புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
மண்டேலா கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடங்கள்

மண்டேலா கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடங்கள்

செய்யும் பணியில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் சூழ்நிலை தரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டும் அடைய வேண்டிய இலக்குகளை எவரும் அடைந்து விடலாம். அதற்கு சகமனிதர்கள் மீதான அக்கறையும் வேண்டும். உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அடைய வேண்டிய உயரங்களை தொடாமல் ஒரு சராசரி வாழ்க்கையில் ஏன் நிறைவு கொள்கிறீர்கள்?”

மறைந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வார்த்தைகள் இவை! வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் அவர் நமக்குத் தந்திருக்கிற பாடங்கள் கீழே தரப்படுகின்றன.

சமநிலை தேடு!

நல்ல மனமும் திறமையான மூளையும் இணைவதே சிறந்தது. இன்று இந்த உலகும் இருவிதமான மனிதர்களால் நிரம்பியுள்ளது. ஒரு பிரிவினர் மனம் சொல்வதைக் கேட்கின்றனர். இன்னொருதரப்பினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தத்ததமது அறிவுக்கு எது சரியென்று படுகிறதோ, அந்த முடிவை இயந்திரத்தனமாக எடுக்கின்றனர் ஆனால் இதயமும் மூளையும் இணைந்து எடுக்கும் முடிவே நம்மையும் வாழவைத்து உலகையும் செழிப்புறச் செய்யும்.

கசப்பை மற!

நம் ஒவ்வொருவருக்குமுள்ள தன்மானம் அல்லது தன்மதிப்பை விட சமூகம் முக்கியம். நினைத்துப் பாருங்கள்.., ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளியைவிட அதிகமாக 27ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு எத்தகைய பழிவாங்கும் வன்மம் இருந்திருக்க வேண்டும்? ஆனால், அதற்கான அதிகாரமும் வாய்ப்பும் கிட்டியபோதும் அந்த குரோத உணர்வுகளுக்கு மாறாக தனது எதிரிகளோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு பெருந்தன்மை காட்டினார் மண்டேலா. அதனால் அவருக்கும் நாட்டுக்கும் கிடைத்த அமைதி அளப்பரியது.

நேற்றைய நினைவை விட்டுவிடு!

நேற்றைய நினைவுகளில் நெடுகிலும் வாழ்வது காரணமில்லாமல் ஒருவரை வேதனைப்படுத்தும் முயற்சி செய்தால் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்கிறபோது, ஏன் நேற்றைய கசப்பைச்சுவைக்க வேண்டும்? பழைய சிதைவுகளின்மீது நிகழ்காலத்தின் புதிய பாதையை உருவாக்கி அதில் எதிர்காலத்தின் ஒளியைப்படரச் செய்வதே சரியானது!

செயலில் காட்டு!

“மகத்தான சாதனைகள் பலவும், அதற்கு முன்பு வரை சாத்தியமில்லாத விடயங்களாகவே கருதப்பட்டவை என்பது மண்டேலாவி்ன் புகழ்பெற்ற பொன்மொழியாகும். கனவு என்பது அவரது வெற்றியின் ஓர் அங்கம் தான். அதை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் செயல் வடிவங்களையும் அவர் வைத்திருந்தார். அவரது சாதனைக்கு அதுவே காரணமானது. ஒருகனவு, அதை நனவாக்குவதற்கான திட்டம், தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவாக இருப்பது, அதே சிந்தனைகொண்ட மனிதர்களை அருகே வைத்திருப்பது, இதுவே வெற்றிபெற்ற மனிதர்களின் FORMULA ஆகும்.

கனவை நேசி!

சாமானியரான சக மனிதர்களின் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவை மண்டேலா கண்டார். அந்தக் கனவைச் சாத்தியமாக்கும் நம்பிக்கை அவருக்கிருந்தது. இதனாலேயே இடையில் அவருக்கு விடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை அழைப்புகளை அவர் ஏற்கவில்லை. அப்படிப் பேசப்போனால் தான் கனவு கண்டதற்கும் குறைவான ஒரு விஷயத்தில் திருப்தியடைந்து விடுவோமோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. நமது கனவு, அதாவது நமது எதிர்பார்ப்பு சாத்தியமானால், நமக்கும் நம்மை நம்பியிருப்பவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்கிறபோது அதற்கும் குறைவான ஒரு விடயத்தை ஏற்கக் கூடாது!

இமேஜ் முக்கியம்!

