புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
கவிமணி த. துரைசிங்கத்தின் மூன்று படைப்புகள்

கவிமணி த. துரைசிங்கத்தின் மூன்று படைப்புகள்

அண்மையில் கலை இலக்கிய ஊடக பெருமன்றம் நடத்திய “பாரதி விழா” வில் ‘மகாகவிபாரதி’ இயல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட தமிழ் தொண்டாளர் கவிமணி த.துரைசிங்கம் எழுதி வெளியிட்ட மூன்று புடைப்புகளின் அறிமுகமும் அன்றைய விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது விழாவில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களும் பாடசாலை மாணவர்களுக்கும் உயர் கல்வி கற்பவர்களுக்கும் ஏன் இன்றைய கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களையும் தரவுகளையும் கொண்டது.

முதலில் தமிழ் இலக்கிய களஞ்சியத்தைப் பார்ப்போம். “குழந்தைப் பாடல்களையும், பல தமிழ் இலக்கிய நூல்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கி அரிய தமிழ்ப் பணியை அமைதியுடனும், அடக்கத்துடனும் ஆற்றிவரும் இலக்கிய வித்தகம் கவிஞர் த. துரைசிங்கம் மீண்டுமொரு தமிழ்ப் பணியைச் செய்துள்ளார். சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியம், இலக்கிய படைப்பாளிகள், தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தமிழ் இலக்கியக் களஞ்சியம் என்னும் இந்நூல் அவருடைய தொடர்ச்சியான தமிழ்ப்பணியைச் சுட்டிக் காட்டும் பயனுள்ள படைப்பாகும் என்கிறார் அணிந்துரை வழங்கி பேராசிரியர் சோ. சந்திரசேகரன்.

‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்’ என்ற இந்நூல் 322 பக்கங்களில் கனதியான, காத்திரமான தகவல்களை கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. தகவல்கள் அகர வரிசையில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

கவிமணி துரைசிங்கத்தின் இரண்டாவது நூல் பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்” என்பதாகும் சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வாழ்ந்த பதினாறு புலவர்களின் புலமைத்திறன் குறித்து கூறும் நூல் ஈழத்துப் பூதத் தேவனார் முதல் நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் வரை நூலில் இடம் பெற்றுள்ளனர். மலையக இலக்கியத்தின் மூலவர்களில் ஒருவரான அருள்வாக்கி அப்துல் காதர் புலவரும் இடம் பெற்றுள்ளார்.

இன்று ஈழத்தமிழ் இலக்கியங்களை பாடசாலைகளில் கற்கின்ற இடைநிலை, உயர் தர வகுப்பு மாணவர்கள் மிகவும் பயன் பெறத்தக்க நூல் இதுவாகும் மேலும் பல்கலைக்கழக மற்றும் தமிழாய்வு நிலை மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது. பல்வேறு தகவல்களையும் தமது தேடல் முயற்சியினூடாகப் பெற்று ஆவணப்படுத்தியுள்ள நூலாசிரியரின் தூர நோக்குச் சிந்தனையும் பணியும் பாராட்டுக்குரியனவை என்கிறார் கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசு.

கவிமணியின் மூன்றாவது நூல் ‘கட்டுரைக் களஞ்சியம்’ என்பதாகும். கட்டுரை எழுதுவது என்பது ஒரு கலை. அதனால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார். இந் நூலில் 55 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்த பொழுது நூலாசிரியரின் தேடலும், கடும் உழைப்பும் மிக முக்கியமானது. நான் அடிக்கடி கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் நூலாசிரியரை பாத்திருக்கிறேன். எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பார்.

கட்டுரைக்களஞ்சியம் உள்ள நூலில் முதல் கட்டுரை “வாசிப்பு பழக்கத்தை வளர்த்தல்” என்பதே, மாணவர்கள் மாத்திரமல்ல நாமும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சில முக்கிய கட்டுரைகளின் தலைப்புகள், மலையகத்தமிழிலக்கியம், புதுக்கவிதை அன்றும் இன்றும், தமிழில் மொழி பெயர்ப்பு முயற்சிகள், பாரதியும் வசன கவிதையும், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கான புதுமைப்பித்தனின் பங்களிப்பு, விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் பணியும், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாவல் வளர்ச்சி, நவீன சிறுகதை வளர்ச்சிக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பு, புரட்சி கவிஞர் பாரதிதாசன், விண்வெளி ஆய்வுகள், இலங்கையில் தோன்றிய பள்ளு இலக்கியங்கள். இப்படி பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்டுரைகள் மூலம் கவிமணி பன்முக ஆற்றல்கள் வெளிப்படுகின்றன.

கவிமணி துரைசிங்கம் சிறுவர் இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் இதுவரை 45 சிறுவர் நூல்களையும் பதினைந்து கட்டுரை நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட பாட நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர்களின் இலக்கிய பணி பாராட்டுக்குரியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.