புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் -ஈஸ்வரன்

கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் -ஈஸ்வரன்

இலங்கையில் பல மெகா தமிழ்க் கோடீஸ்வரர்களும் தொழிலதிபர்களும் இருக்கின்ற போதிலும் தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கு ஈந்து மகிழக்கூடிய புரவலர்களை தேடிப்பிடிப்பது மிகவும் கஷ்டம். இவ்வகையில் தொழிலதிபராக இருந்து கொண்டே தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டு செய்து வருபவர், எளிமையுடனும் எவருடனும் பழகக்கூடிய தெ.ஈஸ்வரனார் என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இவரைத் தவிர வேறு எந்தத் தமிழ்த் தொழிலதிபரைத்தான் நீங்கள் பட்டிமன்றங்களிலும் நூல் வெளியீட்டு விழாக்களிலும் காண முடியும்? இவர் அழகு தமிழில் ஆற்றோட்டமாகப் பேசக் கூடியவரும் கூட. எமது பத்திரிகையாளரை வீட்டுக்கு அழைத்து காலை உணவளித்ததோடு செவிக்கும் உணவளித்துத் தந்த தகவல்களை இங்கே தருகிறோம், தொழிலதிபரின் இன்னொரு சுவையான பக்கத்தையும் தெரிந்து கொள்வதற்காக.

தலை நகரில் தமிழ்த் தொழிலதிபர் பட்டியலில் முதல் வரிசையில் இடம்பிடித்திருக்கும் தெ. ஈஸ்வரனின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

தமிழ் நாட்டில் திருநெல்வேலிதான் என் சொந்த ஊர். டோனாவூர் வைத்தியசாலையில் தான் நான் பிறந்தேன். வளர்ந்தது எல்லாமே என் அம்மாவின் ஊரான வள்ளநாடுதான். வள்ளநாடு விவசாயத்தை நம்பி வாழ்கிற ஊர். இப்போதான் அந்த ஊருக்கு வங்கி கட்டடங்களே வந்திருக்கு! அங்குள்ள வள்ளநாடு பாலர் பாடசாலையில் தான் நான் அரிவரி படித்தேன். சுப்பையா மாஸ்டர்தான் எனக்கு அகரம் கற்றுக்கொடுத்த ஆசான்.

இளமையில்....

அந்தப் பள்ளியில் எனக்கு வேலு என்ற ஒரு நண்பர் இருந்தார். வகுப்பில் அவர்தான் நம்ம பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவன். குற்றாலம் நகராட்சியில் வேலைபார்த்து வந்தவர். எப்போது நான் திருநெல்வேலிக்கு சென்றாலும் என்னைப் பார்க்க வந்து விடுவார். இப்போ அவர் உயிரோடு இல்லை என்ற ஈஸ்வரன், தனது பெற்றோர் பற்றி இபபடிச் சொல்கிறார்.

அப்பா வி.டி.வி தெய்வநாயம். அம்மா சிதம்பரத்தம்மாள். அப்பா உழைப்பால் உயர்ந்தவர். தனது பதினோராவது வயதில் தமிழகத்திலிருந்து அனாதையாக கொழும்புக்கு வந்தவர்தான் என் அப்பா. இங்கு வந்து கடைகளில் மூட்டை தூக்கி, கடையை கூட்டிப் பொருக்கி எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார். பிறகு படிப்படியாக உயர்ந்து கொழும்பில் பெரிய கம்பனிகளுக்கு சொந்தக்காரரானார் என்பது வரலாறு. அப்பா இங்கு ஒரு நல்ல இடத்திற்கு வந்ததும் அவரின் சொந்த ஊரான திருநெல்வேலியில் வி.டி.வி தெய்வநாயகம் பிள்ளை உயர் நிலை பள்ளியை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

பிறகு வள்ள நாட்டில் சிறிய வீட்டிலிருந்த நாங்கள் திருநெல்வேலியில் ஒரு பெரிய வீடு வாங்கி அதில் குடியேறினோம். நான் பிறந்த அந்த சிறிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருக்கிறோம். அது மாதிரி நான் படித்த அரிவரி பாடசாலையும் இன்று கல்யாண மண்டபமாக மாறிவிட்டது என்று கடந்து போன வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு விடும் ஈஸ்வரனிடம், சின்ன வயதுக் குறும்பு பற்றிக் கேட்டோம்.

எங்கப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். பிறகு நான் எப்படி குறும்பு செய்ய முடியும்? அப்பா காலையில் கடைக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். அதனால் நான் எங்கு சென்றாலும் மாலை ஆறு மணிக்குள் வீட்டில் ஆஜராகி விட வேண்டும். ஒருநாள் எனது நண்பர் செல்வரத்தினம் செல்லமஹால் தியேட்டரில் புதுப் படம் ஒன்று வெளியாகி இருப்பதாக சொல்லி என்னை அழைத்துச் சென்றார். நான் முடியாது என்றுதான் சொன்னேன். ஆனால் நண்பரின் வற்புறுத்தலில் செல்ல வேண்டியதாயிற்று. படம் முடிந்து வீடு திரும்பும் போது மாலை ஆறரை மணியிருக்கும். வழமையாக இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரும் அப்பா அன்று ஏதோ ஒரு காரணத்திற்காக நேரத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். என்னைக் கண்டதும் எங்கே சென்றாய் என்று கேட்டார். எனக்கு உடனடியாக வாயில் பொய் வரவில்லை. நான் விக்கித்து நிற்க அப்பா பிரம்பை எடுத்து விளாசித் தள்ளினார்.

நான் தான் மூத்தவன். அதனால் என்னை அடித்து வளர்த்தால்தான் எனக்கு கீழே உள்ள சகோதரர்கள் நன்றாக வளர்வார்கள் என்பது அப்பாவின் எண்ணம். அதனால் எப்போதும் அடிவாங்குவது நான்தான். எனக்கு அடிவிழும் போது அதைத் தடுக்க வரும் அம்மாவிற்கும் ஓரிரு அடி விழும். அப்பாவிடம் அதிகமாக அடிவாங்கியதால்தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாக இந்த சமூகத்தில் நிற்கிறேன் என்று இப்போது நினைக்கிறேன். ரோல் மொடல் அப்பாதான் என்று தந்தையின் பெருமையை புகழும் ஈஸ்வரனின் படிப்பு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம்.

சென்பெனடிக்ஸில் படித்த போதுதான் கே.வி.எஸ்.மோகன், வைரவநாதன், ரட்ணராஜா ஆகியோர் எனக்கு நண்பர்களானார்கள். என் படிப்பு வருடத்தில் பரீட்சை ஆரம்பமாகிற அந்த மூன்று மாதங்களைத் தவிர மற்ற நாட்களில் எல்லாம் ஊர் சுற்றுவது, பட்டிமன்றங்களில் பேசுவது என்று தான் இருப்பேன். இறுதி மாதங்கள் ஏதோ படித்துவிட்டு பாஸாகி விடுவேன். சென்பெனடிக்ஸில் படித்த காலம் போக உயர் கல்விக்காக சென்னை பச்சையப்பாவில் படித்த அந்த நான்கு ஆண்டுகளும் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய காலங்கள். தமிழகத்திற்கு நிறைய வி.ஐ.பிக்களை உருவாக்கி தந்த பெருமை பச்சையப்பாவுக்கு உண்டு. நான் படித்த போது இன்றைய அமைச்சராக இருக்கும் வேலவேந்தன், ஆற்காடு துரைமுருகன் உள்ளிட்டோர் எம்மோடு படித்தார்கள். அந்த இனிமையான நாட்களில் வருடத்திற்கு ஒரு முறை ஹொஸ்டல்டே என்று ஒரு தினத்தை கொண்டாடுவோம்.

