புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
பலதும் பத்தும்

பூனை பாதி... மனிதன் பாதி...

நோர்வேயைச் சேர்ந்த நானோ என்ற பெண், பூனை போன்றே தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டதுடன் பூனைகளுடன் மியாவ் மொழியில் பேசவும் செய்கிறார்.

நோர்வேயைச் சேர்ந்தவர் நானோ, தற்போது 20 வயதாகும் நானோவுக்கு 16 வயதில் தான் ஒரு பூனை என்பதை உணர்ந்து கொண்டாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பூனையாக என்னை உணர்ந்து கொண்டதிலிருந்து இருட்டில் மிகத் தெளிவாக என்னால் பார்க்க முடிகிறது, வாசனையை கூட மிகத் துல்லியமாக நுகர முடிகிறது.

எனக்கு தண்ணீரை கண்டால் பிடிக்காது, தெருவில் நாய்களை பார்த்தாலும் பயந்து நடுங்கி போய்விடுவேன், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் என்றால் அவ்வளவு பிரியம்.

பூனைகளின் மியாவ் மொழி எனக்கு புரியும், மணிக்கணக்காக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்.

பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் எனது உடம்பில் மரபணு மாற்றமிருந்தது தெரியவந்தது, தொடர்ந்து பூனைகளை போன்று அலங்காரம் செய்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு நான்கு கால்களால் நடப்பது என்றால் அலாதி பிரியம் என்றும், பூனையாக எலியை பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப்பில் வெளியான இவரது பேட்டியை 122,000 நபர்கள் பார்த்து இரசித்துள்ளனர்.


134 கி.மீ நடந்து சாதனை படைத்த ரோபோ!

பலவிதமான ‘ரோபோ’க்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைத்து வருகின்றன. தற்போது ஒரு ரோபோ 134 கிலோமீட்டர் தூரம் நடந்து சாதனை படைத்துள்ளது.

அந்த ‘ரோபோ’வை சீனாவை சேர்ந்த பேராசிரியர் லி குயிங்டூ தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர். இவர்கள் சாங்குயிங் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு துறையை சேர்ந்தவர்கள்.

இவர்கள் 4 கால்களை கொண்ட ‘ரோபோ’வை தயாரித்துள்ளனர். அது 54 மணி நேரத்தில் 134 கிலோ மீட்டர் தூரம் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த ‘ரோபோ’வுக்கு ‘ஷிங்ஷி நம்பர் 1 அல்லது வால்கர்–1’ என பெயரிட்டுள்ளனர்.


மரமாக உருமாறி வரும் மனிதர்: அரிய வகை நோயால் அவதி

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருவது குடும்பத்தினரிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் வசித்து வரும் 25 வயதான அபுல் பஜந்தர் என்பவர் அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேசியாவில் இதேப்போன்று அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் சமீபத்தில் இறந்துள்ளார்.

ஆனால் அவரது உயிரிழப்புக்கு காரணம் அவருக்கு இருந்த நோய் அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருந்தது.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் தமது உடம்பில் இருந்து 6 கிலோ மருக்களை அகற்றியுள்ளதாக அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.


அறிமுகமாகிறது ஜன்னல் இல்லாத விமானம்

உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானத்தை சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்கவிருப்பதாகவும் இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் வெளியே உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வகையான விமானங்களில் ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள திரைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியே உள்ள காட்சிகளை பார்க்கலாம். பயணிகளுக்கு வெளிப்புற காட்சிகள் தெரியவேண்டாமென்றால் அதற்கேற்பவும் மற்றிய மைத்துகொள்ளலாம்.

இது குறித்து செயல்முறை கண்டுபிடிப்பு மையம் தெரிவித்துள்ள தகவலில் ‘விமானத்திலிருந்து சிறிய ஜன்னல் வழியாக உலகை பார்த்த காலம் போய்விட்டது.

வருங்காலத்தில் தயாரிக்கப்படும் விமானங்கள் உலகின் தெள்ள தெளிவான பரந்து விரிந்த காட்சியை பயணிகளுக்கு அளிக்கும். நாங்கள் அதற்காக அதிக வளையும் தன்மைக்கொண்ட உயர் வரையறை டிஸ்பிளே தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறோம்.

விமானத்தின் உட்புற சுவர்களில் இந்த டிஸ்பிலே பொருத்தப்பட்டு அதன் மூலம் கெமராக்களில் இருந்து வீடியோக்களை கூட ஒளி ப்பரப்ப முடியும்.


