புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

அவசியம் தேவைப்படுவது விழிப்புணர்வே

எமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சிறுவர்கள் அச்சுறுத்தப்படல், சித்திரவதைசெய்யப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்படல், கொலை செய்யப்படல் போன்ற சம்பவங்கள் நாளொரு பொழுதும் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமே உள்ளன.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்களே சமுதாயத்தின் கண்கள், எதிர்காலத்து தூண்கள் என்று கூறினாலும், எமது நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சிறுவர்க நசுக்குவதும், தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதும் மற்றும் துஷ்பிரயோகம் செய்வதும் பூதாகரமாக உருவெடுத்து, காவல்துறையினருக்கே சவால்விடும் அளவிற்கு சிறுவர் துஷ்பிரயோகம் பெருக்கெடுத்து வருகிறது. இது எதிர்காலத்தை குறித்ததான ஓர் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 10,732 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்த சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு பல புதிய திட்டங்களை தாம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைககளை நிறைவேற்றுமாறு தாம் அரசை கோரியுள்ளதாகவும், அவ்வாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில் அந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். ஏனெனில், மீண்டுமொரு முறை இந்தத் தவறை எவரும் செய்யாத அளவிற்கு கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் என்றும் நடாசா தெரிவித்துள்ளார்.

யுனிசெப்பின் (UNISEF) தரவுகளின்படி உலகில் ஒன்பது மில்லியன்களுக்கும் அதிகமான சிறுவர்கள் குறைந்த வயதிலேயே மரண அபாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர். 182 மில்லியன் சிறுவர்கள் இரண்டாம் நிலைக் கல்வியினை தொடமுடியாதுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உளரீதியான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினாலும் பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

எமது நாட்டில் புரையோடியிருந்த யுத்தத்தின்பின் சிறுவர் துஷ்பிரயோகங்கள் திடீரென அதிகரித்துச் செல்லும் அதிர்ச்சியான தகவல்களை சிறுவர் தொடர்பான திணைக்கள புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. வடக்கில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 149 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை, 18 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 69 சிறுவர்கள் உடல் பாதிப்புகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் யுத்தத்தின் பின்னர் வடக்கில் அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான காரணங்கள் யுத்தத்தினால் தாய் தந்தையைரை இழந்தமை, இராணுவ சூழலை சிலர் பயன்படுத்திக் கொண்டமை, யுத்தத்தினால் உளவியல் பாதிப்பு, வறுமை மற்றும் சமூக தாக்கங்கள் உள்ளானவற்றை குறிப்பிடலாம்.

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கு சமுதாய விழிப்புணர்வு இன்மையும் மது மற்றும் போதைவஸ்து பாவனையின் அதிகரிப்பும் கல்வியறிவு இன்மையும் பெற்றோர் தங்களது பிரச்சினைகளை பிள்ளைகள் முன்கொட்டித் தீர்த்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் ஒரு காரணியாகியுள்ளது. அத்துடன் பெற்றோரின் மனமுறுகல், பிரிந்து வாழ்தல் என்பன பிள்ளைகளை உளரீதியான தாக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சிறுவர் வன்முறைகள், துஷ்பிரயோகம் பற்றிய பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவற்றில் சிறுவர்களுக்கு ஆபாசப்படங்கள் காட்டுதல், தொழிலுக்கு அமர்த்தல், சித்திரவதை செய்தல், பயமுறுத்தல், ஆசைவார்த்தைகளை கூறி இணங்கவைத்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் குறித்ததான சிந்தனை பெரியவர்களிடம் இன்மையும் ஓர் காரணமாகலாம்.

சிறுவர்கள் பிழையான வழிகளில் செல்வதற்கு வெகுசன தொலைத்தொடர்புச் சாதனங்களும் ஒரு காரணியாகின்றது. அத்துடன், இணையத்தளமும் கையடக்கத் தொலைபேசிகளும் அவற்றிற்கு மெருகூட்டுவதாக உள்ளது. அநேக இளம் வயதினர் அறிவை தேடுதைவிட ஆபாசம் கவர்ச்சிகளுக்கே அதிகம் அடிமையாகின்றனர். அத்துடன், இலத்திரனியல் தொடர்புகள் சிறுவர்களை ஈர்க்கும் கருவியாகவும் காணப்படுவதுடன் அவைகளில் காட்சிப்படுத்தப்படும் தேவையற்ற காட்சிகள் அவர்களின் உள்ளத்தை ஈர்ப்பதும் ஒரு காரணமாகிறது. இன்றைய சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சிறுவர் உரிமைகள் தொடர்பான தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மதரீதியான நல்லுபதேசங்கள், நற்பண்புகள், சுயகட்டுப்பாடு போன்ற விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். மற்றும் ஓர் ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க நாமும் வழிவகை செய்யவேண்டும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்லதொரு ஆலோசகராக விளங்கவேண்டும்.

சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உண்டாக்குவதை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். உடலியல் ரீதியிலான துன்புறுத்தலும், உணர்வு ரீதியிலான துன்புறுத்தலுமாகும். இவ்கையான துன்புறுத்தல் அவர்களின் எதிர்காலத்தைகேள்வி குறியாக்கிவிடும்.

உடலியல் மற்றும் உணர்வு ரீதியில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் நாளந்தம் நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. அதாவது, குழந்தைகளின் அந்தரங்க இடத்தை தொடுதல். அல்லது தொட்டு விளையாடுதல் இப்படியானவர்கள் விளையாட்டாக செய்வதாக நாம் எண்ணிக் கொள்வோம். ஆனால் இவை குற்ற உணர்வுடன் பிள்ளைகளை அணுகும் பாலியல் ரீதியிலான தூண்டுதலின் காரணமாகவும் நடைபெறலாம். குழந்தைகளை குறித்து பெற்றோரின் அவதானமும் விழிப்புணர்வும் முக்கியமானதாகும்.

தமது பிள்ளைகள் சிநேகிதர்கள் யார் என்பதை பெற்றோர்கள் அறிந்திருத்தல் மற்றும் பிள்ளைகள்செல்லும் இடங்கள் குறித்து அறிந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளே. ஆனால் அவர்களின் வீழ்ச்சிக்கு நாம் காரணமாயிருக்கலாகாது. எமக்குள் விழிப்புணர்வு இருக்க வேண்டும். ‘பிள்ளையை நடத்தவேண்டிய வழியிலே நடத்து அவன் முதிர்வயதிலும் அதைவிடாதிருப்பான்’ என்று சாலமோன் என்ற ஞானி குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்த சிந்தனை எமக்குள் இருக்கவேண்டும்.

இன்றைய சிறுவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் சிறந்த சிற்பிகளாக திகழவேண்டும். பிள்ளைகளின் மகிமை அவர்களின் பெற்றோரையே சாரும். பிள்ளைகளின் வழியில் சீரழிவு ஏற்பட்டதன் பின் அழுது பலன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருத்தல்​ வேண்டும்.

போல் வில்சன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.