புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
விரலில் பூசிய மை அழிய முன்னரே கட்சி தாவியவர் இ.தொ.கா.வை விமர்சிப்பதா?

அரசுடன் சட்டரீதியாக திருமணம் முடித்த கட்சியே இ.தொ.கா;

விரலில் பூசிய மை அழிய முன்னரே கட்சி தாவியவர் இ.தொ.கா.வை விமர்சிப்பதா?

பிரபா கணேசனுக்கு செந்தில் தொண்டமான் கடும் சாட்டை

இ.தொ.கா.வை இனியும் விமர்சித்தால் பிரபாவின் ஆணிவேர் பிடுங்கப்படுமாம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸையோ, அதனைச் சார்ந்த அரசியல், தொழிற் சங்க வாதிகளையோ விமர்சிப்பதற்கு பாராளு மன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு எத்தகைய அருகதையுமில்லை. அவர் செய்த துரோகச் செயல்கள் குறித்து, இந்நாட்டு தமிழ் மக்கள் அனைவருமே பகிரங்கமாகவே விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபா கணேசன் வெறும் விமர்சனங்களை மட்டுமே கூறி வருகின்றார். அவ் விமர்சனங்களில் எவ்வகையிலும் உண்மையில்லை. இது குறித்து அவரை என்னுடன் தொலைக்காட்சி ஊடாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பினை விடுக்கின்றேன்.

இவ்வாறு ஊவா மாகாண மின்சக்தி, எரிபொருள், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை, சமூக நலன்புரி, நெசவுத் தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பிரபா கணேசன் என்பவர், அரசுக்கு முரண்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று வாக்களித்த மக்களின் விரலுக்கு பூசப்பட்ட மை அழிய முன்பே, அம்மக்களுக்கும், தான் சார்ந்த கட்சிக்கும், தனது சொந்தச் சகோதரனுக்கும் முதுகில் குத்தி துரோகம் செய்து விட்டு, சுய சலுகைகளுக்காக அரசுடன் இணைந்து விட்டார்.

இது போன்ற துரோகச் செயல்களை செய்வது பிரபா கணேசனுக்கு கை வந்த கலையாகியுள்ளது. இ.தொ.கா. என்பது, சட்ட ரீதியாக அரசுடன் தாலி கட்டிக் கொண்ட மனைவியைப் போன்ற தாகும். ஆனால், பிரபா கணேசன் திருட்டுத் தனமாக ஓடிச் சென்று அரசுடன் ஒட்டிக் கொண்டவர்.

இ.தொ.கா. அரசுடன் பங்காளிக் கட்சியாக இருந்து, நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் ஆளும் கட்சியை அபார வெற்றியடைய வைத்ததுடன், சமூகம் சார் உறுப்பினர்கள் பலரை வெற்றிப் பாதைக்குமிட்டுச் சென்றுள்ளது. ஆனால் பிரபா கணேசனால் ஆளும் கட்சியின் வெற்றிக்கு செய்த பங்களிப்புகள் தான் என்ன? அவர் சார்பாக எத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர். இவ் வினாக்களுக்கு பதில் பூஜ்ஜியமான தாகவேயிருக்கும். பிரபா கணேசனின் அரசியல் பிரசாரத்தில் முழுமையாக அரசை எதிர்த்ததாகவே அமைந்திருந்தது. எமது ஜனாதிபதியை பல்வேறு வகையிலும் விமர்சித்துக் கொண்டு, அரசுக்கு எதிர்ப் பானவர்களின் வாக்குகளைப் பெற்றே பிரபா கணேசன் பாராளுமன்றம் சென்றி ருக்கின்றார். நேற்று முளைத்த காளான் போன்ற இவர் தொடர்ந்தும் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை முன்னெடுப்பா ரேயானால், இ.தொ.கா.வின் இளைஞர் அணியின் தொண்டர் படையினர், இவ ரது அரசியல் ஆணி வேரைப் பிடுங்கி அகற்றி, நடுத்தெருவிற்கு தள்ளிவிடுவர்.

இந்திய வம்சாவளிசார் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க, இ.தொ.கா. எந்தவொரு விளிம்பிற்கும் செல்லத் தாயாராக இருக்கின்றது.

இ.தொ.கா.வையும், அதனைச் சார்ந்த அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளை விமர்சிப்பதற்கு, எவ்வகையிலும் இடமளிக்க முடியாது. அவ் விமர்சனங்களை தைரிய த்துடன் எதிர்கொள்ள என்னால் முடியும்.

எமது செளமியமூர்த்தி தொண்டமான் ஐயா, ஆளும் கட்சியில் பங்காளியாக இருந்து கொண்டு, அமைச்சர் பதவியை வகித்த நிலையிலும், ஆட்சியாளர் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் தவறுகளை துணிவுடன் அரசுக்கு சுட்டிக்காட்டுவார். அத்துடன் அரசுடன் இருந்து கொண்டே, எல்.ரி.ரி.ஈ.க்கு ஐந்து வருடங்களுக்கு வட கிழக்கின் ஆட்சியை ஒப்படையுங்களென்று, ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கூரியவர்தான் எமது ஐயா.

இ.தொ.கா ஜனாதிபதிக்கும் அரசுக்கும் ஆதரவாக இருந்து கொண்டே தமிழகம் சென்று திரும்புகின்றது. அவ்வேளையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் பிரபா கணேசனால் தமிழகம் சென்று அரசுக்கு அல்லது ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்து வர தைரியம் இருக்கிறதா என்பது சந்தேகமேயாகும்.

தோட்டப்புற தொழிலாளர் குடியிருப்புக்களில் பெண்கள், அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் படங்களை வைத்து தெய்வங்களுக்கு சமமாகப் பூஜித்து வருகின்றனர். பெண் தொழிலாளர்களுக்கும் தினச் சம்பளமாக 515 ரூபாவினைப் பெற்றுக் கொடுத்ததும், இ.தொ.காவேயாகும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.