புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

ஷசொந்தப் புரு~னென்றால் சுணங்காரோ முன்மாரி''

ஷசொந்தப் புரு~னென்றால் சுணங்காரோ முன்மாரி''
உறவையும் பிரிவையும் கூறும் கிழக்குக் கிராமத்து நாட்டுப் பாடல்கள்

மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே கிராமங்களில் வாழும் முஸ்லிம்களிடையே நாட்டுப் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாகத் திகழ்கின்றன. முஸ்லிம்களின கலாசாரத்தையும், பண்பாட்டையும் சிறந்த முறையில் எடுத்துக் கூறும் இப்பாடல்கள் சிறப்பு வாய்ந்தவை.

கரீம் கடல் கடந்து சென்று அயல் நாடுகளிலே பொருள் தேடுபவன். அவன் இப்பொழுது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறான். திருமணமான புதிதில் அவன் அயல் நாடு செல்ல ஆயத்தமாகிறான். பொருளிருந்தால்தானே வாழ்க்கைப் படகை ஒட்டிச் செல்ல முடியும்.!

அவன் தன் அன்பு மனைவியிடம் விடை பெறுகிறான். அதனைக் குறிக்கும் பாடல் இது.

“வங்காளம் போரேனென்று
மனக் கவலை வையாதே - உன்
சிங்காரக் கொண்டைக்குச்
சின்னச் சீப்பிரண்டு வாங்கி வாறன்!”

இதைக் கேட்டதும் மனைவி கதிகலங்கிப் போனாள். அவள் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்பதைக் கேட்டதும் அவள் கதிகலங்கி போகிறாள். இதோ அவள் மனநிலையைப் பாடல் எடுத்துக் கூறுகிறது.

“போகட்டோவென்று
பொற்கொடியார் கேட்கின்றார்
போவென்று சொல்லப் பொருந்துதில்ல
என் மனசு!”

அவளுக்குப் போய் வாருங்கள் என்று கூற மனம் இடந்தரவில்லை.

இதோ அவன் விடைபெறுகிறான்.
“கடலிலே கதிரநபி
கப்பலிலே ஹயாத்து நபி
மலை நங்கனமே போய் வாறன்!”

என்று பாடி அவள் மனதைத் தேற்றி அவன் அவளிடம் விடைபெற்றுச் செல்கிறான்.

அவன் அவளை விட்டுப் பிரிந்து போய் பல நாட்கள் கழிந்து விடுகின்றன. அவள் அவன் நினைவால் வாடுகிறாள். அவன் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் வாயிலிருந்து பாடல் பிறக்கின்றது.

“அஞ்சு திங்கள் அஞ்சு வெள்ளி
ஐயாறு முப்பது நாள்
மறு பிறையும் கண்டேன் அவர்
மறுமொழியைக் காணவில்லை!”

நாட்கள் நகர்ந்தோடின. அவனிடமிருந்து அவளுக்கு எந்தவிதமான தகவலும் இல்லை. அவள் உள்ளம் வேதனையால் விம்முகிறது.

இனிப் பொருள் தேடச் சென்ற கரீமின் நிலைமையைப் பார்ப்போம் அவனால் பிரிவுத் துயரைத் தாங்க முடியவில்லை.

அவன் உள்ளத்து உணர்ச்சிகளை வாரிக் கொட்டுகின்றான்.

“ஆசைக் கிளி வளர்த்து
அக்கரையில் கொண்டு வைத்துப்
பேசிப்பழக முதல் அதை ஏங்க
விட்டு வந்தேனே!”

பிரிவுத் துயர் அவனை பெரிதும் வாட்டுகிறது. இருந்தாலும் அவன் என்ன செய்ய? பொருள் தேடிக் கொண்டல்லவா அவன் திரும்பிச் செல்ல வேண்டும்! அவன் அவளுக்கு எத்தனையோ வாக்குறுதிகளை அளித்து விட்டுச் சென்றிருக்கிறான். அவைகளை நினைக்கும் பொழுது புதுமனைவியின் நெஞ்சம் துடிக்கின்றது. அவள் அந்தப் பழைய புளிய மரத்தடியிலே போய் அமர்ந்து கொள்கிறாள். இதோ பாடல் பிறக்கின்றது!

“வாயிருந்தால் இந்த
வயது வந்த புளியமரம் சொல்லாதோ எந்தன்
துரை சொன்ன உறுதி மொழி!”

அவன் அவளுக்குச் சொல்லிச் சென்ற ஆயிரமாயிரம் இன்பக் கதைகளெல்லாம் அவள் மனத் திரையில் தோன்றி மறைந்தன. அவள் விரகதாபத்தால் துவண்டு போகிறாள். இரவு நேரம், மழை கொட்டுகிறது. மழையும், குளிரும் அவளை வாட்டி வதைக்கிறது. அவளுக்கு கோபம் பொங்கி வருகிறது. இந்தப் பாடல் அதனை வெளிப்படுத்துகிறது.

“இந்த மழைக்கும் ஈனவாற கூதலுக்கும்
சொந்தப் புருஷனென்றால்
சுணங்குவாரோ முன்மாரியில்”

இந்தப் பாடல் எவ்வளவு துல்லியமாக அவள் உள்ளத்து உணர்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த மழையும் கூதலும் அவள் உள்ளத்து உணர்ச்சிகளை உச்சத்துக்கே எடுத்துச் செல்கின்றன. பாடல் வாயிலாக அவள் தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறாள்.

“இரவிலே வீசும் இளங்காற்றும் தென்றலும்
அரவாத வாள்போல்
அறுக்குதே என் மனசை!”

கணவனின் பிரிவு அவளை வேதனைக்குள்ளாக்குகிறது. இளந்தென்ல் அவளை வருடிச் செல்கின்றது. கணவனின் வரவை அவள் ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கிறாள்.

இந்தப் பாடல்கள் இனிமையாகவும் இன்பம் சேர்ப்பனவாகவும் இருக்கின்றன!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.