புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
தை. தனராஜ் பேராசிரியராக

தை. தனராஜ் பேராசிரியராக

பதவி உயர்வு

இலங்கை திறந்த பல்கலைக்கழ கத்தின் கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரை யாளர் திரு தை. தனராஜ் திறந்த பல்கலைக்கழக பேரவையினால் கல்வித் துறை பேராசி ரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவி உயர்வு கடந்த பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டுள்ளது. மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தனராஜ், மிடில்ட்ரன் தோட்டப் பாடசாலை, தலவாக்கலை சென். பெற்றிக்ஸ் கல்லூரி, அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஒரு மாணவ ஆசிரியராகத் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரத்தைக் கொண்டிருப்பதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக தனது இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது முதுமாணி பட்டங்களையும் புதுடில்லி கல்வித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பேராசிரியர் பெற்றுக் கொண்டுள்ளார்.

கோல்புறூக் தமிழ் வித்தியாலயம், அட்டன் புனித யோன் பொஸ்கோ கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், கலஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராக வும் கடமையாற்றியுள்ளார். தவிர பேராசிரியர் மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி யுள்ளதுடன் கல்வி அமைச்சிலும் பின்னர் தேசிய கல்வி நிறுவகத்திலும் பல்வேறு பதவி நிலைகளில் பணியாற்றியுள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த் துறையில் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பதவியேற்கும் முன் னர் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டம் செய்த தொலைக்கல்வி நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தில் நிபுணத்துவ ஆலோ சகராகவும் பணிபுரிந்தார்.

பல கல்விசார் நூல்களையும் கட்டு ரைகளையும் எழுதியுள்ள பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் பல உள்நாட்டு, வெளிநாட்டு சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகின்றார். இந்தியா, அவுஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, நேபாளம், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளில் நடைபெற்ற கல்விசார் கருத்தரங்குகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் பங்குற்றியுள்ள பேராசிரியர் தனராஜ் தற்போது பல கல்வி நிறுவனங்களில் வளவாளராகவும், ஆலோசகராகவும், பயிற்றுனராகவும் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் அவர்களின் கல்விப் பணி தொடர அவரது மாணவர்களுடனும் கல்விச் சமூகத்தினருடனும் சேர்ந்து தினகரன் வாரமஞ்சரியும் அவரை வாழ்த்துகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.