புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

இனியாவது சிந்திப்போமா?

இனியாவது சிந்திப்போமா?

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் பெரும் ஆரவாரத்தோடும் செலவுகளுக்கும் போட்டிகளுக்கும் மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகளானது இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி மீதும், மஹிந்த சிந்தனை மீதும் வைத்துள்ள நம்பிக்கை மீதான வெளிப்பாட்டை பிரதிபலித்துள்ளது. சவால்கள் பல்வேறு வகையில் வந்த போதும் அவை உடைத்தெறியப்பட்டு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள வெளிப்பாட்டினையும் இந்தத் தேர்தல் உணர்த்துகின்றது.

கடந்த முப்பது வருட காலங்களாக நாட்டில் புரையோடிப் போயிருந்த உள்நாட்டு யுத்தத்தை இல்லாதொழித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்ற பெரும்பான்மையான சிங்கள மக்களின் பேரினவாத போக்கு தென்பகுதியில் அதீத வெற்றி மூலம் புலப்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது, இருப்பினும் நூற்றுக்கு நாற்பத்தைந்து வீதமானவர்கள் வாக்களிப்பில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கான பின்புலம் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.

நடந்து முடிந்த தேர்தல் பதுளை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு பலத்த அடியைக் வைத்திருக்கிறது. 120,000 தமிழ் வாக்காளர்களையும் 49,000 முஸ்லிம் வாக்காளர்களையும் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் ஒரு சிறுபான்மைத் தமிழரேனும் தெரிவு செய்யப்படாது போனமை கவலைக்குரிய விடயமாகும்.

தேசிய அடையாள அட்டை இன்மை, நிராகரிக்கப்படும் வாக்குகள் என்பவற்றையெல்லாம் தாண்டி செல்லுபடியாகும் சுமார் 63,000 வாக்குகளில் தமிழ் பிரதிநிதித் துவத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு சூனியமாகப் போயுள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளைக் கொண்டிருந்த பதுளை மாவட்டம் இம்முறை ஒருவரைக் கூடத் தெரிவு செய்யாது போனமை எதிர்கால உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் இடைவெளியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய ஒரு அசம்சமாகும்.

வெறுமனே எம்.பிக்காக மாத்திரமல்லாது பிரதி சுகாதார அமைச்சராக சுரேஷ் வடிவேலும், பிரதி கல்வி அமைச்சராக மு.சச்சிதானந்தனும் விளக்கியதோடு அவர்கள் மூலமாக பெருந்தோட்ட சமூகத்திற்கு பல்வேறு வகையிலான நன்மைகள் கிட்டியதும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இவ்விருவரும் கடந்த தேர்தலின் போது ஒரே கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் இம்முறை இரண்டு அணிகளாகவே போட்டியிட்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு வேட்பாளர்களை நியமித்து தன்னை முன்நிலையப் படுத்திக் கொண்டாலும் அந்தக் கட்சியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளது.

தேசிய அணியோடு சேர்ந்து கேட்பதிலும் பார்க்க 9,226 வாக்குகளைப் பெற்று கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது போல் 2010 பொதுத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற முடியும் என்ற நம்பிக்கையோடு நடந்த மலையக மக்கள் முன்னணி முன்னர் பெற்றவாக்குகளிலும் பார்க்க குறைவான வாக்குகளை பெற்றிருப்பது அதன் கனவை சிதைத்துள்ளது.

இந்தப் பின் புலனை வைத்து ஆராயும் போது தமிழ் பிரதிநிதித்துவத்தின் இழப்பிற்கு தடைக்கற்களாக இருந்த விடயங்கள் ஆழமாக ஆராயப்பட வேண்டும். தம்மை புத்தி ஜீவிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட பலர் தமிழ் பிரதிநிதிகளை தூர தள்ளிவைத்ததை தபால் மூல வாக்களிப்பு உறுதிப்படுத்துகிறது. இந்தத் தேர்தலில், தத்தமது சுய இலாபங்களுக்காக விலைபோயுள்ளனர்.

