புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.
ஓஹோவென புத்தாண்டு கொண்டாட்டங்கள்

ஓஹோவென புத்தாண்டு கொண்டாட்டங்கள்

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களின் மத்தியிலே மக்கள் புதுவருடங்களைக் கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்தனர்.

இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அச்சமும் பீதியுமற்ற ஒரு புத்தாண்டை கொண்டாடக் கூடிய அரிய வாய்ப்பு இம்முறை எமக்கு கிடைத்திருக்கிறது. மனித இனம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வடிவமே பெருநாள் கொண்டா ட்டங்களாகும்.

இதுவரை காலமும் அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தின் மத்தியில் எதிர்கால நம்பிக்கையில்லாதவர்களாக இருந்த இந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தை விட திண்டாட்டங்களையே பெரிதும் அனுபவித்து வந்திருந்தனர்.

இந் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு நாட ளாவிய ரீதியில் அமைதி நிலவுகின்ற சூழ்நிலையை பிறக்கின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு அர்த்தபுஷ்டியாக அமை யும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.

நமது நாட்டின் நாலாத் திசைகளிலும் காணப்பட்ட வீதித் தடைகளும் சந்தேகப் பார்வைகளும் இன்று தளர்ந்து வருவதன் காரணமாக பிறக்கப்போகும் புத்தாண்டை வடக்கு கிழக்கு உட் பட நாட்டின் அனைத்து பிரதேச மக்களாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதை பார்க்க முடிகிறது. பழையதைக் களைந்து புதியதை வரவேற்று எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் நோக்கில் கொண்டாடப்படும் இந்தப் புதிய வருடத்திற்கான முன்னேற்பாடுகள் முழு நாட்டிலும் களைகட்டியிருப்பதை நாம் காண்கிறோம்.

தலைநகர் கொழும்புக்கு வருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாதிருந்த வடபகுதி மக்கள் இன்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கொழும்பு வருவதும் யுத்த பூமியின் அடையாளமாக விளங்கும் வடபகுதிக்கு தென்பகுதி மக்கள் சுற்றுலா செல்லும் அளவிற்கு நாட்டில் நிலைமைகள் சீரடைந்துள்ளன.

இந்நிலையில் தலைநகர் கொழும்பில் தமிழ், சிங்கள புத்தாண்டு வியாபாரம் களைகட்டியிருப்பதை கொழும்பு வீதிகளில் ஒருநடை சென்று வந்தால் புரியும். பறக்கோட்டைப் பகுதி கடை வீதிகள் திருவிழா போல காட்சி யளிக்கிறது. கடந்த மாத நடுப்பகுதி யிலிருந்து பிரதான வீதியில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து செய்வதற்கு முடியாதிருக்கிறது. பாதசாரிகள் வீதிகளைக் கடந்து செல்ல முடியாத அளவிற்கு நடை பாதை வியாபாரிகள் தங்கள் வயி ற்றுப் பிழைப்புக்காக பொருட்களின் விலைகளை கூவிக் கூவியே களை த்துப் போய் விடுகின்றனர். அவர்களு க்குத்தான் நல்ல வியாபாரம், இலாபம் என்று இரண்டாம் குறுக்குத் தெரு விலுள்ள டெக்ஸ்டைலில் பணிபுரியும் பாலா சொல்கிறார்.

15 வருடங்களுக்கு மேலாக அந்த விற்பனை நிலையத்தில் பணிபுரியும் பாலா, மொத்த வியாபாரத்தைப் பொறுத்தவரையில் பெப்ரவரியில் ஆரம்பித்து மார்ச் இறுதிவரை சிறப்பாக நடந்து முடி ந்துவிட்டது. தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் புதுவருடத்தை முன்னிட்டு ஏற்க னவே விற்பனைக்குத் தேவையான புடைவை வகைகளை கொள்வனவு செய்துவிட்டார்கள் என்கிறார்.

நடைபாதை வியாபாரிகள் வரிப்பணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் சொல்லும் விலைக்கு பொருட்கள் தரமாக இருக்கிறதோ இல்லையோ இலாபமாக இருப்பதை மட்டும் பார்த்துவிட்டு வாங்கிச் செல்கிறார்கள். கடைகடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை. தேவையானது வீதியில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதனையே வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் சில்லறை வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளுமே நல்ல பயனைப் பெறக்கூடியதாக இருக்கிறது என்றார் பாலா.

