புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

கவிதை மஞ்சரி

கற்றுக்கொள்ளுங்கள்

புவனேஸ்வரி அண்ணாதுரை, ஹேவாஹெட்டை

அம்மாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்
அன்பு, பாசம், நேசம்
கண்ணியம், கட்டுப்பாடு, கடமை
தானம், தர்மம், நல்லொழுக்கம்

அப்பாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்
அறிவு, வீரம், அடக்கம், பொறுமை
நிதானம், நேர்மை, பணிவு, துணிவு
வாழ்வு, உழைப்பு, உண்மை, ஊக்கம்

கடவுளிடம் கற்றுக்கொள்ளுங்கள்
அமைதி, சாந்தம், தூய்மை
நிம்மதி, தியானம், புண்ணியம்
குணம், மனம், சமயம், சமாதானம்

ஆசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்
கல்வி, அகறம், முகரம், எழுத்து
போட்டி, ஜெயம், புகழ், பெருமை
ஆர்வம், கொள்கை, நீதி, நியாயம், பட்டம்

சகோதரர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்
ஒற்றுமை, ஒத்தாசை, ஆசை, அபூர்வம்
மனம், வசந்தம், வரப்பிரசாதம்
எளிமை, நடை, உடை, ஊக்கம்

முதியோரிடம் கற்றுக்கொள்ளுங்கள்
கதை, வைத்தியம், வறுமை, சிக்கனம்
சேமிப்பு, பக்குவம், தனிமை, தத்துவம்
புராணம், உறவு, வம்சம், ஆசீர்வாதம்!

நடிப்பு

ஜி.விஜேசேகர, நாக்கியாதெனிய

யாருக்கு மகனாகப் பிறந்தாலும்
யாருக்கு மகளாகப் பிறந்தாலும்
தாய்க்கும் தந்தைக்கும் பாசம்
அவர் - அவள் சந்திக்கும் வரை தான்!

பத்து மாதம் சுமந்து பெற்ற
உடல் குருதியைப் பாலாக்கிக் கொடுத்த
அன்பு சிநேகிதமாய் வளர்த்த
தாயையும் மறந்து விடும்!

உணவு உடைகள்
ஆட - விளையாட பொருட்கள்
கொடுத்து உறவாட செய்த
தந்தையும், மறந்திடும்!

அவர் - அவளை விட என்ன உலகம்
இவர் - இவளுக்கும் தான் சொந்தம்
தாய் - தந்தையரை விடப் பெரிதும்
யாரென்று தெரியாதவர் இவர்

யார் எதைச் சொன்னாலும் கசக்கும்
அவர் அவள் சொல்லுவதே இனிக்கும்
நெஞ்சுக்குச் சூடு பட்ட பிறகு
செவ்வாயில் விழுந்தவன் போல் நடிக்கும்!

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

எஸ். சசியானந்தன்

ஆழிப்பேரலையால் இருப்பதற்கு இடமின்றி தத்தழித்த
முகங்களுக்கு அன்புக்கரம் நீட்டி நீ அழைத்து
சாகாம வீதியிலே அமைந்திருக்கும் குடி நிலம்
எனும் இடத்தில் அமரவைத்தாய் மாரி அம்மா

குடி நிலத்தில் கோயில் கொண்டாய் அல்லலுற்ற
மக்களுடன் மூத்தழித்த ஈசனுக்கே முத்தமிழ்த்த மாரிமுத்தே

நீராடிப் பட்டுடுத்தி பூமாலையோடு பாமாலைபாடி
உன்னிடத்தில் வந்தவர்க்கு மாறாத வாழ்வழிக்கும்
கற்பனைக் கெட்டாத கண்ணே கண்ணின் கருமணியே

நல்லவர்போல் நடிக்கும் நயவஞ்சககாரருக்கு நல்லதொரு
மறைநீ கற்பிக்க வேண்டுமம்மா நீ நல்ல கருமாரியம்மா

காலக்கோலம்

எஸ். சிபானி முஹம்மட், ஒலுவில்

நிழல்கள் தூங்கும்
சாலைகளில்
குழி தோண்டுகின்றன
நிஜங்கள் தேடிய
நினைவுகள்...

உறங்குகின்ற விழிகளை விரித்து
எண்ணையிட்டு தீ மூட்டி
எரிமலைக்குழம்பாக்கி
குடித்து ருசிக்கும்
குருட்டு வன்மங்கள்...

இதய நாடிகளில்
இலத்திரன்கள் பொறித்த
மனிதாபிமானம்
நல்லெண்ண மரங்களில்
மலட்டு மருந்து பூசுகிறது....

