புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

‘பெண்ணிய சிந்தனைகள்’ பாலியல் வக்கிரங்களாவதா?

‘பெண்ணிய சிந்தனைகள்’ பாலியல் வக்கிரங்களாவதா?

கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரி ‘பெண்’ பகுதியில் திருமதி சந்திரகாந்தா முருகானந்தனின் ‘பாலியல் சமத்துவத்தின் மூலமே பால்நிலை சமத்துவம்’ என்னும் சிறு கட்டுரையை வாசித்தது முதல் என்றில்லாமல் ‘பெண்ணியம்’ என்னும் கருத்தாடல்கள் கவிதைகள் மற்றும் சிறு கதைகள் ஊடாக பெண்ணியவாதிகள் என்று தம்மை நிலை நிறுத்திக் கொள்வோர் முன் வைக்கின்ற சிந்தனைகளை வாசிக்கின்ற போதெல்லாம் எனக்குள் பலவாறான சிந்தனைகள் தோன்றும்.

பால்நிலை சமத்துவத்தை பாலியல் சமத்துவத்தினூடாக கொணரலாம் என சந்திரகாந்தா முருகானந்தன் எதிர்பார்க்கின்றாரா?

அது முடிந்திருந்தால் இரண்டாயிரம் நூற்றாண்டுகளும் அதற்கு மேலான காலங்களும் தேவையில்லை என்பது என்னுடைய நிலைப்பாடாகும்.

பெண்ணியம் பற்றிப் பேச வருபவர்கள் பெண்களுக்கான விழுமியங்களை முன்வைப்பதை வரவேற்கலாம்.

ஆணுக்குப் பெண் சமநிலை என்பதை கல்வி, தொழில்துறை, விஞ்ஞானம் போன்ற பல்வேறு நிலைகளில் முன்னெடுக்கலாம். அதனையே மகாகவி பாரதியும்

“பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைக்கும் மடமையைக் கொளுத்துவோம்” எனக் கூறிப் போந்தான்.

சிந்திக்கக் கூடிய மனித இனத்தை விட்டு அகலப் பார்வையை நோக்கின் பறவைகள் மிருகங்கள் போன்ற சிற்றறிவைக் கொண்ட உயிரினங்களில் கூட ஆண்மை, வீரியம் பெற்றதாகக் காணப்படுகிறது.

‘சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை’ என்ற சொற்பதம் இன்றைக்கு நேற்றுத் தொன்றிய ஒரு எடுத்துக் காட்டில்லை.

ஆணை விடப் பெண் இயற்கையிலே, படைப்பிலே மென்மையானவளாகவே இருக்கிறாள். அதற்காக அவளை ஆண்மை அடிமைப்படுத்துகிறது என்றேன் கருத வேண்டும். ஆணையும் பெண்ணையும் இவ்வுலகிற்கு தருவது பெண்தான்.

அதனால்தான் பெண்மையை உயர்த்தி நாட்டுக்கும், மொழிக்கும் தாய்நாடு, தாய் மொழி என மனித குலம் வகுத்துக் கொண்டு வாழ்கிறது. அதற்கிடையில் பெண்னென்றால் ஆண்களின் அடிமைகள் என்ற சிந்தனை எதற்கு?

மனித குலத்தை மொழி, மதம், நாடு எனக் கூறு போட்டு சிதைப்பது போதாதென்று ஆண், பெண் என்னும் பாகுபாடுகளும் இந்த 20ம் நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையிலும் சீரழிக்க வேண்டுமா?

ஒவ்வொரு யுகங்களிலும் ஏற்படுகின்ற மாற்றங்களில் இப்பொழுது ஆண் தலையெடுத்த சமுதாயம் இருக்கலாம். முன்னொரு காலத்தில் பெண் தலையெடுத்த சமுதாயம் இருந்ததாக அறிகிறோம். அதனையே அல்லி ராஜ்ஜியம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இவ்விதம் சமூக அமைப்புகள் மாற்றங்கள் அடைந்து வந்துள்ளன. நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி, மக்களாட்சி என்னும் ஜனநாயகம் ஆகிய வாழ்வியல் மாற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.

அந்த வாழ்வியல் முறைகளில் ஆள்பவர்கள் மாறி, மாறி வந்துள்ளதைப் பார்க்கிறோம். சிறந்த இலக்கியங்கள் என்று நோக்குகையில் பெண்கள் நாட்டை, இனத்தை, கணவனை, பிள்ளைகளைப் பேண தமது கற்பென்று சொல்லப்படுகின்ற மானத்தையே பணத்தக்கு விற்பதாக ஆவணப்படுத்தப்பட் டுள்ளது.