புறக்கோட்டை பிரதான வீதியில் ஆடை விற்பனையில் பிரசித்தி பெற்ற பல கடைகள் இருக்கின்றன. உள்ளே சென்று திரும்பி வருவதற்குள் வேண்டாமென்றாகிவிடுகிறது. உடைகளை பார்த்து தேர்ந்தெடுப்பதற்கு முடியாத அளவிற்கு சனக்கூட்டம் நிறைந்திருக்கிறது. புடைவைக் கடைகளில் பணிபுரியும் இளைஞர்கள் எவ்வித சலிப்புமில்லாமல் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆடைகளை எடுப்பதும் பின்னர் அடுக்குவதுமாய் இருக்கிறார்கள். காலை 10 மணிக்கு வந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரையும் ஓயாத வேலையாக இருக்கும். கடந்த ஆண்டுகளைவிட இவ்வாண்டு சனக்கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. மாலை வேளையில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வந்து போகிறார்கள் என்கிறார் மெயின் வீதியில் இருக்கும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் மலையக இளைஞர்.

புத்தாண்டு கால விற்பனை தொடர்பாக புறக்கோட்டை ஜவுளிக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் கந்தராஜிடம் வினவியபோது; டெக்ஸ்டைல் வியாபாரம் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது என்கிறார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மக்கள் சுதந்திரமாக தமது தேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நல்லதொரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து தேவையானவற்றை கொள்வனவு செய்து அன்றைய தினமே சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அந்தளவிற்கு நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை பாரம்பரியங்களுடன் கொண்டாடும் காலம் மாறிவிட்டது. அந்தக்காலத்தில் பெரியவர்கள் அந்தந்த மத, கலாசார பாரம்பரியங்களைப் பேணும் விதத்தில் உடைகள் வாங் குதுண்டு. இப்போது அவையெல்லாம் படிப்படியாக குறைந்து விட்டது. புத்தாண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரேயே உடைகள் உட்பட வீட்டுப்பாவனைக்குத் தேவையான அனைத்து பொருட்களை யும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். இப்போது அப்படியல்ல பலகாரம், பட்சடிகள் கூட பூட் சிட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இது ரெடிமேட் யுகம், எது தேவையோ அதனை அப்போதே பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தொழில்துறைகள் வளர்ந்துள்ளன.

டெக்ஸ்டைல்ஸ் விற்பனையைப் பொறுத்தவரையில வேண்டிய தெரிவுகளை விலைக்கு தகுந்தாற்போல பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நவீன காட்சியறைகளைக் கொண்ட ஹவுஸ் ஒப் பெஷன், நோலிமிட், ஒடெல், பெஷன் பக், கண்டி போன்ற வர்த்தக மையங்களிலும் கூட தற்போது விற்பனைக்கு குறைவில்லை. பங்கொக், சீனா, தாய்வான் போன்ற நாடுகளிலிருந்தெ ல்லாம் பெருந்தொகையில் உடைகள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை சந்தைப்படுத்துகின்றனர். கடந்தாண்டுகளை விட இவ்வாண்டில் புடைவை வியாபாரம் களைகட்டியிருக்கிறது. இறுதிநேர கொள்வனவில் மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் கந்தராஜ்.

புறக்கோட்டை வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.பி.சாமி உணவுப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி நியாய விலைக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார். ஒரு மாதத்திற்கு முன்பதாவே வடக்கிலிருந்து வெங்காயம், செத்தல் மிளகாய், தானிய வகைகள் கொண்டு வரப் பட்டன. இந்தியாவிலிருந்தும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட் டிருக்கின்றன. சம்பா, பச்சையரிசி, பாஸ்மதி அரிசிவகைகளின் விலைகள் சற்று ஐறைந்திருப்பதால் தேவையான அளவில வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றார் இவர்.

ஐந்தாம் குறுக்குத்தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, புத்தாண்டுக்கான மொத்த வியாபாரம் எல்லாம் முடிந்து விட்டது. ஒரு மாதத்திற்கு முன்னரேயே மொத்த வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை சந்தைப்படுத்தி விடுவார்கள். அப்போது என்ன விலைக்கு வாங்கினார்களோ அதன் மீது இலாபம் வைத்து விற்பார்கள். புதுவருட காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டி ருந்தாலும் அது வாடிக்கையாளருக்கு எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை. அதன் மூலம் வியாபாரிகளே அதிக இலாபத்தை பெற்றுக் கொள்கின்றனர். இவ்விடயத்தில் சரியானதொரு திட்டமிடல் அவசி யமாகும். உள்ளூரில் உற்பத்தியாகும் உழுந்து, பயறு, பருப்பு, கடலை போன்ற தானிய வகைகள் போதுமானதாக இல்லை. நாட்டில் தற்போது சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் பொருட்கள் பெருமளவில் கொண்டு செல்லப்படுகி ன்றன. அங்கிருந்து கொண்டு வரப் படும் பொருட்களும் போதுமானதாக இல்லை. எனவே எவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்? அவற்றை சந்தைப்படுத்து வது, விலையை நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களில் திட்டமிடல் என்பது மிகவும் அவசியமாகும் என்றார் பழனியாண்டி.

