புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

பீடாக்காரன்

பீடாக்காரன்

“வாங்களன்... வாயில போட்டுக்கிட்டு... போங்களன்!” இந்தக் குரலின் சொந்தக்காரன். அவன்தான் பீடாக்காரன். வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்கள் வாழுகின்ற அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இவன் காட்சியளிப்பான்.

சுள்ளியான தோற்றம், காகத்தின் நிறத்தைவிடச் சிறிது வெள்ளையாக விருப்பான். நீளக்காற்சட்டை, கறுப்புக் கோட்டு, அதற்குப் பொத்தான்கள் இல்லை. தலையில் ஒரு பன்தொப்பி அணிந்திருப்பான்.

அவனது இடுப்பிற்கு மேல், நெஞ்சின் கீழாக ஒரு பலகையிலான பெட்டி, அதற்குப் பட்டி போட்டு தோளிற்கு மேலாக கட்டியிருப்பான். ‘கிறிஸ்மஸ்’ காலத்தில் சவுக்கு மரக்கன்றுகளை சோடிப்பது போல், மின்சார பல்ப்புகளால் சோடித்திருப்பான். இரவு வேளைகளில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு செல்லும் பேருந்து வண்டிகளில் பல வர்ண வெளிச்சங்சகள் ஜொலித்துக் கொண்டிருப்பது போல அவனது பீடாப் பெட்டி ஜொலித்துக் கொண்டிருக்கும்.

‘வண்டி சென்றுவிடும்... நான் நின்றுவிடுவேன்....’ அந்தப் பீடாக்காரன்தான் வந்து விட்டான்... அவனைக் கண்டுவிட்டால் எனக்குச் சந்தோசம்... அவன் பேசுவதையெல்லாம் மெய்மறந்த நிலையில் நான் ரசித்துக் கொண்டிருப்பேன்.

நானும் அவனைப் போல் காடுகள், தேசங்கள் அனைத்தும் சுற்றி வருபவன். எனது தொழில் அப்படிப்பட்டது. அவனைப் பற்றி நான் நன்றாக அறிந்திருக்கின்றேன். இருபத்தைந்து சதக் குற்றியைக் கொடுத்து அவனிடம் பீடா வாங்கி வாயில் போட்டி மென்று ருசிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். இப்போது ஒரு பீடாவின் விலை இருபத்தைந்து ரூபாய்.

ஐயா... டியூட்டியா?...

என்று என்னிடம் கேட்பான்.

நான், இப்போது பதியத்தலாவைக்குச் செல்லும் பேருந்து வண்டியைப் பார்த்துக் கொண்டு, அம்பாறை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு, பீடாக்காரனுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். பீடாக்காரனின் மார்பில் பீடாப்பெட்டி கிடப்பது போல், எனது தோளில் துப்பாக்கி கிடக்கும்.

அப்போதெல்லாம், ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெறவில்லை. நான் தான் முதன் முதலில் துப்பாக்கியுடன் காடு கரம்பைகள் எல்லாம் சுற்றி வருபவன். அதனை நினைக்கும் போதெல்லாம் இன்றும் பெருமையடைவேன். மட்டக்களப்பு வனகாரியாலத்தின் கீழ் தொழில் புரிந்த வன அதிகாரிகளில் நான் ஒருவன் தான் துவக்குத் தூக்கிக் கொண்டு கடமைக்குச் செல்லும் வன அதிகாரியாகப் பெயர் பெற்றிருந்தவன்.

கொழும்பு தலைமைக் கந்தோரிலிருந்து காடுகளைச் சுற்றிப் பார்க்க வரும் காட்டுராஜாமாரின் ஜீப் வண்டிகளில் துவக்குடன் முன் ஆசனத்தில் இருப்பவனும் நான்தான். காட்டுப் பாதைகளில் கரடி, புலிகள் குறுக்கிட்டால் துவக்குடன் பாய்ந்து சுட்டுக் கலைத்துவிடுவேன். மாதமொன்றுக்கு ஒரு தோட்டாப் பெட்டி கிடைக்கும். அதில் உள்ள சன்னத் தோட்டாக்களை இரண்டாகப் பிரித்துக் கட்டி எவருக்கும் தெரியாமல் காட்டுக் கோழி முயல்களைச் சுட்டுக் கறிசமைத்துவிடுவேன்.