இதுவெல்லாம் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதற் கென்றால் அவை உலக இலக்கியப் படைப்புகளாகப் போற்றப்படுவதேன்? இவற்றை மனித நாகரிகங்களின் வடிவங்களாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அதனால் அதுதான் முடிந்த முடிவல்ல.

திருமதி சந்திரகாந்தா முருகானந்தன் தமது சிறுகதைப் படைப்புகளிலும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள பாலியலையே ஆண், பெண் சமத்துவத்தைக்காண ஆயுதமாக எடுத்திருப்பதை நான் வாசித்துள்ளேன். அவை தனியாக விமர்சிக்கப்பட வேண்டியவை.

மனித சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள எத்தனையோ நடைமுறைகளை முற்றுமுழுதாக களையப்பட வேண்டிய தேவைகள் உள்ளன. அதற்கு சமுக சீர்திருத்த நடைமுறையில் முடிவைக் கண்டுவிட முடியுமென்பது வெறும் கற்பனா வாதந்தான்.

அவர் குறிப்பிடுவது போல் “ஆண் பெண் குழந்தைகளின் வேறுபாடான விபரிப்பு முறை, திருமணத்தில் சமத்துவமின்மையும், சீதனச் சிறை வைப்புகளும், கல்வியில் பாகுபாடு, வேலை வாய்ப்பு, சம்பளம் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு, குடும்ப அலகுக்குள்ளே அசமத்துவமான அடிமைத் தனங்கள், பாலுறவில் சமத்துவப் பார்வையின்மை என்றெல்லாம் கூறிச் சென்று

“திருமணமாகாத பெண்கள் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் பாலியல் அபிலாஷைகள் இருக்கக் கூடாது என்று இச்சமூகம் கருதுகின்றதா? விதவைகளின் பாலியல் தேவைகள் அவர்களின் மனதுள்ளே கருகிப் போகின்றன” என்கிறார்.

பெண்ணியம்; பெண் விடுதலை என்னும் கருத்தாடல்களில் இவையெல்லாம் முன்வைக்கப்படக் கூடாத சங்கதிகள் அல்ல. ஆயினும் இதற்கான நியாயங்களை வென்றெடுக்க மனித சமுதாயம் தன்னுடைய வாழ்நாள் முற்றாக மாரடித்துக் கொண்டிருக்க வேண்டிய வாழ்வியல் நாகரிகமே நிலவி வருகிறது.

வர் கட்டுரையின் இறுதி வரிகளில் சொல்வதுபோல் ‘எமது சமூக அமைப்பிலும் சிந்தனைகளிலும் மாற்றம் தேவை’ என்றால் ஒரு புதிய நாகரிகத்தை மனித சமுதாயம் சென்றடைய வேண்டிய காலம் தோன்ற வேண்டும்.

மாற்றங்கள் அடைந்து வந்த வரலாற்றைப் படித்துள்ளோம். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி, ஜனநாயகம் என்ற பாதையில் புதிய ஜனநாயக சோசலிசம் அதாவது பொதுவுடமைச் சமுதாயம் என்னும் நாகரிகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகிறது.

அந்த நாகரிகம் மனித சமுதாயத்தில் இன்னமும் நூறு இருநூறு ஆண்டுகளின் பின்பாகக் கூடத் தோன்றத்தான் போகிறது. அந்தச் சமுதாயத்திலேயே இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வுகள் ஏற்படும் என்று நம்பலாம்.

சாமானியமாக மனிதர்களின் வாழ்நாள் வரலாறு நூறு வருடங்கள் எனக் குறிப்பிடப்பட்ட போதும் தற்காலத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனாலும் 80 வருடங்களுக்குக் குறைவாகவே அமைந்து வருகிறது.

ஆயினும் சிந்திக்கத் தெரிந்த மனிதன் படிப்படியாக வாழ்வியலை மேல் நிலைக்கு எடுத்துச் செல்லவே வழி வகுத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடையலாம்.

ஆண்- பெண் என்ற உருவ, உள்ள பாங்கினைத் தவறான சிந்தனைகளுக்கு எடுத்துச் சென்று மனித வாழ்வியலை பாழாக்காமல் புதிய நல்ல சிந்தனை செயற்பாடுகளால் விழுமியம் பெற சிந்தியுங்கள் செயல்படுங்கள் எழுதுங்கள் எனத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தேவிபரமலிங்கம்,

யாழ்ப்பாணம்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.