புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

தெரீவு

தெரீவு

பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்றுகொண்டு முன்னுக்குப் பார்க்கிறேன். எந்தநாளும் பார்க்கிற கட்டடம்தான். இன்றைக்கி அது சென்ற் மேரிஸ் முஸ்லிம் மகா வித்தியாலயமாகத் தெரிகிறது.

அது ஒரு காலத்தில் அரசாங்கம் பொறுப்பெடுப்பதற்கு முன், ஒரு பேர் போன ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை. ஆயிரக் கணக்கானவர்களைப் படிப்பிச்சி நல்ல வழிகளைக் காட்டி உருவாக்கி விட்டு, எந்தவித பெருமையும் இல்லாமல் கம்பீரமாக நிக்குது அது!

“...... அந்தக் காலத்தில நகரத்தின் இன்னொரு இடத்தில் இருந்த சென்ற் மேரிஸ் கொலேஜின் கொன்வெட்ல படிச்ச பிள்ளதான் மருமகள் குமாலா.

ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் என்று இருந்தும் அவ படிச்சது சிங்கள மொழி மூலந்தான். அரைகுறையாகப் படிச்சி வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்தவ....

அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் திரும்பவும் ஆங்கிலம் தொடங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாங்கள்... ஆனா அடிப்படை வசதிகள் வேணுமே. சும்மா வாய்ச் சவடால் தான். எப்ப தொடங்குகிறது...?

ஆங்கில மொழி மூலம் கல்வியை, பிரைவேட் பாடசாலைகளில் எப்பவோ தொடங்கிட்டாங்க... எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லையே...!”

“மகன் பிரைவேட் ஸ்கூல்ல இங்கிலிஸ்ல படிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறா ... என்ன செய்றது...? பிரைவேட் பாடசாலைகளில் படிக்கிறது எங்களப் பொறுத்த மட்டும் பெரிய செலவு. மகன் சலீம்ட சம்பளத்தில இதெல்லாம் செய்ய ஏலுமா...?

இங்கிலிஷ்... இங்கிலிஷ்... இங்கிலிஷ்... ஒரே இங்கிலிஷ் பைத்தியம்...!

“... என்ன மீரான் அங்கிள்.... சென்ற் மேரிஸ் கொலஜ பார்த்துக்கிட்டு... ஒரே யோசனையா...! இன்னொருக்கா போய் படிக்கவா...?”

சுப்பர் மார்கெட்டில் ஒரு பை நிறையச் சாமான்கள் வாங்கித் திரும்பிக்கொண்டிருந்த நிசார் நானா கேட்டார்.

“எத்தனையோ மலாய் சமூகப் பிள்ளைகள உருவாக்கியிருக்கு இந்த ஸ்கூல், அவங்க எல்லாம் பெரிய உத்தியோகத்தில இருக்கிறாங்க... அதான் நன்றியோட பார்த்துக் கொண்டிருக்கிறன்... நாளக்கி என்ட பேரன சேர்க்கிறதுக்கு இன்டர்வியூ... மருமகள் குமாலா தான் போக இருக்கிறா... சரி நிசார் நானா... இப்ப சென் மேரிஸ்ல ஆங்கில மீடியம் தொடங்கிட்டாங்களா....?” பதில் சொன்னதோடு அவரும் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.

“அது தெரியாது மீரான் அங்கிள், நாளக்கி போனா விசாரிச்சி பார்க்கலாமே... புள்ளக இப்ப இங்கிலிஸ¤ம் சிங்களமும் படிச்சி என்ன செய்ய? பள்ளிவாசல்ல வெள்ளிக்கிழமைக்கு ஒரு ‘ஜும்மா’ பிரசங்கத்தக் கேட்டு வெளங்கிக்கொள்ள ஏலுமா....?”

“இந்தக் காலத்தில தன் தாய் மொழியையே விலை பேசும் ஜ மனுஷரில்... ஒரு மலாய்ப் பிள்ளைக்குத் தமிழ் மொழி மூலம் தான் விமோசனமுண்டு” என்று தெளிவாக இருக்கும் மீரான் அங்கிளுக்குச் சாதகமாகத் தலையில் மற்றுமொரு காரணத்தைத் திணித்துவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார் நிசார் நானா சுமையுடன்.