கிரிக்கெட் போட்டி, கச்சேரி, நாடகம், என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் அங்கே அரங்கேறும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பார்கள். வருடந்தோறும் நடக்கும் இவ் விழாவை வேடிக்கை பார்ப்பதோடு இலங்கை மாணவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழ் நாட்டுக்காரர்களை வெல்ல முடியுமா என்ற ஒரு பயம்.

இருந்தாலும் அந்தப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் எமக்குள் இருந்தது.

ஒரு முறை நாங்களும் அவர்களுடன் போட்டியிடத் தயாரானோம். அந்த நாட்களில் இலங்கையில் கிடைக்கும் சில பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. இங்கே ஐந்து ரூபாவிற்கு விற்கப்பட்ட பைலட் பேனாவுக்கு அங்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்த காலம். எனவே நாங்கள் இங்கிருந்து பைலட் பேனா சொக்லட்டுகள் போன்றவற்றை வாங்கிச் சென்று சென்னையில் ஹொஸ்டலில் தங்கியிருந்த விளையாட்டில் திறமையான மாணவர்களுக்கு அவற்றைப் பரிசாக கொடுத்து அவர்களை எங்களின் கிரிக்கெட் அணிக்காக வாங்கினோம். அப்படி எல்லா விளையாட்டிலும் சிறந்த மாண வர்களை இலங்கைப் பொருட்களைக் கொடுத்து விலையாக வாங்கினேன். அதன் பிறகு அந்த அணிகளுக்கு நான் தலைமை தாங்கினேன். விளையாட்டில் நான் ஒரு வீரன் கிடையாது.

சொல்லப்போனால் மட்டை பிடிக்கவே தெரியாது. சுமாராக விளையாடுவேன். அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு விளையாடி ஜெயிக்க அணித்தலைவரான நான் வெற்றிக் கிண்ணத்தை வாங்கிக் கொள்வேன்.

அந்த கல்லூரி நிகழ்வுகளில் இறுதியாக நடைபெறும் விநோத உடை போட்டிக்கு நாங்கள் கல்யாண ஊர்வலம் செல்வதாகத் தீர்மானித்தோம்.

அதற்கு மேலும் நாதஸ்வரம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். பச்சையப்பா கல்லூரிக்கு அருகில் மேளநாதஸ்வரம் வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை இருந்தது. அவரிடம் சென்று மேள நாதஸ்வரம் வாடகைக்கு கேட்டோம். அதற்கு அவர் மேளம் வாசிக்க கூடியவராக இருந்தால் தரலாம் உங்களுக்கு எப்படி தர முடியும்? பலமாக தட்டி இதை உடைத்து விடுவீர்கள் என்று மறுக்க நாங்கள் விடாது அவரிடம் கெஞ்சினோம். அரை மணி நேரத்திற்கு அறுபது ரூபா. மெதுவாகத்தான் அடிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது கல்லூரியின் வாசலில் நான் வாத்தியங்களோடு வந்து நிற்பேன். அப்போது நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். அரை மணித்தியாலயத்துக்குள் கொண்டு வந்து தர வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிசன் போட்டார். பிறகு நிகழ்ச்சி ஆரம்பமாகியது. மேள, நாதஸ்வரம் எமது கைகளுக்குக் கிடைத்தது. நான்தான் மேளம் அடித்தேன். இப்படியொரு கல்யாண ஊர்வலத்தை பச்சையப்பா கல்லூரி முதல் முறையாக பார்த்த போது விக்கித்து நின்றது. மாணவர்களின் ஏகப்பட்ட கைதட்டல் விசில் என அரங்கம் அதிர எனக்கு உற்சாகம் வந்துவிட மேளக்காரன் போட்ட நிபந்தனையை மீறி மேளத்தை பலமாக அடிக்க ஆரம்பித்தேன். கல்லூரி வாசலில் காத்திருந்த மேளக்காரனுக்கு மேளத்தின் ஓசை பலமாக கேட்க, அவன் குய்யோ முறையோ எனக் கத்திக்கொண்டு அரங்கத்துக்குள் ஓடி வந்தான். அவனை நாலைந்து மாணவர்கள் தடுக்க அவன் கத்த.... ஒரே அமளி! பிறகு அவனை சமாளிக்க போதும் போதுமென்றாகி விட்டது. பிறகு நேரம் கடந்துவிட்டதாகவும் நிபந்தனையை மீறியதாகவும் கூறி நூறு ரூபா கேட்டான். அவனை ஒரு வாறு சமாதானப்படுத்தி எண்பது ரூபாவை கொடுத்து அனுப்பினோம் என்று பச்சையப்பா கல்லூரியின் பழைய ஞாபகங்களை மீண்டும் நினைவுபடுத்தி மகிழ்கிறார். (இந்த சம்பவத்தை கூறும் போது ஈஸ்வரன் விழுந்து விழுந்து சிரித்தார்.)

