ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

ரிஜிபி நிதி, ஹெட்ஜிங் மோசடி, கிaஸ் கொடுக்கல் வாங்கல்:

மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

மிகவும் சூட்சுமமான முறையில் மோசடிகள்

கிரேக்க நாட்டுடனான கொடுக்கல் வாங்கல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஹெட்ஜிங் மோசடிக்கு காரணமானவர்கள் பொது மக்களின் பணத்தை சூறையாடியமைக்காக எதிர்காலத்தில் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவரென முன்னாள் பிரதியமைச்சர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மேற்படி அனைத்து மோசடிகளும் மிகவும் சூட்சுமமான முறையில் கையாளப்பட்டிருப்பதனால் அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதற்காக சர்வதேசம் மற்றும் இண்டர் போலின் உதவி நாடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை பொது மக்களின் பணம் எதற்காக? எவ்வாறான முறைகளில் முதலீடு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தில் நாம் இதற்காக எத்தனையோ தடவைகள் உச்ச நீதிமன்றத்தில் ஏறி இறங்கியபோதும் எமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நாம் சளைக்கப் போவதில்லை. மக்களின் பணத்தை ஊழல் மிக்க முறையில் மோசடி செய்தவர்கள் அதனால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசார அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். கடந்த அரசாங்கம் ஆசியாவின் ஆச்சர்யம் என்னும் பெயரில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தனது சிந்தனைக்கூடாக நாட்டுக்கு வெளிக் காட்டியிருந்தாலும் அதற்குள்’ இடம் பெற்றது.

முழுவதும் ஊழல் மோசடிக ளேயாகும். இத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் ஊழியர் சேம லாப நிதியினை பணயம் வைத்தே ஆரம்பிக்கப்பட்டன என்ற போதும் கடந்த ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்களால் மாத்திரமே இதன் மூலம் இலாபம் அனுபவிக்க முடிந்தது.

இந்த மோசடியாளர்களைக் காப்பாற்று வதற்காக இவர்கள் பாடுபட்டார்களே தவிர அப்பாவி மக்களின் பணத்தை மீளப் பெற்றுத் தர எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் கடந்த ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மோசடியாளர்கள் பதில் கூறியே ஆகவேண்டுமென்றும் அவர் தெரிவத்தார்.

தாம் இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் நாட்டின் அபிவிருத்தி என்னும் பேரில் பாரிய கட்டடங்களை கட்டுவதிலேயே இவர்கள் குறிக்கோளாக இருந்தார்களே தவிர கல்வி, சுகாதாரத்தில் இவர்கள் அக்கறை செலுத்தவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்த வரையில் ஆசியாவிலேயே இலங்கையில் தான் கல்வி மற்றும் சுகாதாரத்தில் குறைந்த வளர்ச்சி வீதம் எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியாளர்கள் முன்னணி வகித்த தனியார் வங்கிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தியிருந்தனர். நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் வெள்ளை யானை வேலை திட்டத்திற்கும் இந்த தனியார் வங்கிகளே மக்களின் சேமிப்பைக் கொண்டு கட்டணம் செலுத்தி வந்தன.

கொள்ளுப்பிட்டியில் மூன்று பேரினால் நடத்தப்பட்டி வந்த ஒரு நிறுவனத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் 05 பில்லியன் ரூபா பெறுமதியான ஊழியர் சேமலாப நிதியத்தை முதலீடு செய்துள்ளார்.

துறைசார்ந்த நிபுணர்கள் இதனை எவ்வளவோ தடுத்தும் அது பயனளிக்கவில்லை. இறுதியில் நிறுவனம் வங்குரோத்தாகி மக்களின் பணம் பரிபோனது தான் மிச்சம்.

கிரேக்க நாட்டின் முறிகளில் முதலீடு செய்ய வேண்டமென அப்போது எதிர்க்கட்சியிலிருந்த நாம் எவ்வளவோ கேட்டுக் கொண்டோம். எதனையும் தேடி பார்க்காமல் தான் நினைத்தபடி கப்ரால் அதில்’ பல கோடி ரூபாவை முதலீடு செய்தார் இன்று கிரேக்கம் கடன் சுமையினால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதில் முதலீடு செய்த பணமும் பரிபோயுள்ளது.

அவையனைத்தும் மக்களின் ஊழியர் சேமலாப நிதி எனவே இதற்கு தீர்வு காண்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி