புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

ஷபல புதுக்கவிதைகளைப் படித்தால் விசர் வந்து விடும் போல் இருக்கிறது''

ஷபல புதுக்கவிதைகளைப் படித்தால் விசர் வந்து விடும் போல் இருக்கிறது''

அஷ்ரஃப் சிஹாப்தீனின் பார்வையில் அநுராதபுர மாவட்டத் தமிழ்க் கவிதைகள்

பொது மக்களை அசெளகரியத்துக்குள்ளாக்கும் இரண்டு தொல்லைகள் நீண்ட காலமாக இந்த நாட்டில் நிலவி வருகின்றன.

எந்த விற்பன்னர்களாலும் எந்த சக்திகளாலும் எந்த அதிகாரத்தாலும் கட்டுப்படுத்த முடியாதபடி அந்த இரு தெல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

அதில் ஒன்று- நுளம்பு மற்றது- கவிதை! புதுக்கவிதை!!

நுளம்புத் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ளப் பிரதான தெருக்களில் இளைஞர்கள் விற்கும் நுளம்பு கொல்லும் வீச்சுத் தட்டையை வாங்கிப் பயன்படுத்தலாம் அல்லது ஓர் அலுமினியத் தட்டில் எண்ணெய் பூசி நுளம்பை வீசிப் பிடிக்கலாம்.

நுளம்புகளைவிட வேகமாகப் பெருகி வரும் இந்தப் புதுக் கவிதைகளிலிருந்து அல்லது அதன் நீட்சியாகத் தொடரும் நவீன கவிதைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழி என்ன?

சில கவிதை நூல்களைத் திறந்தால் அல்லது பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வரும் பல கவிதைகளைப் படித்தால் விசர் வந்து விடும் போல் இருக்கிறது.

‘கவிதை நூல்கள் எனக்குக் கிடைத்தால் நான் உடனேயே திறந்து படிப்பதில்லை. காரணம் பயம். இரண்டு விதமாக அவை நம்மை ஆட்கொண்டு நிலைகுலைய வைக்கின்றன. சில கவிதைகள் நம்மை அதிர்ச்சியடைய வைத்து விடுகின்றன. நம்மை ஆட்டம் காணச் செய்து விடுகின்றன. சில நூல்கள் அதற்கு எதிர்மாறாக அமைந்து கோபத்துக்கு ஆளாக்குகின்ற’ என்று கவிஞர் இன்குலாப் ஒரு முறை குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டு எனது இரு கவிதை நூல்களின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்ற போது சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவர் பிரபல கவிஞர் அ.முத்துலிங்கம் தமிழ் கவிதை வளர்ச்சிக்குக் காலாக இருந்த சங்க காலத்துப் புலவர்களிலிருந்து சங்கமருவிப காலமூடாகத் தாண்டி வந்து எழுபத்தைந்து பேருக்கு மேற்பட்ட புலவர்களின் பெயர்களை வெகு லாவகமாகவும் வேகமாகவும் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் எனது பெயரையும் குறிப்பிட்டார். எனக்கு புல்லரிக்கவில்லை. சிரிப்பு வந்தது.

நான் சென்னை அறிமுக விழா நடத்தினேன் என்பதற்காகவோ அ.முத்துலிங்கம் என்னைப் பெரும் புலவராகச் சித்தரித்தார் என்பதற்காகவோ இந்த இரண்டு சம்பவங்களையும் நான் இவ்விடத்தில் குறிப்பிடவில்லை. இந்த இரண்டு சம்பவங்களதும் பின்னணியில் உள்ளவற்றைச் சற்று ஆழ்ந்து நோக்குவீர்களாயின் நமது காய்தல் உவத்தல் பண்புகளுக்கும் விமர்சனம் அல்லது திறனாய்வுக்கும் உரிய ஒரு நேர்மையான இழையை இவற்றினூடே நாம் கண்டு கொள்ளலாம்.

கவிஞன் உணர்ச்சிக் குவியலானவன். அவனது படைப்பு அவனைப் பொறுத்த வரை அவனது உயிரின் கரைசல். தன்னை ஊனாய் வடித்து ஊற்றி வைத்த குவளை. அதை நாம் பார்த்து அதன் நிறைவையும் குறைவையும் சொல்லும் போது நாகரிமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது. பண்பற்ற முறையில் நாம் ஒரு படைப்புப் பற்றிய விமர்சனத்தை, பார்வையை முன் வைக்கும் போது அநாவசியமான சச்சரவுகளும் விவாதங்களும் தோன்றுகின்றன. படைப்பாளி தொருங்கிப் போகிறான். மற்றொரு படைப்புக்கு அஞ்சுகிறான்.

