புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
பாரிய நட்டத்தினை எதிர்நோக்கும் மட்டக்களப்பு இஞ்சி செய்கையாளர்கள்

பாரிய நட்டத்தினை எதிர்நோக்கும் மட்டக்களப்பு இஞ்சி செய்கையாளர்கள்

இலங்கையில் ஆகக் கூடுதலான விவசாய நிலங்களைக் கொண்ட மாகாணத்தில் கிழக்கு மாகாணம் முதன்மையானதாகும். நெற்செய்கையிலும், உப உணவுப் பயிர் செய்கையில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு மிகப் பெரிதாகும். 2008இல் ஏற்பட்ட உலக பொருளாதார சிக்கலில் இலங்கையினை இதில் இருந்து பாதுகாத்த மாகாணம் கிழக்கு மாகாணமாகும்.

அதிலும் பாரிய பங்களிப்பினை வழங்கிய மாவட்டம் மட்டக்களப்பாகும். ஏனெனின் போர் கிழக்கில் ஓய்ந்த காலப்பகுதியில் முற்றாக விடுவிக்கப்பட்ட பிரதேசமாக மட்டக்களப்பு காணப்பட்ட காரணத்தினாலும் முன்னைய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் தீவிர ஈடுபாட்டின் காரணமாகவும் பாரிய விளைச்சலை மட்டக்களப்பு ஈட்டியது. இதன் காரணத்தினால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட்டது.

கிழக்கில் போர் ஓய்ந்த கையோடு கிழக்கு மாகாண சபை தோற்றம் பெற்றது. கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு இன்றுவரைக்கும் விவசாயத் துறையானது இலங்கையில் பொருளாதாரத்தின் குறிப்பிட்டிடத்தக்க பங்களிப்பினை வழங்கவில்லை. கிழக்கு விடுவிப்புக்குப் பின்னர் 2009 ஆண்டு விடுவிக்கப்பட்ட வடக்கு மாகாணமானது 22 வீதத்துக்கு மேற்பட்ட பங்களிப்பினை வழங்கியுள்ளது.

ஆனால் கிழக்கில் பாரிய வளங்களை கொண்டிருந்தும் இன்றுவரைக்கும் உப உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு பிரதான காரணம் கிழக்கு மாகாண சபையில் தூர நோக்கான செயல்பாடு இன்மையாகும். 1970களில் மரவள்ளிக் கிழங்கில் தன்நிறைவு கண்ட மாவட்டம் மட்டக்களப்பாகும். மூடிய பொருளாதாரம் நிலவிய காலப்பகுதியில் அரிசியின் நிரம்பல் குறைவாக காணப்பட்டதனால் மக்களின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று உணவாக மரவள்ளிக் கிழங்கினை மக்கள் பயன்படுத்தினார்கள்.

கிழக்கில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பாரிய அளவான உப உணவு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மட்டக்களப்பில் இருந்து கொண்டுவரப்பட்டது.

ஆனால் கிழக்கு மாகாண சபையின் தோற்றத்துக்குப் பின்னர் விவசாயத்துறையானது மிகவும் மந்த கதியில் செல்கின்றது.இதற்கான சிறந்த திட்டம் இவர்களிடம் உள்ளதோ தெரியாது.

பாரிய நட்டத்தினை எதிர்நோக்கும் மட்டக்களப்பு இஞ்சி செய்கையாளர்கள் கடந்த சில வருட காலமாக மட்டக்களப்பில் இஞ்சி செய்கையினை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சு பாரிய முயச்சியினை மேற்கொண்டது. இவர்களின் ஆசைவார்த்தையினை நம்பிய விவசாயிகள் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு இஞ்சி செய்கையில் ஈடுபட்டார்கள். இதில் பாரியளவு இஞ்சிச் செய்கை கடந்த வருடம் கூடிய மழை காரணமாக அழிந்து போனது போக மீதியாக உள்ள இஞ்சிக்கான

சந்தைவிலை கிலோ 100 ரூபாவாக உள்ளது. இதற்காக விவசாயிகள் பெறும் தொகை வெறும் 75 ரூபாவாக உள்ளது. எனவே, விவசாயிகளினால் முதலிடப்பட்ட தொகையில் 10 வீதத்தினைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

2013இல் ஒரு கிலோ இஞ்சி ரூபா 700 தொடக்கம் 1000 வரை விற்கப்பட்டது.ஆனால் தற்போது இதற்கான சந்தைக் கேள்வி மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, ஒரு விவசாயி இலட்சக்கணக்கான நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளர்கள். இஞ்சி உற்பத்தி மூலம் பல உப உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவோம் என கிழக்கு மாகாண விவசாய அதிகாரிகளால் கூறப்பட்ட போதிலும் இதற்கான எந்த நடவடிக்கையினையும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சு மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குறைபட்டுள்ளர்கள்.

இஞ்சியின் மேலதிய உற்பத்தியினை சோடா, பிஸ்கட் மற்றும் ஏனைய உலர் வாசனைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் எனக் கூறப்பட்டது. அத்தோடு ஏற்றுமதியினை மேற்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டது. ஆனால் எந்த செயல்பாட்டையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இஞ்சி கலந்த சோடா, பிஸ்கட் என்பவற்றுக்கு மக்கள் மத்தியில் கேள்வி குறைந்துள்ளது. இதன் காரணத்தினால் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

அரசாங்கம் நெல்லின் விலை வீழ்ச்சியடையும் போது விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இவர்களைக் பாதுகாப்பதற்காக நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரசாங்க கொள்வனவு எனபவற்றினை மேற்கொள்கின்றது. ஆனால் இதே செய்பாற்பாட்டை இஞ்சி செய்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான மணிகட்டுதலை கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சு மேற்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபைக்கான அமைச்சராக ஒரு தமிழர் உள்ள போதிலும் இஞ்சி செய்கையாளர்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நோக்குவது இவர்களின் கொள்ளளவு இவ்வளவுதானோ எனும் கேள்வி ஏற்படுகின்றது.

புதிய நல்லிணக்க அரசு ஒவ்வொரு அமைச்சுக்கான வருடாந்த இலக்கு மந்திரி சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி தெரிவித்து அவருடைய அமைச்சின் இலக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் அரசு விவசாயத்துக்கு முன்னுருமை வழங்கும் இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சும் வினைத்திறனாக செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதன் மூலம் கிழக்கு மாகாண விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் வளர்ச்சியடைவதன் மூலம் வறுமையற்ற மாகாணமாக மாற்றியமைக்க முடியும்.

ச.தியாகராசா

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.