அப்பாவின் நிறுவன ஊழியர்கள்: சோமசுந்தரம், (அடுத்தவர் பெயர் ஞாபகம் இல்லை)

சந்திரன், (உறவினர்), ஈஸ்வரன்,

திருநாவுக்கரசர் (மாமா)

மறக்க முடியாத ஒரு சம்பவம் சொல்லுங்களேன் என்று ஈஸ்வரனின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கினோம்.

தேயிலை ஏற்றுமதி வேலையாக நான் தெஹ் ரான் சென்றிருந்தேன். என் முதல் வெளிநாட்டு பயணமும் அதுதான்.

அங்கே ஒரு சிறிய ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்குள்ள பலருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் வெளியே எங்கும் சுற்றுவதில்லை. எனது பக்கத்து அறையில் ஒரு ஆங்கிலேயர் தங்கியிருந்தார். நான் நான்கு நாள் அங்கிருந்ததால் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் அவரும் நானும் ஹோட்டலின் கீழ் தளத்துக்கு வந்தோம்.

(தொடர் 20 பக்கம்)

அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் ஈரான் நாட்டு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அந்த ஆங்கிலேயரும் ஈரான் நாட்டு திருமணம் எப்படி நடக்கிறது என்பதை அறியும் ஆவலில் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது மண்டபத்தில் இருந்த ஒரு ஆள் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது.

அவருக்கு நாம் இங்கிருந்து பார்ப்பது பிடிக்கவில்லை போல என்று ஆங்கிலேயரிடம் சொன்னேன். அதற்கு அவர் நம்மள ஒன்றும் சொல்லவில்லையே என்றார். பிறகு அந்த ஆள் உள்ளே சென்று ரிசப்சனில் இருந்த நபரை அழைத்துக் கொண்டு நேராக எங்களிடம் வந்தார்.

ரிசப்சனில் உள்ள அந்த நபர், இவர் மணப் பெண்ணின் தகப்பன். உங்களை உள்ளே வந்து திருமணத்தை பார்க்கச் சொல்கிறார் என்றார். நாமும் அவருடன் உள்ளே சென்று அங்கிருந்த கதிரைகளில் அமர்ந்து ஈரானிய திருமண சடங்குகளை பார்த்தோம். திருமணம் முடிந்ததும் நாம் வெளியே வந்தோம். உடனே மணப் பெண்ணின் தகப்பன் ஓடி வந்து எங்களை சாப்பிட அழைத்தார். நாமும் சங்கடப்பட்டு கொண்டு சென்றோம். அங்கே எங்களுக்கு விஷேசமான கவனிப்பு. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எல்லாமே கை சாடையில்தான் நடந்தது. நான் திக்குமுக்காடி போனேன். அவர் ஏன் எங்களை அப்படி கவனிக்க வேண்டும்? மொழியால், இனத்தால், தேசத்தால் நான் ஒரு அந்நியன். நான் திரும்ப அவரைச் சந்திப்பேனா என்றே தெரியாது.

திருமணத்தன்று....

எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. நான் ஒரு சாதாரண வழிப்போக்கன் மாதிரி. ஆனால் அந்த மனிதரோ எந்த எதிர்பார்ப்புமின்றி எம்மை உபசரித்தது எங்களை பிரமிப்புக்குள்ளாக்கியது.