* * * * * *

குமாலா நேர்முக சந்திப்பிற்குப் போக ஆயத்தமானாள். மகன் சிரானும் வெள்ளை சேர்ட்டும் நீல காற்சட்டையும் வெள்ளை ‘மேஸ்’ ஜோடியும் கருப்புச் சப்பாத்தும் அணிந்து தாம் ஆயத்தமாகிவிட்டதை “மம்மி ஐ ஆம் ரெடி” என்று பிரகடனப்படுத்தினான். பாடசாலை, வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடைதூரம் தான்.

குமாலா இரண்டு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வேறு பாடசாலைகளுக்கும் விண்ணப்பித்திருந்தாள். ஆனால் இன்னும் ஒரு பதிலையும் காணவில்லை. குமாலாவின் கணவர் சலீம் நகரில் இல்லை. அட்டனில் ஒரு பிரபல தேயிலைத் தோட்டத்தில் ‘பீல்ட் சுப்பவைசர்’ தொழிலில் மாய்ந்து கொண்டிருப்பதற்கே அவருக்கு நேரமும் காலமும் சரி. அடிக்கடி லீவு அனுமதிக்காத நிர்வாகம். இப்போதெல்லாம் வருமானப் பெருக்கத்திற்காக ‘ஓவர் டைம்’ வேலை செய்தேயாக வேண்டும். புத்தாண்டு தொடங்கினால் மகன் சிரானுக்குப் புத்தகங்கள் மற்றும் கற்பதற்கான உபகரணங்கள் வாங்க வேண்டும். வரவில் ‘போனஸ்’ கிடைக்குமோ? கிடைக்காதோ?

ஆனால் மனைவி குமாலா கெட்டிக்காரி! சமாளித்துவிடுவாள். வீடு குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிவேலைகளையும் அவளே செய்து முடிப்பாள். நகர சபையில் மாதாந்தத் தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், இப்படி எல்லா அலுவல்களையும் கன கச்சிதமாகச் செய்து முடிப்பாள்.

வீட்டில் ஒரு பழைய ‘சிங்கர் மெஷின்’ இருக்கிறது. ஓய்வு நேரங்களில் லொடலொடவென்று இரைச்சல் பெரிதாக இருக்கும். ஆனால் வருமானம் குறைவு.

வீட்டில் அனைத்து அலுவல்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும் ‘பவர்’சலீமின் வயதான தகப்பனார் மீரான் அங்கிள் அவர்களுக்கே உரியது. அவர் நீரிழிவு நோயாளி. அதிகமாக நடப்பதைத் தவிர்ப்பவர். ஒரு காலத்தில் லிந்துல தேயிலைத் தோட்டத்தில் ‘பீல்ட் ஒபிசர்’.

பெனிதுடுமுல்லயில் அவருக்கு ஒரு சொந்த வீடு. அவருக்குக் கிடைத்த ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வாங்கியது. ஒரு பகுதியை வாடகைக்குக் கொடுத்திருக்கிறார். பெரும்பகுதியில் அவரும், சலீம் குடும்பமும். நேற்றிரவு அவர் மிகக் கவனமாக சிரானின் பிறப்புச் சான்றிதழ், கிராமசேவகர் வழங்கிய உறுதிப்பத்திரம்... என்று எல்லாவற்றையும் பரிசீலித்து, கோவைப்படுத்தி, “பைல் அப்பித்தான்” (பைல் கவனம்) என்ற எச்சரிக்கையுடன் குமாலாவிடம கையளித்தார்.

அப்புறம் பேரன் சிரானை அழைத்தார்.

“சிரான் பேசொனா ஸ்கூல்ன மஸ்பி, பிரின்சிபல் அர்தாஞபடனா புத்துல்னா இங்கிலிஷ்டரி தாக்குத்தாரான மசோமொங்... தவ்சி...”

(சிரான் நாளைக்குப் பாடசாலைக்குப் போகணும்... அதிபர் கேட்கிற கேள்விகளுக்கு சரியா ஆங்கிலத்தில் பயப்படாமல் பேச வேண்டும் சரியா...)

மீரான் அங்கிள் பேரனுக்கு அறிவுரை வழங்கினார்.

சிரான் எல்லாவற்றிற்கும் ‘உம்’ கொட்டினான்.

அதைத் தொடர்ந்து அவர் அவனுக்கு ஒரு சின்ன ஒத்திகை நடத்தினார்.

“வட் இஸ் யுவர் நேம்...?”

“மை நேம் இஸ் துவான் சிரான் சலீம்”

“ஹவ் ஓல்ட் ஆர் யூ?”

“பய்வ் யியர்ஸ் ஒல்ட்”

இப்படியாகச் சில கேள்விகள்.