“என்ன சார்... துவக்கோட சுற்றித் திரியிறியன்... இறைச்சி ஏதும் அம்பிடாதா? கிடைச்சாக்கா... என்னையும் கவனியுங்க சார்!...”

கல்முனை பேருந்து நிலையத்தில் வைத்து, அந்தப் பீடாக்காரன் என்னிடம் கேட்டு விட்டான். அவனும் நானும் மிக நெருங்கிய கூட்டாளிகளாக மாறி விட்டோம்.

ஊரில் கோவில் திருவிழாக்கள் தொடங்கி விட்டால் அவன்பாடு கொண்டாட்டம் தான்.

கோவில் தெரு வீதிகளை சுற்றி சுற்றி வலம் வந்து பீடா விற்பான்.

‘ஜில் ஜில் பீடா... வாங்களன் வாயில போட்டுக் கிட்டுப் போங்களன்...’

அவன் வெறும் பீடாக்காரன் மட்டுமல்ல, ஒரு கவிஞனும் கூட,

‘ஜில் ஜில் நீ இந்தியாக்காரனா? இலங்கையனா?... மலைநாடா?...’ என்று யாரும் கேட்டு விட்டால், அவனுக்குப் பொல்லாத கோபம் வந்துவிடும்.

நான் ஒரு வீதிப் பாடகன். என் பெயர் ஜில் ஜில்’ என்று கூறிவிட்டுப் பீடா விற்பதில் கண்ணாயிருப்பான்.

‘வாங்களன்... ஜில் ஜில் பீடா...’

ஒரு கிள்ளு, ஒரு தள்ளு... ஒரு மெல்லு....

வண்டி சென்று விடும்.... நான் நின்று விடுவேன்.

நான், அவனுடன் பழகிய நாட்களில் சில விடயங்களை அவன் பற்றி அறிந்து கொண்டேன்.

அவன் வெறும் பீடாக்காரன் மட்டுமல்ல தெருப் பாடகனாகவும் விளங்கியவன். அவன் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவன் பிறந்த கிராமம் சரியாகத் தெரியவில்லை. என்னிடம் அதனை மூடி மறைத்து விட்டான்.

மட்டக்களப்பு பதுளை வீதியில் அந்நாட்களில் வாரச் சந்தைகள் நடைபெறும். பிபிலை தொடக்கம் பதியத்தலாவ, சேரன்கடை, மஹாஓயா, புல்லுமலை, கிரான் ஆகிய ஊர்களில் எல்லாம் வாரத்தில் ஒருநாள் அடுத்தடுத்து சந்தைகள் நடக்கும். சந்தைகள் நடக்கும் நாட்களில் எல்லாம் அங்கு பீடாக்காரனையும் சந்திக்க முடியும். அந்த ஊர்களில் உள்ள சிறுசேனைச் செய்கையாளர்கள் வன திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்து, காடுவெட்டி சேனைப்பயிர்கள் செய்வதுடன் வன திணைக்களத்தால் வழங்கப்படும், மரக்கன்றுகளையும் பெற்று நட்டு மீள் காடு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள், அவர்கள் வாரம் ஒருநாள் கூடும் சந்தைக்கும் வருவார்கள். அவர்களைச் சந்திக்கச் செல்லும் நான் பீடாக்காரனையும் சந்திக்க தவறுவதில்லை.

சந்தையில் சலங்கைச் சத்தம் கேட்கும் இடத்தினைக் கவனித்ததால் அவன் நின்று கொண்டிருப்பான். அவன் பின்னால் இளைஞர்கள் கூட்டம் சிறுவர் கூட்டம் எல்லாம் கூடிவிடும். அவனது பாட்டிலும் பேச்சியிலும் மயங்கிய அவர்கள் மெய்மறந்து போவார்கள்.

அவன் பின்னாலேயே அந்தக் கூட்டத்தினரும் சுற்றி வருவார்கள். பீடா வாங்குவதற்கு காசில்லாமல் நிற்பவர்களையும் அவன் லேசில் கண்டுபிடித்து விடுவான். அத்தனை ருசி மிக்கது. அவனது பீடா வாயில் போட்டு மெல்லுவதற்கு ஆசை. ஆனால் காசுதான் இல்லை. அப்படியானவர்களை கண்டுபிடித்து இரகசியமாக ஒரு பிடாவைத்தூக்கிக் கொடுத்து. ஓடிவிடு. யாரிடமும் சொல்லிவிடாதே... என்றும் கூறிவிடுவான்.

