புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
ஞானபீடத்தைக் கண்டேன்!

ஞானபீடத்தைக் கண்டேன்!

(சென்றவார தொடர்)

அண்மைக் காலங்களில் என்பத்தொரு வயதைத் தாண்டிய நிலையில்
படிப்படியாக ஜே.கே.யின் உடல் நலம்
பாதிக்கப்பட்ட நாட்களில்
சிங்கத்தின் சீற்றம் தணிந்து சாந்த சொரூபியான
ஒரு ஜெயகாந்தனையே பார்க்க முடிந்தது.

கடைசியாக ஜே.கே. அவர்களுக்கு வாழ்த்து சொன்னவர்
இளங்கவிஞர் - திரைப்படப் பாடலாசிரியர்
விவேக் வேல் முருகன்தான்
அவர் “காவியம்” இதழில் ஜே.கே.யைப் பற்றி ஒரு நெகிழ்ச்சியான
பேட்டியைக் கொடுத்திருந்தார்

ஜே.கே.யின் மறைவுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக,
அவரிடம், அந்தப் பேட்டியை படித்துக் காட்டினார் தோழர் நடராஜன்

“ஒரு ஜோடிக் கண்களால் ஒரு கோடிக் கண்களை ஈர்த்தவர்
ஜெயகாந்தன். எழுத்துலகின் அடையாளம் திரு ஜெயகாந்தன்”
இந்த வரிகளை காதில் வாங்கிக் கொண்டார்
அந்தப் பிரதியை கையிலே தாங்கிக் கொண்டார்
அவரை அறியாமலேயே அவரது இமையோரத்தில் ஈரம் கசிந்தது

“வளர் கவிக்கு வாழ்த்துக்கள்! என்னை வழியனுப்ப வாருங்கள்”
என்பதுதான் அந்த ஈரத்தின் சாரம்

வாசகரை சிந்திக்க வைத்த படைப்பாளி
மானிட நீள்பரப்பை நேசித்த தமிழ் ஞானி!
நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்

ஜே.கே.யின் இறுதி ஊர்வலத்தில்...
நிரம்பி வழியவில்லை எண்ணிக்கை. ஆனால் நிரம்ப வழிந்தது நம்பிக்கை

“ஒரு மாபெரும் தந்தையின் பாசமும் - பரிவும் அவருக்குத் தன்
பாத்திரங்களின் மீது உண்டு. மகள்களும், மனைவிகளும்,
சகோதரிகளும் கூட விற்கப்படும் ஒரு சந்தையில், தன் பாத்திரங்களை
விற்க மறுத்தவர். அவருக்கிருந்த ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியும்
சமூகத்தின் போலிச் சான்றாண்மைகளை தொருக்கக் கூடிய
குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை காத்துப் படைக்கும் பாங்கும்”
ஜெயகாந்தனுக்கு மட்டுமே உரியது.

“சமூகம் என்கிற காளிங்கனின் சகல தலைகள் மீதும் இவர்
கால்பதித்து நட்டம் பயின்றார் என்று எனக்கு ஒரு பாவனை”
இலக்கியச் செயற்பாட்டாளரான குப்புசாமி,
படைப்புக் களனில் சமரசம் செய்யாமல், ஜே.கே.கடைப்பிடித்த
அறிவார்ந்த நாணயத்துக்குப் படைக்கும் அஞ்சலி இது அல்ல....
ஓர் அணிவகுப்பு மரியாதை!

வாழ்ந்தவரை நிறைவு. தமிழ் வாழும் வரை உன் நினைவு!
இந்தக் கட்டுரைத் தொடருக்கு” ஞானபீடத்தைக் கண்டேன்!” எனத் தலைப்பிட்டது ஜே.கே. பெற்ற விருது குறித்து அல்ல!
அவரது எண்ணம், எழுத்து, சிந்தனை, சிருஷ்டி எல்லாமே
என்னைப் பொறுத்தவரையில் ஞானபீடம்தான்!
விளிம்புநிலை மக்கள்மீது விழிமேய்ச்சல் நடத்தும் வித்தையை
எனக்குக் கற்றுத் தந்த “ஞானகுரு” ஜெயகாந்தன் அவர்களே
ஒரு ஞானபீடம் தான்!

இந்த சந்தர்ப்பத்தில் என் நினைவுக்கு வருகிறது மக்கள் கவிஞன்
பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்தபோது
அவரது நினைவுகளைப் போற்றி, 1960 நவம்பர் மாத தாமரை இதழில்
ஜே.கே.எழுதிய கவிதை,
“காலம் கவிஞனைக் கொன்றுவிடும் - அவன்
கவிதை காலத்தைக் கொன்றுவிடும்”

இக்கவிதையில் இரண்டொரு சொற்களை இடம்மாற்றி
இடம்மாறிய சொற்களையும் அவரிடமிருந்தே இரவல் வாங்கி
எழுத்துலக சாம்ராஜ்யத்தின் அடையாளமாகத் திகழ்ந்த
ஜெயகதந்தன் அவர்களுக்கே காணிக்கையாக்குகிறேன்

“படைப்பாளியைக் காலம் கொன்றுவிடும் - அவன்
படைப்புக்கள் காலனையும் வென்றுவிடும்”
நிறைவாக....
என் கலை உள்ளத்தை கவர்ந்தது ஒரு கவிதை உள்ளம்!
கவிஞர் ந. பானுமதியின் கவின் மிகு வரிகள்.... இதோ!

“ஜெயகாந்தன் தமிழ் உலகின் ஒரு மாபெரும் ஆளுமை!
சொல்புதிது - பொருள் புதிது - எழுத்தும் புதிது
அந்தக் கம்பீரம் காணலும் புதிது. படித்தவரிடத்தில்,
அவ்வளவாக ஏட்டுப் படிப்பில்லாத, வாழ்க்கையைப் படித்த,
பாமரரைக் கொண்டு சேர்த்து அவரின் மிகப்பெரிய சாதனை.
அவர் எழுத்தில் தீயின் தகிப்பு! சுடுகின்ற உண்மைகள்

அவற்றை தோல் உரிக்கும் கயமைகள்
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் நோக்கு
கங்கையின் புனிதம் என்பது என்ன, நாம் நடிக்கும் நாடகங்கள்,
மரண வாயிலிலும் தரிணங்கள் என அவர் காட்டும் காட்சி,
சமூகத்தின் மனசாட்சி.
ஒப்பனைகள் இல்லாமல் எழுதிய ஓர் உயர்ந்த மனிதர்
ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்”

உண்மைதான்....
பெளதீக உடலுக்குத் தானே அழிவுண்டு?
“ஞானபீடமே! நீ நிரந்தரமானவன்!”

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.