உலகின் முதன்முறையாக டிரைவர் இல்லாமல் ஓடும் பஸ்

டிரைவர் இல்லாமல் ஓடும் கார்கள், பகுதிநேரம் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் தானியங்கி ​ெலாரி போன்ற கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி வரும் நிலையில் டிரைவர் இல்லாமல் ஓடும் பஸ் ஒன்றை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் சப்தமில்லாமல் உருவாக்கி, வெள்ளோட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டுள்ளனர்.

ஆறு பயணிகளுடன் மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெள்ளோட்டம் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான். விரைவில் ஆறு கிலோமீட்டர் கொண்ட வேகனிங்கன் நகர வழித்தடத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் வகையில் இந்த ‘விபாட்’ பஸ்கள் தரம் உயர்த்தப்படும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி

ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலியொன்றின் முதுகில் மனித காதொன்றை வெற்றிகரமாக வளர்ச்சியடையச் செய்துள்ளதாக உரிமை கோரியுள்ளனர்.

இந்த செயன்முறையைப் பயன்படுத்தி வளர்ச்சியடையச் செய்யப்படும் காதுகளை எதிர்வரும் 5 வருட காலத்துக்குள் மனிதர்களில் பயன்படுத்த முடியும் என நம்புவதாக டோக்கியோ மற்றும் கயோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் காதுகளை பிறப்பு ரீதியிலும் நாய்களால் கடித்துக் குதறப்பட்டும் காதுகளை இழந்த சிறுவர்களுக்கு பொருத்தி அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு உதவியளிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாது போர்களிலும் விபத்துகளிலும் காதுகளை இழந்தவர்களுக்கும் இவ்வாறு ஆய்வுகூடத்தில் விருத்திசெய்யப்படும் காதுகள் உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நடைமுறையில் காதுகளை இழந்தவர்களுக்கு காது கட்டமைப்பை உருவாக்கும் செயற்கிரமத்தின் போது நோயாளியின் விலா எலும்புகளிலிருந்து பெறப்பட்ட கசியிழையத்தைப் பயன்படுத்தியே காதுகள் விருத்தி செய்யப்படுகின்றன.


ஒரேயொரு கிராமத்தில் 122 இரட்டையர்கள்

122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட வெலிகயா கொபன்யா என்ற மேற்படி கிராமம் ஏற்கனவே 61 இரட்டையர்களை உள்ளடக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது.

தற்போது அந்தத் தொகை இரு மடங்காகி தன்னால் நிறைவேற்றப்பட்ட முந்திய சாதனையை அந்தக் கிராமம் முறியடித்துள்ளது. அந்தக் கிராமத்தில் அளவுக்கதிகமான இரட்டையர்கள் பிறப்பதற்கு அங்குள்ள நீரில் காணப்படும் விசேட மருத்துவக் குணமே காரணம் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.


தன்னின சேர்க்கை அழகுராணி

கொலம்பிய தன்னினச்சேர்க்கை அழகுராணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி மெடெலின் நகரில் அண்மையில் இடம்பெற்ற போது ஆணாகப் பிறந்து பெண் போன்று ஆடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள ஸிமெனா சாந்தனா அழகு ராணியாக முடிசூட்டிக் கொண்டார்.

அவர் தாய்லாந்தில் நடைபெறவுள்ள தன்னினச்சேர்க்கையாளருக்கான சர்வதேச அழகுராணிப் போட்டியில் கொலம்பியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்கவுள்ளார்.

 

 


இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கிய கோலி

அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “காலை உணவின் போது இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஹோட்டலில் குறித்த பெண் தனது கணவருடன் காலை உணவிற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த கோலியின் முகாமையாளர் திடீரென “காலை உணவின் போது இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதனால் குழப்பமடைந்த பெண் “காலை உணவின் போது என்ன இல்லை” என வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கோலியின் முகாமையாளர் “படங்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.

அதற்குப் பெண் “படங்களா??? யாருடன்? என்று கேட்டுள்ளார்.

இதற்கிடையில் குறுக்கிட்ட கோலி “என்னுடன் நீங்கள் படம் எடுக்க வருவதாக அவர் நினைத்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த பெண் கோலியைப் பார்த்து “நான் ஏன் உம்முடன் படம் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதன் போது கோலியின் முகம் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதாக பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் நிற்காது “நீர் யார்? நீரென்ன பிரபலமானவரா?....” என கேட்டு அவர்களை திகைக்க வைத்துள்ளார்.

இதையடுத்து கோலியும் அவரது முகாமையாளரும் மன்னிக்குமாறு தெரிவித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துள்ளனர்.

இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ள குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவி ஹோட்டல் முகாமையாளரிடம் சென்று அந்த இந்தியப் பையன் தன்னை தொந்தரவு செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.