புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, சட்டங்களையோ மாற்ற முடியாது

உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, சட்டங்களையோ மாற்ற முடியாது

சட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கிறோம் - ஊடக அமைச்சர்

சீரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் ஊடக தகவல்துறை அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பல்லாண்டுகளாக அரசாங்கத்தின் சார்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து தகவல்களை வெளியிடும் மிகவும் கஷ்டமான பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக எவராவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்றுமே கோபப்படாமல் சிரித்துக் கொண்டே நாசுக்காக பதிலளிப்பதில் திறமைமிக்கவர். இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சிங்களத்தில் ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் அரசாங்கத்திற்காக வக்காளத்து வாங்குபவர் என்றும் கிண்டல் செய்வதுண்டு.

எவ்வளவுதான் தன்னைப் பார்த்து கிண்டல் செய்தாலும் அவர் சிரித்த முகத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பார். இதனால், அமைச்சரின் ஊடகவியல் சந்திப்புகளுக்கு ஊடகவியலாளர்கள் விரும்பி சமுகமளிப்பார்கள். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு சந்தர்ப்பத்தில் 13ஆவது சட்டத்திருத்தம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக் குறித்து அபிப்பிராயம் தெரிவிக்கையில், இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. எங்கள் நாட்டில் சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சி நாம் சட்டங்களை மாற்ற முடியாது. எமது நாட்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, சட்டங்களையோ நாம் மாற்ற முடியாது என்று கூறினார்.

வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரு. விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக இருந்தவர். அவருக்கு சட்டம் நன்கு தெரியும். ஆயினும் இப்போது விக்னேஸ்வரன் சட்டத்திற்கு முரணான வேண்டுகோள்களை விடுத்து எங்கள் நாட்டு சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தும் ஒரு நகைச்சுவை நடிகராக மாறிவிடலாகாது என்று கூறினார். பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்படாவிட்டால் சர்வதேசத்தின் உதவியை நாடுவோம் என்று விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து பற்றி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அபிப்பிராயம் தெரிவிக்கையில், இலங்கை இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாகும். எமக்கென அரசியல் அமைப்பு, நீதித்துறை, சட்டங்கள் என அரச இயந்திரம் செயற்படுகின்றது. இவற்றின் மீது அழுத்தங்களையும் பலாத்காரத்தையும் பிரயோகிக்கும் அதிகாரம் சர்வதேச நாடுகளுக்கு கிடையாது. நாம் சட்டங்களுக்கு அமையவே எமது தீர்மானங்களை எடுப்போம் என்று கூறினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கோ, அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ சென்று முறைப்பாடு செய்வது நல்லதல்ல. எமது நாட்டின் உள்ளூர் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவது தவறான செயலாகும். கடந்த 30-35 வருடங்களாக எங்கள் நாட்டின் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கத்திற்கோ, இலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளுக்கோ கோரிக்கைகளை முன்வைத்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யுடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்த தவறியுள்ளனர்.

இது தான் எங்கள் நாட்டின் இனப்பிரச்சினையும், தமிழர்களின் உரிமைப் பிரச்சினையும் முடிவில்லாத தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருப்பதற்கான பிரதான காரணமாகும். கடந்த 35 ஆண்டுகளாக எங்கள் நாட்டின் தமிழ்த் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு வெளிநாடுகளின் உதவிகளை பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றி கண்டனவா? அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தன.

1983ம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் பின்னர் அன்றைய இந்திப் பிரதமமந்திரி இந்திராகாந்தி ஆபத்பாந்தவரைப் போன்று நடித்து, இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டில் அடைக்கலம் கொடுத்ததுடன், தனது தலையீட்டை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில் இந்திராகாந்தி தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் விசேட முகாம்களை அமைத்து இராணுவப் பயிற்சி அளித்தார்.

இந்த இராணுவப் பயிற்சி எமது நாட்டு இளைஞர்களுக்கோ, நம் நாட்டு தமிழ் மக்களுக்கோ பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்ததா? இல்லை. இதனால் தான் பயங்கரவாதம் இலங்கையில் விஸ்வரூபம் எடுத்து நம்நாட்டு தமிழர், சிங்களவர், முஸ்லிம் மக்களின் ஆயிரக்கணக் கானோரின் உயிர்களை பறித்தது. அதன் பின்னர் மீண்டும் நாம் பூஜ்ஜிய நிலைக்கே திரும்பியுள்ளோம்.

வடபகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று சீ.வி. விக்னேஸ்வரன் விடுக்கும் கோரிக்கை சம்பந்தமாக அல்ஜெkறா என்ற சர்வதேச தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில், எக்காரணம் கொண்டும் வடபகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது. இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கினால் ஏனைய மாகாணசபைகளும் அதே போன்று தங்கள் மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று கோரிக்கை விடலாம் என்று கூறினார்.

இராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் ஓர் அமைப்பாகும். இவ்விதம் 9 மாகாணசபைகளும் இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டால் எமது இராணுவத்தை எங்கு வைத்திருக்கலாம். இதற்கு வேறு எவராவது உதவி செய்வார்களா? என்று ஜனாதிபதி தன்னை பேட்டி கண்ட அல்ஜெkறா அறிவிப்பாளரை பார்த்து கேட்டார்.

