ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
இலங்கையில் இனப்பிரச்சினை தீர புதிய அரசியல் சாசனம் தேவை

இலங்கையில் இனப்பிரச்சினை தீர புதிய அரசியல் சாசனம் தேவை

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையை புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமே தீர்க்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சந்தேசயவின் முகநூல் ஊடாக அளித்த விசேட நேர்காணலின் போதே அமைச்சர் மங்கள மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் காண முடியாது. புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமே அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ வழி ஏற்படும்.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பறங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறுபான்மையினரும் ஆட்சி அமைப்பில் சில முடிவுகளை எடுக்கக்கூடிய வகையிலும் அவர்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

அப்படியான அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை அனைத்து இனத்தவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக அந்த தீர்வு அமைந்திருக்க வேண்டும் அப்படியானதொரு சூழலில் பல்லினத் தன்மையுடன் அனைவரும் தாங்கள் இலங்கையர் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழமுடியும் எனவும் அவர் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி