புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

‘KAVITHAIMANJAREY’

மீண்டுமோர் யாசிப்பு


ஞாபகங்களில் மீண்டும்
ஒரு மொட்டின் இதழ்விரிப்பாய்
சில்லென மலர்கிறது உன் முகம்

பிரிய தெரிந்த மனதால்
மறக்க தெரிவதில்லை
உயிர் நிறைய
உறைந்துகிடக்கிறது சிநேகம்

வாலிபம் முழுதும்
வசந்தங்கள் தூவிய என் அன்பே
இடைவெளிகளில்
நாம் சந்தித்த பெரும் கோடைகள்
காயப்படுத்தியதாய்
தோணவில்லை எனக்கு
சிலிர்க்கவைத்த பழைய மழையின்
தூவான, தூறல்களின் முன்
இப்பொழுதும்

நினைவுகளில்...
பிசு, பிசுக்கிறது நமதன்பு
நிமிர்ந்த மரங்கள் நிறைந்த
பள்ளிச் சாலையில் நீ...
குனிந்தபடி குவிந்து நடந்ததும்
நிழலாய் நானுன்னை
தொடர்ந்து கடந்ததும்
ஈரம் காயாமல் இன்னும்...
நினைவுகளில் முட்டி
நெஞ்சில் கிளைவிட்டு
விருட்சமாய் விரிகிறது

இப்பொழுது நீ
எப்படி இருக்கிறாயோ?
நான் இன்னும்
அப்படியே இருக்கிறேன்
தவித்துருகும் கவலையால்
தனித்தலையும் பறவையாய்!


விழித்தெழு

ஒரு முற்றுப் புள்ளியில்
முடிந்து விட வில்லை வாழ்க்கை!

வாழ்க்கையை வெறுத்து
வாழ்வுக்கு முற்றுப்புள்ளி
இட முடியுமா?
வாழு, நினைத்தால் வாழலாம்...

வெடி குண்டுகளுக்காக
குப்புறக்கிடக்காதே...
செல்களைக் கண்டு
பயப்படாதே...
மனித இனம்
அழிவதைக் கண்டு
மயங்கி விடாதே...
மதி கெட்டவரைக் கண்டு
பயந்து ஓடாதே...


தழும்பு

உழைக்கும் மக்கள் கரத்தைப் பாரும்
உறைந்து கிடக்கும் தழும்பு
வளைத்து வில்லைத் தொடுக்கும் அம்பு
துளைத்தால் அதுவும் தழும்பு

பத்து மாதம் அன்னை வயிற்றில்
பாரம் சுமந்த தழும்பு
கத்தும் கடலின் “சுனாமி”யாலே!
கரையில் அழிவுத் தழும்பு

காதல் பண்ணித் தோற்ற நெஞ்சின்
கவலை பாரத் தழும்பு

போரின் கோரம் வரைந்த தழும்பு
பூமி முழுதும் வலிக்கும்
ஈரமற்றோர் இதயம் மண்ணில்
எழுதும் துயரத் தழும்பே

வெற்றி வெற்றி என்றலைந்து
வீழ்ந்தால் தோல்வித் தழும்பு
பெற்ற பிள்ளை நெறி பிறழ்ந்தால்
பெற்றோர் நெஞ்சில் தழும்பு


ஆசானுக்கொரு வாழ்த்து

கண்ணுக்கு மையழகு
காதுக்குத் தோடழகு
தாருக்கு முத்தழகு - இத்தரணிக்கோ நீயழகு!
முத்துக்குள் வைரத்தைச் சுமந்தவரே!
எம்
சொத்துகள் நீரன்றி வேறேது!
சத்தியமாய்ச் செப்புகிறேன் எனக்கிங்கு
வார்த்தைகள் போதவில்லை வாழ்த்துரைக்க!

ஆசானே!...
ஆண்டு கோடி நீண்டு வந்து
மாண்டு போன போதினிலும்
மாறாதே உம் சேவை - அது
என்றும் எம் தேவை!

தாரகை நடுவண் தண்மதியே!
தனையன்றிப் பிறர்போற்றும் பெருந்தகையே!
ஏணியாய் நின்று ஏற்றிவிடும் உத்தமரே
தோணியாய் நின்றிங்கு கரைசேர்க்கும் தோழனே!
ஆசானாய் நின்றிங்கு
அறிவொளி பரப்பும் - மாசில்லா மானிடனே!
உம் சேவைக்கு நிகரிங்கு ஏதுமில்லை1


மானிடனாய் விண் ஓடகனாய்ப்
பாடகனாய்ப் பண்பாளனாய்-
வைத்தியனாய் ஓவியனாய்
சட்டத்தரணியாய் சமுதாய விருட்சமாய்
நாடு போற்றும் நாயகனாய்
ஞாலமே போற்றும் ஞானியாய் - எம்
மாணாக்கரை வழிகாட்டும் மாண்பாளனே!
உம் சேவைக்கு நிகரொன்றை நானறியேன்!

ஆசானே...
உங்கள் உள்ளங்கள் மலர வேண்டும்!
உவகையோ பொங்க வேண்டும்!
எண்ணங்கள் ஈடேறி, இதயங்கள் களி பூண்டு
துன்பங்கள் நீங்கி, துயரங்கள் வெருண்டோடி
இணையில்லா இறையருள் இதமாகப் பெற்று
ஈருலகிலும் இன்புற்று வாழ வேண்டும்!
வளமான வாழ்த்துகள்
வாழ்க நீடூb ஆசானே!


சந்திப்பதற்கும் சிந்திப்பதற்கும்!

- திக்குவல்லை கமால் -

சந்திப்பதற்காக மட்டுமல்ல
நாம் சந்தித்தோம்
சிந்திப் பதற்காகவும் தான்

யார் நாங்கள்
மலருமுன்னே மணந்தவர்கள்
பூக்கமுன்பே
புன்னகைத்தவர்கள்
இசைக்க முன்பே ஒலித்தவர்கள்
உதிக்க முன்பே ஒளிர்ந்தவர்கள்

சமுதாயப் பெருவெளியில்
விருட்சங்களாய் நாம்
வேரூன்றப் போவதை
அப்போது நாம் தெரிந்திருக்கவில்லை
சத்தியமாய்
அப்போது நாம் தெரிந்திருக்கவேயில்லை.

அந்த சர்வகலாசாலை
கல்வியில் கவனம்
கடமையில் கரிசனை
நேரமுகாமை
நேர்மைத் திறன்
பகிர்ந்தே உண்ணல்
பரஸ்பரம் உதவி
பணிவில் பெருமை
பொறுமையின் உயர்ச்சி
கூட்டுப் பொறுப்பு
கொடுப்பதில் விருப்பு
விட்டுக் கொடுத்தல்
விடுமுறை பேணல்

இப்படி
எத்தனை எத்தனை
பாடநெறிகளை
இந்த சர்வகலாசாலை
எமக்கு கற்றுத் தந்தது.

பிள்ளைகளையும்
பிள்ளைகளின் பிள்ளைகளையும்
கண்டபின்பும்
இப்படியொரு மகிழ்ச்சியா?

நரைதிரை விழுந்து
முதுமையின் முகவரி
கிடைத்தபின்பும்
இப்படியொரு மகிழ்ச்சியா?

இந்த மகிழ்ச்சி என்ன ஆகுமென்று
உங்களுக்குத் தெரியவில்லை
அது எனக்கு மட்டுமே
தெரிகிறது...
உங்கள் நெற்றிகளில்
இப்படி எழுதப்பட்டிருக்கிறது
‘ஒரு பானைச் சோற்று உறவு’
தயவு செய்து
நிலைக் கண்ணாடியில் ஒருமுறை
முகம் பார்த்துக் கொள்ளுங்கள்
அஃது உங்களுக்கும் தெரியும்.

