புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

T20: போட்டிகளில் இந்திய அணி இலகு வெற்றி

T20: போட்டிகளில் இந்திய அணி இலகு வெற்றி

இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் கடந்த மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் படுதோல்வியடைந்தாலும் அதன் பின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டுவெண்டி- 20 தொடரில் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

இவ்வெற்றியின் பின் கடந்தகாலங்களில் ஒரு நாள் போட்டிகளின் தொடர் தோல்விகளின் காரணமாக விமர்சனத்துக்குளாகியிருந்த இந்திய அணித் தலைவர் டோனியின் தலைமையைப் இப்போது பலரும் புகழ ஆரம்பத்துள்ளனர்.

கடந்த வாரம் முடிவுற்ற இத் தொடரில் 3-:0 என்ற ரீதியில் முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.

140 வருட கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணியொன்றை அதன் சொந்த மண்ணில் தொடரொன்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று அவுஸ்திரேலிய அணிக்கு வெள்ளையடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஒருநாள் போட்டித் தொடர் தோல்வியின் பின் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி இலகுவாக இவ்வெற்றியைப் பெற்று பழி தீர்த்துக் கொண்டது. முக்கியமாக டெஸ்ட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தொடர் முழுவதிலும் பிரகாசித்து தொடர்ந்து மூன்று அரைச்சதங்களுடன் தொடர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவர் இப்போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் டுவண்டி -20 தொடரில் தொடர்ந்து மூன்று அரைச்சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுடனான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவும் டுவெண்டி-20 போட்டித் தொடரிலும் திறமையாக விளையாடியிருந்தார். இத் தொடரின் போது ரோஹித் சர்மா ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

மேலும் அஹமதாபாத்தைச் சேர்ந்த புது முக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு அசசுறுத்தலாகப் பந்து வீசியிருந்தார். இவர் போட்டியின் கடைசி ஓவர்களில் சிறப்பான முறையில் யோகர்களையும், பவுன்சர் பந்துகளையும் வீசி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துகிறார். அசத்தலான இவரின் பந்து வீச்சு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் பாணியிலமைந்துள்ளது. இவ்விருவரும் ஐ. பி. எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணியின் இப்படுதோல்வி குறித்து முன்னாள் வீரர் ரியான் ஹரிஸ் கூறுகையில்: அவுஸ்திரேலிய அணி டுவெண்டு-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட இந்தியா செல்வது நேரத்தை வீணடிக்கும் செயலெனக் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு டுவெண்டி-20 போட்டிகளில் விளையாடததே இப் படுதோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவ்வணி கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் பின் இதுவரை எட்டு டுவெண்டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. கடந்த வருடம் ஒரே ஒரு டுவெண்டி-20 போட்டியிலேயே அவுஸ்திரேலிய அணி விளையாடியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இத்தொடர் வெற்றியின் மூலம் டுவெண்டி-20 சர்வதேச தரவரிசையில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அணி அண்மைய காலங்களில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் வெற்றிகளைப் பெற்றது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி 118 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இதுவரை முதலிடத்திலிருந்து வந்த தென்னாபிரிக்க அணி கடந்த மாதம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வியினால் அவ்வணி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை இம் மாதம் 24ம் திகதி பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத் தொடருக்கு ஆசிய அணிகளும், மார்ச் மாத ஆரம்பத்தில் இந்திய மண்ணில் டுவெண்டி- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கான தயார்படுத்தலில் எல்லா அணிகளும் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஆசிய நாடுகளான இலங்கை, இந்திய, பாகிஸ்தான் அணிகள் டுவெண்டி -20 போட்டிகள் மற்றும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு போடடிகளில் விளையாடிது. அங்கு நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி நியூசிலாந்துடன் மோதிய அனைத்துத் தொடர்களிலும் தோல்வியுற்றது. அதே போல் பாகிஸ்தான் அணியும் டுவெண்டி-20 தொடரில் நியூசிலாந்திடம் 2-1 என்ற ரீதியில் தோல்வியுற்று தடுமாறி வருகிறது. டுவெண்டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் சுமார் ஒரு மாதமே உள்ள நிலையில் இக் கால இடைவெளியில் இவ்வணிகள் உள்ளூரில் போட்டித் தொடர்களில் பங்கு கொண்டு தங்களை அவசர அவசரமாக தயார் செய்து வருகின்றன. மேலும் இப்போட்டித் தொடர் இந்திய மைதானங்களில் நடைபெறுவதால் ஆசிய உப கண்ட நாடுகளுக்கு கிண்ணம் வெல்வதற்கு இது கூடுதலான அனுகூலமாக அமையும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.