீதமாக குறைவடைந்துள்ளது. இலங்கையில் எழுத்தறிவு வீதம் 92.5 ஆகக் காணப்பட மட்டக்களப்பில் 11.5 விழுக்காடுகள் குறைவடைந்து 25வது இடத்தில் உள்ளது. ஏனெனின் இலங்கையில் 25 மாவட்டங்கள் உள்ள காரணத்தினால் 25வது இடத்தில் உள்ளது. சில நேரம் 50 மாவட்டங்கள் இலங்கையில் காணப்படுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தை 50வது இடத்துக்கு இந்த கல்வி அதிகாரிகள் கொண்டு சென்றிருப்பார்கள். ஏனெனில் மட்டக்களப்பின் எழுத்தறிவு வீதத்துக்கும் இதற்கு அடுத்த மாவட்டத்துக்கும் இடையிலான வித்தியாசம் 4 வீதம் அதிகமாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் 2500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும், 3900க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும் கொண்டமைந்துள்ளது இம் மாவட்டம் 6500க்கும் மேற்பட்ட ஆசிரிய வளத்தினைக் கொண்டுள்ளது. இவ்வாறான பாரிய மனித வளத்தினைக் கொண்டமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுத்தறிவு வீதம் வெகுவாகக் குறைந்தமைக்கான காரணம் என்ன என்பதற்கான எந்தவித செயல்பாடும் இன்னும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் மொத்தம் ஆண் பெண்

மட்டக்களப்பு 81 83.9 78.5

அம்பாறை 91.9 94 89.9

திருகோணமலை 89.6 92.5 87

இலங்கை 92.5 93.5 91.6

போரால் அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் உயர்வாகவுள்ளது. போரால் முற்றாக அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எழுத்தறிவு வீதம் 92.8 விதமாக உள்ளது. இது இலங்கையின் எழுத்தறிவு வீதத்தினை விட உயர்வாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. பாரிய உயிர் அழிவுகளுக்கு மத்தியில் இம் மாவட்டத்தில் உள்ள கல்வியுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் இந்த நிலையினைத் தக்கவைப்பதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பினை இலகுவாக மதிப்பிட முடியாது. இதற்கு அருகில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் எழுத்தறிவு வீதம் மட்டக்களப்பினை விட 85.3 வீதம் உயர்வாகவே உள்ளது. இவை அனைத்தையும் உற்று அவதானிக்கும் போது மிக மோசமான எழுத்தறிவு கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளமையானது இலவசக் கல்வியினால் பயனடைந்த மக்கள் அனைவருக்கும் வருத்தம் தரும் விடயமாகும்.

வடக்கின் எழுத்தறிவு வீதம் ஆண் பெண் மொத்தம்

கிளிநொச்சி 88.2 82.7 85.3

முல்லைத்தீவு 93.2 92.5 92.8

மன்னார் 96.4 94.8 95.5

வவுனியா 97.1 94.6 95.8

யாழ்ப்பாணம் 97.1 94.6 95.7

மலையகத்தின் எழுத்தறிவு வீதம்

எமது நாட்டின் கல்வி நிலையில் பின் தங்கிய கல்வி அடைவு மட்டத்தினைக் கொண்டுள்ள மலையகத்தின் எழுத்தறிவு வீதமானது மட்டக்களப்பினை விட உயர்வாக உள்ளது. இங்கு விசேடத்துவமிக்கதாகும். நுவரெலியா மாவட்டத்தின் எழுத்தறிவு வீதம் 86.1 வீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 91 வீதமாகவும் பெண்களின் எழுத்தறிவு வீதம் 82 வீதமாகவும் உள்ளது.

எனவே தற்போதைய கல்வி நிலையினை அவதானிக்கும் போது மலையகத்தின் ஆரம்ப கல்வி நிலை மிகவும் உறுதியான நிலையில் உள்ளதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. விழாக்களில் பொழுதுபோக்கும் கல்வி அதிகாரிகள் ஒரு ஆண்டில் மூன்று தவணைகளைக் கொண்ட பாடசாலையில் ஒரு தவணை 12 வார காலத்தினை உள்ளடக்கியுள்ளது. இதில் சாதாரணமாக ஒரு பாடசாலையில் ஒரு வருடத்தில் பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலை நாட்கள், ஆசிரியர் தினவிழா, விசேட சமய விழாக்கள் மற்றும் சர்வதேச விழாக்கள் என பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றது.

இவ்விழாக்களுக்கு பிரதம அதிதிகளாகக் கல்வி அதிகாரிகள் கலந்துகொள்ளும் போது அதில் ஒருநாள் முழுமையாக செலவு செய்கின்றார்கள். இதன்போது இவர்களுக்கு மாலை போட்டு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து பொண்ணாடை போர்த்தி மதியச் சாப்பாடு கொடுத்து மகிழ்விப்பார்கள்.

இவ்வாறு ஒரு கிழமையில் ஒருநாள் இதற்காகவும், வெளிக் கூட்டங்களுக்காக கிழமையில் ஒருநாளும், அத்தோடு பரீட்சைக் கடமைகள் மற்றும் கூட்டங்கள் என காலம் செலவு செய்யப்படுகின்றது. மேலும் தங்கள் வருமானம் கருதி கற்பித்தல் மேற்பார்வை, சொந்த லீவு என இவ்வாறு காலத்தினைக் கழிக்கும் சில கல்வி அதிகாரிகள் எப்படியோ அலுவலகத்தில் அதிகாரிகள் காணப்பட்டால் அதிலும் இரண்டு கையடக்க தொலைபேசியில் மாறி மாறி உரையாடுவதில் காலத்தினை செலவு செய்வதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பார்க்கின்ற போது மட்டக்களப்பு கல்வி அலுவலகங்களில் கல்வி அதிகாரிகள் செலவிடும் காலம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதோடு இவர்களை கல்வி அலுவலகங்களில் சந்திப்பது மிகக் கஷ்டம் என்பது அதிபர்களின் முறைப்பாடாகும். இதற்கு இவர்கள் கூறும் காரணம் பாடசாலை மேற்பார்வை என்பதாகும். இது சரியான முறையில் மேற்கொண்டிருந்தால் ஆகக் குறைந்தது மட்டக்களப்பு 24வதுக்காவது எழுத்தறிவு வீதம் வந்திருக்கும்.