உம்மா வாப்பா
அண்ணன் தங்கையென்று
ஒரு பானைச் சோறுண்டு
அன்பாய் வளர்ந்தவர்
அந்த வயதில்
புலமையின் பெயரால்
பிடுங்கப்பட்டோம்
கல்வியின் பெயரால்
கலைக்கப்பட்டோம்...

ஐந்தாறு கைகளைப் பிரிந்தோம்
ஐம்பது கைகளைப் பெற்றோம்.
கைகள் மட்டுமா கலந்தன
இல்லை
கல்புகளுமல்லவா!

ஐம்பது வருடம் கடந்தும்
அசைக்க முடிந்ததா உறவை?
இது
கற்பனை பண்ணமுடியாக் கனவு.
இன்னும் இரண்டொருவர்களே
எஞ்சியுள்ளனர்.

நாங்கள்
எழுதப்படாத வரலாறு...
இசைக்கப்படாத சங்கீதம்
வரையப்படாத ஓவியம்
ஆவணப்படுத்தாக அதிசயம்
ஆய்வுசெய்யாத பொக்கிஷம்
இனியுமா இந்நிலை?
இல்லையில்லை
அதை
சிந்திப்பதற்காகவே ஒன்றுபட்டோம்
சந்திப்பதற்காக அல்ல.


தொழிலாளர் துயர்

கால்வலிக்க மலையேறி - நாம்
காலமெலாம் கொழுந்து கொய்தோம்
மனமிரங்கா மானிடரே - யாம்
உடலுழைப்பால் மிடியுற்றோம்!!

நடுவெயில் யாம் நின்று - உடல்
நலம் பாராதுழைத்தோம்
கடுங்குளிர்தனிலும் - யாம்
உடலுழைப்பால் மிடியுற்றோம்!

ஏழைகளின் உதிரத்தில்
உரக்கமற்று இன்பங்கண்டீர்!
அடிமைத் தொழிலாளி - யாம்
உடலுழைப்பால் மிடியுற்றோம்!

சற்றேனுங் கருணையின்றி - எம்
சரீரமதைச் சாறாய்ப் பிழிந்தீரே!
மனிதனுக்கே நித்தமுழைத்தோம்-யாம்
உடலுழைப்பால் மிடியுற்றோம்!


இரவு

ஏய் கறுப்பு அழகியே!
பொழுது சாயும் பொழுதுகளில்
எல்லாம்-
பூமிப்பந்தை முத்தமிடும்
கள்ளியா நீ?

வானமகள் அள்ளி முடித்த
கூந்தலை-
அவிழ்த்து விட்டாளா?
உயிர்கள் உறங்குகின்ற
பொழுதென்று-
கறுப்புக் கம்பளி கொண்டு
வந்தவள் நீயா?

ஒளி புகமுடியா இடமுண்டு.
இருள் கவியா இடமுண்டா?

உன் கண்ணாமூச்சி ஆட்டம்
விசித்திரமானது!
நாங்கள் கண்ணை மூடும்
போதெல்லாம்-
நீ விழித்துக் கொள்கிறாய்!

நீ இல்லாத நாட்கள்
அர்த்தமற்றதாகி விடும்.
மனிதன் வாழ்க்கையை புரிந்து
கொண்டது-
இரவின் மடியில்தான்!
உனக்கும் - வாழ்வுக்கும்
நெருங்கிய தொடர்புண்டு.

பகலைக் காட்டிலும் - உன்
இருட்டில் ஏதோ
மந்திரம் உள்ளது.
அதனால்தான் இரவு தரும்
மயக்கம் எப்போதும் இனிக்கிறது!

நீயும்
சில பூக்களை மொட்டவிழ்ப்பாய்!
விடிகின்றது...,
நிசப்தாய் நீ மறைகிறாய்!
வெளிச்சம் என்பது
இரவுச்சேலை உருவப்பட்ட
பின் - பூமியின் வனப்பு!
என்றாலும் உடைமூடிய
உன்னுடலே எப்போதும் சிறப்பு!


