ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
மஹிந்தவிடம் ரூ. 5000 மில். நஷ்டஈடு கோரும் அமைச்சர் ரவி

மஹிந்தவிடம் ரூ. 5000 மில். நஷ்டஈடு கோரும் அமைச்சர் ரவி

தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு முன்வைத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 5000 மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்ப இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுள்ள ஒருவரே நிதி அமைச்சராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த பொய் குற்றச்சாட்டுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடர இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நிதிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிதியமைச்சர் ஒருவரே தற்பொழுது பதவியில் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நாம் சுத்தமான நிர்வாகம் ஒன்றை நடத்திச் செல்கின்றோம் என்று அவரிடம் கூறிக் கொள்கின்றோம். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்த வேண்டாம். அதேபோல் நாட்டுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று தோல்வியாளர்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம். நாங்கள் சுத்தமான அரசியல் செய்வதனால்தான் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வெளியிடுவதில்லை. தேவையேற்பட்டால் சிறிலிய வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிடுவோம்.

கள்வர்கள் களவர்களை காப்பாற்று வதற்காகவே அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் முயற்சிப்பது கெசினோ மற்றும் கஞ்சா உடன் கூடிய ஊழல் நிறைந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கே. அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி