புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

ஆரையூர்த்தாமரையின் ''விற்பனைக்கு ஒரு கற்பனை''

ஆரையூர்த்தாமரையின் ''விற்பனைக்கு ஒரு கற்பனை''

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு விழா

அண்மைக் காலமாக வீச்சான கவிதைகளை எழுதிவரும் ஆரையூர்த்தாமரையின் “விற்பனைக்கு ஒரு கற்பனை” கவிதைக் தொகுதி அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

கொழும்பு புரவலர் புத்தகப்பூங்கா, இவ்வருட மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டு வைத்த நான்கு நூல்களில் இதுவும் ஒன்று.

இந்நூலில் உள்ள கவிதைகள் வித்தியாசமான முறையில் வீச்சான சிந்தனைகளுடன், புதுமையான உருவகங்களுடன் அமைந்துள்ளன. பல கவிதைகள் தத்துவ நோக்கிலும், உளவியல் நோக்கிலும் அமைந்துள்ளன. கவிதைகளின் வித்தியாசமான வளர்ப்பு இக்கவிதைகளின் கவித்துவத்துக்கு எடுத்தக் காட்டுகின்றது.

இந்நூலில் 40 முழு நீளக் கவிதைகளும் 10 குட்டிக் கவிதைகளும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கவிதையும் பொருத்தமான ஓவியத்துடன் இடம்பெற்றிருப்பது புதுமை.

பழகிப் போன விடயமாக இருந்தாலும் அதைச் சொல்லும் முறை வித்தியாசமாக அமைந்துள்ளது. இதுவே ஆரையூர்த் தாமரையில் தனித்துவமாகும்.

இறைவன், இயற்கை சமூகம், காதல், போராட்டம், அகதி வாழ்க்கை, மலையகம் என இக்கவிதைகளை வகைப்படுத்த முடியும்.

ஒவ்வொரு கவிதையும் வித்தியாசமான தலைப்புடன் அமைந்துள்ளதுடன் ஒரு சில கவிதைகளை நோக்குவோம் ஐயரின் ஆமைக்குற்றி- இதற்கும் ஆமைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆனால் ஐயர், உட்கார்ந்து சில பூஜைகளைச் செய்யும் போது ஆமைவடிவிலான ஒரு பலகையில் உட்கார்ந்து கொள்வது ஆமை ஐம் புலனடக்கத்துக்கு உதாரணம் என்பதாலா இவ்வாறு பலகை அமைக்கப்பட்டுள்ளது என கவிஞர் சிந்திக்கிறார்.

“நான்கு கால்களையும் ஒரு
தலையையும்
ஒரே சமயத்தில் தன் ஓட்டுக்குள்
இழுக்கும்
ஆமையைப் போன்று யாகத்தின்
முன்
ஐம்புலன்களையும், ஐயர்
அடக்குவதாக ஒரு ஐதீகமாம்

மயில்முட்டை தீதனக்
கொடுமையின் உருவகம் இக்கவிதை இதன் கடைசி அடி இவ்வாறு கூறுகிறது.
“ஒரு மயில் முட்டை இரு
கோழிகளுக்குள் அடைக்கு
இருந்தால்தான் குஞ்சு பொரிக்கும்
– இது
இயற்கை என்றால் காதல்
கோழிக்குள் அடைப்படுத்த
என் மன மென்னும்
மயில்முட்டை
கல்யாணக் கோழிக்குள்
அடைக்கடுக்க
ஆயத்தப்படுத்துவதும்
இயற்கைத்தான்

இக்கவிதைகளின் பாடு பொருள் பல சமூக அவலங்களை உள்ளடக்கியுள்ளது.

ஏழைகளின் அவலம், பெண்கள் மீதான அடக்கு முறை போலித்தனமான சம்பிரதாயங்கள், சமூகக் கொடுமைகள் இயற்கையின் அழகு, இளைஞரின் போராட்டம், யுத்த அவலங்கள், வன்னி அகதிகள் என இன்று நமது சமூகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகளே பல கவிதைகளில் எதிரொலிக்கின்றன. ஆனாலும் அவை இதயத்தில் தைக்கும் வகையில் வித்தியாசமான உருவகங்களுடன் சொல்லப்படுகின்றன.

கவிதையைப் படித்தவுடன் உள்ளம் கிளர்ந்தெழும் வகையில் கவிதைகள் வார்க்கப்பட்டுள்ளன. கவிதைகளின் சிறப்புப்பற்றி அணிந்துரையிலும் சில குறிப்புகள் “பதர்களுக்கு மத்தியில்” நெல்மணிகள் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன.

ஏனைய கவிஞர்களின் பார்வையை விட இவரது பார்வை சற்றுக் கூர்மையானது. அதுவே இவரது கை வண்ணமாகவும் அமைகிறது. எனலாம். உதாரணமாக ஜப்பானி கவிதை வடிவனமாக ஷிoka என்னும் நீண்ட கவிதை வார்ப்பைச் சில கவிதைகளில் நாம் காணலாம். “நீளமான இக்கவி வடிவம்” முராரி பாடும் முகல்கள்” என்று கவிதையில் புத்துயிர் பெறுவதைக் காணலாம்.

இன்னும் ஒரு குறிப்பு வருமாறு – “புதுமையான உருவகங்கள், புதுமையான படிவங்கள் புதுமையான சிந்தனை என்பவற்றை இவரது கவிதைகளில் நாம் தரிசிக்கலாம்”

ஆரம்பத்தில் இந்நூலுக்கு ‘தாமரைக்” கவிதைகள் எனப் பெயரிடப்பட்டு இருந்ததாம் பின்னர் நூல் வெளியீட்டாளர்கள் விற்பனைக்கு ஒரு கற்பனை” என மாற்றியுள்ளதாக அறிகிறோம்.

தலைப்பில் என்ன இருக்கிறது. ஒரு ரோசாப் பூவை எப்பெயரில் அழைத்தாலும் ரோசா ரோசாதானே. ஆனாலும் ஆரையூர்த் தாமரையின் கவிதை ஒவ்வொன்றும் ஒரு தாமரையாகவே காட்சியளிக்கின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.