அன்புக்குயில்களுக்கு
பாசக்கரம் நீட்டிய
கருணை காகங்களை எதிர்த்து
போர்செய்து
வழியில் நின்ற
நட்புக் கிளிகளையும்
நம்பிக்கை மயில்களையும்
மரிக்கச் செய்த கறைமனக்கரடிகள்...
மன்றம் ஏறி
மடியும் வரை
மழலை வாயில்
நெல்லிட்டு நிரப்புகின்ற
நிகழ்வுகள்
கண்களில் ஊசி ஏற்றி
பார்வைக்குச் சிரிக்கும்
பண்புள்ள பாசங்கள்...

நெருப்பில் உறையும்
மெழுகு மனிதங்கள்
தன் தலையிலயே
விறகு வைத்து கொத்தும் ஏக்கங்கள்....

வெடித்து சிதறிய
மெளனங்களை
பொறுக்கி எடுக்கும் தடுமாற்றங்கள்
நியாயங்களின் தலைகளிலும்
நஞ்சரைத்து விடுகின்றது...

காலம் கத்தியாகி
கோலம் வரைகிறது
கூர்மை செழிக்கவே
தீமைகள்
தீட்டியும் விடுகின்றன....

கண்ணுக்குப் புலப்படமாட்டோமே
என்றுதான்
கசப்புகளையும் கலந்து விடுகிறாயோ
விதியே
கவனமாக இரு
எப்போதும் நீ
மறையோன் கைகளில்தான்....

அச்சுக்கிளியும் பச்சைக்கிளியும்

மிஹிந்தலை ஏ.பாரிஸ், கட்டுக்கெலியாவ

அலி
இரு கிளி வளர்த்தார்
சோடி சேர்த்து
சொந்தம் கொடுத்து
அழகு பார்த்தார்!

ஒரு நிமிடம் கூட
பிரியாமல் உறவாட வேண்டி
ஒற்றைக்கூட்டில் இரண்டையும்
போட்டு அடைத்தார்!

என் மகன் மனதில்
கிளிக்கனவுகள் வழிந்தன
அலி உள்ளத்தில்
அதன் சுவடுகள் பதிந்தது!

என் அச்சுக்கிளியின்
பச்சைக்கிளி கனவுகளை
அலி நனவாக்கினார்
கிலி இல்லாமல்
கிளி கொடுத்து...!
ஒளி பெற்றது
கிளி தேடிய விழிகள்!

முகூர்த்த நேரத்தில்
அலியின் கைகளால்
கிளியின் தாலி அறுக்கப்பட்டது
விவாகரத்து செய்யாமலே
ஆண் கிளி
என் வீட்டில் குடி புகுந்தது!

அச்சுக்கிளி
பச்சைக்கிளியுடன் விளையாடுகிறான்
அலி கிளியை இழந்து
அலைந்து திரிகிறான்!
கிளிகள் இரண்டும்
இருப்பு இழந்து அகதியானது...!

புதைகுழியைத் தேடு

ஒலுவில் பிஸ்ருள் ஹாபி

மனிதா இயற்கை ஒருநாள் ஓலமிடும்
பூமி நடுங்கும் பூகம்பம் உதிக்கும்
புயல் காற்று போர் தொடுக்கும்
கடல் காற்று கடுமையாய் வீசும்

நீ ஓடி ஒளிய இடந்தேடி ஓட
உன்னுயிர் உன்னைவிட்டு ஓடும்
ஈற்றில் உடம்பை விட்டால் போதும் என்பான்

மின்னல் உன்னுயிரைப் பிடுங்கி எடுக்க
பறித்த உயிரைக்காற்று கடலில் வீசி
காணாமல் போகும்

உன் பிணவாடையை
காற்று நுகரும் நாய்கள்
மோப்பமிடும் காகம் காறி உமிழும்
இலையான்கள் இரை தேடும்

மயானம் கூட உன்பினத்தை
ஏறெடுக்க ஏலாது எங்கும் ஈற்றில்
உன் பிணம் அனாதையாய் ஆகும்

அதற்குள் உன் பிணத்தை புதைக்க
இப்போதே புதைகுழிதேடு மனிதா
மாளிகை கட்டுவதனை மறந்து

உலகம் வேண்டும்

எ.எரிக் பிறையன், பண்டாரவளை

மனிதனை மனிதனாக
மதிக்கும் உலகம் வேண்டும்

மனிதனை மயக்கும்
மாய உலகம் வேண்டாம்

மதங்களை மறந்து மனதால்
வாழும் உலகம் வேண்டும்
மண்ணை மறந்து மகிழ்ச்சி
தேடும் உலகம் வேண்டாம்