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் ஈடுபாடற்ற தன்மை மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுத்தறிவற்ற 19 வீதமானவர்களில் 80 வீதத்துக்கு கூடுதலானவர்கள் தமிழ் மாணவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இதிலும் 75 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் போர் நடைபெற்ற படுவாங்கரை பிரதேசத்தில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகின்றது. போருக்குப் பின்னர் கூடுதலான ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அடைவு மட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கல்விக்கு, கல்விக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்காத கிழக்கு மாகாணசபை கிழக்கு சபையின் தோற்றத்துக்குப் பின்னர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விசேட கல்வி திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. மட்டக்களப்பில் போரால் பாதிக்கப்பட்ட படுவாங்கரை மற்றும் வாகரை பிரதேசத்துக்கான கல்வி அபிவிருத்தி தொடர்பான திட்ட வரைவு காணப்பட்ட போதிலும் அவை எழுத்து வடிவில் மாத்திரமே உள்ளது. இதனை அமுல்படுத்தவோ அல்லது இதன் மதிப்பீட்டினை மேற்கொண்டு அதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அதிகாரிகள் தயார் இல்லாத காரணத்தினால்தான் இன்று மட்டக்களப்பின் கல்வி நிலை இவ்வாறு உள்ளது.

தூக்கம் கலையாத கிழக்கின் கல்வி அமைச்சர் மத்திய அரசில் அமைச்சு பதவி வேண்டாம் எனக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இன்று மாகாணத்தில் உள்ள அமைச்சுப் பதவிக்காகவும், மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவருக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அடிபடுவதனைக் காணலாம். இந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கல்வி அமைச்சர் வழங்கட்டது. இவ் அமைச்சை தமிழர் ஒருவருக்கு வழங்கக் காரணம் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் கல்வியினை அபிவிருத்தி செய்வதாகும். இதற்காக கல்வி அதிகாரியாக இருந்த ஒருவரை தெரிவு செய்தார்கள். இவரிடம் கல்வி முன்னேற்றத்தக்கதான எந்த திட்டமும் இல்லை என்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கான விசேட திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் அற்ற கல்வி அமைச்சராக உள்ளார் என்றும் சக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பின் கல்வி இவ்வாறு இருப்பதற்கு இவருக்கும் இவரது செயலாளருக்கும் பங்கு உண்டு கல்வி அமைச்சர், கடந்த காலத்தில் மாகாண பணிப்பாளராக இருந்தவரும், இவரது செயலாளர் நீண்ட காலம் மட்டக்களப்பில் கல்வி அதிகாரியாக இருந்து விதைத்த விதையின் விளைச்சல்தான் தற்போது அறுவடை செய்யப்படுகின்றது. படுவாங்கரையில் பல கிராமங்கள் இன்று முன்பள்ளி இன்றி காணப்படுகின்றது. அதைப் போல் ஆரம்பப் பாடசாலை அமைக்கக்கூடிய பகுதிகள் இருந்தும் இன்னும் இவரால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

ஆசிரிய இடமாற்றம் வடக்கு மாகாணசபை தோற்றத்துக்கு பின்னர் முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை என்னவென்றால், நீண்ட காலம் ஒரே பாடசாலையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்தமை அதைப்போல் தேசிய பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமை இவ்வாறான பல நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபை உடனடியாக மேற்கொண்டது. ஆகவே புதிய திட்டங்களை மேற்கொள்ள தெரியாவிட்டால் வடக்கின் கல்வி அமைச்சின் செயற்பாடுகளை பிரதிபண்ணலாம். இதற்கு கல்வி அமைச்சருக்கான செயலாளர் ஒரு சாதனையாளராக இருக்க வேண்டும். இல்லையேல் தமிழ் ஈழம் கேட்டு போராடிய தமிழனுக்கு மாகாண சபையே நடத்தத் தெரியாது இதனால்தான் மத்திய அரசின் அமைச்சுப் பதவியினை விரும்பவில்லை என்ற பெயருக்கு இவர்கள் காரணமாகிவிடுவார்கள்.

இவ்வாறான கட்டத்தில் கற்றவர்கள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரண்டு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கும் மட்டக்களப்பின் இந்த கல்வி நிலைக்கும் தொடர்பு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது.

அரசியலுக்கு கல்வியை ஆயுதமாக பாவிக்கும் அரசியல்வாதிகள் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்ய முடியாத மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வதற்காக கல்வியினை ஆயுதமாக பாவிக்கும் பழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. கடந்த ஆட்சிக் கலத்தில் சைவ ஆயத்தினை மையமாகக் கொண்டு அரசியல் செய்த அரசியல்வாதி மேலும் மக்கள் மத்தியில் நான் கல்வியில் பாரிய பங்களிப்பு செய்கின்றேன் என்பதற்காக கிராமங்களுக்கு சென்று மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி வருகின்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.