வெற்றி மற்றும் விடுதலை என்ற இரண்டினதும் அடையாளமாகவும் மண்டேலா இருந்தார், இறந்தாலும் இப்போதும் இருக்கிறார்! ஆயுதம் ஏந்தியும் ஆயுதம் துறந்தும் அவர் நிகழ்த்திய போர் மிகவும் கடினமானது. ஆனாலும் புன்சிரிப்பில்லாத மண்டேலாவின் முகத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். புன்னகை சிறந்த ஆடை, கனிவு, கல்வியின் உயர்வால் கிடைத்த பண்பு... இவைகள்தான் அதந்தத் தலைவனின் அடையாளம். ஒரு தலைவனின் இமேஜ், மரியாதை, பண்புகள் போன்றவை அவரது சாதனைக்கு பெரிதும் உதவுகின்றன என்பதை மண்டேலா வாழ்ந்து உணர்த்தியிருக்கிறார்.

அன்பாக இரு!

மண்டேலா தன் எதிரிகளுக்கும் பிறந்த நாள், திருமண நாள் அன்பளிப்புகளை தவறாமல் அனுப்பிவைப்பார். விருந்துக்கு அழைத்து அவர்களோடு உரையாடுவார். ஆலோசனைகள் கேட்பார். ஆனாலும் எதிரிகளை அவர் ஒருபோதும் நம்பியதில்லை. அவர்களைச் சார்ந்தும் இருந்ததில்லை. அவரது இந்தத் தந்திரச் செயல்கள் அவரை எல்லோருக்கும் பிடித்தமான மனிதராக மாற்றின. எதிரிகளுக்கும் உங்களைப் பிடித்துவிட்டால் உங்களைச் சார்ந்தவர்களுக்கு நீங்கள் ஒரு காந்தம் போன்ற ஈர்ப்புச் சக்தியாக இருப்பீர்கள்!

எதிரிகளைப் படி!

எதிரிகளைப் படியென்பதன் அர்த்தம், எதிரிகள் என்னென்ன இரகசியத் திட்டங்களும் தந்திரோபாயங்களும் வைத்திருக்கிறார்கள் என்பதை உளவு பார்த்து தெரிந்து கொள்வதல்ல. போர், அரசியல், வர்த்தகம் எல்லாமே மனங்களின் விளையாட்டுக்களாகி, வலிய நாடுகளின் சதிராட்டமாகி வெகுநாட்களாகின்றன. எதிரி என்ன செய்கிறான் என்பதைப்பொறுத்தே உங்கள் வெற்றி அமைகிறது என்றால் எதிரியின் மனதை அறிந்து கொள்வது முக்கியமல்லவா?

அதிகாரம் கொடு!

மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதில், அதாவது அனைத்து மக்கள் மத்தியிலும் அதிகாரம் பரவலாக்கப்படுவதில் மண்டேலா தீர்மானமாகவும் தீவிரமாகவும் இருந்தார். போராட்டத்திலும் அதிகாரத்திலும் அவர்களை முன்னிறுத்தி, தான் பின்னால் இருந்தார். தன் கனவுகளுக்கு மற்றவர்களை செயல்வடிவம் கொடுக்கவைத்தார். அவை அவர்களுடைய கனவுதான் என்று மற்றவர்களையும் நம்பவைத்தார். நீங்கள் செய்ய நினைக்கும் ஒருவேலையை மற்றவர்களைக் கொண்டு முழுமையாகச் செய்ய வைப்பதில் தான் உங்கள் வெற்றி இருக்கிறது!

உறுதி கொள்!

சிறைத்தண்டனையின் பெரும்பாலான காலத்தில் மண்டேலாவுக்குக் கொடுக்கப்பட்ட வேலை சுண்ணாம்புப் பாறைகளை உடைப்பது. நெடுகிலும் கண்கூசும் நட்டநடுவெயிலில் வெள்ளைவெளேரென்ற கடினமான சுண்ணாம்புப் பாறைகளை உடைத்ததால் அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டது. எப்போதும் ஒரேவிதமான போசாக்கில்லாத அரைகுறை உணவை உண்டு வந்ததால் காசநோயும் அவரைத்தாக்கியது. அதிலும் இரவு வேளைகளில் கம்பிக் கூண்டுகள் அந்தகார இருளுக்குள் தன்னந்தனியாக அடைப்பட்டுக்கிடந்ததால் அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இத்தகை கடினங்களையும் சமாளிக்கும் மனஉறுதி அவருக்குள் இருந்தது. விடுதலை வேட்கை அதற்கு உரமூட்டியது “ஒரு சிகரத்தை அடைந்தவன் அதோடு ஓய்ந்துவிட முடியாது. அடுத்தடுத்த சிகரங்கள் அவனுக்குக் காத்திருக்கின்றன” என்ற மனவெழுச்சி அவருக்குள் இருந்தது.

எஸ். ஜோன்ராஜன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.