காசு வாங்காமல் சும்மாவும் பீடா கொடுக்கிறான் என்று சனங்சகள் அறிந்து விட்டால் அவன் பாடு அதோ கதிதான் என்பதும் அவனுக்குத் தெரியாமலில்லை.

வாரச் சந்தை கூடும் நாட்களில் அவனுக்கு பெண் சிநேகிதிகளும் ஒரு சிலர் உள்ளார்கள் என்பதும் எனக்கும் தெரியாமலில்லை. அவனது அழகில் மங்கியல்ல.... அவனிடம் ஒரு பீடாவை ஓசியில் வாங்கி, வாயில் போட வேண்டும் என்று சில பெண் பிள்ளைகள் அவன் பின்னால் திரிவார்கள். சில பேர் இருக்கிறார்கள். ஓசியில் வாங்கி வெற்றிலை போடுவது. பீடி குடிப்பவனைக் கண்டால் அவனிடம் பீடிக் குறளையாவது வாங்கி ஒரு டம் இழுப்பது போன்ற செயல்களில் இன்பம் காண்பார்கள். அதனால் தான் என்னவோ... எம் மத்தியில் ஒரு பழமொழியும் உள்ளது.

“ஓசியில் கிடைச்சா...” பொலிடோலும் குடிப்பா போல...

நான், நாட்டுப் பிரச்சினை காரணமாக, ஓய்வுபெறும் கடைசி வயது வரையும் வேலை செய்யாது. பென்சனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு குடும்பத்தாருடன் கொழும்புக்கு ஓடிவிட்டேன். நாற்பத்தி நாலு வயதில் ஓய்வுபெற்றதால் எடுக்கும் பென்சன் பணம் காணாத நிலையில் இருந்தேன். பீடாக்காரனின் நிலையும் அப்படிப் பட்டது தானாம்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை செய்த எனது நண்பனின் துணையுடன், அப்பத்திரிகை நிறுவனத்தில் ஒப்புநோக்காளர் பதவிக்கு தெரிவானேன். பத்திரிகை நிருபராக கடமையாற்றிய அனுபவமும் எனக்கிருந்தது. சேரிப்புறமொன்றில், ஒரு பரப்பு காணி வாங்கி சொந்தத்தில் வீடு கட்டி குடியிருப்பாளனாகி வாக்காளர் டாப்பிலும் பதிவு செய்தாகி விட்டது.

பத்திரிகை நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தினைவிட தூதுவராலயங்களில் வேலை செய்தால், கூடிய சம்பளம் கிடைப்பதாக ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த எனது இன்னுமொரு நண்பன் கூறினான். அவனது உதவியால் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன். அங்கும் செய்தி வாசிப்பவர்களுக்கான குரல் தேர்விலும் தெரிவாகினேன். அதனையும் விட ஜப்பான் தூதுவராலயத்திலும் எனக்கு பாதுகாப்பு உத்தியோத்தர் பதவியும் கிடைத்து விட்டது.

எதைச் செய்வது என்று தெரியாதநிலை... பீடாக்காரனின் நிலையும் அதே நிலை தானாம்.... என்று ஒருநாள் என்னிடம் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. எந்தப் பேருந்து நிலையத்திற்கு சென்று கூடிய பணம் சம்பாதிக்கலாம் என்ற சிந்தனைதான் அவனுக்கு.

செக்குறுட்டி வேலை செய்வது என்பது சுலபமான காரியம் இல்லை இரவு வேலை கிடைத்தால் வங்கினாவைச் சுற்றி வரவேண்டும். நேரத்திற்கு நேரம் பஞ்சிங் செய்ய வேண்டும். சிலர் கதிரையில் அமர்ந்தவாறு காலை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் நித்திரை செய்கிறார்கள் என்ற சங்கதி எனக்கு மட்டும் தான் புரியும்.

