புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
நம்மவர்களின் படைப்புக்களுக்கு ஒரு சந்தை வாய்ப்பு வேண்டும்

நம்மவர்களின் படைப்புக்களுக்கு ஒரு சந்தை வாய்ப்பு வேண்டும்

இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ் கலை வடிவங்களின் வெளிப்பாடு அதிகரித்துள்ளது. வாராந்தம் புதிய சஞ்சிகைகள், ‘சிறுகதைகள்’ ‘கவிதை’ கட்டுரை தொகுப்புக்கள், நாடு முழுவதும் இருந்து வெளியிடப்படுகின்றன.

மேலும், புதிய புதிய இசைத் தொகுப்புகள், குறும்பட இருவட்டுகள் என வெளிவந்த வண்ணமாக உள்ளதை பத்திரிகைகள் வாயிலாக படித்து தெரிந்து கொள்கின்றோம்.

ஆனால், இப்படியான ‘கலைப் படைப்புக்களை வெளியிடும் நம்மவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்வதில்லை.

நமது படைப்புகள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும், வாசகர்களையும் சென்றடைய வேண்டும், எனும் நோக்கிலேயே வெளியிடுகின்றனர்.

இப்படி வெளிவரும் புத்தகங்களையோ, இறுவட்டுக்களையோ, வெளியீட்டு விழாவிற்குப் பின் சந்தைப்படுத்த எந்த ஒரு வழியுமில்லை.

நமது ‘வானொலி’, ‘தொலைக்காட்சி’ நிறுவனங்களும், தமிழக நிகழ்ச்சிகளை, பாடல்களை, நாடகங்களை மறு ஒலிபரப்பு செய்யும் நிலையங்களாகவே செயற்படுகின்றனவேயன்றி, நம்மவர்களின் பாடல்களையோ, குறும்படங்களையோ கண்டு கொள்வதேயில்லை.

ஒன்றுமேயில்லாத ‘டப்பா படங்களின் பாடல்களைக் கூட நாமே முதலில் தருகின்றோம்’ என்று போட்டி போட்டு ஒலிபரப்பும் நமது வானொலிகள் நம்நாட்டு இசை தொகுப்புகளை கண்டு கொள்வதேயில்லை.

இப்போது வாராந்தம் வெளியிடப்படும் இசைத் தொகுப்புகளை தெரிவு செய்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு தினம் ஒரு இரண்டு மணி நேரமாவது நமது வானொலிகள் ஒலிபரப்பலாமே!

எந்தப் பாடலும் ஒரே தடவையில் பிரபலமாவதில்லை. அடிக்கடி கேட்கும் போதே பிரபலமாகின்றன.

நம்மவர்களின் ‘குறும்படங்களையும் நமது தொலைக்காட்சிகள் சனி, ஞாயிறு தினங்களில் சொற்ப நேரத்தை ஒதுக்கி ஒளி(லி) பரப்பலாம். அவற்றை பணம் கொடுக்காமலே வாங்கலாம். ஏனென்றால் மக்களிடம் தனது படைப்பு சென்றடைந்தாலே போதும், என்றே பலரும் (படைப்பாளிகள்) நினைக்கின்றனர்.

மேலும், சாகித்ய விழாக்களை பல இலட்சம் செலவில் செய்யும் நமது தமிழ் பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட மாகாணங்களான வடக்கு, கிழக்கு, மேல் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்கள், சிறுகதை, நாவல், கவிதை தொகுப்புகளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

மேற்படி மாகாண சபை ஒவ்வொன்றும், ஒரு படைப்பாளியிடமும் இருந்து ஐம்பது பிரதிகளையாவது வாங்கி மாகாண சாகித்ய விழா காலங்களில் எல்லா மாகாண இலக்கியவாதிகளின் படைப்புக்களையும் கொண்ட ஒரு புத்தக சந்தையை நடத்தலாம். அத்துடன் தமது மாகாண, நூலகங்கள், பாடசாலைகளுக்கு மேற்படி புத்தகங்களை பகிர்ந்தளிக்கலாம்.

அப்படி செய்வதன் மூலம், எமது படைப்பாளிகளின் ‘நூல்’ களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுடன் தேடல் உள்ள வாசகனுக்கு ‘புத்தகம்’ கிடைக்கவும் வழி செய்யலாமே!

இது படைப்பாளிகளை ஊக்குவிப்பதாகவும் அமையும். மேலும், பிரதேச சபைகளின் கலை கலாசார விழாக்களின் போதும் நம் நாட்டு படைப்பாளிகளின், புத்தகங்கள், இசை தொகுப்புக்கள், குறும்படங்களின் விற்பனை சந்தையொன்றை ஏற்பாடு செய்யலாம்.

எதிர்கால ‘சாகித்ய விழா’க்களின் போது, ஒவ்வொரு மாகாண சபையும் தத்தமது மாகாண கலைஞர்களை பாராட்டுவதுடன், பிற மாகாண கலை இலக்கியவாதிகளையும் அழைத்து கௌரவிக்க வேண்டும்.

மலையக வட, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்குள் ஒற்றுமை மேலும் வளர்வதுடன், கருத்துப் பரிமாற்றம் பரவலாக ஏற்பட வேண்டும்.

அதுவே, நமது கலை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

கே. ராம்ஜீ உலகநாதன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.