புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

எஸ்.முத்துமீரான்

எஸ்.முத்துமீரான்

கிழக்கிலங்கையின் பேச்சு மொழி இனிமையானது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மண் வளத்துடன் கூடிய சுவையான சொற்கள், வானொலி நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் வெளிப்படுத்துபவர் முத்துமீரான். இப்பேச்சு மொழியை வானொலியில் அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு. 50 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருபவர். இலங்கை வானொலியில் இவரது 200க்கும் மேற்பட்ட நாடகங்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

2001 இல் இவர் வெளியிட்ட மானுடம் சாகவில்லை என்ற நாடகத் தொகுதிக்கு இலங்கை இலக்கியப் பேரலையின் விருது கிடைத்தது.

தன்னை ஒரு கிராமத்தான் என்று சொல்வதில் முத்துமீரான் பெருமை கொள்வார். இவருடைய கதைகளில் எப்போதும் மானுட நேயம், மானுட கரிசனை என்பன மிகுந்திருக்கும். உண்மையான பிரச்சினைக்குரிய மாந்தர்கள், இவரது கதைகளில் வருபவர்கள்.

முத்துமீரான் ஒரு சிறந்த கவிஞருமாவார். போரின் அவலங்கள், அதனால் ஏற்பட்ட தமிழ் - முஸ்லிம் விரிசல், துயரங்கள், காதல், கவிதைகளும் இவர் படைப்பில் வீரியமுள்ளவை.

இவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. இவரது முதல் கவிதைத் தொகுதி 1993 இல் வெளியானது. 2005 இல் இரண்டாவது தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.

இவரது உருவகக் கதைகள் தனித்துவம் நிறைந்த நடையும் தத்துவார்த்த எண்ணக் கருக்கள் கொண்டவையாகவும் இருக்கும்.

1982 இல் தனது முதலாவது உருவகக் கதைத் தொகுப்பை முத்துமீரான் வெளியிட்டார்.

இவரது இரண்டாவது உருவகக் கதைத் தொகுப்புக்கு அரச கரும மொழித் திணைக்கள விருது 2000 ஆம் ஆண்டு கிடைத்தது.

இலங்கையில் உள்ள நாட்டார் இலக்கிய ஆய்வாளர்களில் முத்துமீரான் குறிப்பிடத்தக்கவர்.

அழிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் நாட்டாரிலக்கியங்களைத் தேடி எடுத்து, கள ஆய்வு செய்து பதிப்பித்திருக்கின்றார்.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவிதை, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டர் பாடல்கள், இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் என்பன இவரது நாட்டாரிலக்கிய நூல்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் என்கிற ஆய்வு நூலுக்கு 1997 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.

நிந்தவூரான், லத்தீபா முத்துமீரான், நிந்தன், முத்து போன்ற புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரர்.

50க்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து ‘தினகரன் வாரமஞ்சரியில் என் பிரியத்தைப் பெற்ற பிறமொழிச் சிறுகதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தவர்.

தொழில் ரீதியாக அவர் ஒரு சட்டத்தரணி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.