ஆசிரியப் பணி செய்த ஆருயிர் அன்னைக்கு...

மூபத்து ஆண்டுக்கும்
மேலாகக் கல்விதனைப்
போதித்து ஓய்வுபெற்று...
சாதித்து விட்டதாகச்
சற்றேனும் எண்ணாமல்
சீவித்து வருவதுவும்
யாருக்கும் தெரியாமல்
ஞாலத்தில் வாழ்ந்திருந்து...
நேசித்தோர் நெஞ்சமெலாம்
இறையோனை ஆசிக்க - வல்லோன்
இடம் நாடிச் சென்றிட்ட
என் தாயார்
ஆசானாய்ப் பயணித்த
பாதையை இந்த
ஆசிரியர் தினம் தன்னில்
மீட்டுகிறேன் - அந்த
மீட்டலிலே என் பணியின்
தரத்தினை நான்
சாற்றுகின்றேன்...

தொழில் பார்க்கும் எனக்கின்று
துணி துவைக்க ஒரு மெஷினும்
மாவரைக்க மற்றொன்றும்
கறிசமைக்க ‘கேஸ்’ குக்கரும்
சோறாக்க ‘ரைஸ்’ குக்கரும்
வாகாக வருகிறது
கருமங்கள்
நோகாமல் நடக்கிறது
ஆனால்...
வாராந்தம் துணி மூட்டை
நாளாந்தம் பணி மூட்டை
தலையில் ஒரு வலி வாட்ட
எல்லாமே சுமந்தெந்தன்
உம்மாவும் தொழில் செய்தார்
சும்மாவா எமை வளர்த்தார்?

உம்மா வாழ்ந்த வழி
திரும்பிப் பார்த்தேன் நான்
வெட்கம் கொள்கின்றேன்
‘ஆசான்’ என்ற பணி
செய்தே நானிங்கு
எதைத் தான் சாதித்தேன்?

வாழ்க்கைப் பாடங்கள்
பலதை நானெந்தன்
தாயால் கற்றிட்டேன்
ஆனால் என் செய்ய
பாதி வழியே நான்
என் தாயை இழந்திட்டேன்

எனினும் இந்த - ஆசிரியர்
தினம் தன்னில் - என்
அன்னை புரிந்திட்ட
ஆசிரியப் பணி தன்னை
ஏற்றுப் பிழையேதும்
இருப்பின் அவளிடமே
மன்னிக்க வேண்டுகிறேன்
அன்னார்,
போதித்த மாணாக்கர்
தமையிந்த வேளையிலே
அவர்க்காகச் சிறு பொழுது
பிரார்த்திக்கக் கோருகிறேன்.


புலராத பொழுதுகள்

பிறக்கும் பொழுதுகளை
புறக்கணிக்க முடிந்ததா?
உன்னிலிருந்து
விடைபெறும் கணப்பொழுதை
பிற்போடத்தான் முடிந்ததா?
உனக்கே உரித்தான
நேற்றைய நினைவுகளை
அழிக்கத்தான் முடிந்ததா?

மலையில் உருவாகி
மணற்தரையில் பாயும் நதி
கடலில் கலந்து
கழிமுகத்தை அரவணைத்து
மீண்டும் வந்த வழியே
திரும்பாதே....!

காலத்தை கடத்திய நீ
சென்றதை நினைத்து
பெருமூச்சு விடுகிறாயோ?
நிகழ்வதை நினைத்து
நிம்மதியை இழக்கிறாயோ?
எதிர்வருவதை நோக்கி
காத்திருக்கிறாயோ?

உன் விடியலின் இருளை
அமாவாசையாய் நினை
விடியப்போகும் ஒளியை
பெளர்ணமியாய் மாற்றியமை
புலராத பொழுதுகளாய்
ஆக்கிடாதே


கீர்த்தியாய் வாழ்விலங்கும்!