கோழியிறைச்சி விற்பனையாளர் சங்கத் தலைவர் எம்.யூசுப் 350 ரூபாவிற்கு இருந்த கோழியிறைச்சி தற்போது 500 ரூபாவைத்தாண்டுகிறது என்கிறார்.

18 ரூபாவிற்கு விற்கப்பட்ட முட்டை 12 முதல் 15 ரூபா வரை விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என கோழியிறைச்சி விற்பனையாளர் சங்கத் தலைவர் எம்.யூசுப்பிடம் கேட்ட போது, கோழிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே காரணம் என்றார். நாட்டில் உற்பத்தியாகும் கோழி போதுமானதாக இல்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதென்றால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் கோழி இறக்குமதி மூலம் நாட்டுக்குள் வந்து விடுமோ என்று சுகாதாரத்துறை அச்சம் கொண்டுள்ளது. எனவே இறைச்சி இறக்குமதி கஷ்டம்.

அத்துடன் நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுவிட்டதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களுக்கு அதிகளவிலான கோழி இறைச்சி கொண்டு செல்லப்ப டுகிறது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி யடைந்து வருகிறது. நட்சத்திர ஹோட் டல்களுக்கும் சுற்றுலா விடுதிகளுக்கும் தேவையான கோழியிறைச்சியை சந்தைப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் நோய் குறித்த அச்சம் நாட்டில் இருந்ததன் காரணமாக பெருந்தொகை யான தாய்க்கோழிகளை குறைந்த விலைக்கு விற்று விட்டார்கள். ஒருநாள் குஞ்சுக்கு இப்போது அதிக கிராக்கி காணப்படுகிறது. அப்போது 55 ரூபாவிற்கு விற்கப்பட்டது. இன்று அது 150 ரூபாவிற்கு விற் கப்படுகிறது. கோழி உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு காரணாக கோழி உற்பத்தியில் ஈடுபடுவோர் கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட்டு வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

கொழும்பு நகரத்தில் தோல் உரித்த கோழியில் விலை இன்னும் 15 ரூபா வரை அதிகரிக்க வாய்ப் பிருக்கறது. தோல் உரிக்காத கோழியிறைச்சியை கூட்டுறவு மத்திய நிலையங்களில் இருந்து 350 ரூபாவிற்கு வாடிக்கையாளர்கள் தேவையான அளவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. முட்டையை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவது தொடர் பாக வர்த்தக அமைச்சருடன் நாம் கலந்துரையாடி 30 இலட்சம் முட் டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்ததால் தற்போது முட்டை சந்தையில் தாராளமாக கிடைக்கிறது. கோழி இறைச்சி விலை இப்போதை க்கு இப்படித்தான் இருக்கும் என்றார் யூசுப்.

பொதுவாக கொழும்பிலும் முக்கிய நகரங்களிலும் 10, 11, 12ம் திகதிகளில் புத்தாண்டு விற்பனை உச்சத்துக்கு சென்று விடுவது வழக்கம். கடைசி நேரத்தில் எங்கெங்கோ பணம் தேடிக்கொண்டு வீதிகளுக்கு வரும் அப்பா, அம்மாமார்கள் அவசர அவசரமாக பொருட்களை வாங்கத் தொடங்குவார்கள். பொருட்களை வாங்கவும் வேண்டும், பெட்டி படுக்கைகளைத் தயார் செய்யவும் வேண்டும். பஸ் பிடிக்கவும் வேண்டும் என்று ஒரே பரபரப்பாக இருப்பார்கள். இந்த அலை மோதும் கூட்டத்தை இம்முறை கொழும்பு வீதிகளில் பார்க்க முடியவில்லை. இதற்குக் காரணம் தெரிந்ததே. பண்டிகை கொண்டாட்டங் களுக்கு இடையே பொதுத் தேர்தல் வந்ததும், தேர்தலோடு ஒரு நீண்ட விடுமுறை குறுக்கிட்டதும் இதற்குக் காரணம்.