எனினும் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஒருவரை உபசரிப்பதற்கு இனம், மொழி, தேசம் பார்க்கத் தேவையில்லை என்பதுதான் அது. விருந்தோம்பலுக்கு அதுதான் இலக்கணம். இன்னும் அந்த ஈரானியரின் அன்பு என் மனதில் பசுமையாக நிற்கிறது என்று தெஹ்ரான் பயணம் பற்றி விவரித்த ஈஸ்வரன் அந்த பயணத்தின் தொடர்ச்சியாக சோமாலியாவில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை இப்படி சொல்கிறார்.

ஆபிரிக்க நாடான சோமாலியாவிற்கு ஏடனில் இருந்து விமானம் ஏறினேன். அது ஒரு சிறிய விமானம். மொத்தம் இருபது பேர்தான் பயணிக்க முடியும். ஒரு கறுப்பினத்தவர் தான் அந்த விமானத்தை செலுத்தினார். பெரிய சத்தத்துடன் புறப்பட்ட அந்த விமானம் சில மணித்தியாலங்களில் சோமாலியாவில் தரையிறங்கியது. விமான ஓடுபாதை வெறும் மண்தரையாக காணப்பட்டதால் புழுதி விமானத்தை மறைத்து விட்டது. புழுதி அடங்கிய பின்பே நாம் தரையில் இறங்கினோம். ஆரம்பமே இப்படி என்பதால் எனக்கு இந்தப் பயணம் வெறுத்துப் போயிருந்தது. அந்த சிறிய விமான நிலையத்தில் என் பாஸ்ட்போட்டை பார்த்து விட்டு எங்கே வீசா என்று கேட்டார்கள். அதற்கு நான் இந்த நாட்டுக்கு வீசா தேவையில்லை. விமான நிலையத்தில் இறங்கியதுமே பதினைந்து நாளைக்கு வீசா தருவார்கள் என்று இலங்கையில் சொன்னதாக அவர்களிடம் கூறினேன். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாது என்னை கைது செய்தார்கள். இராணுவம் துப்பாக்கிகளுடன் சூழ்ந்து கொள்ள என்னை ஒரு ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். நான் சோமாலியாவில் தரை இறங்கிய போது அங்கே எனது ஏஜென்ட் என்னைக் கண்டு கையசைத்தான். இப்படியொரு சம்பவம் நடந்த பிறகு அவனைக் காணவில்லை. நான் உடம்பெல்லாம் வேர்த்து வெல வெலத்து போயிருந்தேன். சிறிது நேரப் பயணத்தின் பின் ஒரு காவல் நிலையத்தினுள் நான் அழைத்து செல்லப்பட்டேன். அங்கே அமர்ந்ததும் என்னை ஒரு உயர் அதிகாரி பார்க்க வந்தார். அவர் பெயர் நாசர். அவர் வந்து என்னை விசாரித்தார். நான் ஆரம்பத்தில் சொன்னதையே சொன்னேன். பிறகுதான் அந்த அதிகாரி, நீ ஒரு வாரத்திற்கு முன்பு வந்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் இப்போது இந்த நாட்டை இராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றி விட்டோம் என்றார். பிறகு அவர் எனக்கு பதினைந்து நாள் வீசா தருவதாகவும் என் வியாபாரத்தை கவனிக்கும் படியும் கூறினார்.

