புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
தீர்விற்குத் தடையாக 3 பிரதான காரணிகள்

தமிழ் அரசியல் கைதிகள், காணாமற்போனோர், காணிகள் விடுவிப்பு:

தீர்விற்குத் தடையாக 3 பிரதான காரணிகள்

 சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது சுயாட்சியா என்பது கட்சிகளின் பிரச்சினையே

 அரசும், தமிழ்க் கட்சிகளும் இணையாவிடில் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதிருப்பதற்கு தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமற்போனோரது பிரச்சினை, மக்களது காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாமை ஆகிய மூன்று விடயங்களுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இதுவரை இவற்றுக்கு உரிய தீர்வினைக் காண முடியாதிருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வு காணல் விடயத்திற்குத் தடையாக அமைந்திருப்பதாக புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்க்கமான முடிவினை அரசாங்கம் காணாதவிடத்து இனப்பிரச்சினைத் தீர்வு என்பது தள்ளிச் செல்லும் ஒரு விடயமாகவே இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முப்பது வருட கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ள தமிழ் மக்களது உடனடித் தேவையாகவுள்ள இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தினதும் தமிழ்க் கட்சிகளினதும் பாரிய பொறுப்பாக உள்ளது. தமது இந்த மூன்று விடயங்களிற்காகவும் அந்த மக்கள் தினமும் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொள்கின்றனர். வடக்கே வரும் இராஜதந்திரிகளிடமும் தமது குறைகளை முறையிடுகின்றனர்.

ஆனால், அரசாங்கமும் தமிழ்க் கட்சிகளும் இவற்றில் அக்கறை செலுத்தாது தீர்வு முயற்சிகளில் தம்மை மும்மரமாக ஈடுபடுத்தி வருகின்றனர். சமஸ்டியா, ஒற்றையாட்சியா அல்லது சுயாட்சியா எனத் தமக்குள் வாதிட்டு வருகின்றனர். இது ஆரோக்கியமான விடமல்ல. மக்கள் தீர்வு விடயத்திலும் பார்க்க தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரம் மற்றும் காணாமற்போன தமது உறவுகளைக் கண்டுபிடிக்கும் செயற்பாடுகளிலும் தமது சொந்தக் காணிகளை மீட்டெடுப்பதிலுமே அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர் எனவும் புத்திஜீவிகளால் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கமும், தமிழ்க் கட்சிகளும் இணைந்து இந்த விடயங்களுக்குத் தீர்வினைக் காண முன்வர வேண்டும். தமிழ்க் கட்சிகள் அரசியலமைப்பு தொடர்பாக ஏட்டிக்குப் போட்டியாக வரைபு அறிக்கைகளைத் தயாரித்து மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதற்கு முன்னர், மக்கள் கேட்கும், எதிர்பார்க்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த மூன்று விடயங்களையும் எதிர்பார்த்தே புதிய அரசாங்கம் ஏற்பட தமிழ் மக்கள் தமது புரண ஆதரவை வழங்கினர். அவர்களது எதிர்பார்ப்பு காலதாமதமாகி வருவதால் அம்மக்கள் ஒருவித விரக்தி நிலையை அடைந்துள்ளனர். இதற்குத் தமிழ்க் கட்சிகளே பிரதான காரணமாக உள்ளன. எனவே தமிழ்க் கட்சிகள் முதலில் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி மக்கள் நலனுக்காகச் செயற்பட முன்வர வேண்டும் என மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமற்போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா, இருந்தால் அவர்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு விடையைக் காண வேண்டும். அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியுமா, முடியாதா அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்பதனை அரசாங்கத்திடம் தெளிவாகக் கேட்டு மக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதேபோன்றே படையினர் வசமுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம் ஏன் என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து விடையைப் பெற்று மக்களுக்குக் கூற வேண்டும் எனவும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.