எனவே மக்கள் ஏழாம் திகதியே புறப்பட்டு தத்தமது கிராமங்களுக்கு மூட்டை முடிச்சுகளோடு சென்றுவிட்ட தால் எட்டாம், ஒன்பதாம் திகதிகள் வெறிச்சோடிப் போய்விட்டன. பத்தாம் திகதியும் கொழும்பு வீதிகளில் எதிர்பார்த்த பரபரப்பு இல்லை. லேக்ஹவுஸ¤க்கு எதிரே உள்ள கண்காட்சி மண்டபத்தில் வழமையாக நடைபெறும் பண்டிகை விற்பனையில் சனம் அலைமோதும். இளம் பெண் களுடன் உரசிக்கொண்டு செல் லலாம் என்பதற்காகவே இங்கே சிலர் ‘விஜயம்’ செய்வதுண்டு. இம்முறை 8, 9ம் திகதிகள் இக் கண்காட்சி மூட ப்பட்டு 10ம் திக தியே திறக்கப்பட்டது. எனினும் கூட் டம் பெரியதாக சேரவில்லை. கொழும்பு வியாபாரிகளைப் பொறுத்தவரை இடையே வந்த இந்தத் தேர்தல் திருவிழா புத்தா ண்டு விற்பனையை புஸ்வாண மாக்கிவிட்டது. பல கோடி ரூபா நஷ்டம் இவர்களுக்கு.

மளிகைப் பொருட்களைப் பொறு த்தவரையில், விலைகள் கட்டுக்குள் இருந்தது பெரிய ஆறுதல். அரிசி விலை குறைந்திருந்தது. 100 ரூபாவுக்கு ஏறியிருந்த சம்பா ரக அரிசி 70 ரூபாவுக்கும் தாராளமாக சாப்பிடலாம் என்ற வகையிலான அரிசி 49 ரூபாவுக்கும் ‘சதோஸ’வில் கிடைக்கிறது. ஒரு காலத்தில் பணக்காரர் அரிசியாக இருந்த பாஸ்மதியை 69 ரூபாவுக்கு வாங்கலாம். 100 ரூபா பகல் சாப்பாட்டு பார்சலிலும் பாஸ்மதி சோறு வைக்கிறார்கள்! மைசூர் பருப்பு 149, 150 ரூபாவுக்கு வாங்க முடிகிறது. பயறு விலைதான் அதிகம், இரு நூறைத் தாண்டுகிறது. அடுத்தது. உளுந்து, 300, 350 ரூபா என்ற உச்சாணிக் கொம்பைவிட்டு இறங்குவதாக இல்லை. இதனால் சைவக்கடை அயிட்டங்களை நினைத்தாலே நம் ‘பர்ஸ்’ பகீரென்கிறது.

இரண்டாம் குறுக்குத் தெருவில் ‘ஸ்ரீயாணி’ என்ற பெயரில் உயர் தரம் கொண்ட சைவ உணவகம் நடத்தும் கனகராஜ், நாங்கள் 48 ஊழியர்கள் சேர்ந்து முழு முயற்சியுடன் ஈடுபட்டும் கூட கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்கிறார். விலை கொஞ்சம் அதிகமானாலும் தமிழக சரவணபவன் அளவுக்கு ருசியும் தரமும் கொண்டவை. இவர் விற்கும் பண்டங்கள். எனினும் இங்கே கூட்டம் அலை மோதுகிறது.

கடைசியாக மது. கல் ஒரு போத்தல் 565 ரூபா. இது தான் குறைந்த பட்ச விலை.

ஏனைய சரக்குகள் 750 முதல் ஐயாயிரம் என்று போத்தல் விலைகள் எகிர்கின்றன.

ஆனால் யார் கவலைப்பட்டார்கள்? ஒருவர் நான்கைந்து போத்தல்கள் என்று அள்ளிக்கொண்டு போகிறா ர்கள். 13, 14 இந்தக் கடைகளுக்கு பூட்டு என்பதும் இந்த அவசரத்துக்குக் காரணம். மதுக் கடைக்காரர்களுக்கு இந்த சீஸன் கொண்டாட்டம் தான். ஏனெனில் புத்தாண்டு பண்டிகைக்கு முன் தேர்தல் பண்டிகை வந்து, சாராய வைபோகமே என்றாகிவிட் டதே!

இம்முறை ஏராளமான பழங்கள் விற்பனைக்கு விடப்பட்டிருந்தன. திராட்சை பழங்கள் 500 கிறாம் 150 ரூபாவுக்கும், மென்டரின் எனப்படும் நாராங் நூறு ரூபாவுக்கு எட்டு என்றும் அப்பிள் 100 ரூபா வுக்கு ஐந்து முதல் பத்து பழங்கள் என் றும் விற்கிறார்கள். அன்னாசிப்பழம் சந்தைக்கு வந்திருக்கிறது. சாராயம் குடித்து கோழி இறைச்சியை உள்ளே தள்ளுபவர்கள் கூடவே பழங்களையும் சாப்பிட்டால் சாந்தி செய்வதாக அமையும்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.