நான் குறிப்பிட்ட நேர்மையான இழையூடாகவே ‘நான் வேலிகளைத் தாண்டும் வேர்களைப்’ படித்தேன். இதிலுள்ள படைப்பாளிகளுள் இரண்டொருவர் தவிர மற்றைய அனைவரும் நமக்குப் பரிச்சயமான வர்கள். சிலர் எனக்கு நெருக்கமானவர்கள்.

அநுராதபுர பிரதேசத்திலிருந்து தமிழில் இலக்கியம் செய்வதற்காகவே இவர்களுக்கும் நாம் தனியே ஒரு விழாவெடுத்துப் பாராட்ட வேண்டும். எனது இந்தக் கருத்தைக் கவிஞர் அ.முத்துலிங்கம் என்னைப் பாராட்டிய விடயத்துடன் பொருந்திப் பார்க்க வேண்டுகிறேன்.

எழுபதுகளில் இந்தத் தேசத்துக்குப் புதுக் கவிதையை அறிமுகப்படுத்திய பட்டாளத்தில் முக்கியமானவர் அன்பு ஜவஹர்ஷா. அன்று என்னைப் போன்ற இளையவர்களுக்கு இலக்கிய ஆதர்சமாக இருந்தவர். இன்றைய நவீன ஆயுதங்களுக்குச் சமமாக அன்று கவிதை வார்த்தைகளால் பேசியவர்களில் அவரும் ஒருவர். பிற்காலத்தில் அவரோடு பழக நேரிட்ட போது அவர் ஓர் இலக்கிய ஆதர்சம் மட்டுமல்ல, நான் வாழ்வில் சந்தித்த கண்ணியவான்களில் ஒருவராகவும் என் மனதில் இடம் பிடித்தார்.

“ஆர்ட் பேப்பரில்
செந்நிறத் தூரிகையால்
கத்தி அரிவாள்களை
ஆடம்பரமாகப் போட்டோம்!

ஹோட்டல்
இன்டர்கொன்டினன்டலில்
ஹொட்ட்ரிங்சுடன்
மார்க்ஸ் ஏங்கல்ஸ் பற்றி
பெரிய டிஸ்கஷன் செய்தோம்”

என்று தொடரும் அவரது கவிதை வரிகளின் செய்திகள் இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அமைப்புகளுக்கும் தனி மனிதர்களுக்கும் கூட அச்சொட்டாக அழகாகப் பொருந்துகின்றன.

‘அருவி ஆற்றங்கரையில்
போதி மரங்களில் கூடு கட்டி
குதூகலித்துத் திரிந்த குயிலொன்று
பாக்கு நீரிணை தாண்டி
படபடத்துப் பறந்து வந்த நாள் 25.12.1976

என்று, தான் புலம் பெயர்ந்த துயரக் கதையை ஆரம்பிக்கும் பேனா மனோகரன் சிறு வயதில் எனது வாசிப்பு மனதில் பதிந்த பெயர்களில் ஒன்று. இலக்கிய ஆர்வம் குன்றாமல் அதைத் தக்க வைத்துக் கொண்டே இன்னும் வாழ்கிறார் என்பது பெருமைக்குரியது. ஏதோ ஓர் இந்திய சஞ்சிகையில் அவர் மற்றொரு நபருக்கு எழுதிய கடிதமொன்றையும் அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.

கலை இலக்கியத்தில் தன்னையும் தன் ஆத்மாவையும் கரைத்துக் கொண்டவனுக்கு வேறு எதுவும் வேண்டுவதில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழும் பேனா மனோகரன் தனது துயரக் கவிதையை இவ்வாறு முடிக்கிறார்.

‘இருதயத்தில்
முள்முடி இறங்கியதால்
கடைவாயில் கவிதைக் குருதி
வழிய
மறுபடியும் மறுபடியும்
உயிர்த்தெழுதல் நிகழ்கிறது
சிலம்பு வீழ்ந்த வைகைக் கரையில்’

கெக்கிராவை ஸஹானா, சுலைஹா சகோதரிகள் பற்றிச் சொல்வது அசியம்தானா என்று யோசிக்கிறேன். இந்த நாட்டில் தமிழ் இலக்கியப் பெண் படைப்பாளிகள் வரிசை ஒன்றுண்டு. அதற்குள்ளிருந்தும் ஒரு சிறப்பு வரிசை தெரிவு செய்யப்பட்டால் அதற்குள் இந்த இருவரும் அடங்கியே ஆக வேண்டும்.