மீரான் அங்கிளுக்கு அந்த ஒத்திகை முழுமையான திருப்தி. ஆனால், மொழி மூலம் தான் அவர் தலையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் மீரான் அங்கிள் அவருக்குப் பிடித்தமான ‘பாலபோதினி’ என்னும் தமிழ்ப் பாட நூலை வாங்கிக்கொண்டு வந்து பேரனுக்கு ‘அ’ என்று தொடங்கப் போய் அவரது ‘வீட்டோ’ பவர் காற்றில் பறந்தது. சலீமும் குமாலாவும் தலையிட்டு ஆங்கிலம் படிக்கிற பிள்ளைக்கு இப்பவே தமிழும் சிங்களமும் தேவையில்லை என்று முற்றுப் புள்ளியைப் போட்டு விட்டிருந்தனர்.

* * * * * *

சென்ற் மேரிஸ் கொலேஜ் அலுவலகத்தைச் சுற்றிப் பத்துப் பதினைந்து பெற்றார்கள் குழுமி நிற்கின்றனர்.

குமாலாவும் மகனுடன் போய் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.

அவளது கைக்கடிகாரம் காலை ஒன்பதே முக்கால் பிந்திவிட்டிருப்பதைக் காட்டியது.

சரியாகப் பத்து மணிக்கு அலுவலக ஊழியர் வந்து நீள் சதுர வடிவமான முன் அறையில் நாற்காலிகளை வரிசைப்படுத்தியதும் எல்லாரும் அமர்ந்தார்கள்.

நாற்காலிகள் போடப்பட்ட இரைச்சலைக் கேட்டதும் தேவாலயத்தோடு ஒட்டினாற் போல் உள்ள தலைவாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்தவர்களும் உள்ளே வந்து இருக்கைகள் தேடினார்கள்.

சரியான நேரத்திற்கு நேர்முகச் சந்திப்பு தொடங்கிவிட்டது.

முதலாம் தரத்திற்குப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குத் தகுதி கண்டு கொண்டிருந்தது நிர்வாகம். யூசுப் அதிபருக்குப் பக்கத்தில் இரண்டு மூத்த ஆசிரியைகள் முதலாம் வகுப்பில் கற்பித்து நிறைய அனுபவம் பெற்ற ஆசிரியமணிகள்.

புறம்பான ஓரிடத்தில் சான்றிதழ்களை மூலப் பிரதிகளுடன் ஒப்புநோக்கிக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். பிறந்த திகதியும் இடமும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். ஏனைய அலுவல்களை எழுதுவினைஞர்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

வெளியில் ஒரு மெல்லிய ‘கசமுச’ உரையாடல்.

“குமாலா எப்படி...? மகனை சேர்க்கவா?” சேலம் பிரிட்ஜிலிருந்து பிரசன்னமாகியிருக்கும் கைருன்னிசா, குமாலாவுக்குப் பழக்கமானவர். சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டிருப்பாள்!

“சேக்கத்தான் கைரூன்... இங்கே இங்கிலீஷ் மீடியம் இருக்கா...? மகன் சிரானுக்கு இங்கிலிஷ் தவிர வேறு எந்த லங்வேஜும் பேச வராது... ஆங்கிலத்தில் தான் சேக்கணும்.....”

“அப்படியா...? எதுக்கும் விசாரிச்சுப் பாருங்க... நாங்க தமிழ் மீடியத்திலதான் சேர்க்கிறம்... எங்கடவரட விருப்பப்படி”

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

“மிஸிஸ் குமாலா சலீம்...”

கிளார்க் அழைத்ததும், அவள் பரபரப்புடன் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“பிZஸ் சிட்டவுன்”

அனைத்துச் சான்றிதழ்களையும் பரிசீலனை செய்து உறுதிப்படுத்திய பின் அதிபர் பேசினார்.

“நீங்கள் கொன்வென்ட் பழைய மாணவியா...?”

“யெஸ் சேர்...”

“நாங்க இப்போதே இங்கிலிஷ் மீடியம் தொடங்குற நிலையல இல்ல...”

“......?”

“அது பிறகுதான் சாத்தியப்படும்.... நீங்கள் ஒன்று செய்யலாம். இப்போதைக்கு வேறு மீடியம் மூலம் தொடங்கினால், பிறகு நாங்கள் தகுதி கண்டு இங்கிலிஷ் மீடியத்தில் சேர்த்துவிடுவோம்... பயப்பட வேண்டிய அவசியம் இல்ல...”

