புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
அசைக்க முடியாத ஆதாரங்கள் என்வசம் இருப்பதாலேயே பயமின்றி விமர்சிக்கிறேன்

அரசுடன் நான் கள்ள உறவா? ஆனாலும் நான் உண்மையானவன்;

அசைக்க முடியாத ஆதாரங்கள் என்வசம் இருப்பதாலேயே பயமின்றி விமர்சிக்கிறேன்

மை அழிய முன்னர் 4 தடவைகளுக்கு மேல் கட்சி தாவியவர்கள் யார்?

இ.தொ.கா. அரசியல் வரலாறு செந்திலுக்குத் தெரியாது என்கிறார் பிரபா கணேசன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நான் வெறும் ஊகத்தினை மட்டும் வைத்து பொய்யாக விமர்சிக்கவில்லை. என்னிடம் எல்லாவற்றுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. தொலைக்காட்சி விவாதத்திற்கு நான் தயார். தயாரென்று கூறிவிட்டு பின்னர் ஓடி ஒழிப்பது நீங்கள்தான். செந்தில் தொண்டமான் தயாரெனில் இன்றைய தினமே விவாதம் நடத்த நான் தயார்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அரசுடன் நான் சேர்ந்து கொண்டமை கள்ளத் தொடர்பு வைத்தது போல் எனில் கடந்த 1994ல் ஐ.தே.க.வில் தேர்தலில் போட்டியிட்டு சந்திரிகா அம்மையாரின் ஸ்ரீல.சு.க. ஆட்சியில் இணைந்தமை, பின்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் ஒரு கட்சியில் போட்டியிட்டு விட்டு கட்சி தாவியவர்கள் யார் என்பது செந்திலுக்குத் தெரியாது போலும். நான் ஒரு தடவைதான் கள்ளத் தொடர்பு வைத்துள்ளேன். நீங்கள் எத்தனை தடவை என எண்ணிப் பாருங்கள்.

உண்மையில் எனது தந்தை வி.பி. கணேசன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். அவரது அரசியலையே நான் பின்பற்றுகிறேன். மனோ கணேசன்தான் ஐ.தே.க.வுடன் அவ்வப்போது கூட்டு வைத்துள்ளார். அது அவரது தனிப்பட்ட விடயம். நான் அரசுடன் கள்ளமாகவே உறவை ஏற்படுத்தினாலும் அரசிற்கு விசுவாசமாகவே உள்ளேன். எனக்கு இந்தியா செல்லப் பயம் என செந்தில் கூறியுள்ளமை அவரது அறியாமையை காட்டுகிறது. நான் அரசுடன் இணைந்த பிறகு பல தடவை சென்று வந்துள்ளேன். திருச்சியில் எனக்கு சொந்த வீடு உள்ளது. கடந்த ஒக்டோபர் 18 முதல் 30ம் திகதி வரை அங்குதான் 12 நாட்கள் தங்கியிருந்தேன். நான் தைரியமானவன். எனக்குப் பயம் கிடையாது. ஏனெனில் என்னிடம் கள்ளம் கிடையாது. நான் அரசுடன் இணைந்தது எனது சுயநலத்திற்காக அல்ல, மக்களுக் காகவே இணைந்தேன். அதன் மூலமாக அரசின் உதவியுடன் கொழும்பு மாவட் டத்தில் பல அபிவிருத்திகளை தமிழ் மக்களுக்காக செய்துள்ளேன். அரசியல் இணைந்தமைக்காக அரசு மேற்கொள்ளும் எல்லாவற்றையும் நான் ஆதரிப்பதில்லை. தேவையான விடயங்களில் எனது ஆலோசனையும் தெரிவித்தே வருகிறேன். குறிப்பாக இனப் பிரச்சினை தீர்வு விடயத் தில் நான் தமிழ் மக்கள் நலன்கருதிச் செயற்படுகிறேன். ஆனால் இ.தொ.கா. தீர்வு விடயத்தில் மெளமாகவே இருந்து வருகிறது. பத்தடி லயன் காம்பராவில் எமது மக்கள் தொடர்ந்தும் வாழ்வதுதான் அவர்களுக்கு விருப்பமா எனவும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

என்னைப் பற்றி விமர்சிக்க செந்திலுக்கு அனுபவமும் கிடையாது, எவ்விதமான தகுதியும் கிடையாது. அரசியலில் அவர் ஒரு குழந்தை எனவும் பிரபா தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.