நான் என்னை விட்டால் போதும். எனக்கு இந்த வியாபாரமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த பிளேன் எப்போது உள்ளது என விசாரிக்கத் தொடங்கினேன். அதிகாரியோ, இல்லை நீங்கள் இங்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பிசினஸ் செய்யலாம் என்று வாக்குறுதி தந்தார். அப்போது என்னை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்திருந்த என் ஏஜென்டும் ஓடி வந்தான். பிறகு அவருடன் ஒரு டெக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குச் செல்லலாம் என்றேன். அப்போதுதான், அந்த நாட்டில் ஹோட்டலே கிடையாது என்பது தெரிந்தது. பிறகு எப்படியோ ஆங்கிலேயர்கள் தங்குகின்ற ஒரு தங்கு விடுதியை கண்டு பிடித்தோம். அங்கே அறைகள் தான் இருந்தன. அதை ஒரு பிரிட்டிஷ் பெண்மணிதான் நிர்வகித்து வந்தார். என்னைக் கண்டதும் கறுப்பர்களுக்கு இங்கே இடம் கிடையாது என்று கூறிவிட்டார் அந்தப் பெண். முதல் தடவையாக ஒரு பெண்ணிடம் கருப்பன் என்று பெயர் வாங்கியதில் எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும் என்னோடு வந்த ஏஜென்ட் விடவில்லை. மேலிடத்தில் புகார் செய்வதாக கூற பிறகு அவள் எனக்கு ஒரு அறை தர ஒப்புக்கொண்டாள். ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்த ஒரு அறையைத் தந்தாள்.

அதன் பிறகு எனது வியாபாரத்தைப் பார்க்க வெளியே கிளம்பினேன். காரில் பயணிப்பதே பெரிய பயங்கரம். டமடம என்று சத்தம் வரும். பழைய காலத்து கார். ஆபிரிக்கன்தான் காரை செலுத்தினான். ரோடும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. அங்கே இரவில் பயணிப்பது ரொம்ப ஆபத்தானது. வழியில் கார் நின்று விட்டால் உதவி என்று கேட்க அங்கே ஒருவரும் இல்லை. அப்படி நான் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அந்த கார் சாரதி ஒரு வகை புல் கற்றையை கையில் வைத்துக்கொண்டு தின்றுகொண்டே வந்தான். நான் அவனிடம் அது பற்றி கேட்க அவன் உனக்கு வேணுமா என்று கேட்டான். மேலதிக தகவல் எதையும் அவன் தரவில்லை. பிறகுதான் என் ஏஜன்ட் மூலமாக அது பற்றி தெரிந்து கொண்டேன். அந்தப் புல் சோமாலியாவில் மதுவுக்கு நிகரான ஒரு போதை பொருளாம். அதன் பிறகு இந்த விடயத்தை என் பக்கத்து அறையில் தங்கியிருந்த ஜெர்மன் காரனிடம் சொன்னேன். அதற்கு அவன் நாமும் அந்த புல்லை சாப்பிட்டு பார்ப்போம் வாங்கி வா என்றான். நானும் ஐந்து டொலரை கார் சாரதியிடம் கொடுத்து புல்லை வாங்கி வரச் சொன்னேன். அதை நானும் அந்த ஜெர்மனியனும் சாப்பிட்டோம். அது சுவையில் புளிப்பாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த போதை ஏற்படவில்லை. அந்த ஆபிரிக்கன் நம்மை ஏமாற்றி விட்டான். என்றும் ஐந்து டொலரை வீணாக்கிவிட்டோம் என்றும் நினைத்துக் கொண்டோம்.

அதன் பிறகு படுத்துத் தூங்கி விட்டோம். அடுத்த நாள் பதினொரு மணிக்கு ஏஜென்ட் வந்து கதவை தட்டும் வரை தூங்கியிருக்கிறோம். நாம் சாப்பிட்ட அந்த புல் சில மணி நேரங்களுக்கு பிறகுதான் வேலை செய்திருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது என்று நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை சுவைபட சொன்னார் ஈஸ்வரன்.

நான் இறைவனிடம் இன்றும் வேண்டுவது, வாழும் கடைசி காலம் மட்டும் கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாது கொடுக்கின்ற வல்லமை வேண்டும் என்ற வரத்தைத்தான். நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது. கொடுக்க கொடுக்கத் தான் செல்வம் பெருகும். ஒருவனுக்கு நாம் எந்த உபகாரமும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி பல மடங்காக பெருகி நமக்கு மீண்டும் வந்து சேரும் என்பதுதான் அந்த உண்மை என்று கூறி முடித்தார் ஈஸ்வரன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.