புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்

தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென அறியப்படும் நம் கன்னித் தமிழ் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வீறுநடை போட்டு வலம் வருவதை படம் பிடித்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆங்கில ஆதிக்கத்திலிருந்து உலக நாடுகள் யாவும் என்றுமே மீள முடியா சூழ்நிலையில், அதுவும் இந்தியா போன்ற நாடுகள் மேற்கத்திய ஆங்கில நாடுகளை சார்ந்து வாழும் நிலையில், பிராந்திய மொழியான நம் தமிழ் மொழி எந்த வகையிலும் இன்றைய வேகமான தகவல் தொழில்நுட்ப உலகில் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது? தன் இருப்பிடத்தை எப்படி தக்க வைத்துக் கொள்கிறது.

தகவல் தொழில் நுட்பம் என்பது தகவல் பரிமாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், தமிழிலும் பரிமாறக் கொள்ளப்படுமானால், தமிழின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தகவல்கள் அனைத்தும் தமிழிலேயே கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்பது புரட்சிக் கவிஞன் பாரதியின் கனவுகளுள் ஒன்றாகும். அந்தக் கனவு தற்போது மெல்ல மெல்ல மெய்ப்படத் தொடங்கியுள்ளது.

இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் பிராந்திய மொழிகளுள் தமிழுக்கான நிச்சயமான ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. மைக்ரோசொப்ட், கூகுள், யாகூ போன்ற ஜாம்பவான்கள், தங்கள் பொருட்களில் சேவைகளில் தமிழை சேர்க்க மறப்பதில்லை.

இந்திய பிராந்திய மொழிகளுள், தமிழின் பயன்பாடு இணையத்தளத்தில் மிக அதிகம். இவற்றுக்கு மூல காரணம், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள்தான்.

தமிழ் வலைப்பூக்கள்:

காற்று நுழைய முடியாத இடத்தில் கூட தமிழன் நுழைந்து விடுவான் என்பதின் வெளிப்பாடு தான் உலகத் தமிழர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எண்ணிக்கை. தமிழ் நாளிதழ் இணைய தளங்களின் மூலம், தினசரி செய்திகளை அறிந்து கொள்ள இயலுகிறது. இவற்றைக் காட்டிலும் தமிழ் வலைப்பூக்கள் தான். இவ்விஷயத்தில் அதிகமாக கோலோச்சியுள்ளன.

உலகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் எங்கோ ஒரு தமிழரால் இணையத்தில் பதிவேற்றப்படுவதனால் அடுத்த கணமே நம் திரையில் பார்க்க முடிகிறது. தமிழ் வலைப்பூக்களில் விவரிக்கப்படாத, விவாதிக்கப்படாத செய்திகளே இல்லை எனலாம். எல்லாவற்றைப் பற்றியும் இங்கே தகவல்கள் வேண்டுமளவுக்கு கொட்டப்படுகின்றன. இவ்வலைப் பூக்களினால் எண்ணிலடங்கா எழுத்தாளர்களும், கவிஞர்களும், அரசியல் வல்லுநர்களும் உருவாக்கப்பட்டும், உருவாக்கிக் கொண்டும் வருகின்றனர்.

ஒருங்கீட்டுக் குறியீடு (Unicode)

தொடக்கத்தில், தமிழ் இணையத் தளங்களில் பல்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததில், பல்வேறு சிக்கல்கள் இருந்தன. எழுத்துறுவை கட்டாயமாக பதவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது இணையத்தளம் இயக்கு நேர எழுத்துரு (Dynamic Font) தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலுள்ள மிகப் பெரிய சிக்கல், இயக்குநேர எழுத்துரு பயன்படுத்தப்பட்ட கோப்புகளை தொடர்பிலா (Offline) முறையில் படிக்க முடியாது.