“அதெப்படி சேர்...? ஆங்கில மீடியத்துக்குத் தானே அப்லிகேசன் கேட்டிருந்தீங்க... நாங்களும் புள்ளய சின்ன வயசிலிருந்தே ஆங்கிலத்திலதான் தயார்படுத்தியிருக்கிறம்....”

குமாலா மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள்.

“....... அப்படியிருந்தா இப்ப எதில சேக்கலாம் எண்டு சொல்aங்க....?”

அதிபரும் உதவி ஆசிரியைகளும் பரிசீலனை செய்தனர்.

சிரானின் ஆங்கில அறிவையும், பேச்சையும் பரீட்சித்துப் பர்த்தனர்.

“ஹீ இஸ் குட் இன் இங்கிலீஷ்” என்று குறிப்பெழுதினர்.

“தமிழ் மீடியம் ‘புல்’ மேலதிகமாக இரண்டு புதிய வகுப்புகளாகப் பிரித்தும், ஒரு வகுப்புக்கு நாற்பது பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலதிகமாக ஒருபிள்ளையையாவது சேர்க்க முடியாத நிலை.

ஆனா, இங்கிலிஷ் மீடியம் கேட்டு அப்லிகேசன் போட்டிருப்பவர்களுக்குச் சிங்கள மூலம் ஒரு ‘ஸ்பெசல்’ வகுப்பை ஏற்படுத்தியிருக்றம். அதிலும், இருபது மாணவர்களைத் தெரிவு செய்திருக்கிறம். மிக முக்கியமாக ஆங்கிலம் விஷேட பாடமாகக் கற்பிக்கப்படும். உங்க மகனை அதில சேர்க்கலாம். எதிர்காலத்தில இங்கிலிஷ் மீடியம் தொடங்கத்தான் இந்த ஏற்பாடு.”

“எதுக்கும் நா வெளியில போய் வந்து சொல்றன். கொஞ்சம் ரைம் வேணும்.... ஒரு மணித்தியாலத்தில் வந்து சொல்றன்....”

“சரி... சரி... இண்டக்கி மூன்று மணிக்கு அப்லிகேசன் குளோஸ். அதுக்கு முந்தி வந்து சொல்லலாம்... இல்லாட்டி அதிலும் இடமில்லாமப் போகும்.. இந்த வகுப்பில் இருபத்தஞ்சு புள்ளகள மட்டுந்தான் சேர்ப்போம்...”

குமாலா பரபரப்புடன் கல்லூரியின் முன் வாசலுக்கு வந்தாள். கையடக்கத் தொலைபேசியில் விரல்கள் அங்குமிங்கும் மோதியது.

எதிர்முனையில் கணவர் சலீம்.

அட்மிசன் விடயமாக நடந்த விடயங்களை விரிவாக எடுத்துக் கூறினாள்.

“அப்படியா....? மீடியம் மாத்துறது விளையாட்டல்ல... மொன்டிசூரியில் ஆங்கிலத்தில் படித்து, வீட்டிலும் ஆங்கிலம் மட்டும் பேசிப் பழகி... இப்ப மட்டும் தமிழ், சிங்கள மீடியம் என்றால் கல்வியும் மிகப் பின்தங்கிய நிலையில் தான்....

சிங்களம் அல்லது தமிழ்ப் பிரிவில் சேர்க்கப்படும் பிள்ளைகள் நூற்றுக் கணக்கான சொற் பரிச்சயத்தோடு தான் வருவார்கள்.

சிரான் போன்ற பிள்ளைகளின் சொல்வளம் பூஜ்யம் தான்....”

“இப்ப என்ன செய்றது....?”

“இங்கிலிஷில் படிப்பிக்கும் வேறு பாடசாலைகள் கிடைக்குமா.....?”

“சொல்ல ஏலாது....”

“நாங்க முதல்லே யோசிச்சிருக்கனம்... இப்ப டூ லேட் ...... பிரின்சிபல் சொல்ற மாதிரி விசேட சிங்கள பிரிவில் சேர்க்கவும்.... இங்கிலிஷ் மீடியம் பிறகு ஒழுங்கு செய்யப்படும் என்பது உறுதிதானே! அங்கிள் என்ன சொல்றார்...?’

“அவர் பழைய கேஸ்.... அவருடைய பேச்சு சரிவருமா...?”

“சரி... சரி.....அப்லிகேசன் போட்ட மத்த ஸ்கூல்களையும் பாக்கிறன் இல்லாட்டி....?”

