புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
பலதும் பத்தும்

காப்பீட்டு பணத்திற்காக மனைவியை

கொ^ரமாக கொன்ற கணவன்

அமெரிக்க நாட்டில் மனைவியின் காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக அவரை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவனை பற்றி வெளியான அடுத்தடுத்த தகவல்கள் பொலிஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொலோராடோ நகரில் Harold Henthorn என்ற நபர் தன்னுடைய இரண்டாவது மனைவியான Toni Henthorn என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அதனை கொண்டாட திருமண நாள் அன்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு Rocky Mountain என்ற தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து உயர்வான ஒரு பகுதியில் இருந்து தனது இரண்டாவது மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பொலிஸாரிடம் தன்னுடைய மனைவி புகைப்படம் எடுக்கும்போது கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என நாடகமாடியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சம்பவத்தின் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், அந்த நபரின் முதல் மனைவியான Sandra L:ynn Henthorn என்பவரும் 1995ம் ஆண்டு சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்துள்ளது தற்போது அந்த நபரின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

முதல் மனைவி காரில் இருந்த ஒரு சக்கரத்தை நீக்கியபோது கார் அவர் மீது விழுந்து உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரிடம் அப்போது கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் நபரின் மீது சந்தேகம் ஏற்படாததால், எந்த வழக்கும் பதியப்படவில்லை.

ஆனால், தற்போது இரண்டாவது மனைவியும் எதிர்பாராமல் இறந்துவிட்டதாக அந்த நபர் கூறுவதை ஏற்காத பொலிஸார் கடந்த 2 வருடங்களாக பல்வேறு விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதில் இரண்டாவது மனைவி மீது மில்லியன் டொலர்கள் அளவில் காப்பீட்டு பணம் உள்ளதால், அதனை பெறுவதற்காக தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இரண்டாவது மனைவியின் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல் மனைவியின் மரணம் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எய்ட்ஸ் நோயை கண்டுபிடிக்க நவீன கருவிகள்

எயிட்ஸ் நோய் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை செல்வதற்கு பெரும்பாலானவர்கள் தயக்கம் காட்டுவதால், வீடுகளிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் நவீன கருவிகள் தற்போது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தான் தற்போது இந்த கருவிகள் பொது விற்பனைக்கு அதிகாரப் பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த AAZ என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த எயிட்ஸ் பரிசோதனை செய்யும் கருவியை மருத்துவரின் அனுமதி இல்லாமலேயே 25 முதல் 28 யூரோக்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சரான Marisol Touraine பேசியபோது, தற்போது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த கருவிகள் மருத்துவமனை பரிசோதனைக்கு ஒரு மாற்று ஏற்பாடு அல்ல.

இருப்பினும், இந்த கருவிகள் மூலம் எயிட்ஸ் நோயை தடுப்பதற்கும், அந்த நோயை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவும். மருத்து வமனை சென்று எயிட்ஸ் நோய் இருக்கிறதா என தெரிந்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டிலிருந்த படியே இந்த கருவிகள் மூலம் கண்டு பிடித்துக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் /பேஸ்புக்கில் தவறான கருத்து
பரப்பிய நபருக்கு 4 மாதச் சிறை தண்டனை

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல்லோ என்ற 28 வயது இளைஞர் சிங்கப்பூரில் நர்ஸ் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் மக்கள் தோல்வியாளர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், சிங்கப்பூர் மக்களிடமிருந்து நாம் (பிலிப்பைன் காரர்கள்) வேலைகளை எடுத்துக் கொண்டோம். அவர்களின் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டோம். அவர்களின் பெண்களை எடுத்துக்கொண்டோம்.

இன்னும் சிறிது காலத்தில் அந்தத் தோல்வியாளர்களை சிங்கப்பூரை விட்டே வெளியேற்றுவோம். சிங்கப்பூர் விரைவிலேயே பிலிப்பைன்ஸின் ஒரு மாகாணமாக ஆகப் போகிறது. சிங்கப்பூரில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படப் பிரார்த்திக்கிறேன்.

