புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

மக்கள் திரை

மக்கள் திரை

இன்றைய உலகத் திரைப்படங்கள் மீதான ஒரு சமூகக் கண்ணோட்டம்

அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொணடிருக்கிறோம். நமது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே செல்கிறது.

எதிர்காலத் தொழில்நுட்பம் பற்றிய எதிர்வுகூறல்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. ஒரு சாதாரண கையடக்கத் தொலைபேசிக்குள் காணப்படும் தொழில்நுட்பங்கள் எண்ணற்று விரிந்த வண்ணமுள்ளன. தொலைக்காட்சி வானொலி இணையம் என பல வசதிகள் கையடக்கத் தொலைபேசிக்களுக்குள் காணப்படுகின்றன. எனினும் தொழில்நுட்பங்களின் உச்ச சாதனைக் களமாக பெறுபேறாக கணனிகளே காணப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. நமது தினசரி உரையாடல்களில் திரைப்படத்திற்கென தனியிடம் உண்டு. ஒரு நூற்றாண்டைக் கடந்த வரலாறு திரைப்படத்துக்கு உண்டு.

இன்றைய உலகத் திரைப்படங்கள் அசுர வளர்ச்சியைக் காட்டி பிரமிப்பூட்டிக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் திரப்படங்களும் எண்பதாண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்தாலும் உலகத் திரைப்படங்களை எட்டிப் பிடிக்க இயலாதவையாகவே காணப்படுகின்றன.

இன்னமும் காதலன் காதலியைச் சேர்த்து வைப்பதிலும் வில்லனை அரிவாளால் வெட்டுவதிலுமே, தமிழ்த் திரையுலகம் தனது கற்பனை சக்தியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் மேலைநாட்டுத் திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளையும் தொழில்நுட்பத் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி பிரம்மாண்டத் திரைப்படங்களை வழங்கி அசத்தி வருகின்றன. தொழில்நுட்ப சாதனைகளுக்குள் இன்று திரைப்படமும் உள்ளடக்கப்பட்டுவிட்டது.

பிரம்மாண்டத் தொழில்நுட்பத்தினூடாக உருவாக்கப்படும் திரைப்படங்கள் உண்மையில் கண்களை ஏமாற்றும் வித்தையைக் கையாண்டே வெற்றி பெறுகின்றன. ஆனால் இதே தொழில்நுட்பம்தான் சிறந்த சமூகத் திரைப்படங்களையும் வழங்கி வருவதென்றால் மறப்பதில்லை.

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தழுவல்களைக் கொண்டு உருவாக்கப் படுவதில்லை. ஒவ்வொரு திரப்படமும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. புதிய முயற்சிகளுக்கான ஆக்கமும் ஊக்கமும் அங்கு நிறையவே இருக்கின்றன.

சரி மக்களுக்கான திரைப்படம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? மக்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களை வழங்குவதா அல்லது மக்களின் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையிலான திரைப்படங்களை வழங்குவதா?

ஏன் இப்படியொரு கேள்வி? நமது வாழ்வியலைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை மக்கள் ரசிப்பதில்லையா? ‘இல்லை’ என்பதே பதில்! கண்களை ஏமாற்றும் கணினி மாயாஜாலங்களை அள்ளிக்கொட்டி உருவாக்கப்படும் பிரம்மாண்டத் திரைப்படங்கள் வசூலை அள்ளிக் கொட்டுவதும் மிகவும் இயல்பான கதைக் களத்தைக் கொண்ட திரைப்படங்கள் இருந்த இடம் கூட தெரியாமல் காணாமல் போவதும் வழமையாக நடந்து வருவது நாமறிந்ததே.

இயல்பான மக்கள் வாழவியல் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றாலும்கூட வசூலில் சாதனை படைப்பதெல்லாம் கிடையாது. போட்ட முதலை எடுக்க முடியும் அவ்வளவுதான்.

திரைப்படமொன்றின் வெற்றியில் அதன் உருவாக்கத்துக்குப் பின்னரான காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உருவாக்கப்பட்ட திரைப்படத்தை ஏதாவதொரு திரையரங்கில் சத்தமில்லாமல் திரையிட்டால் உடனே வெற்றிபெற்று விடுவதில்லை.

குறித்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து அவர்களை ஈர்ப்பது என்பது மிகக் கடினமான பணி. குறைந்த முதலீட்டில் உருவாக்கும் திரைப்படங்களை அதிக பணம் செலுவழித்து விளம்பரப்படுத்த முடியாதநிலை காணப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் பாரியளவில் விளம்பரப்படுத்தப்படுகின்ற திரைப் படங்களே வசூலை அள்ளிக்கொட்டி வெற்றி பெறுகின்றன. சாதாரண திரைப்படங்கள் விமர்சகர்களால் போற்றப்படுகின்றனவே தவிர மக்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை.

இன்றைய சூழலில் வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களே பெருமளவில் வெளிவருகின்றன. மக்கள் திரைப்படங்கள் வேறு தளங்களில் சிறப்பாக இயங்கிவருகின்றன. குறுந் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் என பல்வேறு வடிவங்களில் மக்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படுகின்றன.

இதற்கென தனியானதொரு ரசிகர் வட்டம் உண்டு. குறுந்திரைப்படங்கள் போன்றவற்றை குறைந்த செலவில் இலகுவாக நெறியாள்கை செய்து வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் கூட திரைப்படத்துறையைவிட குறுந்திரைப்படத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இலங்கை மக்கள் கூட இந்தியத் திரைப்படங்களை ரசிக்கின்றனர். இதற்கு அவற்றில் உள்ள வணிகத் தன்மையே காரணமாகும்.

இன்று இருக்கின்ற பிரச்சினை மக்கள் வாழ்வியல் சார் திரைப்படங்களை எவ்வாறு எடுப்பதென்பதல்ல. ஆனால் அது சார்ந்து சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.

முதலாவது மக்கள் இதை ரசிப்பார்களா என்பது தமிழிலும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்த திரைப்படங்கள் வெளிவந்த போதுங்கூட அவை வெற்றி பெறவில்லை என்பதை அறியக்கூடியதாகவிருந்தது. தமது திரைப்படம் குறைந்த பபட்ச வெற்றியையேனும் ஈட்டவேண்டும் என்பதே தயாரிப்புக் குழுவின் எண்ணமாகும்.

மிகச் சில படங்களே விருதுகளுக்கும் உரித்தாகின்றன. எனவே மக்களை முன்னிறுத்தி திரைப்படங்களை எடுப்பது என்பது தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை விஷப் பரீட்சையாகவே காணப்படுகின்றது. போட்ட முதலையேனும் எடுக்க முடியாத திரைப்படங்களால் யாருக்கென்ன லாபம்?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.