தன்னை நம்பி தர்மம்
செய்யும் உலகம் வேண்டும்

தன்னலம் நிறைந்த துரோகம்
செய்யும் உலகம் வேண்டாம்

குருதியை கொடுக்கும் தாராள
உலகம் வேண்டும்

குருதியை குடிக்கும் கொடூர
உலகம் வேண்டாம்

அன்பால் வாழும் இனிய
உலகம் வேண்டும்

அடிமை வாழும் அற்ப
உலகம் வேண்டாம்

முரண்பாடு

அஷ்ரபா அலிறிஷாப், அக்குறணை

முரண்பாடுகள் தான்
பிரிவென்றால்
இங்கு
அன்பிற்கு
அடித்தளமே இன்றிப்
போய்விடும்...

முரண்பாடுகள்
உணர்த்தும்
முன்னுதாரணங்கள்
சில சமயங்களில்
முரணற்றவைகளை விட
வலுவானவை....

மேகங்கள் இரண்டு
முரண்பட்டுக்
கொண்டதால் தான்
மழையின் ஸ்பரிஸம்
பூமியை நனைத்தது...

முரண்பட்ட
சிந்தனைகள்
மோதிக் கொள்வதால்
நேர் எண்ணங்கள்
நெஞ்சை
தட்டுகிறது...

தடுமாறிப் போவதும்
தடம் மாறிப் போவதும்

முரண்பாடுகளால்
மட்டுமென்றால்
பாதைகள்
புதைக்கப்பட
வேண்டியிருக்கும்...

மன்னிப்பும்
விட்டுக் கொடுப்பும்
முரண்பாடுகளில்
நிகழுகையில் தான்
நிஜமாகிறது...

உறவு வளரும்

மருதூர் ஜமால்தீன்

பார்வை அம்பெனப் பாய்ந்திடப் பார்க்கும் தீப்
பண்பு ஏன் பாவிமனிதா - உளப்
புண்ணதை நீக்க முனைவாய்
கூர்மைப் பார்வையால் கொல்லாதே மனிதரை
கூடாது அச்செயலே - மனம்
வாடுவார் நல்ல மனிதர்

பெருமையகம் பாவம் புன்மைத் தீச்செயல்
பெருகிடும் பார்வையினால் - துணிவும்
உருகிக் கரைந்து விடும்
பொறுமை நற்குணம் சாந்தப் பார்வையே
பொன்னான மனிதனாக்கும் - என்றும்
உன்னதச் சிறப்பு வரும்

உள்ளம் நல்லதாய் சொற்கள் சிறந்ததாய்
உரைப்பவன் மனிதனடா - வீண்
முறைப்பது கர்வமடா
கள்ளம் கபடம் நிறை வஞ்சகப் பார்வை
கவலையின் பிம்பமடா - உனைத்
துயரத்தில் ஆழ்த்துமடா

கனிந்த பார்வையில் அமைதி விளைந்திடும்
கவலையின் வேரறுக்கும் - நல்ல
உள்ளங்கள் உறவு சேரும்
நனிசெயல் நீக்கி அன்பினை வளர்ப்பதால்
சமூகத்தில் உறவு வளரும் - நாம்
விரும்பிடும் மனிதம் கிட்டும்

கக்கக்கனிய

கிராமத்தான் கலீபா, பொத்துவில்

கக்கக் கனிய மரும்
கவியந்திப் பொழிதினிலே
நிற்கக் குடை பிடித்து
நெடுங் குழலில் பூமுடித்து
பட்டுடுத்தி நிற்கும் பாவை
சித்திரமோ
பொற்சிலையோ...

அந்திச் சுடரொளியில் - அவள்
மேனி கமலச் செப்பம்
பிந்த வருந்த மனம்
பிடாரி கண்ணில் பட்டாள்
வில்லுப் புருவ நெழில்
விழியம்பு பாய்ச்சி விட்டாள்
சொல்லின் சுகம் வருமோ?

செப்புக் குடச் சிற்றிடையில்
சிற்றரவம் போல் மடிப்பு - மனம்
கொப்பு விட்டுத் தாவுமொரு
குரங்கின் நிலையானேன்

ஈரத் தென்றல்வந் தவள்
இடையில் குந்திக் கொள்ளும்
சள்ளைச் சரிவில் வீழ்ந்து
தாவணிச் சரசமாடும்...
பவளச் சுளை யிதழில்
பனி படர்ந்தாற் போலிருக்கும் - அவள்
பாதச் செழுமை கண்டால்
பகைவரிலும் பணிவு வரும்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.