கள்ளனுக்குத்தான் இன்னொரு கள்ளனைப் பற்றித் தெரியும் என்பது பழமொழி. பால்சேனையில் செக்குறுட்டி வேலை செய்த எனது இன்னுமொரு நண்பனும் அப்படித்தான் காலை ஆட்டியவாறு தூங்கிக் கொண்டு கடமையாற்றியதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

‘ஜில் ஜில் லும்... அப்படித்தான் பீடாப் பெட்டியுடன் நடையில் செல்லும் போதே ஒரு தூங்கி எழுந்து விடுவான் என்ற சங்கதியும் எனக்கு மாத்திரம் தான் தெரியும். அந்த வேளையினைப் பார்த்து சில களவாணிப் பயல்கள். ஒன்றிரண்டு பீடாக்களை பெட்டிக்குள் கைபோட்டு அபகரித்து ஓடிய சம்பங்களும் நடந்ததுண்டு ‘ஜில் ஜில்லுக்கு அது தெரியும். என்ன செய்வது?...

‘பேய்கள் ஆட்சி செய்தால்... பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்பது பழமொழி.

ஜில் ஜில்லின் வாழ்க்கையானது பேருந்து நிலையங்களிலும் கோயில் திருவிழாக்களிலும் சந்தை கூடும் நாட்களினும் கழிந்துவிடும். பேருந்து நிலையத்தில் சனங்களின் நடமாட்டம். சூழ்நிலைகளைக் கவனிப்பான். அந்த இடங்களில் பீடா வியாபாரம் போகாது என்று அறிந்து விட்டால் வந்த வண்டியிலேயே ஏறி மீண்டும் ஊருக்கு கிளம்பி விடுவான்.

நான் பதியத்தலாவையில் வேலை செய்த போது அன்று சந்தை கூடும் நாள். ‘ஜில்... ஜில்...’ பீடாப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான். காலையில் சாப்பிட்ட வாய்க்கு ஒரு பீடா போட வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. என்னை அவன் கண்டுவிட்டான்.

‘வாங்க சார்... காலை சாப்பிட்டாச்சா... பீடா ஒண்ணு போடுங்க சார்...’ என்றான்.

பீடாவினை வாங்கி காசு கொடுக்க ஆயத்தமான போது...

‘வாணா சார்... உங்களிட்ட சல்லி வாங்கிறதா?...’

என்று கூறிய நல்ல மனமும் அவனிடம் இருந்தது....

உனக்குத் தெரியுமா? ஜில்... ஜில்... இந்தப் பதியத்தலாவை ஊரிய... அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் ஐம்பத்தெட்டு வன்செயலில்... மட்டக்களப்பு வரையில் அகதிகளாக உடுத்த உடுப்போட ஓடி, மாதக் கணக்காக ஏதிலிகளாக வாழ்ந்த வரலாறு... என்று கேட்க... எனக்கும் அது தெரியும் சார்... என்றான்.

அப்போது தான் என்னிடம் கூறினான்.

ஜில் ஜில் பீடாவிற்கும் வியாபாரி மாத்திரம் அல்ல... அவன் பல பாடல்களையும் இயற்றியுள்ளான்.

‘படுகொலைச் சிந்து’, ‘மலைக்காட்டு’ ‘மகாராஜா’, ‘குரலோசை’, ‘பரிதாபகீதம்’, ‘அண்ணாவின் மறைவு’ என்னும் தலைப்புகளில் எல்லாம் பாடல் நூல்களை வெளியிட்டுள்ளான். என்பன வெல்லாம் பின்னாளில் நானறிந்த வைகள். பழைய சினிமாப் பாடல்களில் வரும் ‘மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயல் காட்ட உழுதிப் போடு சின்னக் கண்ணு’... என்ற பாடல் மெட்டில் ஜில் ஜில் அழகாகப் பாடும் பாடல் ஒன்று.

“இந்தியாவில் பெண்ணைக் கட்டி...

இலங்கை வந்து மண்ணை வெட்டி...

கண்ட பலன் ஒண்றுமில்லை சின்னத்தம்பி”

பேருந்து நிலையத்தில் நின்றவாறு ‘ஐபார் சுல்தானின்’ கடந்தகால சம்பவங்களை நினைத்தவாறு நின்று கொண்டிருந்த நான், எனது ஊருக்குச் செல்லும் பேருந்தினை தவறவிட்டு விட்டேன். இன்னும் அரை மணி நேரம் நான் கால் கடுக்க நின்றாக வேண்டும்...

(யாவும் கற்பனை)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.