அதிகூடிய வாக்கு பெற்ற ஒருவரை மாத்திரம் ஆதரித்து தனி வாக்குகளை பிரயோகித்திருந்ததை வாக்கு எண்ணிக்கைகள் தெரிவித்திருந்தன.

பதுளை மாவட்டத் தமிழ் பிரதிநித்துவம் இல்லாமல் போவதற்கு தூர நோக்கில்லாத சிந்தனையோடு தமக்கு கிடைத்த இலாபத்தினை தற்காலிக உதவிகளை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

மது விநியோகம், அன்பளிப்புக்கள் நான்காறு பாதியாய் பிரிந்து போயிருந்த தொழிற்சங்க அட்டகாசம், வேட்பாளர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி “மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை, மருமகன் சாக வேண்டும் என்ற வெறித்தனமாக எதிர்பார்ப்பு பெரும்பான்மையினரும் தமக்கு வாக்களிப்பர் என்ற அதீத நம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகள் இருந்த பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்திருக்கின்றது.

ருப்பு வாக்கில் காட்டிய ஆர்வம் கனதியான ஆலோசனைகள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பவற்றில் கவனம் செலுத்தாது கட்சிக்கொரு கொடியாது தோட்ட லயன் குடியிருப்புக்கு ஒரு கொடியாக கொடி பறந்ததை மாத்திரம் கணிப்பல் வைத்து தேர்தல் வெற்றியை நிர்ணயித்தது முட்டாள்த் தனமான எதிர்பார்ப்பாகும்.

ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்ட போதும் தன்னோடு போட்டியிட்ட தமிழ் பிரதிநிதியை கவனத்திற் கொள்ளாது பெரும்பான்மையின வேட்பாளரின் இலக்கத்தை சேர்த்தே குறிப்பிட்டிருந்ததும், அவர்களினது பிரசுரங்களில் அல்லது விருப்பு வாக்குத் தேடலில் தமிழ் பிரதிநிதிகளின் விபரங்கள் உள்ளடக்கப்படாததும் தோல்வியின் பின்னணிக் காரணிகளாகின்றது.

ஒட்டு மொத்தத்தில் குறுகிய பார்வையும் நிதானமற்ற நோக்குமே இன்னுமொரு ஏழு வருடங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ, அரசியல் அநாதைத்துவத்தை தந்துள்ளது என குறிப்பிட வேண்டியுள்ளது. ஒரு காலகட்டத்தில் அதாவது 47களில் ஒரே குடும்ப உறவினர்களில் மூவர் அப்புத்தளை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டதன் விளைவாக, தொடர்பேயில்லாத பெரும்பான்மையினத்தவர் லாவகமாக எம்.பி.பதவியை பெற்றுக் கொண்ட கறைபடிந்த வரலாறு பதுளை மாவட்டத்தில் இன்னும் அகலாது இருக்கின்றது.

சென்ற பேருந்தை நிறுத்த புறப்பட்டு கையசைப்பதையும் பார்க்க வருகின்ற பேருந்தில் வசதியாக அமர்ந்து கொள்வதே காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில பதுளை மாவட்டத்தில் தெரிவான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா போன்றவர்கள் இந்த இடைவெளியை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை இழையோடுகிறது.

தேர்தலுக்கு முன்னர் நடந்த பகைமை, தொழிற்சங்க குடுமிபிடி, பழிவாங்கல் அநாகரிக அடாவடித்தனங்கள் இவைகளையெல்லாம் இல்லாதொழிந்து போக அனைத்து மக்களும் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் ஒன்று கூடுவோம்.

அநாமதேய கடிதங்கள் அனுப்புவதிலும் அரசியல் தேவைகளுக்காக ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் காட்டிக் கொடுப்பிற்காக காலில் விழுவதையும் தவிர்த்துக் கொண்டு இனிவரும் காலத்திற்காவது இணைந்து செயற்படுவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.