இதனால், தமிழ் இணையப் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடும் படியாக இல்லை. இந்த தருணத்தில் உலக நாடுகள் மொழிகளுக்கெல்லாம் கணனியில் ஒரு பொதுவான வடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் உருவானது.

பிரசித்தி பெற்ற உலக மொழிகளின் அட்டவணை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதில், அம்மொழிகளுக்கென, பிரத்தியேகமாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதில் தமிழுக்கென குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கியுள்ளனர். அதுதான் ஒருக்கீட்டு எழுத்து(Unicode) .

இதனால் எழுத்துருவை பதவிறக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை. எல்லா இயங்குதளங்களிலும் (Operating System), எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக படிக்கவும் முடிகிறது.

தேடு பொறிகள் Search Engine) கூட நமது பக்கத்தை எளிதாக சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது.

இதனால் தமிழிலேயே தேடவும் தகவல்களை பெறவும் முடிகிறது. இப்படி இந்த பொதுவான குறியீட்டின் பயன்பாட்டை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கைத் தமிழர்கள்:

தமிழை முதன் முதலில் இணையத்தில் அதிகமாக பயன்படுத்திட்ட பெருமை இலங்கைத் தமிழர்களையேச் சேரும். இன்றளவும் தமிழ் மொழி இணையத்தில் தனி முத்திரை பதித்திட்டதெனில், அது இலங்கைத் தமிழர்களால்தான் என்றால் மிகையாகாது.

ஒரு புது உத்வேகத்தை இணையத் தமிழுக்கு நாளும் அளித்துக் கொண்டிருக்கும் இவர்களால் தான் தமிழ் அசுரவளர்ச்சியை கண்டு வருகிறது.

தமிழ் மென்பொருட்கள்:

மிகவும் கவலைப்படத்தக்கதெனில் அது தமிழ்மென் பொருட்கள் தான் இவை இன்னமும தொடக்க நிலையிலேயே உள்ளன. குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி என்பது வெறும் கனவாகவே உள்ளது.

சிறு சிறு தமிழ் சொல்செயலி (Word Processor) தான் அவ்வப்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, வேறு குறிப்பிடத்தகுந்த மென்பொருட்கள் ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. வெளிவந்த தமிழ் சொல்செயலி கூட குழந்தைத் தனமான செயல்பாட்டினை மட்டுமே கொண்டுள்ளது.

உலக தரத்தில் மேம்பட்ட செயல்பாட்டினை அளிக்கவில்லை. தமிழ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்தப்படும் சூழ்நிலையில்தான், தமிழ் தகவல் தொழில்நுட்ப உலகில், அடுத்த படிக்கு முன்னேறும்.

இது மிக விரைவில் மெய்ப்பட வேண்டிய தொன்று. இல்லையெனில் தமிழ் ஒரு தேக்க நிலையிலேயே நிலைபெற்றுவிடும்.

எழுத்தாளர்களின் இணையதளங்கள்:

பிரசித்தி பெற்ற ஏடுகளில் எழுதிவரும் நவீன எழுத்தாளர்களில் பலர் தமக்கென பிரத்தியேகமான இணையத்தளங்களை நிறுவி முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

வாசகர்களை கட்டிப்போட வைத்திருக்கும் இத்தகைய இணையதளங்களால் பலரும் தம் அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக அவ்விளையதளங்களை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால்கூட தமிழ் வளர்ச்சிப் பாதையில் வீறுகொண்டு செயல்பட முடிகிறது.

தமிழ் சங்கம் அமைத்து, தமிழை சிறப்புற முன்னோர்களைப் போல நாமும் நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தமிழை மாற்றி வளர்த்திட வேண்டும்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முத்தக் குடியினரால் பேசப்பட்ட மொழி, நம் கன்னித் தமிழ் என்பதை என்றென்றும் நிலைபெறச் செய்திட தகவல் தொbல்நுட்பத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பதே சிறந்த வழியாகும். அதனை நோக்கிய பயணம் தான் இந்த இணையதளமும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.