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிரான ஒரு பெண் புலி என்று அவமதிக்கக்கூடிய வகையில் கூறியிருக்கிறார்களே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள் என்று இந்தப் பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பும் கருத்தை பகிரங்கமாக தெரிவிப்பதற்கான பூரண உரிமையைக் கொண்டுள்ளார்கள். மக்களின் இந்த ஜனநாயக உரிமையை தான் தடை செய்ய முடியாதென்று கூறினார்.

அந்த கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி, தனது அமைச்சரவையில் பலதரப்பட்ட அரசியல், மத, கலாசாரங்களைச் கொண்ட 58 பேர் இருக்கிறார்கள். நான் இவர்கள் அவைரையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளேன். தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரச உத்தியோகத்தர்கள் எவரை பற்றியும் விமர்சிக்கும் அல்லது குற்றம் காணும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. ஓர் அரசாங்கத்தைப் பற்றியோ, ஒரு நிர்வாகத்தைப் பற்றியோ குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். ஆனால், ஒரு நிர்வாகத்தை சீராக நடத்தி முடிப்பது கஷ்டமான விடயம். அதனால் தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடமாகாண சபையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று அதனை சரியாக செய்து காட்டுங்கள் என்ற சவாலை விடுக்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அயல் நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்தியா ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் எங்கள் நாட்டுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது.

இந்தியாவில் எழுந்துள்ள உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதென்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். இந்தியாவுடனான எங்கள் நட்புறவு தொடரும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சில நாடுகள் உலகத்தின் பொலிஸ்காரர்களை போன்று மற்ற நாடுகளை துன்புறுத்துகின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, உலகத்திற்கு பொலிஸ்காரர்கள் அவசியமில்லை. உலகத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பு தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் கூறினார்.

மக்கள் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபையின் நிர்வாகம் ஆரம்பிக்கப் போகும் இன்றைய சுப வேளையில் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய உலகின் மிகப் கொடிய பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான பிரபாகரனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒரு தேசிய தலைவனுக்குரிய அந்தஸ்துடன் மாமனிதனாக புகழ் உச்சியில் அமர்த்துவதற்கு எடுக்கும் முயற்சி வடமாகாண சபையின் சிறந்த ஆளுமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களுக்காக வாக்களித்த மக்களுக்கு சுபசகுணமாக தென்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையில் பிரதி செயலாளர் நாயகத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தனது நிர்வாகத்தில் அபிவிருத்திப் பணிகளுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான வாழ்வாதாரத் திட்டங்களுக்கும் கல்வி, சுகாதாரம், விவசாயம், கடற்றொழில் போன்ற பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரு சீ.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நாளை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.

கடந்த 3 தசாப்தங்களாக தங்களுக்கு தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டிருக் கிறதென்று வடபகுதி மக்கள் வேதனையில் மூழ்கியிருந்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு ஜனநாயகத்தின் மிகப் பெரிய சுதந்திரமான வாக்குரிமையை பெற்றுக் கொடுத்து இன்று வடமாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி புரிவதற்கான ஒரு அரிய வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கு மதிப்பளித்து, மக்களின் உணர்வுகளையும், அபிலாஷைகளை யும் புரிந்து கொண்டு வடமாகாண சபைக்கு தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள முதலமைச்சரும் ஏனைய உறுப்பினர்களும் மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளித்து அங்கு அமைதியும், சமாதானமும், நல்லிணக்கப்பாடும் வலுவாக அமைவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்றும் அரசியல் அவதானிகள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். வட மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையுடன் இணைந்து மக்கள் சேவையை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசனிடம் உறுதியளித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பேரவையின் தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசனையும், அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்மெனட்டையும் தனித்தனியாக சந்தித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில உணர்வுபூர்வமான அரசியல் பிரச்சினைகள் இணைக்கப்பட்டிருந்தது கவலைக்குரிய விடயமென்று சுட்டிக்காட்டினார். இன்று இத்தகைய பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்த உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

24 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு இப்போது கிடைத்திருக்கிறதென்றும் தெரிவித்துள்ளர்.

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் பேரழிவடைந்த நாட்டில் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பலதரப்பட்ட சவால்களை நான்கு ஆண்டு காலத்தில் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

நாம் அபிவிருத்திப் பணியை மேற்கொள்ளும் போது முழுமையாக மீள் குடியேற்றத்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு புதுவாழ்வைப் பெற்றுக் கொடுத்தோம்.

அத்துடன் சரணடைந்த எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஆயுததாரிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களுக்கு தொழில்பயிற்சியை அளித்தோம். அத்துடன் நாட்டில் மும்மொழித் திட்டத்தை அமுல்படுத்துவதுடன் மக்களின் சுகாதார, கல்வித் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கினோம் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்விரு ஐக்கிய நாடுகள் இராஜதந்திரிகளுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

இவற்றைவிட சிக்கல் மிக்க பிரச்சினைகளான காணிகளின் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு காணிகளை ஒப்படைத்தல் போன்ற விடயங்களையும் செய்து நாம் வெற்றிகண்டோம்.

மற்ற மாகாணங்களுக்கு குறைந்த நிதியை ஒதுக்கி வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியதன் மூலம் அரசாங்கம் தென்னிலங்கையில் மக்களின் வசை மொழிக்கும் இலக்காகியது என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் ஸ்தானபம் அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவராமல் உதவ வேண்டுமென்றும் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தாமல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.