குமாலாவுக்குப் பெரும் குழப்பமாக இருந்தது.

பாடசாலைத் தலைவாசலைத் தாண்டி வீதிக்கு வந்தாள் குமாலா.

ஒரு முச்சக்கர வண்டியைப் பேசி இரண்டு மைல் சுற்று வட்டாரத்தில் விண்ணப்பித்திருந்த வேறு பாடசாலைகளைத் தேடினாள்.

நல்ல வேளை அலுவலகங்கள் திறந்திருந்தன! இங்கிலிஷ் மீடியம் இல்லாததனால் போட்ட விண்ணப்பங்களுக்கு பதில் போடவில்லையாம்.

“கட்டிட வசதிகள் இல்லை”

“ஆசிரியர்கள் தட்டுப்பாடு”

“பிரைவேட் சர்வதேச பாடசாலைகளில் சேர்க்க முடியும்....”

டொனேசன் கட்டணும்”

இவைதான் கிடைத்த பதில்கள். குமாலாவின் முகம் வாடிவிட்டது. பட்டென்று அவளுக்கு அடிமன உந்துதல் ‘எப்படியாவது ஒரு தரமான இன்டர்நெஷனல் ஸ்கூலில் சேர்க்க வேணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

கைப்பையைத் திறந்து பார்த்தாள்.

ஆட்டோசெலவுக்கு போதிய பணம் இருந்தது. ஆட்டோ மிக வேகமாகப் பறந்து கொண்டிருந்தது.

சற்றுத் தூரமாக இருந்தாலும் நகர ஒதுக்குப் புறத்தில் ஒரு தரமான சர்வதேசப் பாடசாலையின் முன்னால் வண்டி நின்றது.

அலுவலகப் பொறுப்பாளருடன் சில நிமிடங்கள் உரையாடல்.

ஆங்கில மொழியில் மகன் சிரானுக்கு ஒரு சிறு தகுதிகண் எழுத்துப் பரீட்சை.

தகுதி கண்டதும், படிவங்களும், பாடசாலை ஒழுங்கு விதிகளும் கையளிக்கப்பட்டன.

அவற்றை நிரப்பி இரண்டு நாட்களில் டொனேசன் பணத்துடன் முதலாம் தவணைப் பாடசாலைக் கட்டணத்தையும் செலுத்தி முதலாம் தரத்திற்கு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மகன் சிரானுடன் மிகுந்த அவசரத்தில் முன்றலில் வந்திறங்கிய குமாலா ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அலுமாரியைத் திறந்து, எதையோ துழாவி எடுத்து கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

“அங்கிள் சிரான பாத்துக்குங்க.. நா டவுணுக்குப் போய் வாறன்...?”

மீரான் அங்கிளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சிரான் உடை மாற்றிக்கொண்டு மேசையில் பரத்திக் கிடந்த பரிஸ் ஹோட்டல் உணவை சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் கார்டூன் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை மீரான் அங்கிளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் தொலைபேசிக் குரல் ஒலித்தது.

“அட்மிசன் எப்படி முடிஞ்சதுன்னு தெரியாது. குமாலா ஸ்கூல்ல இருந்து வந்ததும் டவுன்குப் போயிருக்கிறா... இப்ப வருவா....”

“செடங் மதாவ்னா... ஸ்கரங் அத்துக்கே மகிஜ்ஜனா.... தராச் சாரா அர்முர்த்தி....”

(எனக்குத் தெரிகிற மாதிரி இப்ப சிங்கள மீடியம் தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் விளங்குது)

தொடர்ந்து மலாய் தாய் மொழியில் தன் சொந்த கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார் மீரான் அங்கிள்.

“பிரைவேட்ல படிக்கிறதுக்கு நெறைய செலவுதான். டொனேசன் வேறெ. சலீம் இது உன்ட வருமானத்துக்கு ஒத்துவராது. உன்னால யோசிச்சுப் பார்க்கவே ஏலாது... விரலுக்கு ஏத்த மாதிரி அரசாங்க ஸ்கூல் ஒன்றில் சேத்து... தமிழ் மீடியத்தில் படிப்பிச்சா இங்கிலிஷ¤ம் இருக்குத்தானே... ஆனா கவனமாக சிங்களத்தை டியூசன் மூலமா உயர்தரத்துக்கு கொண்டு வரணும். அப்படிச் செய்தா மலாய் சமூகத்துக்கு இருக்கும் ‘எடியூகேசனல் புரொப்லம்ஸ்’களுக்கு விடிவு கிடைக்கும்.... மார்க்கத்தில் பற்றுள்ளவனாகவும் வளர முடியும். ஏதோ நா சொல்லிட்டன் இதுதான் எப்பவும் என்னுடைய சொந்த முடிவு.