‘பேனாவால் பேசுகிறேன்’ என்ற தொடர் கட்டுரை நூலை அண்மையில் வெளியிட்ட நாச்சியாதீவு பர்வீனுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்தமானது. அவரது கவிதைகளை விட அவர் எழுதும் கட்டுரைகள் என்னை அதிகம் ஆகர்ஷிக்கின்றன. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ‘ஓர் இராணுவச் சிப்பாயின் வாக்குமூலம்’ மற்றும் ‘அலறும் ஆத்மாக்கள்’ என்ற கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. தனது உணர்வுகளை மரக்கச் செய்தபடி இயந்திரமாகக் கடமை செய்யும் மானுட நேயம் மிக்க ஓர் இராணுவ வீரனின் மனவோட்டமாக ‘ஓர் இராணுவச் சிப்பாயின் வாக்கு மூலம்’ கவிதை அமைந்திருக்கிறது.

தொழிலுக்காக நாடு விட்டு நாடு சென்ற பிறகு நாட்டுப் பாசத்தாலும் குடும்பப் பாசத்தாலும் உருகி வழியும் உணர்வுகளைத் தொட்டுக் காட்டுகின்ற கவிதையாக ‘அலறும் ஆத்மாக்கள்’ அமைந்திருக்கின்றது. அது அவரது அனுபவமாகக் கூட இருக்கும் என்று நம்புகிறேன். புதிதாக எழுத வரும் அனைத்து இளம் படைப்பாளிகளிட மும் இவ்வாறான வித்தியாசமான சிந்தனைகளையே நாம் எதிர்பார்க்கிறோம். வித்தியாசமான சிந்தனைகள் வித்தியசமான கவிதை வடிவங்களில் வருகின்ற போது அது வெற்றியடைந்த கவிதையாக மாறிவிடுகிறது. இதனடிப்படையில்தான் ஒரு நல்ல கவிதை ஒரு நல்ல கவிஞனைத் தேடிக் கொள்கிறது என்று சொல்கிறார்கள்.

அழுகை மனு
அழுகை வழக்கு
அழுகை உழைப்பு
அழுகை அழகு
அழுகைக்கு எத்தகை முகம்!
அழுவதில் எத்தனை சுகம்!!

என்ற அழகிய வரிகளை எழுதியவர் எம். சி. ரஸ்மின், இலக்கியவாதிகளான வெகு சொற்ப அறிவிப்பாளர்களில் ஒருவர். தெளிந்த சிந்தனையாளர். முயற்சி மிக்கவர். பன்மொழி அறிவு கொண்டவர். இப்படிப் பல முகங்களைக் கொண்ட ரஸ்மின் கவிதைகளை இத்தனை நாள் படிக்காதிருந்தமைக்கா வருத்தப்படுகிறேன்.

‘அந்த வெள்ளைத் தாள்
முழுவதும்
நாம் நேசிக்கும்
கவிதைகள் ஒளிந்து கிடக்கின்றன...’

இந்தக் கற்பனைக்குரியவர் வசீம் அக்ரம். படிகள் சஞ்சிகையில் ஆசிரியர். நம்பிக்கை தரக் கூடிய எதிர்கால இலக்கியப் படைப்பாளி.

‘நான் வானம்பாடியாக
இடம் தேடி அலைகிறேன்
எனது கனவுகளையும்
கவிதைகளையும் கருத்தரிக்க’

என்று சொல்லும் இவரிடமும் வித்தியாசமான கவிதைப் பாங்கு ஒளிந்து கிடப்பதாகத் தெரிகிறது. ஆழ்ந்த வாசிப்பும் காலமும் இவரை ஒரு நல்ல படைப்பாளியாக நம்முன்னே கொண்டு வந்த நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அநுராதபுரம் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஸமான் ஆகியோரது படைப்புகளும் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன. இருவரது கவிதைகளிலும் சற்று இறுக்கம் தேவைப்படுவதாக எனக்குப் படுகிறது. ஓயாத வாசிப்பும் இலக்கியப் பரிச்சயமும் அவர்களை நெறிப்படுத்தும் என்று நம்பலாம்.

இந்தக் கவிதை நூலைப் பொறுத்த வரை கருத்துச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

இந்நூல் அநுராதபுரத்துத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக மாத்திரமின்றி இலக்கிய வரலாற்றின் பதிவாகவும் அமைகிறது. ஒரு தனி யாளின் கவிதை நூலை விட இலக் கிய ஆய்வாளர்களுக்கு இவ்வாறான தொகுதிகள் பெரிதும் துணைபுரிவன வாயிருக்கின்றன. பின்னால் வரும் இளம் சந்ததிக்கும் வழிகாட்டிகளாக அமைந்து விடுகின்றன.

வெப்ப வலயப் பிரதேசமான அநுராதபுரம் இயற்கை அழகு மிக்கது. அங்கு நாட்டில் பசி தீர்க்கும் வேளாண்மை விளைகிறது. மரக்கறியும் பழங்களும் விளைகின்றன. அந்தப் பூமி எல்லா விளைச்சலுக்கும் உரம் மிக்கது. இலக்கியத்துக்கும் கூட.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.