புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

மடகும்புர தோட்ட லயன் குடியிருப்பில் விபத்து

மடகும்புர தோட்ட லயன் குடியிருப்பில் விபத்து

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்கள்   

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடகும்புரை தோட்டத்தின் டொப் லோவர் பிரி வில் கடந்த வெள்ளியன்று பகல் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்களின் 20 லயன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட தீவிபத்தின்போது சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது இவர்கள் கூச்சலிட்டதினால் அருகில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

இத் தீவிபத்தின்போது வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகி யுள்ளன. சில வீடுகளில் இருந்த பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயி லிருந்து பாதுகாத்து வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதி யில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 26 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிகமாக மடகும்புர கலாபவனம் இலக்கம் 1 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுவர்களும் 4 குழந்தைகளும் உள்ளதாக இப்பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார். இத்தீவிபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என பொது மக்கள் தெரிவிக்கும் நிலையில் தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான அவசர உதவிகளாக உணவுப் பொருட்கள், உடைகள், பாய் மற்றும் போர்வைகளை கொத்மலை பிர தேச சபை, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தோட்ட நிர்வாகம் என்பன வழங்கியுள்ளன.

தோட்ட மக்களின் குடியிருப்புகள் தொடர்ந்து தீ விபத்துக்களினால் பாதிக்கப்படுவதும் அவர்களுக்கான அவசர உதவிகள் கிடைப்பதுடன் அவர்கள் மறக்கப்படுவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. எனவே தீ விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்வதுடன் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் இழப்புகளுக்கு தகுந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.