பிள்ளய எந்த ஒரு மொழியிலயும் சேக்கிறதாயிருந்தாலும், அந்த லங்வேஜின் அடித்தளத்தை மொன்டிசூரியிலிருந்தே திட்டம் போட்டு உறுதியாப் போட்டிருக்கணும். அதான் பிள்ளைய படிப்புக்கு தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லி நா கத்திக்கிட்டு இருந்தது. இப்ப என்ன நடக்கப் போகுது தெரீமா? இந்தக் காலத்தில மூத்தவங்க பேச்சைக் கேக்கிறது யாரு? எல்லாம் அனுபவிச்சுத் தான் படிப்பாங்க....

முன் யோசன இல்லாமக்கி இங்கிலிஷ்... இங்கிலிஷ் என்டு இருந்துட்டு... இப்ப ... எப்படி சரி எதிலயாவது படிச்சா போதும் என்ட முடிவுக்கு வரவேண்டியிருக்கு... பிள்ளயின் எதிர்காலத்த ஸ்கூர் தலைவாசல்ல தீர்மானிக்க வேண்டியிருக்கு... வீ ஆர் டெமேஜிங் அவர் சைல்ட்ஸ் எடியுகேசன்... எனக்கு இதில விரு ப்பமில்ல... எல்லாம் .... விதியா? நான் அப்படிச் சொல்ல மாட்டன்....

இப்ப ஸ்கூல்ல என்ன நடக்கப் போவுது தெரீமா...? வகுப்பில மத்த புள்ளகள் முன்னேறிக் கொண்டிருப்பாங்க... எங்கட சிரான் போன்ற பிள்ளைகள் சிங்கள மொழிச் சொற்கள தக்கித் தக்கி ஆரம்பிக்கப் போறாங்க....”

“அப்படி ஒரு நிலம வராது அங்கிள்... நா... நாளக்கி சிரான பிரைவேட் இன்டர்நெஷனல் ஸ்கூல்ல சேர்க்க... ஒழுங்கு செஞ்சிட்டன்...” என்று சொல்லும் போதே மகனின் தொலைபேசித் தொடர்பு அறுந்துவிட்டது.

“ஆப்பா லுரபீலங் குமாலா?” (நீ என்ன சொல்லுற?)

“ஆமா... டொனேசன் கட்ட நகை நட்டுகள ஈடு வச்சிட்டுத்தான் இப்ப வாறென்... பிள்ளையின் படிப்புக்கு இல்லாத நகை நட்டு எதுக்கு....?”

சிரானை இன்டர்நெஷனலில் அனுமதித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இப்பொழுதெல்லாம் குமாலாவின் தையல் மெஷின் ஓயாமல் சுழன்று கொண்டிருந்தது.

பெரும்பாலும் மீரான் அங்கிள் தனது கடமைகளைச் சலசலப்பின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் மாலைப் பொழுதில் வழக்கம் போல் முகம் கைகால் அலம்பிவிட்டு படிப்பதற்காக மேசையில் இருந்து புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான் சிரான்.

“மம்மி... மம்மி.... கம் ஹியர்... ஹெல்ப் மீ... ஐ ஹேவ் சம் இங்கிலிஷ் ஹோம் வர்க்...”

குமாலா விரைந்து சென்று புத்தகங்களை எடுத்து விரித்துப் பார்த்தவாறே பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

“குமாலா என்ன ஹெல்பாமா....?”

“ஆ...மா... அங்கிள்....”

“நீ தான் என்ன செய்வ... உனக்கு இங்கிலிஷ் சரியாகத் தெரியாது. நல்ல மாஸ்டரை ஒழுங்கு செய்து ரியூசன் குடுக்க நம்மக்கிட்ட வருமானம் இல்லை....”

“ஆமா... அங்கிள்.... வருமானமில்லை...”

“அதைச் சுட்டித்தான் நான் சொன்னது கவர்மென்ட் ஸ்கூல்ல போடுங்க என்டு... அங்கென்டா தமிழும் படிப்பான். இங்கிலிசையும் படிச்சிடுவான். நம்மட வருமானத்துக்கும் கட்டுப்படியாகும்...”

“சொறி அங்கிள் நான் தான் பிழை செஞ் சிட்டன்....”

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.