பொறாமை யென்ற ஒன்று
பொதுவாக மனித ருக்குள்
வராமல் இருக்கு மென்றால்,
வாழ்வினில் மகிழ்வு கூடும்!
-*-
மற்றவர் உயர்வு கண்டு
மனதிலே எரிச்சல் கொண்டு
அற்பராய் நடப்பதாலே
அனுதினம் அல்லல் சேரும்!
-*-
நகைமுகம் காட்டிப் பேசும்
நல்லவ ராக வாழ்ந்தால்
பகையெதும் சேரா; நெஞ்சில்
பாசமே ஊற்றெ டுக்கும்!
-*-
கோள், புறம் தள்ளி வைத்து
கோடாமல் நீதி, நேர்மை
வாழ்விலே பற்றி வாழ்ந்தால்,
வாழ்வெலாம் இன்பமாகும்!
-*-
இனம், மொழி, மதத்தின் பேரால்
இழிவுகள் தொடர்வோர் தம்மால்,
தினந்தினம் துயரம் சேரும்,
திருப்தியோ தொலைவுக்(கு) ஏகும்!
-*-
அடுத்தவர் தம்மை எள்ளி
அனுதினம் இன்னல் நல்கி,
கெடுத்திடும் கொள்கை விட்டால்
“கீர்த்தியாய் வாழ்வி லங்கும்”!


உத்தியோக உறவுகள்

அன்று,
அலுவல் தலம் நீங்கி
மனையதில் நுழைந்துவிட்டால்
ஆறுதல் பெற அவகாசம் ஏது?
கோவைக்குவியலில் மூழ்கினால்
பசிபோக்க நேரமில்லை
குந்தியிருந்து கும்மிருட்டு வரை
அவசர அறிக்கை
தயாரிக்கும் முனைப்பு
அந்தி மட்டும் அண்ணார
நேரமில்லை
கதிரையின் காந்தப்பிடி
உடலை வருத்தும்
வீட்டின் நினைப்பு தீவிரம்
பாதிவேலையும் அரைகுறை
வீடுவந்து சேர்ந்த வேளை
அங்கே,
கைகளில் கடதாசியும்
கையுறையுமாய்
காரியம் முடிக்கவென
காத்துநிற்கும் கனவான்கள்
வரிசையாய் வாசலிலே
எப்படி விடியும்?

விடிந்து எழுந்துவிட்டால்
மனையாள் மக்களுடன்
உண்டுடுத்து உறவாடி
வெளிப்பட நேரமில்லை
வேலைத்தல விவகாரம்
வீடுதேடி வந்துவிடும்
வாசல் மண்ணெடுக்க
வரிசையாய் வாசலிலே
சுபமுகூர்த்தம் அங்கே
அபசகுனம் ஆகிவிடும்
காலைக் காரியங்கள்
கணப்பொழுதில் நிறைவேறும்
வேலைக்கு வெளியேறும்
நேரமோ பிந்திவிடும்
கணினியும் தோற்றுவிடும்
கடுகதி வாழ்க்கையது

பொழுது போக்கவென்றே
கிடந்து வழிந்த எடுபிடிகள்
கணமும் தவறா வாழ்த்துகள்
பணிந்து பரிவு காட்டிய
கலைவல்லார் காரியவாதிகள்
காணக் கிடக்கவில்லை இன்று
முதுமையும் ஓய்ந்துவிட்ட
பதவியும்
அவர்கள் பார்வைக்குள்
படவில்லை
வழிப் போக்கில் கண்டபோதும்
அறியாதார் என விரைந்து
வழிவிட்டு அகன்று செல்வர்
பேனையில் மை தீர்ந்துவிட
கையொப்பம் தேவையற்று
சிபாரிசுகள் செல்லாது
ஓடி ஒளிந்தனரோ?


 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.