அப்படி எதுவும் நடந்தால் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.

சுமார் 600 லைக்குகள் வேறு அந்தப் பதிவிற்கு. பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த போஸ்ட்டை நீக்கிய பெல்லோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹெக் செய்து விட்டார்கள் என்று காவல்துறையில் புகார் ஒன்றிணை அளித்தார். ஆனால் இதேபோன்ற மேலும் சில பதிவுகளை அவர் கடந்த ஆண்டும் பகிர்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரச்சினைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்தது, காவல்துறை அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்தது என்ற புகார்களின் அடிப்படையில் அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து நீதிபதி சிவசண்முகம் தீர்ப்பளித்தார். சிங்கப்பூர் அரசின் முடிவை பிலிப்பைன்ஸ் அரசு வரவேற்றுள்ளது.

பெங்காலி புலிக்கு இரையான சாரதி

சிறுத்தையொன்று நடுச்சந்தியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின் உயிரை பரிதாபகரமாக பறித்த சம்பவம் பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி, வாகனத்தரிப்பிடத்தில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு அயர்ந்து நித்திரை கொண்டுள்ளார். இந்நிலையில் கொங்ரீட்டினால் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பெங்காலி புலியின் சிலையானது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானின் மீது விழுந்துள்ளது.

இவ்விபத்தில் வான் நசிந்துள்ளதுடன் அயர்ந்து நித்திரைகொண்ட முச்சக்கரவண்டி சாரதியின் மீதும் விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு புலியின் சிலையை அப்புறப்படுத்தினர். உயிருக்கு போராடியவாறு காணப்பட்ட சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏலவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மொஹமட் அலி என்ற 42 வயது நபரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உறுதியற்ற நிலையில் காணப்படும் இச்சிலை குறித்து உள்ளூர்வாசிகள் ஏலவே அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே மேற்படி நபரின் மரணமும் சம்பவித்துள்ளது. இந்நிலையில் உள்ளூர்வாசிகள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

மலைச்சிங்கத்திடம் இருந்து 2 வயது மகளை
காப்பாற்றிய தந்தை

கனடா - பிரிட்டிஷ் கொ லம்பியா, வன்கூவர் ஐலன்டில் விரைவாக சிந்தித்து செயலாற்றி கை முட்டியை உபயோகித்து மலைச்சிங்கம் ஒன்றிடமிருந்து தனது இரண்டு வயது பெண் குழந்தையை தந்தை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

பிறி நெல்சன் என்ற 2 வயது சிறுமி அவர்களது வீட்டின் கொல்லைப் புறத்தில் பெற்றோருடன் இருந்த போது இளம் மலைச்சிங்கம் ஒன்று சிறுமிக்கு பின்னால் பதுங்கி சென்று அவளை தாக்கியது. பெற்றோரும் ஆரம்பத்தில் அது ஒரு நாய் என சாதாரணமாக நினைத்து விட்டனர். ஆனால் பின்னர் நினைத்தது தவறு அது ஒரு மலைசிங்கம் என்பதை உணர்ந்து விட்டனர்.

உடனே நான் விரைவாக செயலாற்றிவிட்டேன். கை முட்டியால் மிருகத்தை குத்திவிட்டு மகளிற்கு கவசமாக அவளை என் பின்னால் மறைத்து அவளை அனுப்பி விட்டேன். என சிறுமியின் தந்தை ட்ராவிஸ் நெல்சன் தெரிவித்தார்.

மலைசிங்கத்தை ஒரு வகையாக அருகில் இருந்த மரத்திற்கு துரத்திவிட்டார். அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் மிருகத்தை எதிர் கொண்டு விட்டனர்.

அது ஒரு மிகப்பெரிய மிருகமில்லை ஆனால் தனது மகளை விட பெரியதெனவும் மிக மோசமானதெனவும் நெல்சன் கூறினார். குடும்பத்தினர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியதால் அங்கு சென்ற அவர்கள் இளம் மலைச்சிங்கத்தை கொன்று விட்டனர்.

அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு மேலோட்டமான காயங்கள் அவளின் காது, மார்பு மற்றும் பின் புறங்களில் ஏற்பட்டுள்ளது. மற்றபடி காயங்கள் ஏதுமின்றி தப்பிவிட்டாள்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மலைச்சிங்கத்தால் தாக்கப்படுவது வருடத்தில் ஒரு சில தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் ஆனால் சிறுமி ஒருத்தி தாக்கப்பட்டது அசாதாரணமானதென கூறியதோடு அவளது அதிஷ்டம் தந்தை அருகில் இருந்ததெனவும் தெரிவித்தனர்.

“டிட்டி” குரங்கு கண்டுபிடிப்பு

அமெரிக்க மியூசியம் ஒன்றில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழமையான குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்ததிகள் பெரு நாட்டிலும் கண்டறியப் பட்டுள்ளன.

இந்த குரங்கின் மாதிரி ஒன்று, தவறான பெயரிடப் பட்டு நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டே அதுபற்றிய சந்தேகம் அடைந்ததாக குரங்கை முதலில் கண்ட ஆய்வாளர் சி.பிர்னியஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இதே போன்றதொரு குரங்கை ஜான் வெர்மீர் எனும் விலங்கியல் ஆய்வாளர் தலைமையிலான குழு, பெரு நாட்டின் காட்டில் கண்டுபிடித்துள்ளது. “டிட்டி” என அழைக்கப்படும் இந்த குரங்கு குட்டி, செந்நிறமானதாம். வீட்டு பூனையைவிட குட்டியான இந்த குரங்கு, பழங்களை உண்ணும் பழக்கம் கொண்டதாம். ஏனைய குரங்குகளின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்ற பழக்கம் இக்குரங்குகளுக்கு காணப்ப டுகின்றதாம்.

நீ எனது குழந்தையாக இருக்க விரும்புகிறாயா?

மகனை திருத்த கடிதம் எழுதிய தாய்

எப்பொழுதும் பேஸ்புக்கில் தனது நேரத்தினை செலவழிக்கும் மகனின் மீது கோபம் கொண்ட தாயார் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரஸாக பதவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த எஸ்டல்லா என்பவரின் மகன் ஆரோன் (13) சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆர்வம் கொண்டு, அதிலேயே தனது கவனம் முழுவதையும் செலுத்தியுள்ளான்.

இதனை குறைத்துக்கொள்ளுமாறு தாயார் எவ்வளவு சொல்லியும் ஆரோன் கேட்காத காரணத்தால், தாயார் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அன்பு மகனே ஆரோன், இந்த சிறுவயதிலேயே பேஸ்புக்கிற்கு அடிமையான உன்னை என்னால் திருத்த இயலவில்லை. அதனால், உனது தேவைகளை நீதான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும், அதில் நான் தலையிடமாட்டேன், அது மட்டுமின்றி வீடு மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டு வாடகை 430 டொலர், மின்சார செலவு 116 டொலர், இணையதள செலவு 21 டொலர், உணவுச்செலவு 150 டொலர் என ஒவ்வொரு மாதமும் தர வேண்டும் என்று எழுதியுள்ளார்.

நீ எனக்கு குழந்தையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது ரூம்மேட்டாக இருக்க விரும்புகிறாயா? என்பது குறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். பேஸ்புக்கில் வெளியான இந்த கடிதத்தை ஒரு இலட்சத்து 62 ஆயிரம் ஷேர் செய்துள்ளனர், 87 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

பள்ளி செல்லும் பூனை

தனது உரிமையாளரின் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் பூனைக்கு பள்ளி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கியுள்ள விநோத சம்பவமொன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தால் என்ற பெண், கடந்த 2009ஆம் ஆண்டு பூபா என்ற பூனையை தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூபா வீட்டில் இருக்காமல் தினமும் பள்ளிக்கு சென்று வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனிக்கிறது. பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது பூபா.

தினமும் பள்ளிக்கு வரும் பூபாவை மாணவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த பூபாவுக்கே முதலில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.